திருக்குறள்

அண்ணாவின் கோபம்...அய்யாவின் தந்திரம்...


திராவிடர் கழகத்தில் பெரியா ரிடம் அண்ணா செயலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம் அது திராவிடர் கழகக் காரியாலயத் துக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்று பெரியாரிடம் அண்ணா தெரிவித்தார்.

''சரி! நாளை ஒரு நல்ல ஆளாகப் பார்த்து அழைத்து வா!'' என்றார் பெரியார்। அது போல், அண்ணா மறுநாள் ஒருவருடன் பெரியார் முன் போய் நின்றார்।

வெள்ளையடிக்க வந்தவருக்கு முதலில் கட்டடத்தை முழுவதுமாகச் சுற்றிக் காண்பித்துவிட்டு, ''என்ன கூலி கேட்கிறாய்?'' என்றார் பெரியார்।

''ஐந்து ரூபாய் தாருங்கள்!'' என்றவுடன் பெரியார் மிகவும் கோபமடைந்து, ''நீ என்ன படித்திருக்கிறாய்?'' என்று கேட்டார்.

''படிச்சிருந்தா நான் ஏங்க இந்த வேலைக்கு வர்றேன்? பேனால்ல பிடிச்சிருப்பேன்... படிச்சுத் தொலைக்கலீங்க!'' என்றார் அவர்।

உடனே பெரியார் அண்ணா வைக் காட்டி, ''இதோ நிற்கி றாரே, இவர் எம்.ஏ. படித்திருக் கிறார். இவருக்கே நான் மாதச் சம்பளம் ஐம்பது ரூபாய்தான் தருகிறேன். கூலியைப் பார்த்துக் கேள்!'' என்றார்.

பிறகு, ''இரண்டு ரூபாய் தருகிறேன்!'' என்றார். ''கட்டாதுங்க!'' என்று கூறிப் போய்விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர்.

அதன்பின், அண்ணா வேறு சிலரை அழைத்து வந்தும் கூலித் தகராறினால் காரியா லயத்துக்குப் பல மாதங்களாக வெள்ளையடிக்க முடியாம லேயே போயிற்று. காரியாலயம் மிகவும் அவலட்சணமாகி வருவது சகிக்கமுடியாமல், அண்ணா ஓர் உபாயம் மேற்கொண்டார்.
ஒருவரிடம் போய், ''ஐயா, ஒரு பெரியவரிடம் உங்களை அழைத் துச் செல்வேன்। அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மீதிப் பணத்தை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக் கொள்ளுங்கள்!'' என்று கூறி அழைத்து வந்தார்.

அவரும் அண்ணா கூறியபடி செய்து, காரியாலயத்துக்கு வெள்ளையடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா உணவு அருந்தச் சென்றிருந்த சமயம், அங்கே பெரியார் வந்தார். வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏம்பா! நீ நன்றாக வெள்ளையடிப்பாயா?'' என்று கேட்டார்.

''ஏன் ஐயா இப்படிக் கேட் கிறீர்கள்?'' என்று திடுக்கிட்டார் அவர்.

''வேறொன்றுமில்லை; உனக்கு முன் இங்கே வந்த பலர் இந்தக் கூலிக்கு முடியாது என்று போய் விட்டார்கள்। நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய்? அநேகமாக உனக்குச் சரியாகத் தொழில் தெரியாது என்று நான் நினைக் கிறேன்!'' என்றார் பெரியார்.

உடனே அவர் தன்மான உணர்வு மேலிட, ''ஐயா! நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் கத்துக்குட்டிப் பயல் இல்லே! என்னை அழைத்து வந்தவர் நீங்கள் தரும் கூலிக்கு ஒப்புக் கொள் ளும்படியும் மீதிப் பணத்தைத் தான் தருவதாகவும் சொன்னார். அதனால்தான் இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டேன்!'' என்று உள்ளதைக் கக்கிவிட்டார்.

இதைக் கேட்டதும் மிகுந்த கோபம் அடைந்த பெரியார், ''அப்படியா விஷயம்! சரி, நீ வேலை செய்தது போதும். பூச்சு மட்டையைக் கீழே வைத்துவிட்டு முழுப் பணத்தையும் அவரிடமே வாங்கிக் கொண்டு போ!'' என்று கூறி, அவருடன் அண்ணாவையும் சேர்த்து வெளியே அனுப்பிவிட்டார்.

இந்தச் சம்பவம் நடந்து, வெகு நாட்களுக்குப் பிறகுதான் அண்ணாவை மன்னித்துத் திரும்பவும் சேர்த்துக்கொண்டார். அதன் பின், பெரியார் கிழித்த கோட்டை இம்மியும் தாண்டாத லட்சுமணன் ஆனார் பேரறிஞர் அண்ணா!

- 'பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும்' என்ற நூலிலிருந்து...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற