திருக்குறள்

ஒரு சென்டிமென்ட் ..

பாகவதர் காலம் தொடங்கி 'பசங்க' காலம் வரை தமிழ் சினிமா ஒரு சென்டிமென்ட் கடல்தான்! சில துளி இங்கே...

அம்மா - தங்கச்சி:

'நாடோடி மன்னன்' எம்.ஜி.ஆர். தொடங்கி 'நந்தா' சூர்யா வரை அம்மா என்றாலே சென்டிமென்ட்தான். முன்பு ஆறு பாடல்களில் ஒன்றை அம்மாவின் பெருமையைப் பாட ஒதுக்கிவிடுவார்கள். அம்மாவுக்கு அடுத்த இடம் தங்கச்சிக்கு. ''தங்கச்சீ...'' என்று டெரராகக் கூவி சென்டிமென்ட்டை டெரரிஸமாக மாற்றியதில் டி.ஆருக்குப் பெரும் பங்கு உண்டு. கிளைமாக்ஸில்அம்மாவையும் தங்கச்சியையும் உயரமான கட்டடத்தின் உச்சியிலோ, ரயில்வே தண்டவாளத்திலோ கட்டிப்போட்டு வில்லன் மிரட்டுவார். ஹீரோ வந்து இருவரையும் காப்பாற்றி, காதலியைக் கைப்பற்றி கேமராவைப் பார்த்துச் சிரிப்பார்!

தாலி:

கொஞ்சநாள் முன்பு வரை தாலிதான் சினிமா ஹிட்டாக வழி என்று இருந்தது. தாய்லாந்தில் கணவன் தடுக்கி விழுந்தால் இங்கே மனைவி கழுத்தில் தாலி அறுந்துவிழும். மனநோயாளியை விட்டு விதவைக்குத் தாலிகட்ட வைத்தார்கள். மொள்ளமாரி புருஷனாக இருந்தாலும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைத்தார்கள். ஹீரோயின் தாலியை வில்லனைவிட்டு அறுத்து எறியவைத்தார்கள். 'பிடித்த பெண்ணை அடைய வேண்டுமா?'... 'கட்றா தாலியை' என்று மஞ்சள் கயிற்றைச் சுழற்றினார் கள். 'கள் குடித்தாலும் கணவன்' என்று தாலியைக் கழற்றாமல் மனைவிகளைத் தவிக்கவிட் டார்கள். இப்போதுதான் 'தாலி'க்கு வந்து இருக்கிறது லைட்டாக வேலி!

காதல்:
'
காதல் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டுவந்தால் எல்லோ ரும் படம் பார்க்க பக்கத்து மாநிலத்துக்குத்தான் போக வேண்டும். காதலிக்காகக் கடலில் மூழ்கி சங்கு எடுப்பது தொடங்கி, தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்வது வரை காதலுக்காக தமிழ் சினிமா காதலன் இழந்தது ஏராளம். தங்கள் காதலைச் சொல்லாமலே மறைத்து தியாகம் செய்வது ஒரு சீஸன். பிறகு சொல்லாமலே காதல்,பார்க் காமலே காதல், பல் விளக்காமலே காதல், போன் காதல், போண்டா காதல் என்று எக்கச்சக்கமான காதல்கள் கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைத்தன!

மதுரை:

பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம் என்று திரிந்த சினிமா வேன்களை மதுரைப் பக்கம் திருப்பியது 'காதல்' படம். அந்தப் படம் ஹிட்டானதும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மதுரை மீது பாசம் பொங்கியது. 'ஏய்ய்ய், நாங்கள்லாம் யார்னு தெரியும்ம்ம்ல' என்று சிலுப்பிக்கொண்டு ஆரப்பாளையம், தேவர்சிலை, சிம்மக்கல், அரசரடி என்று மதுரையை டம்மி ரத்தத்தால் தோய்த்து எடுக்கும் சினிமாக்காரர்களை யாராவது ஊர் கடத்தினால் நல்லது. உங்களுக்காகவே இளைய தளபதி பாடினதைக் கேளுங்க பாஸ்... 'மதுரைக்குப் போகாதடி...'

யதார்த்தம்:

'பருத்திவீரன்' ஆரம்பித்துவைத்த யதார்த்தக் காய்ச்சல். இரண்டு வாரம் குளிக்காமல்,மேக் கப் தொடாமல் வெயிலில் கறுக்கத் தொடங்கினார்கள்.
''ஹீரோன்னா அழகா இருக்கணும்னு எவன்டா சொன்னான்?'' என கமல்ஹாசன் கலர் உள்ளவர்களை எல்லாம் கருவாயன் ஆக்கினார்கள். யதார்த்த சினிமா தப்பில்லை. ஆனால், நான்கைந்து பையன்கள் ஒரு குரூப்பாக அலைவது, நாலு பேரில் ஒருவன் தாடியோடு இருப்பது, கீச்கீச் என்று கத்தும் அம்மாக்கள், கூடவே ஒரு திருவிழாப் பாட்டு என இவர்கள் யதார்த்த சினிமா என்ற பெயரில் பண்ணும் ஒரே டைப் பதார்த்தம் திகட்ட ஆரம்பித்துவிட்டது!

ஊர்ப் பெயர்:

'ஊரரசு' என்கிற பேரரசு 'திருப்பாச்சி' என்று படம் எடுத்து ஓடினாலும் ஓடியது, மனுஷன் ஒரு ஊரை விடவில்லை. சிவகாசி, திருவண்ணாமலை, பழநி என்று தமிழ்நாட்டு மேப்பைத் தாளிக்க ஆரம்பித்துவிட்டார். இடையில், ஆந்திரத் திருப்பதியை டைட்டில்ஆக் கியது எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

கருத்து கந்தசாமி:

ஷங்கர்தான் இதைத் தொடங்கிவைத்த 'பெருமைக்கு உரியவர்'. 'நல்லதுக்காகக் கெட்டது செய்யும்' ஷங்கரின் ஹீரோக்கள் கடைசியில் போனால் போகிறது என்று போலீஸிடம் மாட்டுவார்கள். உடனே, மக்களின் வாய்க்குள் மைக் திணிக்கப்படும். 'அவர் செஞ்சதுல என்ன சார் தப்பு? நாங்க நினைச்சதைத்தான் அவர் செஞ்சாரு', 'அவரை மாதிரி நூறு பேர் வரணுங்க. அப்பதான் இந்த அரசியல்வாதிங்க திருந்துவாங்க', 'எங்களுக்கு மட்டும் அதிகாரம் இருந்தா அவரை உகாண்டாவுக்கு உள்துறை அமைச்சர் ஆக்குவோம்', 'சட்டம் இதுக்கு இடம் கொடுக்குமா?', 'மக்களுக்காகத்தான சட்டம், சட்டத்தைத் திருத்துங்க, சட்டைப் பட்டனைப் போடுங்க' என்று 'மக்கள் கருத்து' திரையில் ஓங்கி ஒலிக்கும். 50 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு பிளாக்கில் வாங்கிய மக்கள், நிஜத்தில் கருத்து சொல்ல எந்த மைக்கும் கிடைக்காது!

- ஆனந்தவிகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற