திருக்குறள்

பணநாயகம்... ஜனநாயகத்துக்கு சவால்!

ரவிக்குமார் எம்.எல்.ஏ.

தேர்தல் அறிக்கைகளை பெரும்பாலான அரசியல் கட்சிகள் வெளியிட்டுவிட்டன. வேட்பாளர் பட்டியலும் பல கட்சிகளால் வெளியிடப்பட்டு விட்டன. இனிமேல் வாக்கு சேகரிக்கக் கிளம்ப வேண்டி யதுதான்.

கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையும், அவை அறிவித்திருக்கிற வேட்பாளர் பட்டியலையும் பார்க்கும்போது, அவற்றுக்கிடையே ஒரு முரண்பாடு இருப் பதை உணர முடிகிறது. தேர்தல் அறிக்கையில் பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் அரசியல் கட்சிகள் பேசி யிருக்கின்றன. தேசியக் கட்சிகளை எடுத்துக்கொண்டால், வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரக் கொள்கை, உள்நாட்டு பாதுகாப்பு என்று ஏகப்பட்ட பிரச்னைகளை விவாதித்திருக்கின்றன. மாநிலக் கட்சிகளும்கூட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்தில், பல்வேறு ஆழமான பிரச்னைகளை தேர்தல் அறிக்கை களில் வெளியிட்டு இருக்கின்றன. ஆனால், இந்தத் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பேசு வதற்கும், நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதங்களை திறமையாக முன்வைப்பதற்குமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனென்றால், அரசியல் கட்சிகள் வெளி யிட்டுள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால், அவர்களில் பலர் அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக் கையில் முன்வைத்துள்ள விஷயங்களைப் பற்றி எந்தளவுக்கு விவரம் அறிந்துள்ளனர் என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆக, தேர்தல் அறிக்கை என்பது வெற்று வாக்குறுதிதானோ என்ற ஐயம் வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, என்னென்ன விஷயங்கள் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைப் பார்த்தாலே இதற்கான விடை நமக்குத் தெரியும். போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் அரசியல் கட்சிகளின் சார்பில் நடத்தப்படும் நேர்காணல்களில் முக்கியமாக இடம்பெறுகின்ற கேள்வி, 'நீங்கள் எவ்வளவு கோடி செலவு செய்வீர்கள்?' என்பதுதான். ஒரு
நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகபட்சமாக இருபத்தைந்து லட்ச ரூபாய்தான் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த போதிலும், பலகோடி ரூபாய்களை ஒவ்வொரு வேட்பாளரும் செலவு செய்கிறார் என்பது ஊரறிந்த ரகசியம்.

தேர்தல் செலவு என்பது ஒவ்வொரு தேர்தலுக்கும் உயர்ந்துகொண்டே போகிறது. முன்பெல்லாம் சட்ட மன்றத் தேர்தலுக்குத்தான் அதிகமாக செலவாகும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்படி செலவு செய்ய தேவையில்லை என்ற நிலை இருந்தது. இப்போது சிறிய கட்சிகள்கூட மத்திய அரசில் பங்குபெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், தேர்தலில் செய்யப்படும் செலவு பின்னாளில் ஈட்டப்போகும் வருமானத்துக்கான முதலீடாகக் கருதப்பட்டு, நாடாளுமன்றத் தேர்தலும்கூட செலவு மிகுந்ததாக மாறிவிட்டது. மிக சாதாரணக் கணக்கின்படி தொகுதி ஒன்றுக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் செல வாகும் என்றுதான் பொதுவான பேச்சு இருக்கிறது. ஆக, நம்முடைய 'ஜனநாயகம்' என்பது 'பணநாயகமாக' மாறிவிட்டது!

தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு எத்தனையோ விதமான பற்றாக்குறைகள் ஏற்படும். இப்போது வேட்பாளர் பற்றாக்குறை இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கட்சிகள் பலவும் அறிவித்து வருகின்ற வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும்போது,

நல்ல வேட்பாளர்கள் கிடைப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

நாடாளுமன்றம் என்பது கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுகிற இடமல்ல. அதுதான் இந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கிற அவையாகும். அங்குதான் நம்முடைய நாட்டின் அனைத்துக் கொள்கைகளையும் தீர்மானிக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. உள்நாட்டு, வெளியுறவு, பாதுகாப்பு தொடர்பான நிலைபாடுகளெல்லாம் அங்குதான் தீர்மானிக்கப்படுகின்றன.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அவைக்கு எப்படிப் பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் எந்தவொரு கவனமும் செலுத்துவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. பல்வேறு விஷயங்களில் ஞானமும், அதுபற்றி விவாதிக்கக்கூடிய ஆற்றலும்கொண்ட பிரதிநிதிகளை அனுப்புவதன் மூலம்தான் ஒரு கட்சி தன்னுடைய இருப்பை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த முடியும். வெறும் பலத்தால் எதையும் செய்துவிட முடியாது. அரசியல் அறிவோ, பல்வேறு விஷயங்கள் குறித்த அக்கறையோ இல்லாதவர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, அவர்கள் வெறுமனே கைத்தூக்கிகளாக மட்டுமே செயல்பட முடியும். இது ஒரு கட்சிக்கு எத்தகைய லாப-நஷ்டங்களை ஏற்படுத்துகிறது என்பதை விடவும், அத்தகைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகிற மாநிலங்களுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பது மிகமிக அவசியமாகும்.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்று நம்முடைய மாநிலம் சந்தித்து வருகின்ற பிரச்னைகள் கொஞ்சநஞ்சமல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பகிர்வு பிரச்னைகள்; மத்திய-மாநில உறவுகள் குறித்த சிக்கல்கள்; இனம் என்கின்ற விதத்தில் தமிழ் இனம் சந்தித்து வருகின்ற சிக்கல்கள் என ஏராளமான பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் நாடாளுமன்ற அவையில் எடுத்துவைத்து, இதற்கான தீர்வுகளைக் காணவேண்டிய கடமை இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்லப்போகும் எம்.பி-க்களுக்கு இருக் கிறது. அந்தக் கடமையை ஆற்றக்கூடிய தகுதியான நபர்களை அனுப்பினால் மட்டுமே, தமிழகத்தின் எதிர்காலத்தை நாம் காப்பாற்ற முடியும்.

தமிழ்நாட்டின் நலன்களுக்காக வாதாடக்கூடிய தகுதி யான நபர்களைத் தேர்ந்தெடுப்பதே வாக்காளர்களின் பொறுப்புதான் என்றாலும், அதற்கான வாய்ப்பு அவர் களுக்கு வழங்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி. தம்முடைய தொகுதியில் நிறுத்தப்படுகிற வேட்பாளர்களில் இருந்துதான் யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையில் வாக்காளர்களின் தேர்வு மிகவும் வரையறுக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. எனவே, இதில் வாக்காளர்களை அதிகம் குறைசொல்ல முடியாது. வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் கவனமாக இருந்து, நல்ல வேட்பாளர்களை நிறுத்தாமல் போனால், வாக்காளர்கள் எதுவும் செய்வதற்கில்லை.

விவரமறிந்த, நாட்டின் மீது அக்கறைகொண்ட பலரும், அரசியல் என்றாலே ஒதுங்கிப் போகிற நிலைதான் இப்போது உள்ளது. இதற்குக் காரணம், அத்தகைய நபர்கள் இருந்து செயல்படக்கூடிய கட்சிகள் இல்லாமைதான். இப்படியான நபர்கள் சேர்ந்து செயல்படக்கூடிய வாய்ப்பை அரசியல் கட்சிகள் உருவாக்கித் தர தவறிவிட்டன என்பதே உண்மை. அப்படி தப்பித்தவறி எவரேனும் வந்தாலும்கூட, அவர்கள் இந்தக் கட்சிகளில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய நிலை இருப்பதில்லை. இதற்கு அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லாமல் போய்க்கொண்டிருப்பதே முக்கியமான காரணமாகப்படுகிறது.

ஒருவர் தன்னுடைய ஆற்றலை வெளிப் படுத்தி, ஒரு ஆளுமையாக பரிணமிப்பதற்கு ஏற்ற சூழல் எந்த அரசியல் கட்சியிலும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான் கட்சிகளில் நல்ல வேட்பாளருக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த அரசியல் சூழலில், நல்ல ஆளுமைகள் எந்தக் கட்சியிலும் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது.

தேர்தலில் போட்டியிடுவதற்கு அடிப்படையான தகுதியாக ஒருவரிடம் உள்ள பணம்தான் கருதப்படுகிறது என்ற நிலையில், வேறு எந்தவித தகுதியையும் அவரிடம் எதிர்பார்ப்பது நியாயமல்ல. பணத்தை செலவு செய்து வெற்றி பெற்றுப்போகிற ஒரு வேட்பாளர், பணத்தைச் சம்பாதிப்பதில்தான் குறியாக இருப்பார். அவருக்கு மாநிலத்தின் நலனோ, இனத்தின் நலனோ இன்னும் சொல்லப்போனால், அவர் சார்ந்துள்ள கட்சியின் நலனோகூட முக்கியமாக இருக்காது. பணத்தைக் கொடுத்து வாக்கை வாங்கி வெற்றி பெற்றுப் போகிற ஒருவர், அதேபோல பணத்தால் வாங்கப்படக்கூடிய ஒரு பண்டமாகத்தான் இருப்பார். ஒருசில எம்.பி-க் களின் ஆதரவுகூட நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கக்கூடும் என்ற நிலையில், இப்படியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்குப் பயனளிக்கும் என்பதை அரசியல் கட்சிகள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நாடாளுமன்றத்தில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த விவாதம் வந்தபோது, அதில் பெரும் பாலான மாநிலக் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிதாகும். கலந்துகொண்ட ஒன்றிரண்டு கட்சிகளும்கூட தம்முடைய கூட்டணி தலை மையின் நிலைப்பாட்டை வழிமொழிவதாகவே கருத்துத் தெரிவித்தன. இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், சுயமாக சிந்தித்து நல்லதொரு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு இதுபோன்ற விஷயங்களில் ஞானம் கொண்ட பிரதிநிதிகள் அவையில் இருக்கவேண்டும்.

இன்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகின்ற நிதிப் பகிர்வு குறைந்துகொண்டே போகிறது. அதுபற்றி மாநிலக் கட்சிகள் சார்பில் போகிற எம்.பி-க்கள் குரல் எழுப்புவதில்லை. தமிழ்நாட்டில் 'வாட்' வரி அமல்படுத்தப்பட்டபோது அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களைக் குறித்துப் பேசக்கூடிய எம்.எல்.ஏ-க்கள் ஒருசிலர்தான் தமிழக சட்டப் பேரவையில் இருந் தார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் நிலை இதைவிட சிறந்ததாக இல்லை. தற்போதுள்ள பொருளாதாரச் சூழலை புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்றக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? பொருளாதார விஷயங்களில் பயிற்சி அற்றவர்கள் அவை யில் நிறைந்திருக்கும்போது, நிதிநிலை அறிக்கை மீது என்ன விவாதத்தை நடத்திட முடியும்?

நம்முடைய நாட்டின் வேளாண் துறை, சரிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய பொருளாதாரத்தை மீட்க வேண்டுமென்றால், வேளாண் துறையை சரிவில் இருந்து காப் பாற்றியாக வேண்டும். வேளாண் துறை சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து எவ்வளவு பேருக்கு ஆழமான புரிதல் இருக்கிறது? விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கையைப் புரிந்துகொள்ளக்கூடிய எம்.பி-க்கள் எத்தனை பேர் இன்றைய நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்? அதுபோல இன்று மீனவ மக்களின் வாழ்க்கையையே சிக்கலுக்கு ஆளாக்கக்கூடிய 'கடற்கரையோர மேலாண்மை' திட்டத்தைப் பற்றிவிவாதித்து, மீனவர் களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு குரலெழுப் பக்கூடிய எம்.பி-க்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?

தகுதியான, மக்கள் நலனில் அக்கறைகொண்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அரசியல் கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தைவிடவும், ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படக்கூடிய நஷ்டமே மிகவும் அதிகம். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு குறித்துக் கண்காணிக்கவும், கருத்துச் சொல்லவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, ஊடகங்களுக்கு இதில் அதிகம் பொறுப்பு இருக்கிறது. விழிப்பு உணர்வு கொண்ட சூழலை ஏற்படுத்துவதன் மூலமே இத்தகைய சீர்கேட்டைச் சரிப்படுத்த முடியும்.

'அவர்கள் கட்சி, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது அவர்களுடைய உரிமை. இதில் நாம் தலையிட்டு எதுவும் செய்து விடமுடியாது' என்று நினைத்தால், அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் மக்கள்தான். ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறாமல் தடுப்பதற்கு விழிப்பு உணர்வு பெற்ற வாக்காளர்கள் முன்வர வேண்டும். தனி நபர்களாக இருந்து, இதை மாற்றிவிட முடியாது என்பது உண்மைதான். சமூக அக்கறைகொண்ட இயக்கங்களும், ஊடகங்களும் நினைத்தால் நிச்சயமாக இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும். செய்வார்களா?
-நன்றி ஜீ.வி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற