திருக்குறள்

ஒரு தலைவி இருக்கிறாரா?

திருமண வீடுகளில் மகிழ்ச்சி ததும்ப இருந் தாலும், எம்.ஜி.ஆர். சமாதி முன்னால் வருத்தரேகை படிந்து நின்றாலும், ஜெயலலிதா திரும்பத் திரும்ப ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்... 'அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது!'


வானத்தில் இருந்து இடிஇறங்கும்போது எல்லாம் 'அர்ஜுனன் பெயர் பத்து' என்று பயந்தவன் புலம்புவது போலத்தான் இருக்கிறது ஜெயலலிதாவின் ஜெபம். மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆளவந்த தைரியலட்சுமியாக ரத்தத்தின் ரத்தங்களால் வர்ணிக்கப் பட்ட அம்மா இப்படிச் சொல்லிவருவது, கட்சிக் காரர்களுக்குத் தைரியம்ஊட்டுவதற்காக மட்டும்அல்ல; தனக்குத்தானே போட்டுக்கொள்ளும் எனர்ஜி ஊசி! இந்தப் பயம் அவருக்கு ஏன் வர வேண்டும்?

'அடுத்த தேர்த லுக்குப் பிறகு, அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது' என்று தென்னகத்தில் இருந்து அழகிரி அடிக்கடி கொந்தளிக்கிறார். அதற்கு 'ஜெ' தரப்பில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. 'இன்றுசட்டசபையைவிட்டு வெளியேறிய ஜெயலலிதா, நாளை நாட்டைவிட்டே வெளியேறும் காலம் வரும்' என்று சபையில் சவால் விட்டுக் கர்ஜித்தார் பேராசிரியர் அன்பழகன். அதற்கும் இலை தரப்பில் இருந்துஅமைதிதான் பதில். தொடர் வெற்றிகளின் காரணமாகக் கிடைத்த அதீத தைரியமாக மட்டுமே அன்பழகன், அழகிரி பேச்சை எடுத்துக்கொள்ள முடியாது. அதற்கும் மேலாக ஜெயலலிதாவின் நடவடிக்கைகள்தான் தி.மு.க. தரப்பை இப்படி மகிழ்ச்சியில் மிதக்கவைத்து இருக்கின்றன!

அம்மா நின்றால் மாநாடு... நடந்தால் ஊர்வலம் என்று முழங்குவார்கள். அந்த உற்சாகமும் பரபரப்பும் எங்கே போனது? கொஞ்சம் உடல் நலிந்து எம்.ஜி.ஆர். செயல்பட சுணக்கம் ஏற்பட்ட காலத்தில், அ.தி.மு.க-வுக்குள் ஜெயலலிதாவின் வருகை உண்மையில் புத்துணர்ச்சி ஊட்டுவதாக அமைந்திருந்தது. கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பொறுப்பேற்ற அவருக்குத் தலைமைக் கழகத்தில் தனி அறை ஒதுக் கப்பட்டது. தினமும் காலையில் 10 மணிக்கு வந்துவிடுவார். கையில் விண்ணப்பத்துடன் வரும் அத்தனை பேருக்கும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கிக் கோரிக்கைகளைக் கேட்பார். ஆட்சி குறித்ததாக இருந்தால், அமைச்சர்களுக்கு அனுப்புவார். கட்சி சம்பந்தப்பட்டதாக இருந்தால், நிர்வாகிகளிடம் தருவார். அனுப்பிய கடிதங்களைத் தொடர்ந்து கண்காணிப்பார். தலைமைக் கழகத்தில் நிரந்தரமாக இரண்டு புகைப்படக்காரர்கள் நிற்க ஆரம்பித்தது அப்போதுதான். அந்த அளவுக்கு நித்தமும் செயல் பட்டார் ஜெயலலிதா. மாதத்துக்கு 10 நாட்கள் இவரே வெளியூர் பயணங்கள் போனார். பார்க்க முடியாத எம்.ஜி.ஆரின் பிம்பமாக ஜெயலலிதாவை ரசிகர்கள் கவனித்தார்கள். கஷ்டங்களைச் சொன் னார்கள். கோரிக்கைகள் வைத்தார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகும் அந்தப் பிம்பம் அழிக்க முடி யாமல் நிரந்தரமாக ஆக அந்த உற்சாகக் காலம்தான் காரணம். ஆனால் இன்று?

தேர்தல் காலத்தில் மட்டும் ஆர்வமாக அரசியல் பண்ணுவதும், மற்ற நேரங்களில் போயஸ் கார்டன், கொடநாடு, பையனூர் என எங்கே இருக்கிறார் என்பதுகூடத் தெரியாத அளவுக்குப் பதுங்கிவிடு வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஜெயலலிதா. நாடாளுமன்றத் தேர்தலில் 'தமிழீழத் தாயாக' வலம் வந்தவர், தேர்தலில் தோல்வியைத் தழுவியதும் 'வேண்டாத கனவாக' நினைத்து அதையே மறந்தும் போனார். தனக்குத் தேவைப்பட்டால் தலையில் தூக்குவதும், பயன்படாதபோது தரையில் தட்டி விடுவதுமான ஊசலாட்ட மனநிலைதான் முதல் பல வீனம். சேலம் கண்ணன் தொடங்கி, வக்கீல் ஜோதி வரை தனக்கு மிகமிக நெருக்கமாக இருந்தவர்கள் அத்தனைபேரிடமும் தனது வீரத்தைக் காட்ட ஜெய லலிதா தவறவில்லை. ஈழத்தில் பலியான ஆயிரக் கணக்கான தமிழர்களை அந்தத் தேர்தலுக்கான வாக்கு வங்கியாக மட்டும் பார்த்ததை, அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகத்தான் பார்த்தார்கள் மக்கள்.

தமிழீழத்தை மட்டுமல்ல; எம்.ஜி.ஆரையே தனக் குத் தேவையான நேரத்துக்குப் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பராகத்தான் பார்த்தார். கட்சி ஆரம் பித்த நான்காவது ஆண்டே ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவரது படமும், பாட்டும், அறிமுகப்படுத் திய இரட்டை இலையும் இருந்தால்போதும்; யாரும் எந்தத் தொகுதியிலும் நின்று வெல்லலாம் என்ற நிலை இருந்தது. நிரந்தர வைப்புநிதியாக இருந்த விதை நெல் மணியைப் பயன்படுத்தக் கூடாது என்று ஜெயலலிதா போட்ட தடை, அவரே நினைத்தாலும் நாளை பயன் படுத்தமுடியாத 'பொக்கு'வாக ஆகிவிட்டது. எம்.ஜி.ஆரை எதிர்த்து அரசியல் நடத்திய கருணா நிதியே 38 ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் உண்மையைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். ''ஒரு தலைவன் இருக்கிறான் என்று எம்.ஜி.ஆர். என்னை மனதில்வைத்துக்கொண்டுதான் பாடினார். ஏனென் றால், அவர் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர் அல்லவா? தி.மு.க. கட்சித் தேர்தல் நடைபெற்றபோது தலைவராக நான்தான் வர வேண்டும் என்று எண்ணி, அதற்காகப் பாடுபட்டவர். அதற்காக ஆட்களைச் சேர்த்தவர். அந்த நன்றி எனக்கு உண்டு. சாகிற வரையிலே உண்டு. அதைப்போல இந்தப் பொறுப் புக்கு நான் வர வேண்டும் என்று விரும்பியவர்களில் அவரும் ஒருவர்'' என்று தான் தி.மு.க. தலைவராகவும் முதல்வராக வரவும் உழைத்தவர் எம்.ஜி.ஆர். என்பதைக் கருணாநிதியே சில வாரங்களுக்கு முன் னால் சட்டசபையில் ஒப்புக்கொண்டார். ஆனால், எம்.ஜி.ஆரின் ஜோடி என்பதற்காகவே அரசியலில் அங்கீகாரம் பெற்ற ஜெயலலிதாவுக்கு அதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கம் வந்ததுதான், அ.தி.மு.க-வின் 'கிராமப்புற' செல்வாக்கு சரிந்ததற்கு மிக முக்கிய மான காரணம்.

ஜெயலலிதாவை நினைத்தவுடன் யாரும் பார்த்துவிட முடியாது. அவர் நினைப்பதை யார் மூலம் தெரிந்துகொள்வது என்ற குழப்பம், அவர் முதல் தடவை முதலமைச்சரானபோது தொடங்கியது. இன்று வரை அது தீர்ந்தபாடில்லை. சசிகலா, அவரது கணவர் நடராசன், சசிகலாவின் அக்கா மகன்கள் தினகரன், பாஸ்கரன், சுதாகரன், சசியின் தம்பி திவாகரன், அண்ணன் மகன்களான மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் தலைமைக் கழகத்தை, போயஸ் தோட்டத்தை ஆண்டிருக்கிறார்கள். இதில் யார் அம்மாவின் இதயத்தில் எப்போது இடம் பிடித்தார்கள் என்பதைக் கட்சிக்காரர்கள் தெரிந்துகொள்வதற்கு முன், சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருப்பார். உறுதியான தொண்டர்களாக அ.தி.மு.க-வில் ஐக்கியமாகி இருந்த பலர், இந்தக் குழப்பத்தில் சிக்கி விடுபட முடியாமல் தி.மு.க-வுக்கு மாறினார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனில் தொடங்கிய அணி மாறுதல், இன்று அனிதா ராதாகிருஷ்ணன் வரை கொண்டுவந்து நிறுத்திஇருக்கிறது. இவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே விஷயம், 'உண்மையான விளக்கத்தை அம்மாவிடம் சொல்ல முடியவில்லை' என்பதுதான். சாதாரண தொண் டன் இப்படிக் கவலைப்பட்டால் பரவாயில்லை. ஆனால், அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களால்கூட ஜெய லலிதாவைப் பார்க்க முடியவில்லை என்றால், ஜெயலலிதா நிகழ்காலத்துக்கு இன்னும் வரவில்லை; அல்லது, வர மறுக் கிறார் என்றுதானே அர்த்தம்!

இது குறித்துத் தமிழருவி மணியனிடம் கேட்டபோது, ''காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தபோது, மக்கள் மன்றத் தில் ஓய்வில்லாத எதிர்க்கட்சியாக இறங்கி எப்போதும் வேலை பார்த்தது தி.மு.க! ஆனால், இன்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. 'கொடநாடு' ஓய்வில் தான் எப்போதும் இருக்கிறது. மக்கள் பிரச்னைக்காக வாதாடும் போர்க் குணத்தை ஜெயலலிதா இழந்துவிட்டார்'' என்றார். இதே கருத்தைத்தான் பத்திரிகையாளர் சோலையும் வழிமொழிகிறார். ''ஜெயலலிதாவின் நாடாறு மாதம் காடாறு மாதம் செயல்பாடுகள் அந்தக் கட்சியின் செல்வாக்கை மொத்தமாகக் குறைத்துவிட்டன. அவர் வெறும் அறிக்கைத் தலைவியாக மட்டும்தான் இருக்கிறார். இயக்கம் என்றால் இயங்க வேண்டும். அ.தி.மு.க. இப்போது படுத்தேகிடக்கிறது'' என்கிறார் சோலை. அ.தி.மு.க-வின் யதார்த்தமான நிலைமை அப்படித்தான் இருக்கிறது.

கட்சித் தேர்தலை நடத்தியதாக தேர்தல் கமிஷனுக்குக் கணக்கு காட்டுவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் மாற்றப்படுகிறார்கள். இவர்கள் சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக நியமிக்கப்படுபவர்கள் என்றே தொண்டன் நினைக்கிறான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தி.மு.க-வை எதிர்த்த பழைய அ.தி.மு.க-வினராக இன்றைய நிர்வாகிகள் இல்லாமல் போனதற்கு, இந்தத் தேர்வு முறைதான் காரணம். தனக்கு இணையாக அல்ல, துணையாக கருத்துக்களைப்பரிமாறிக் கொள்ள ஒரு நபர்கூட இல்லாத நிலைமை இன்று ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.

பல பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டதற்கு தி.மு.க-வுடன் உள்ள தொடர்புதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மிக முக்கிய குற்றச்சாட்டு இன்று வரை மறுக்கப்படவில்லை. சசிகலா தொடர்புடைய மிடாஸ் நிறுவனத்தில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சரக்குகள் வாங்கியதைப்போலவே இன்றும் தி.மு.க. ஆட்சியிலும் தடையில்லாமல் சரக்குகள் வாங்கப்படுகின்றன. சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கடைசி வரை கையெழுத்துப் போட மறுத்த ராஜகண்ணப்பனைத் தோட்டத்தில் இருந்து அழைத்து ஜெயலலிதா கையெழுத் திடச் சொன்னது ஏன்? இதற்கான காரணமும் தொண்டர்களால் புரிந்துகொள்ள முடிய வில்லை. தலைமையே பூடகமாக பார்க்கப் படும் நிலைமை வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை.

''அடிதடி, வெட்டுக்குத்து பார்த்தாயா உடன்பிறப்பே! இனி, அ.தி.மு.க. இல்லை. தாயைத் தேடி ஓடி வந்துவிடு'' என்று ஜா - ஜெ. எனக் கட்சி பிரிந்தபோது, 20 ஆண்டு களுக்கு முன் கருணாநிதி கடிதம் எழுதினார். அ.தி.மு.க. அதன் பிறகுதான் இரண்டு முறை ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அப்போது இருந்த ஜெயலலிதா இப்போது இல்லை. அவர் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ளாவிட்டால், சிக்கல் அவருக் குத்தான். அன்பழகன், அழகிரி வார்த்தைகள் நிராசையாவது ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது!

-  விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற