திருக்குறள்

திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக ஓரே மேடையில்....


திமு.க-வின் சார்பில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, மாநில அமைச்சர்கள் பூங்கோதை, கீதா ஜீவன், காங்கிரஸ் சார்பில் ராணி வெங்கடேசன், தே.மு.தி.க-வின் விருதுநகர் வேட்பாளர் 'மாஃபா' பாண்டியராஜன், சரத்குமார் கட்சி பிரமுகர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள்... இப்படி அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கும்பகோணத்தில் நடந்தது அந்த மாநாடு.

'ஏதேது இப்படி ஒரு அதிசய கூட்டணியா? என்று விவரம் புரியாதவர்கள் சற்று குழம்பித்தான் போவார்கள். இவர்களைச் சேர்த்து வைத்தது இனம்தான்! நாடார் மகாஜன சங்கத்தின் 68-வது மாநாடும், மகளிர் மாநாடும் கடந்த மார்ச் 28, 29-ம் தேதிகளில் கும்பகோணம் சர்வமங்களா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில்தான் அந்த அபூர்வம்!

அடுத்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாட இருக்கும் நாடார் மகாஜனசங்கத்தோடு தமிழகம் முழுக்க சுமார் 1,500 உறவின் முறை சங்கங்கள் தொடர்பில் உள்ளன. சுமார் 60 சட்டமன்றத் தொகுதிகளில் கணிசமாக இருக்கும் நாடார் சமுதாய மாநாடு தேர்தல் சமயத்தில் நடப்பதால்... முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வரின் துணைவியார் ராசாத்தியம்மாள் அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி இருவரில் ஒருவர் கண்டிப்பாக வரப்போகிறார் என மாநாட்டு முழுவினர் எதிர்பார்த்தனர். இருவரும், கடைசி வரை வரவேயில்லை. 'நாடார் சமூகத்தவர் தன் பக்கம் இருக்கட்டும்' என்று நினைத்து, இந்த மாநாட்டுக்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார் தயாநிதி மாறன். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அவரை அழைத்து வருவதாக சொல்லியிருந்த நாடார் சமூக பிரமுகர் வீனஸ் வீர அரசும் வரவில்லை.

மாநாட்டில் பேசிய சங்கத்தின்பொதுச் செயாளர் கரிக்கோல்ராஜ், ''2011-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் எங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக, எங்களை இப்போதிலிருந்தே தயார்ப்படுத்திக் கொள்கிறோம். தி.மு.க-வின் தலைவர் கலைஞராக இருக்கட்டும். அ.தி.மு.கழக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவாக இருக்கட்டும். இந்த தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு எங்களிடையே நபர்கள் வரவில்லையே? காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளிலும் இதே நிலைமைதான். சுயமாக முடிவெடுக்கும் இடத்தில் எங்கள் அமைப்பை வைத்திருக்க மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் தற்போது உள்ளவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளின் கட்டுப்பாட்டை விட்டு வெளியே வரமுடிவதில்லை. பொதுவான சில சமுதாயப் பணிகளைச் செய்வதற்கே ஆள்பவர்களிடம் போராட வேண்டியுள்ளது. இலவசக் கல்வி தர நாங்கள் நினைக்கிறோம். எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. எங்கள் பள்ளிக்கூடங்களில் நிலம் தொடர்பான பிரச்னைகள் நிலுவையில் உள்ளன. மூன்று நர்ஸிங் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவதில் அலைச்சல். சென்னை புறநகர் பகுதிகளில் பல லட்சம் பேர் கிராமணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களைப் போலவே, ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் சாணார்களின் எண்ணிக்கையும் பல லட்சம் தாண்டும். இந்த இரு வகுப்பினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும்படி கேட்கிறோம்.

டாஸ்மாக் கடையில் கள்ளையும் விற்கவேண்டும். பதநீரை அரசே கொள்முதல் செய்து, கருப்பட்டி ஆக்கி விற்பனை செய்யலாம். 1970-ம் ஆண்டுக்குப் பிறகு, பதநீர் மாளிகை சென்னையில் செயலற்றுக் கிடக்கிறது. அதை மீண்டும் பொலிவுடன் மாற்றி செயல்பட வைக்க வேண்டும். பனை வாரியத்தை முறையாகச் செயல்படுத்தவேண்டும்!'' என கோரிக்கை மேல் கோரிக்கையாக அடுக்கினார் கரிக்கோல்ராஜ்.

- நன்றி ஜீ.வி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற