திருக்குறள்

३ வகை உதவிகள்

பிறர் கேட்கும் உதவிகளை மறுக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பவரா நீங்கள்? மாறுங்கள்।

நம்மைப் பாதிக்கும் உதவிகள்; நம்மைப் பாதிக்காத உதவிகள்; பாதித்தாலும் பரவாயில்லை எனும்படியான உதவிகள் என்று உதவிகளை மூன்றாக இரகம் பிரியுங்கள்। இப்படிப் பிரிக்கத் தெரிந்து கொண்டால் உதவுவதா? வேண்டாமா? என்பதில் தெளிவு பிறந்து விடும்.

வேறுவழியின்றித் தலையாட்டிவிட்டுப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள் உண்டு। இவர்கள் இதிலிருந்து விடுபட ஒரே வழி, மறுப்பது எப்படி என்கிற கலையைக் கற்றுக்கொள்வதுதான்.

அமெரிக்காவில் நூறு வெற்றியாளர்களை டான் டெக்கர் என்கிற பத்திரிகையாளர் பேட்டி கண்டார்। ``உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?'' என்று ஒரே ஒரு கேள்வியைத்தான் அத்துணைப்பேரிடமும் கேட்டார். பலரும் புளித்துப்போன காரணங்களையே சொன்னார்கள். ஒருவர் சொன்னார், ``I know how to say no’'என்று.

ஒரு வெள்ளையரிடம் 100 டாலர் கடன் கேட்டால் ‘‘I doubt very much whether I can give you this time; may be next time என்று பிரமாதமாக இழுத்து அழகுற மறுப்புச் சொல்லி விடுவார்।

நம்மிடம் உதவி கேட்பவர்களிடம், முடியாது; நடக்காது; சாத்தியமில்லை; மாட்டேன் என்று ஒரே சொல்லில் மறுப்பைச் சொல்லக்கூடாது। உறவும் நட்பும், தொழில் தொடர்பும் விட்டுப் போகும்.

வீரிய மருந்தில் நீர் கலப்பது போல் அந்த மறுப்பைப் பல வார்த்தைகளின் ஊடே பதித்து நீண்ட நீண்ட வாக்கியங்களாக ஆக்கி, ஏன் மறுக்க நேரிடுகிறது என்கிற விளக்கத்துடன் ஒரு நிமிடக் கலவையாகத் தாருங்கள்.
இப்படி நீளமாக மறுப்புச் சொன்னால், உங்கள் மறுப்பின் நியாய வாதங்கள் எதிராளிக்கும் பிடிபடும்। எதையும் இழக்க வேண்டாம் என்பதோடு வெற்றியும் சாத்தியம்!

- லேனா

நம் தமிழ் சினிமாவில் மாறாதவை...

நம் தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு। சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட்। மலையாளிகள் குறித்த தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் கொஞ்சம் காமெடி। ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் லேசாக உதட்டை அழுத்தி, `புட்டு வேணுமா...' என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.

திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தமிழ் சினிமாவினர் தங்களது லொள்ளுத்தனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்ல। தமிழர்கள் பற்றிய காட்சியமைப்புகளும் நம்மைப் போல், முண்டு, ஜாக்கெட் என ஆடையோடு முடிந்துவிடும் ஒரு ரகம் அல்ல. சூலம் மாதிரி பலமுனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் விசேஷப் பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முந்நூறு। குளிக்காதவன்... அசிங்கம் பிடிச்சவன்... இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, `அக்கரை அக்கரை அக்கரை' என்றொரு படம்ப்ரியதர்ஷன் இயக்கியது। கடத்தல்காரன் ஒருவனைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ``எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''

எல்।ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த நெஞ்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.

மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது। பெரிய பீப்பாய் போலிருக்கும் நடிகர் ராஜூதான் போலீஸ் அதிகாரி। வழக்கம் போல கீழ்மட்ட அடியாளாக ஒரு தமிழ்வில்லன். ``நீ பொன்னுசாமி இல்லையா?'' ராஜூவைப் பார்த்து நம் தமிழ் ஆளு கேட்கிறார். தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ``என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''

தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுச்சாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை... அப்படியொரு ஆதிக்க மனோபாவம்.

திரைப்படங்களில் அரசியல் பேசுவது மலையாளிகளுக்கு கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம். கூத்தாடி விடுவார்கள்!

மோகன்லாலின் `உடையோன்' படத்தின் வில்லன் சலீம்கௌஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான்: ``தமிழ்நாட்டுல மழை பெஞ்சாதான் உங்க கிணத்துல தண்ணி'' மோகன்லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார்: ``அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார்: ``தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ``எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''

இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு ரொம்பவே உண்டு. பல மலையாளத் திரைப்படங்களில் மெயின் திரைக்கதையே இந்தப் பயங்கர கற்பனைதான்.

இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணனாக நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான தயாரிப்புகளை ஊரில் நுழையாமல் தடுத்து நிறுத்துவார். அவரது சுதேசிக் கனவைத் தகர்க்கும் விதமாய் அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனைத் துரத்தியடித்து சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.

`லாலேட்டன்' எனச் செல்லமாய் அழைக்கப்படும் மோகன்லாலின் பெரும்பாலான படங்களில் தமிழர்களுக்கு எதிராய் இப்படி வாலாட்டும் காட்சிகள் மிக அதிகம்.

``இதெற்கெல்லாம் நேர்மாறாக அங்கே எல்லா காலேஜ் ஃபங்கஷன்லயும் நம்ம ஊரு சினிமாப் பாடல்கள் வெகு பிரபலம். எழுந்து நின்று ஆட்டம் போடுவாங்க. கூடவே தமிழ் சினிமாவினால மலையாளிகளுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபமும் கிடைக்குது.

சொற்ப சம்பளம் வாங்குற மலையாள நடிகர், நடிகைககூட தமிழ் சினிமாவுக்கு வந்தா லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க. நயன்தாரா முதல் நரேன் வரை பல உதாரணம்.... எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடறது தமிழன்தான்.

தமிழ்நாட்டுல இருக்கற நிறைய டீக்கடைகளை நடத்தறது மலையாளிகள். அவ்வளவு ஏன், அரிசி, பருப்பு வகையறாக்கள்கூட இங்கே இருந்துதான் கேரளாவுக்குப் போகுது. அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களை தங்களோட சினிமாக்களில் கேவலமா காட்டறாங்கன்னா மனதளவுல அவங்க குறைபாடா இருக்காங்கன்னு அர்த்தம்'' என்கிறார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்..

தொகுப்பு: மா.மணிவண்ணன்(தட்ஸ் தமிழ்)

இவரும் அகதி தான்

- சின்னக்குட்டி
அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது। மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது. இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும்.


வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர அங்கு பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும்.

அதனூடாக தான் கொஞ்ச நாளாக, கொஞ்ச நாளாக என்ன, கொஞ்ச காலமாக அவர் தினமும் வந்து அந்த ஊர் மனைகள் தொடக்கத்தில் உள்ள மாமரங்கள் தென்னை மரங்கள் நிறைந்த தொடர்ச்சியாய் அச்சொட்டாக ஒரே மாதிரி தோற்றத்துடன் இருக்கும் மூன்று வீட்டு தொடருக்கு வந்து நோட்டம் விட்டு திரும்புகிறார். வேவு பார்க்க வருகிறார் என்றும் சிலர் நினைக்கலாம் அல்லது முந்தி வாழ்ந்த இடத்தை பார்த்து விட்டு போறார் என்றும் நினைக்கலாம். அவற்றுக்காக தான் வந்து போறார் என்று நிச்சயம் சொல்ல இயலாத மாதிரியும் இருக்கும். ...

இவருக்கு மனிதர் மாதிரி இப்படி சிந்திக்கும் பழக்கம் இருக்கோ என்று நிச்சயமாக தெரியாது. ஒரு காலத்தில் அந்த வீட்டு தொகுதியுனுடைய முடிசூடா மன்னர் என்று சொல்ல இயலாது. வேணும் என்றால் இவரை இப்படி சொல்லலாம். அந்த வீட்டு முடிசூடா காவல் செல்ல பிராணி வீமன் என்று அழைக்கப்பட்ட நாய் என்றுஅவரை அவர் என்று சொல்லக் கூடிய முறையில் தான் அந்தக் காலம் முதல் நடந்து கொண்டு இருக்கிறார். அந்த வீட்டுக்கு மட்டுமல்ல அந்த வீதியில் தொடக்கத்தில் தொடங்கி கொஞ்சம் தூர பகுதி வரை பிரதேசத்துக்கு நாட்டாமை போல் திகழ்ந்திருக்கிறார். அந்தக் காலம் அந்த தெருவின் தொடக்கத்தில் தொடங்கி அந்த தெருக்கோடி முடிவு வரை எந்த பிராணிகள் பறவைகள் ஊர்வன தொடக்கம் புதிய மனிதர்கள் வாகனங்களில் போவோர் வரை, எவரும் இவருடைய எச்சரிக்கை கனைப்புக்கு செருமலுக்கு குரைப்புக்கு அடங்கி ஒடுங்கி நடுங்காமால் போக முடியாது.அந்த வீட்டு தொகுதியில் வாழ்பவர்களின் மத மதப்பும், குணமும், திமிரும் இவரிடம் இருந்திருக்கிறதால் இவருக்கு மனிதர் மாதிரி சிந்திக்கும் குணமும் சில வேளை இருக்கலாம் என்றும் நினைக்கலாம்

இப்பொழுது அவரை அது என்று கூட சொல்ல முடியாத தோற்றம். அரைவாசி உடம்பு முழுவதும் உண்ணிகள். எங்கும் சொறி பட்ட புண்கள். அதனால் இவர் எங்கு சென்றாலும் இவரை பின் தொடர்ந்து இவரின் உடம்பை மொய்க்கும் இலையான் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாமால் ஏற்பட்ட வேதனை படர்ந்த முகம், நாயின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதனால் விரைந்து வந்த முதுமை ஒரு புறம்.

இந்த வீட்டு தொகுதியிலுள்ளவர்கள் எந்த நாட்டில் என்று தெரியாத மாதிரி இவரும் எங்கு படுத்து எழும்புகிறார் எங்கு தின்று கழிக்கிறார் என்ற இரகசிய குறிப்புகள் ஒன்றும் தெரியாது. ஆனால் இவரின் முன்னாள் எஜமானர்கள் அகதியாக தேசாந்திரம் போயிட்டினம் என்ற மாதிரி. இவருக்கு உடனடியாக அந்த அந்தஸ்து கொடுக்கால் முதலில் காணாமல் போனோர் பட்டியலில் தான் போட்டார்கள் .

இப்ப கொஞ்சக் காலம் இவரின் நடமாட்டம் கண்ட பின் தான் அகதி பட்டம் கிடைத்திருக்கிறது..இப்ப இவரும் ஒரு அகதி தான்.இன்றும் அந்த பாதையூடாக குளத்து கட்டை சுற்றி வீச்சு நடை போட்டு வந்தவர், தூரத்தில் சொகுசு பஸ் தோசை கடை பொன்னம்மாக்கா வீட்டுக்கு முன்னால் நிற்க கண்டு இவ்வளவு நாளும் காணதா அந்த ஆள் அரவம் கண்டு கேட்டு நிதானமாக நின்று யாரையோ தேடும் பாவனையில் கவனிக்கிறார்.

கொஞ்ச காலங்களாக இந்த ஊரில் வெடிச்சத்தங்கள் கேட்கால் விட்டவுடன் வெளிநாட்டிற்க்கு சொல்லிக் கொள்ளமால் ஓடிப் போனவர்கள் சொகுசு பஸ்ஸில் தீடிரென சொல்லிக்கொள்ளாமல் வந்து இறங்கி ஊரை வந்து பார்க்கிறதோடு கலர் காட்டி சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த நாய் பெருமானாரும் ஏதோ விதத்தில் மோப்பம் பிடித்து மணந்து கொண்டு எப்படியோ தெரிந்து கொண்டாரா என்னவோ. அதனால் தான் இப்ப கொஞ்ச காலமாக எங்கையோ படுத்து எழும்பி விட்டு இந்த வீட்டடிக்கு விஜயம் செய்யிறதும் திரும்புறதுமாக இருக்கிறார் என்பது மனித புத்தியூடாக விளங்கிறது கஸ்டம தான். அதுக்காக நாயை மாதிரி சிந்திக்க புரிய மனிதர்களும் இருக்க வேண்டுமா என்ன?

இது சண்டைக்காலம், இது சமாதான காலம் என்று அவராலும் மனிதர் மாதிரி பிரித்து கணிக்க முடியுமா? அவருக்கு தெரிந்தது எல்லாம் வெடிசத்தம் நல்லாய் கேட்கும் காலம் சத்தம் கேட்காத காலம். அந்த காலங்களில் கொண்டாட்ட நாட்களில் தான் வெடிச்சத்தம் கேட்கும் அந்த நாட்களில் தான் வெளியிலிருந்து ஆட்கள் வருவார்கள். இப்ப வெடிச்சத்தம் கேட்காத நேரத்தில் கேட்காத காலங்களில் வருகிறார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடாமல் அந்த சொகுசு பஸ் அருகில் இருந்த கூட்டத்தில் தான் தேடும் யாரும் நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு உற்று பார்த்து கொண்டிருந்தது.

கால வெள்ளத்தில் மறைந்த நினைவுகளை மீட்டு பார்த்தது. இந்த வயலில் வெள்ளம் குளம் போல வழிய அதுக்குள் தன்னை போட அதுக்குள் நீந்தி மகிழ அவர்களும் மகிழ்ந்தது .அந்த மூலை வீட்டு சின்ன மகளோடு பந்து விளையாடியது, சிரித்து சந்தோசமடைந்தது எல்லாம் திரும்ப திரும்ப வந்து நினைவுகள் சந்தோசமடைந்திருக்க வேண்டும். நாய் சிரிக்க முனைந்தது. முடியவில்லை போலும். நாய் சிரித்தது என்று சொன்னால் நம்புவது கஸ்டம் தான். வேணும் என்றால் அவர்களை கேட்டுப் பாருங்கள் அதுவும் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் தான் முடியும்.

அவர்கள் தான் வந்து விட்டார்கள் அந்த வீட்டுக்குள் ஆட்கள், என அசுமாத்தம் பட்டு விட்டதோ என்னவோ துள்ளிக் குதித்து அந்த வீட்டு பின்புறத்தில் உள்ள வேலியில் உள்ள துளையூடாக நுழைந்தது, அந்த காலம் அது போட்ட துளை தான் அதனால் அதுக்கு அதனூடாக இப்ப நுழைவது இரட்டிப்பு சந்தோசம்.இளைய மகள் சூட்டி தான் வந்திருந்தாள் தனது மகள்கள் இருவருடன் வந்திருந்தாள், மகள்களை பார்த்த அந்த காலத்தில் சூட்டியை பார்த்த மாதிரி இருந்தார்கள், மனிதர்கள் பேசும் மொழி விளங்காவிட்டாலும் இவர்கள் மொழி வழக்கமாக இங்கை ஒலித்த சத்தம் இல்லை என்று மட்டும் விளங்கியது.

சிரிக்க முடியா விட்டாலும் அழுது கனைத்து காட்டி தன்னை அடையாளம் காட்ட முனைந்தது. கனைப்பு சத்தம் கேட்ட சூட்டி பிள்ளைகளை எச்சரிக்கை செய்தாள் விச நாய் ஓன்று வந்திருக்குது என்றுதன்னை அடையாளம் காணமால் அலட்சியம் செய்து தனது ஆவல்களை எல்லாம் ஒரு நிமிடத்தில் தவிடு பொடியாகிவிட்ட ஆத்திரத்தில் மீண்டும் வேறு விதமாக ஊளையிட்டு குரைத்தது.

என்ன நன்றி கெட்ட மனிதர்கள் என்ற மாதிரி இருந்தது. இவரை தான் நன்றியுள்ள மிருகம் என்று சொல்லி இருக்கினம்.மனிசரை எப்பொழுதாவாது நன்றியுள்ளவர்கள் என்று யாரும் சொல்லி இருக்கினமா? இப்ப இதுக்கு இவர் கோபிப்பதில் அர்த்தம் இல்லை தானே. அதோடு இவர் தன்னை அடையாளம் காணவில்லை என்று தங்களுடைய அடையாளத்தை தொலைத்த இந்த பாவப்பட்டவர்களை கோபித்து இவர் என்ன காணப்போறார்பாவப்பட்டவர்கள் என்று தெரியவா போகுது இந்த நாய்க்கு. .

இந்த ஊரில் உள்ளவர்களே இவர்களின் பவுஸுகளை கண்டு அவர்கள் அப்படி இல்லை என்று நினைக்கும் போது. திரும்பி பாராமாலே வந்த வேலி துளை வழியே திரும்பிவிட்டது. இப்ப இந்த பாதைக்கு வருவதில்லை. இப்ப போக்கிடம் இல்லாமால் திசை தெரியாமல் ஓடி கொண்டிருக்கிறது. அவர்களும் அப்படித்தான் என்று உதுக்கு விளங்கவா போகிறது.

என் பாக்கியம்....

-அனாமிகா பிரித்திமா

கண்கள் முன் உங்களை...
வைத்திருக்கிறேன்...
ஒரு நொடி கூட முட மனதில்லை..
।நீங்கள் மறையக்கூடாதே !...

நாசியில் இழுக்கிறேன் சுவாசம்...
நீங்கள் இருக்கும்...
இதயத்திற்கு...
இரத்த ஓட்டம் வேண்டுமே !...

செயற்கை புன்னகையை ...
ஒட்டி கொண்டு சிரிக்கிறேன்...
தங்கள் சிந்தனையால் சிரிக்க...
உதடுகள் மறுக்கிறதே !...

விரல்கள் உணவை எடுக்க மறக்கிறது !
வாய் அதை ஏற்க மறுக்கிறது !
என் நாவு ருசி இழந்து...
வருடங்கள் ஆனது !

உயிர் (நிங்கள்) இல்லா உடம்பு...
இருந்து என்ன பயன்?...
உங்கள் மடியில் உயிர் பிரியும்...
பாக்கியம் இல்லை...
உங்கள் கையிலாவது...
அது போகட்டுமே ...

அனு அனுவாய் சாவதை விட...
என்னை முழுதாய்...
கொன்றுவிடுங்களேன்...
அது என்...பாக்கியமாக இருக்கட்டுமே...
என் பாக்கியம் ...
பாக்கியம் ...

எது உண்மை ???

மணக்கும் வரை மலர் என்பார்
மடிந்த பின்னே குப்பை என்பார்
எரியும் வரை விறகு என்பார்
எரிந்த பின்பு சாம்பல் என்பார்
கட்டில் நாடகம் அதிசயம் என்பார்
தொட்டில் குழந்தையோ ரகசியம் என்பார்
இறக்கும் வரை இவன் என்பார்
இறந்த பின் பிணம் என்பார்
இதில் எது உண்மை?

- தினந்தந்தி மாணவர் மலர்

அண்ணா சில நினைவுகள்


அண்ணா முதலில் கல்வி கற்கச் சேர்ந்ததும் பச்சையப்பன் ஆரம்பப் பாடசாலை; அவர் பட்டம் பெற்றதும் பச்சையப்பன் கல்லூரிதான்.
அந்தப் பச்சையப்பன் கல்லூரி இப்போது சேத் துப்பட்டில் இருக்கும் கல்லூரி அல்ல! சைனாபஜாரில் கூச்சலும் சந்தடியும் நிறைந்த இடத்தில் அந்தப் பச்சையப்பன் கல்லூரி இருந்தது।

பொருளாதாரப் பேராசிரியர் 'மால்துஷியஸ்', தத்துவப் பாடத்தை விளக்கிக்கொண்டு இருப்பார்। வெளியே ''ஒன்றரையணா, ஒன்றரையணா... எதை எடுத்தாலும் ஒன்றரையணா!'' என்ற கூச்சல் கேட்கும்। இருப்பினும், அண்ணா பாடத்திலேயே கவனமாக இருப்பார்। உலகத்தில் எத்தகைய கூச்சலும் குழப்பமும் அமளியும் ஏற்பட்டாலும், அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்தி விஷயத்தில் செலுத்தும் பண்பை அண்ணா இங்கிருந்தே பெற்றார்.
சென்னையில், பெத்துநாயக்கன் பேட்டைப் பகுதியில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தது அண்ணாவின் குடும்பம். அந்த வீடு பல குடித்தனங்கள் இருந்த பெரிய வீடு. குழந்தைகளும் குட்டிகளும் ஏராளமாக இருந்தன. அண்ணா படிப்பதற்கேற்ற சூழ்நிலை அங்கில்லை. இருந்தாலும், அண்ணா எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே படிக்கத் தொடங்கினார்.

கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து, குடும்பத்திலுள்ள வசதிக் குறைவு காரணமாக அண்ணா தமது படிப்பைத் தொடருவ தில்லை என்று முடிவு செய்து விட்டார்। இந்தச் செய்தி, அன்றைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பிப் பிள்ளை யவர்களின் காதில் விழுந்தது। அண்ணாவை அழைத்து வரச் சொன்னார்.

''இன்டரில் முதல் வகுப்பில் பாஸ் செய்த நீயெல்லாம் இப்படிப் படிப்பைத் தொடராது விட்டால் எப்படி? நீ, பி।ஏ। ஆனர்ஸ் படிப்பைத் தொடர்ந்து படிக்க வேண்டும். அந்த மூன்று வருடங்களுக்குரிய புத்தகச் செலவை நான் ஏற்றுக்கொள் கிறேன்'' என்றார்.

எந்த அண்ணாவுக்காக லட்சோப லட்சம் மக்கள் தங்கள் ஐஸ்வரியங்களையெல்லாம் கொட்டித் தரத் தயாராக இருந் தார்களோ, அந்த அண்ணா வறுமை காரணமாகக் கல்லூரி முதல்வரின் கருணையினால் புத்தகங்கள் பெற்றுத் தமது படிப்பைத் தொடங்கினார்।
கல்லூரியில் படிக்கும்போது தான் அண்ணா அவர்கள் ராணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார்। பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தளபதி யாக இருந்தவர், சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வந்த முதலமைச்சராக இருந்தவர், ராணி அம்மையாரைப் பழைய சம்பிரதாய முறைப்படிதான் திருமணம் செய்துகொண்டார்.

கல்லூரிப் படிப்பை முடித்த தும், அண்ணா எல்லோரையும் போலவே வேலை தேடும் படலத் தில் இறங்கினார்।
காஞ்சி நகராட்சியில் கிளார்க் வேலை, காஞ்சிபுரம் பள்ளிக்கூடத் தில் (தனியாருடையது) ஆசிரியர் வேலை, சென்னையில் கோவிந் தப்ப நாயக்கன் பள்ளியில் ஆசிரியர் வேலை என்று சிறிது காலம் வேலை பார்த்தார்।

அப்போதுதான் 'சண்டே அப்சர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான பால சுப்பிரமணியம் அவர்களின் நட்பு அண்ணாவுக்குக் கிடைத்தது।

இன்று உலகிலுள்ள எல்லாத் தமிழர்களாலும் 'அண்ணா' என்று அழைக்கப்படும் அண்ணா, தன் வாயால் 'அண்ணா' என்று அழைத்த ஒரே ஒருவர் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் அவர்கள்தான்।

எப்படியாவது அண்ணாவைத் தமது அணியில் சேர்த்து விட வேண்டும் என்று யோசித்த பெரியார், மெதுவாக அண்ணா விடம் தமது பத்திரிகையான 'விடுதலை'யில் பணியாற்ற வருமாறு கேட்டார்। யோசித்துச் சொல்வதாக அண்ணா வழக்கம் போல் பதில் சொன்னார்।

''நீங்க எப்பவும் இப்படித்தான்! என்ன யோசனை... வெங்காயம்... 'சட்டுபுட்டு'னு ஒத்துக்கவேண்டி யதுதானே!'' என்று சலித்துக் கொண்டார் பெரியார்।

சேலம் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணா அவர்களை மிகவும் வற்புறுத்திப் பெரியார் தமது 'விடுதலை' பத்திரிகையில் பணியாற்றுமாறு செய்துவிட்டார்। 'விடுதலை'யில் பரதன், வீரன், சௌமியன் என்ற புனைபெயர் களில் பல கட்டுரைகளை எழுதி, வாலிப உள்ளங்களுக்கு வேகம் ஊட்டினார் அண்ணா.

ஈரோட்டில் அண்ணா இருந்த போது ஏற்பட்ட கலைப் பற்று, நாளாக ஆக வளரத் தொடங்கி, அவரைக் கலையுலகில் ஒரு மறு மலர்ச்சியைத் தோற்றுவிக்கிற அளவுக்கு வளர்த்தது।

சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், சந்திரோதயம், ஓர் இரவு, காதல் ஜோதி, வேலைக் காரி போன்ற ஏராளமான நாடகங்களை எழுதினார்। எழுதியது மட்டுமல்ல; சில நாடகங்களில் நடிக்கவும் செய்தார். எம்.ஏ. படித்தவர் - ஓர் இயக்கத் தின் தளபதி அரிதாரம் பூசி நடிக்க ஆரம்பித்ததும்தான், கலையுலகம் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் இருந்து வந்த கேவலமான எண்ணம் மாறத்தொடங்கியது.

ஒரு முறை அண்ணாவின் நாட கத்தைப் பார்த்த பெரியார், ''நாம் பேசும் நூறு கூட்டங்களும் சரி, அண்ணாதுரையின் ஒரு நாடகமும் சரி!'' என்று வாய் விட்டுப் பாராட்டினார்।


'நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தில் ராவணனாக நடிப் பார் அண்ணா.
நீதிதேவனைப் பார்த்துச் சரமாரியாகக் கேள்வி கேட்பார்। அப்போது நீதிதேவன் வேடம் போட்டிருந்தவர் பேராசிரியர் அன்பழகன். ஒரு முறை, அண்ணா வெகு வேகமாக சரளமாகப் பேசுவதைப் பார்த்து மயங்கிப் போயிருந்த அன்பழகன், தனது பாடத்தை மறந்துவிட்டு, அடுத்துப் பேச முடியாமல் விழித்தார்.

உடனே அண்ணா சமாளித்துக் கொண்டு, ''பேசமாட்டீர் நீதி தேவனே! நீர் பேசமாட்டீர்! உமக்கு மறந்து போய்விட்டது - நீதியும் நெறிமுறையும்!'' என்று பேச ஆரம்பித்தார்।

நாடகம் பார்க்க வந்த மக்கள் புரிந்துகொண்டு, நீண்ட கையலி எழுப்பினர்.
1949 ஜூன் 18-ம் தேதி... பெரியாருக்கும் மணியம்மைக்கும் சென்னை ரிஜிஸ்தரார் முன்னிலை யில் திருமணம் நடந்தது।

அந்தத் திருமணத்தை ரத்து செய்துவிடும்படி அண்ணாவும் கழகப் பிரமுகர்களும் கையெழுத் திட்டு ஓர் அறிக்கை விடுத்தனர்। பயன் ஏதும் ஏற்படவில்லை.

திராவிடர் கழகத் தோழர்களின் எதிர்காலத் திட்டம் பற்றி ஆராய 17-9-49 அன்று சென்னை பவழக் காரத் தெருவிலுள்ள ஒரு சிறிய அறையில் அண்ணா ஒரு கூட்டத் தைக் கூட்டினார். புதிய கழகம் அமைப்பதெனத் தீர்மானமாகியது. அதுவே திராவிட முன்னேற்றக் கழகம்.
தி।மு.கழகம் அமைந்ததை யட்டி அன்று ராபின்சன் பூங்காவில் கூட்டம். ஏராளமான மக்கள்!

''நாம் திராவிடர் கழகத்தாருடன் மோதுவதோ, சாடுவதோ கூடாது। திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்'' என்று பேசத் தொடங்கினார் அண்ணா।

ஒரு நாள் அண்ணாவின் இல்லத்திற்கு மாநகராட்சி தி।மு.கழகத்தினர் வந்தனர்.

''உங்களுக்கு ஒரு சிலை வைக்கலாமென்றிருக்கிறோம்'' என்றனர்.
''எனக்கேன் சிலை? வேண் டாம்'' என்றார் அண்ணா.
''இல்லை, சிலை வைத்துத்தான் ஆகவேண்டும்'' என்றனர்.
''அப்படியானால் நான் சொல் வதைக் கேளுங்கள்। தமிழ்நாட்டின் புகழை உயர்த்தியுள்ள காமராச ருக்கும் சத்தியமூர்த்திக்கும் சிலை வையுங்கள்'' என்றார் அண்ணா.

பெருந்தன்மையும் நாகரிகமும் கலந்த அந்தத் தலைவரின் உத்தரவுப் படியே காமராசருக்கும் சத்திய மூர்த்திக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.
அண்ணாவுக்கு முதன்முதலாக 'அறிஞர்' பட்டம் தந்தது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்தான்।
- அடியார்




அண்ணாவின் கோபம்...அய்யாவின் தந்திரம்...


திராவிடர் கழகத்தில் பெரியா ரிடம் அண்ணா செயலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம் அது திராவிடர் கழகக் காரியாலயத் துக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்று பெரியாரிடம் அண்ணா தெரிவித்தார்.

''சரி! நாளை ஒரு நல்ல ஆளாகப் பார்த்து அழைத்து வா!'' என்றார் பெரியார்। அது போல், அண்ணா மறுநாள் ஒருவருடன் பெரியார் முன் போய் நின்றார்।

வெள்ளையடிக்க வந்தவருக்கு முதலில் கட்டடத்தை முழுவதுமாகச் சுற்றிக் காண்பித்துவிட்டு, ''என்ன கூலி கேட்கிறாய்?'' என்றார் பெரியார்।

''ஐந்து ரூபாய் தாருங்கள்!'' என்றவுடன் பெரியார் மிகவும் கோபமடைந்து, ''நீ என்ன படித்திருக்கிறாய்?'' என்று கேட்டார்.

''படிச்சிருந்தா நான் ஏங்க இந்த வேலைக்கு வர்றேன்? பேனால்ல பிடிச்சிருப்பேன்... படிச்சுத் தொலைக்கலீங்க!'' என்றார் அவர்।

உடனே பெரியார் அண்ணா வைக் காட்டி, ''இதோ நிற்கி றாரே, இவர் எம்.ஏ. படித்திருக் கிறார். இவருக்கே நான் மாதச் சம்பளம் ஐம்பது ரூபாய்தான் தருகிறேன். கூலியைப் பார்த்துக் கேள்!'' என்றார்.

பிறகு, ''இரண்டு ரூபாய் தருகிறேன்!'' என்றார். ''கட்டாதுங்க!'' என்று கூறிப் போய்விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர்.

அதன்பின், அண்ணா வேறு சிலரை அழைத்து வந்தும் கூலித் தகராறினால் காரியா லயத்துக்குப் பல மாதங்களாக வெள்ளையடிக்க முடியாம லேயே போயிற்று. காரியாலயம் மிகவும் அவலட்சணமாகி வருவது சகிக்கமுடியாமல், அண்ணா ஓர் உபாயம் மேற்கொண்டார்.
ஒருவரிடம் போய், ''ஐயா, ஒரு பெரியவரிடம் உங்களை அழைத் துச் செல்வேன்। அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மீதிப் பணத்தை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக் கொள்ளுங்கள்!'' என்று கூறி அழைத்து வந்தார்.

அவரும் அண்ணா கூறியபடி செய்து, காரியாலயத்துக்கு வெள்ளையடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா உணவு அருந்தச் சென்றிருந்த சமயம், அங்கே பெரியார் வந்தார். வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏம்பா! நீ நன்றாக வெள்ளையடிப்பாயா?'' என்று கேட்டார்.

''ஏன் ஐயா இப்படிக் கேட் கிறீர்கள்?'' என்று திடுக்கிட்டார் அவர்.

''வேறொன்றுமில்லை; உனக்கு முன் இங்கே வந்த பலர் இந்தக் கூலிக்கு முடியாது என்று போய் விட்டார்கள்। நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய்? அநேகமாக உனக்குச் சரியாகத் தொழில் தெரியாது என்று நான் நினைக் கிறேன்!'' என்றார் பெரியார்.

உடனே அவர் தன்மான உணர்வு மேலிட, ''ஐயா! நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் கத்துக்குட்டிப் பயல் இல்லே! என்னை அழைத்து வந்தவர் நீங்கள் தரும் கூலிக்கு ஒப்புக் கொள் ளும்படியும் மீதிப் பணத்தைத் தான் தருவதாகவும் சொன்னார். அதனால்தான் இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டேன்!'' என்று உள்ளதைக் கக்கிவிட்டார்.

இதைக் கேட்டதும் மிகுந்த கோபம் அடைந்த பெரியார், ''அப்படியா விஷயம்! சரி, நீ வேலை செய்தது போதும். பூச்சு மட்டையைக் கீழே வைத்துவிட்டு முழுப் பணத்தையும் அவரிடமே வாங்கிக் கொண்டு போ!'' என்று கூறி, அவருடன் அண்ணாவையும் சேர்த்து வெளியே அனுப்பிவிட்டார்.

இந்தச் சம்பவம் நடந்து, வெகு நாட்களுக்குப் பிறகுதான் அண்ணாவை மன்னித்துத் திரும்பவும் சேர்த்துக்கொண்டார். அதன் பின், பெரியார் கிழித்த கோட்டை இம்மியும் தாண்டாத லட்சுமணன் ஆனார் பேரறிஞர் அண்ணா!

- 'பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும்' என்ற நூலிலிருந்து...

நினைவலைகள்

கடலலைக்கு வேண்டுமானால்
கரைக்கு வந்து போவது
பழகிப்போயிருக்கலாம் - ஆனால்
கரைக்கு வந்து போவது
பழக்கமில்லையடி
அது என்றும் அதே இடத்தில்தான்
இருக்கும்।
உனக்கு வேண்டுமானால்
நம் பிரிவு சந்தோஷம் தரலாம்
ஆனால் எனக்கு வேதனையடி
உனக்குத் தெரியுமா
திறந்தவுடன் உன்னைக் காட்டும்
மணிப்பர்ஸ்,
உனது குரலைக் கேட்க மட்டுமே
காத்திருக்கும்
எனது செல்போன்,
உனக்காக மட்டுமே மீண்டும் மீண்டும்
எழுதத் துடிக்கும்
விரல்கள்
உன்னை மட்டுமேசிந்திக்கச் செய்யும்
சிந்தனைகள்
உனது வருகைக்காய்காத்திருக்கும்
எனது கால்கள்
உன்னிடம் மட்டுமே பேசத் துடிக்கும்
எனது உதடுகள்.
இப்படி சொல்லப் போனால்
அநேகம்எனக்குள்ளே
இயங்கிக் கொண்டிருக்கும்உனது
நிலைவலைகளைஎன்னைவிட்டு
பிரிந்து போகச் சொல்லடி
பிறகு -
நான் உன்னை பிரிந்து போவதை
யோசிக்கிறேன்।

- ஜோயில்

அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

கா. அ‌ய்யநாத‌ன்

ஆறும் நீரும் உனக்குச் சொந்தமென்றால்
வானும் மேகமும் யாருக்குச் சொந்தம்?

வயலும் விளைச்சலும் உனக்குச்
சொந்தமென்றால்
வான் மழையும் பருவமும் யாருக்குச்
சொந்தம்?

நிலமும் நாடும் உனக்குச்
சொந்தமென்றால்
இப்புவியும் வளியும் யாருக்குச் சொந்தம்?

விழிப்பும் உறக்கமும் உன்னுடையதென்றால்
இரவும் பகலும் யாருக்குச் சொந்தம்?

வாழ்வும் பயனும் உன்னுடையதென்றால்
உன் பிறப்பும் இறப்பும் யாருக்குச் சொந்தம்?

ரத்தமும் சதையும் மூச்சும் நீயென்றால்
உன் உயிரும் ஆத்மனும் யாரென்று கூறு।

என்னுடையது என்னுடையது என்கின்றாயே
நீ இல்லையென்றாலும் அனைத்தும் இருக்குமடா

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்ல

ஏனென்று தெரியாமல் வாழப் பிறந்துள்ள நீ
எனக்கென்று இவ்வாழ்கை எதற்கென்று பொருள்தேடு

சுகபோகியாய் அனுபவிக்கும் உனக்கென்று உள்ளதெது?
கட்டையில் எரித்தாலும், குழி தோண்டிப் புதைத்தாலும்
அடுத்த ஆறு மாதத்தில் அடையாளம் அற்றுப்போகும் நீ
உன்னுடையதென்று ஒன்றுமில்லை என்றுணர்

இருக்குமனைத்தும் அனைவருக்குமேயெனும்
உண்மையறிந்து ஒன்றாய் வாழ்ந்திட
இறைவன் பங்கிட்டு அளித்ததேயெல்லாம்
அதிலென்ன உன் பங்கு என் பங்கு?

காவிரி கங்கை சிந்து நதிகளெல்லாம்
நம் பிறவியைக் கொடுத்த இறைவனுடையது
தாயின் முலைப் பாலையொத்தது
நதி நீர்பு‌னிதம் அதுவென்று போற்றிப் பகிர்ந்துகொள்

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

நன்றி - வெப்துனியா

பொன் விழா காணும் சென்னை எல்.ஐ.சி. கட்டடம்!

சென்னையின் அடையாளமாக இன்றும் எழிலுற விளங்கிக் கொண்டிருக்கும், அண்ணா சாலை எல்।ஐ.சி கட்டடத்திற்கு 50 வயதாகிறது.அந்தக் காலத்து கருப்பு வெள்ளைப் படங்களில் பட்டணத்தைக் (சிங்கார சென்னைதான்) காட்டும் காட்சிகளில் முதலில் வருவது எல்.ஐ.சியின் 14 மாடி கட்டடம்தான். அந்த அளவுக்கு சென்னையின் அடையாளமாக பல காலமாக திகழ்ந்து வருகிறது எல்ஐசி கட்டடம்.

இந்த நீண்டு நெடிதுயர்ந்த கட்டடத்திற்கு வயது 50 ஆகிறது என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு புது மணப் பெண் போல, புதுக் கருக்கு மாறாமல் அப்படியே ஸ்லிம்மாக நின்று கொண்டிருக்கிறது எல்.ஐசி. கட்டடம்.இன்றும் சென்னைக்கு வருபவர்கள் வந்து வேடிக்கை பார்க்கும் இடமாக எல்.ஐ.சி. திகழ்கிறது. சென்னை நகரவாசிகளுக்குப் பெருமையாகவும், இதர ஊர்க்காரர்களுக்கு ஆச்சரியமாகவும் திகழும் எல்.ஐ.சி கட்டடத்தின் கதை சுவாரஸ்யமானது, ஆச்சரியமூட்டக் கூடியது.

சென்னையின் முதல் உயரமான கட்டடம் என்ற பெருமை எல்.ஐ. சி கட்டடத்திற்கு உண்டு. அதுமட்டுமல்ல இந்தியாவின் முதலாவது உயரமான கட்டடமும் இதுதான். 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி எல்.ஐ.சி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.தனது எம்.சி.டி குரூப் நிறுவனத்திற்கு பிரமாண்ட அலுவலக கட்டடம் தேவை என்று கருதினார் பிரபல தொழிலதிபர் எம்.சிதம்பரம் செட்டியார். இந்த குருப்பீல் இடம் பெற்றிருந்த நிறுவனங்கள் - யுனைட்டெட் இந்தியா லைப், யுனைட்டெட் இந்தியா பயர் அன்ட் ஜெனரல் மற்றும் நியூ கார்டியன் லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

சிதம்பரம் செட்டியாருக்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. கட்டடம் பெரும் உந்துதலாக இருந்தது. அதே போல சென்னையில் பிரமாண்ட, உயரமான கட்டடத்தைக் கட்ட அவர் திட்டமிட்டார். அதுதான் தற்போது அண்ணா சாலையில் கம்பீரமாக நிற்கும் எல்.ஐ.சி கட்டடம்.இந்தக் கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பை லண்டனைச் சேர்ந்த பிரபல கட்டடக் கலை வல்லுனர்களான பிரவுன் அன்ட் மவுலினிடம் விட்டார். 1953ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1957ம் ஆண்டு திடீரென பிரவுனும், மவுலினும் விலகிக் கொண்டனர். இதையடுத்து சென்னையைச் ேசர்ந்த சித்தாலே நிறுவனத்தினர் மிச்சப் பணிகளை மேற்கொண்டு கட்டி முடித்தனர்.

இந்த நிலையில், 1956ம் ஆண்டு நேரு அரசாங்கம் நாட்டில் இருந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களையெல்லாம் நாட்டுடமையாக்கியது. அவற்றின் சொத்துக்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.இதனால் 1959ம் ஆண்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டபோது அது அரசு கட்டமடாக மாறியிருந்தது.

சிதம்பரம் செட்டியாரின் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் அரசின் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்தியாவின் (எல்.ஐ.சி) ஒரு அங்கமாக மாறிப் போயிருந்தது.1.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆயிரம் டன் எஃகு, 3,000 டன் சிமெண்ட் கொண்டு இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் உயரம் 177 அடியாகும்.கட்டடத்தின் மொத்தப் பரப்பளவு 13 லட்சத்து 6 ஆயிரத்து 100 சதுர அடியாகும். அதாவது 56.5 கிரவுண்டு ஆகும். தரைப் பகுதி மட்டும் 14.5 கிரவுண்டு ஆகும்.கட்டடத்தின் அடித்தளத்தின் உயரம் 11 அடி 6 இன்சுகள் ஆகும். தரைத்தளத்தின் உயரம் 14 அடியாகும். அடுத்த 12 மாடிகளும் தலா 11 அடியாகும். மொட்டை மாடியில் உள்ள மெஷின் ரூம் 19 அடி உயரம் கொண்டது. கட்டடத்தில் மொத்தம் 5 லிப்ட்டுகள் உள்ளன.எல்.ஐ.சி கட்டடம், தென் மண்டல தலைமையகமாக திகழ்கிறது. இங்கு ஒரு கோட்ட அலுவலகம், கிளை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. வேறு சில நிறுவனங்களும் கட்டடத்தின் சில பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.1959ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் இக்கட்டடத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள எல்.ஐ.சி. பொன் விழா காண்பதால், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பெருமை அடைந்துள்ளனர் - தமிழக மக்களும்தான்.

'இல்லாத வெளிச்சம்'

உலகம் ஒரு நிழல்
நானுமொரு நிழல்
தென்னை ஒரு நிழல்
வெளிச்சத்தின் மறுபக்கத்தில்
நிழலுடன் நிழலாக
வடிவங்கள்
காற்றின் காலடி
சப்தங்களுடன்
தென்னை சிலிர்க்கிறது
விரிந்த இரவின் மேல்
ஒற்றை நிலவு
எதிர்பாராத மின்வெட்டு
மனதில் உரிமையற்ற ஏக்கம்

- அனு

என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

உன் செல்ல கோபத்திற்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்....

என் உயிரில் பாதி
உன்னிடமும் மீதியை
உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும்
பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருக்கிறேன்....

நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்....
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்...
நான் பைத்தியமானேன்...

நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்க்கிறது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்...

நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்....

நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது....

- ரிஷி சேது