திருக்குறள்

உயிர் உடைத்த புகைப்படம்...



புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.

இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது
.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.


1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்;

ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.

முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.


நன்றி: ஹைதர் அலி

செக் குடியரசில் மனித எலும்புகளில் கட்டப்பட்டிருக்கும் விசித்திர தேவாலயம்.




அண்ணன் வெள்ளை மாளிகையில்.. தம்பி குடிசையில்



அமெரிக்க அதிபரின் சகோதரர் கென்யா நாட்டின் குடிசைப் பகுதியில் வசிக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தந்தைக்கு நான்கு மனைவிகள். வெள்ளையரான ஆன் துன்ஹாமுக்கு பிறந்தவர் தான் பராக் ஒபாமா.

ஜேயல் ஒட்டினோ என்பவருக்கு பிறந்தவர் ஜார்ஜ் ஒபாமா. ஜார்ஜ் தற்போது கென்யா நாட்டின் நைரோபி நகரில், ஒரு குடிசைப் பகுதியில் வசிக்கிறார். 

அண்ணன் வெள்ளை மாளிகையில் உலகத் தலைவராக வீற்றிருக்க, நைரோபி குடிசைப் பகுதியில், சாதாரணமாக வாழ்ந்து வருகிறார் ஜார்ஜ். ஹாலிவுட் நிருபர் திணேஷ் டிசூசா கென்யாவுக்கு சென்று, ஜார்ஜை பற்றிய விவரணப் படம் எடுத்துள்ளார்.

இதில் ஜார்ஜ், நான்கு நிமிடங்கள் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், "என்னுடைய சகோதரர் உலகத்தையே காத்து வருகிறார். அந்த வகையில் என்னையும் காக்கிறார். எங்கள் நாட்டில் எப்போதும் சண்டை நடந்து கொண்டே இருப்பதால், இரண்டாம், மூன்றாம் நாடுகள் பட்டியலில் உள்ளோம். 

நான் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது, கார் விபத்தில் தந்தை இறந்து விட்டார். அவர் மெத்தப் படித்தவர் என, என் தாய் கூறியிருக்கிறார். என் தந்தையை பற்றிய நினைவுகள் எனக்கு இல்லை" என்றார்.

108-ன் ஊழியர்கள் சோகம்


108-ன் ஊழியர்கள் சோகம்

தமிழகம் முழுவதும் பரபரப்பாக செயல்பட்டுவரும், தமிழக அரசின் 108 அவசர உதவி வாகனத்தில் பணியற்றும் ஊழியர்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக சொல்லி சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்திடம் மனு கொடுத்துவிட்டு வந்தார்கள் 108 ஆம்புலன்சை ஓட்டும் பைலட்டுகள்.
என்ன உங்களின் பிரச்சனை..? என்று கேட்டோம்.
ஒன்னா... இரண்டா சார்....., தினம் தினம் பிரச்சனை தான் கொஞ்சம் கேளுங்க சார் என்றார்கள்.
2008-ல் இந்த திட்டம் துவங்கப்பட்டபோது எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஐந்தாயிரம், மற்றும் வருடத்திற்கு ஒருமுறை இருபது பர்சென்ட் இன்கிரிமெண்ட் தருவதாக சொன்னாங்க சார்.

சத்யம் கம்பியுடர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான இ.எம்.ஆர்.ஐ நிறுவனம்  தான் எங்களை வேலைக்கு சேர்த்தது. ஒரே ஆண்டில் அந்த நிறுவனம் மூடப்பட்டதால், அந்திராவில் உள்ள ஜி.வி.கே என்ற நிறுவனம் இப்போது 108 ஆம்புலன்ஸ் சேவையை செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசிடமிருந்து வாங்கும் பணத்தில் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறது.

காலை எட்டு மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் நங்கள் டியூட்டி மாத்திக்கணும், எங்க வீட்டுல இருந்து வண்டி நிக்கற எடத்துக்கு போக நாங்க ஒரு மணிநேரம் முன்னாலையே கிளம்பவேண்டும், அப்ப எங்களுக்கு காலை மதியம் என இரண்டு வேலைச் சாப்பாடும் கடையில் தான் சாப்பிட வேண்டும்.

இரவு பணிக்கு போகிறவர்களுக்கும் இதே போல இரண்டு வேலை கடை சாப்பாடு கடையில்தான்.   அனால், எங்களுக்கு சம்பளம் ஆறாயிரம் ரூபாயும், மருத்துவ உதவியாளர்களுக்கு ஏழாயிரம் ரூபாயும் கொடுக்கிறார்கள். இதில எப்படி சார் இரண்டு வேலை கடையில சாப்பிடமுடியும்.

உலகத்துல எல்லா நாட்டிலேயும் எட்டு மணி நேரம்தான் வேலை. ஆனால், எங்களுக்கு மட்டும் 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். அந்த நான்கு மணி நேரத்துக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தால் பரவாயில்லை. அதுவும் தருவதில்லை.

மற்ற எல்லா இடங்களிலும், வேலை ஆட்களுக்கு, அரசு விடுமுறை நாட்கள், பொங்கல், பண்டிகை போன்ற விசேச நாட்களில் வேலை செய்யும் போது இரு மடங்கு சம்பளம் கொடுகிறார்கள். எங்களுக்கு அப்படி எந்த சலுகையும் கொடுப்பது இல்லை.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகிவிட்டது, ஆனால், ஆம்புலன்ஸ் வண்டி நிறுத்த இடமில்லை, எங்களுக்கு உட்கார இடமில்லை;  தண்ணி குடிக்க இடமில்லை, வெய்யில் அடித்தாலும், மழை பெய்தாலும் வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டியது தான்.

அதிலும் எங்களுடன் பணியாற்றும் பெண்களின் நிலைமை மிகவும் மோசம்.போலிஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, பஞ்சாயத்து ஆபிஸ் இப்படி பல எடத்துல நாங்க வண்டிய நிப்பாட்டிட்டு உக்காந்திருக்கிறோம்.

சாலை விபத்து ஏற்பட்டால், நாங்க அடிபட்டவர்களை எடுத்து போகும் போது  வண்டிக்குள்ள இரத்தம் பட்டுட்டா அதை கழுவிவிட தண்ணி எங்களுக்கு கிடைப்பதில்லை.

கொண்டலம்பட்டி காவல் நிலையத்திலும், அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் தண்ணீர் வசதியில்லை. அங்கு வேலை செய்யும் போலிஸ் காரர்களே தண்ணியில்லாமல் இருக்கும் போது எங்களுக்கு வண்டி கழுவ தண்ணீருக்கு எங்கே போவது.

மல்லூர் காவல் நிலையத்தில் இருந்த வண்டியை ஒருமுறை போலிஸ் இன்ஸ்பெக்டர் அவசரத்துக்கு கூப்பிட்டிருக்கிறார், அந்த நேரம் வண்டி சேலம் போய்விட்டது.

 எங்களுக்கு உதவாத வண்டியை இங்க நிப்பாட்ட வேண்டாமுன்னு சொல்லி துரத்திவிட்டார்கள். இப்போது கெசல்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறுத்தியுள்ளோம். 

இது எல்லாத்தையும் விட சமயத்தில் பொது மக்கள் வேறு விதமாக பிரச்சனை செய்கிறார்கள். தண்ணியை போட்டுவிட்டு கிடப்பவர்களை பார்த்துவிட்டு 108க்கு  தகவல் சொல்லிட்டு போயிடறாங்க.
நாங்க போய் குடிகாரன தூக்கிக்கிட்டு போய் மருத்துவமனையில் போட்டால் அங்க இருக்கறவங்க எங்களை திட்டுறாங்க..

சில இடங்களில் போதையில வாந்தி எடுத்திருப்பர்கள், இன்னும் மோசமா, சில இடத்துல படுத்தபடியே “மோசன்” போய் கிடக்குற கேசையெல்லாம் பார்த்துட்டு, எங்களுக்கு தகவல் சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள். 

ராத்திரி இரண்டு மணிக்கு போன் பண்ணி எம் புருசனுக்கு  மாரடைப்புன்னு சொல்லறாங்க.....   சரியா அட்ரசும் சொல்லமாட்டாங்க... தெருவில் வந்து நிக்க சொன்ன அதையும் செய்யமாட்டாங்க, தட்டு தடுமாறி நாங்க அவங்க வீட்ட கண்டுபிடுச்சு அங்க போனா, வீடு மூணாவது மாடியில இருக்கும்.    எங்களை வந்து தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லுவாங்க...

கிராமத்துல பரவயில்லை யாரவது துணைக்கு வருவாங்க... ஆனா  நகரத்துல யாரும் உதவிக்கு வருவதில்லை. சில இடங்களில், தண்ணிய போட்டுட்டு அடிதடி போட்டுக்கிறாங்க...  108 அம்புலன்சுல போனாத்தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னுவங்கன்னுட்டு எங்களுக்கு போன் போட்டு அய்யோ அய்யோன்னு... கத்துவாங்க கடைசியில நேருல போய் பார்த்தால் ஒரு சின்ன காயம் கூட இருக்காது. ஆனா நெஞ்சு வலிக்குது... உயிரே போகுதுன்னு கத்துவாங்க வேற வழியில்லாம நாங்க தூக்கிகிட்டு போகணும்.

முன்ன கொடுத்திருந்த வண்டிகள் டெம்போ டிராவலர் வேன்கள் கொஞ்சம் சிறிதாகவும் இருந்தது, புது வண்டியாக இருந்ததால் வேகமாகவும் போக முடியும்.    ஆனால் இப்போது முன்பு ஹெல்ப் லைன் 1056-க்கு ஓடிக்கொண்டிருந்த பழைய சுவராஜ் மஸ்தா வண்டியை பெயிண்ட் அடித்து கொடுத்து விட்டார்கள். இது பெரிதாக இருப்பதால் வண்டியை திருப்புவது சிரமம், சின்ன தெருவுக்குள், சந்துக்குள் எல்லாம் போக முடியாது.

ஆனால், பல இடங்களில் பொதுமக்கள், ஏன்டா போகமுடியாதுன்னு சொல்ரீங்கன்னு எங்களை அடிக்க வருவாங்க... பல இடங்களில் அடியும் வாங்கியிருக்கிறோம்.

 பழைய சுவராஜ் மஸ்தா வண்டிக்கு ஏழு முதல் எட்டு கிலோ மீட்டர் தூரம் தான் ஓட்ட முடியும், அனால் ஒன்பது கிலோமீட்டருக்கு மேல் ஓட்டனும், மணிக்கு ஐம்பது கிலோ மீட்டர வேகத்துக்கு மேலே போகக்கூடாது, 40 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டவேண்டிய டயர்களை 80, ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டவேண்டும் என்று சொல்கிரார்கள் எங்கள் உயர்  அதிகாரிகள்.

அவசரத்துக்கு ஓட்டும் ஆம்புலன்சுக்கு மைலேஜ் கேட்ட எப்படி சார் கொடுக்க முடியும். ஏதாவது எதிர்த்து கேட்டால் எங்களை மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு தூக்கியடிக்கிறாங்க... இந்த சம்பளத்துக்கு எப்படி போய் வெளியூரில வேலை  செய்யமுடியும் என்று கேட்கிறார்கள் 108,ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்.

களப்பணிக்கு வராமல், உட்கார்ந்த இடத்திலேயே, இவர்களுக்கு மேலே வேலை செய்யும்,  பிளிட், டி.எம், ஆர்.எம் போன்ற அதிகாரிகள் சாதரணமாக அறுபது ஆயிரம் என்பது ஆயிரம் என்று சம்பளம் வாங்குகிறார்கள்.

எங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், தொழிலாளர் சேமநிதி பணம் எங்களுடைய கணக்கில் கட்டப்படுகிறதா..? என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை, பணி நீக்கம் செய்யப்படும் உளியர்களுக்கு உத்தரவுகூட போன் மூலமே சொல்லப்படுகிறது. இழுத்து மூலமாக கொடுப்பதில்லை. 

பல இடங்களில் நாங்கள் அடிவாங்கியுள்ளோம் அப்போதுகூட எங்களின் நிர்வாகம் எங்களுக்கு ஆறுதல் சொன்னது கிடையாது. போலீசில் புகார் கொடுக்க வழியில்லை.

செல் போன் மூலம் இயங்கும் நாங்கள் தேவையில்லாத போது போன் இணைப்பை போல  துண்டிக்கப்படுகிறோம். பொது மக்களின் உயிரை காக்கும் ஒரு உன்னதமான பணியை செய்கிறோம் என்ற சமூக அர்ப்பணிப்பில் பல சிக்கல்களை சமாளித்துக்கொண்டு பணியாற்றும் எங்களுக்கு மூன்று வேலையும் சாப்பிட தகுந்த அளவு ஊதியமாவது கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம் என்றார்கள்.

இவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்குமா அரசு....?

- சிவசுப்ரமணியம்
   ஆத்தூர்

மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?


மதுவிலக்கு வருகிறதாமே!
ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?

     -கோவி.லெனின்

 அரசாங்கமே நேரடியாக மதுக்கடைகளை நடத்துகின்ற ‘பெரும் புரட்சி’ தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சியைத் தொடங்கிவைத்தவர்  இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அந்தப் படுதோல்விக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக நடத்துகின்ற முடிவை ஜெயலலிதா அரசு எடுத்தது.


ஆனால், இப்போது அவர் 2014 எம்.பி. தேர்தலில் 40க்கு 40தொகுதிகளையும் ஜெயித்து, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கனவிலும் ஆசையிலும் மிதப்பதால், பெண்வாக்காளர்களின் வாக்குகளைக் குறிவைத்து, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாகப் ‘பரபரப்பு’ செய்திகள் வெளியாயின.

 பெருமாயிக் கிழவி பேன் பார்த்தாலும் பார்க்கும். பிய்ச்சிவிட்டாலும் பிய்ச்சிவிடும் என்று கிராமப்புறங்களில் பழமொழி உண்டு.

ஜெயலலிதா தன்னுடைய நிர்வாகத்தில் எப்போது என்ன  செய்வார் என்று தெரியாததாலும், எதையும் எப்போது வேண்டுமானாலும்  செய்பவர் என்பதாலும், இதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கையே ‘மதுவிலக்கு’ என்ற செய்திக்கு கிடைத்திருக்கும் மார்க்கெட் வேல்யூ.  அதே நேரத்தில், மதுவிலக்கின் ரியல் வேல்யூ என்ன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
 “காமராஜர் படி.. படி.. என்று சொன்னார். கருணாநிதி குடி.. குடி.. என்று சொன்னார்” என்ற குற்றச்சாட்டு உண்டு. அதாவது, தமிழகத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த மதுவிலக்கை ரத்து செய்து, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சி 1971ல் மதுபானக்கடைகளைத் திறந்ததால், அதுவரை குடிப்பழக்கத்தையே அறியாத தலைமுறையினரும் குடிக்கக் கற்றுக்கொண்டார்கள் என்பதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்கான  அடிப்படை.


 பிரிட்டிஷ் நிர்வாகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, சென்னை மாகாணத்தின் பிரிமியராக இருந்த மூதறிஞர் ராஜாஜிதான் மதுவிலக்கை அமல்படுத்தினார். இதனால் ஆண்டுக்கு 15 முதல் 20 கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த மதுவிலக்கு உடனடியாக ஏற்படுத்திய தாக்கம் என்ன தெரியுமா? அது பற்றி பெரியார் தனது குடிஅரசு இதழில் எழுதியிருக்கிறார். எந்தப் பெரியார்? மதுவிலக்கை வலியுறுத்தி, கள் தரும் மரங்களை வெட்டவேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னவுடன், தன் தோட்டத்தில் இருந்த 500 தென்னை மரங்களைக் கண்மூடித்தனமாக வெட்டித்தள்ளினாரே, அந்தப் பெரியார்.


 “நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரு ஆதாரம் தேடவேண்டும் என்கிற எண்ணத்தின்மீது மதுவிலக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது, 100க்கு 5 (சத)வீதமே படித்த மக்களாய் இருந்த நாம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு 100க்கு 7 படித்த மக்களானோம். அதைக்கண்டு ஆத்திரமடைந்த ராஜாஜி, தாம் 1938ல் பதவிக்கு வந்தவுடன் கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்தினிடம் போதிய பணம் இல்லை. ஆதலால் வரவு-செலவைச் சரிக்கட்ட 2600 பள்ளிகளை மூடவேண்டியது அவசியமாகிவிட்டது என்பதாக ஒரு சாக்குக் கண்டுபிடிக்கக் கருதியே, மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்டினேன் என்று சொல்ல ராஜாஜி வசதி ஏற்படுத்திக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார் பெரியார்.
 ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கின் உடனடி விளைவு என்பது, சென்னை மாகாணத்தில் செயல்பட்டுவந்த 2600 பள்ளிகளை மூடியதுதான். ஆனாலும், தமிழகத்தில் மதுவிலக்குத் தொடர்ந்து  நீடித்தே வந்தது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்த வருவாய் இழப்புப் பற்றிக் கவலைப்படாமல் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. இலவசக் கல்வித்திட்டமும், இலவச மதிய உணவுத்திட்டமும் நடைமுறைக்கு வந்தன. ஆனாலும், ராஜாஜி ஆட்சியிலும் காமராஜர் ஆட்சியிலும் தமிழகத்தில் குடிகாரர்களே இல்லை என்று நினைத்துக்கொண்டால் நாம் பரிதாபத்திற்குரியவர்கள்.

 பணக்காரர்கள் பர்மிட் எனப்படும் குடிக்கான அனுமதி பெற்று, குடித்து வந்தார்கள். ஏழைகள் மதுக்கசாயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றைக் குடித்தனர். மதுவிலக்கு நடைமுறையில் இருந்ததால், பர்மிட் இல்லாமலோ-பர்மிட்டில் உள்ள அளவுக்கு மீறியோ குடிப்பது சட்டவிரோதமானது. தண்டனைக்குரியது.

ஆனால், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டவர்களில் மிகக்குறைவானவர்களே குற்றவா ளிகளாகப் பதிவு செய்யப்பட்டார்கள். மற்றவர்களுடன் போலீசார் ‘உடன்பாடு’ செய்துகொண்டு, தனி வருமானம் பார்த்ததால், சாராய வியாபாரம் நடந்துகொண்டுதான் இருந்தது. குறைவானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலானப் பின்வரும் புள்ளிவிவரமே நமக்கு ஓர் உண்மையைக் காட்டுகிறது.
 1961ல் 1லட்சத்து 12ஆயிரத்து 889 பேர் மீது வழக்குப் பதிவாகியிருக்கிறது. 1962ல் 1,29,977 பேர். 1963ல் 1,23,006, 1964ல் 1,37,714, 1965ல் 1,65,052, 1966ல் 1,89,548 பேர். இந்தக் கணக்கைப் பார்த்தால், ஆண்டுதோறும் சாராயக் குற்றங்கள் பெருகியே வந்துள்ளன என்பதையும், மதுவிலக்கோ, காவல்துறையின் நடவடிக்கைகளோ குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். 

காங்கிரசுக்குப்பிறகு தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்து, மதுவிலக்கு தொடர்ந்த 1967ல் 1,90,713 பேர், 1968ல் 2,53,607, 1969ல் 3,06,555, 1970ல் 3,72,472 பேர் மீது குற்றச்சாட்டுப் பதிவாகியிருக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு, மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வந்தன. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாலேயே, மகாத்மா காந்தியின் புனிதமிகு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியவில்லை.


தமிழக எல்லையோரத்தில் அண்டை மாநில மதுவிற்பனை அதிகமானதுடன், அவை தமிழகத்தின் பல பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி வந்தன. சட்டங்களோ, காவல்துறையினரோ இதைத் தடுப்பதில் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் 1971ல், ‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக எத்தனை நாளைக்குத்தான் தமிழகம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?” என்று சட்டமன்றத்தில் விளக்கமளித்த அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, தமிழகத்தில் மது விலக்கை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார். அதாவது, மதுக்கடைகள் அதிகாரப் பூர்வமாகத் திறக்கப்பட்டன.

மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கத் தொடங்கியது. இதுதான், ஒரு புதிய தலைமுறையைக் கருணாநிதி குடிக்க வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி.

மறைமுகமாகக் குடித்து வந்தவர்கள், சட்ட பயமின்றிக் குடிக்கத் தொடங்கினர். கடைகள் திறக்கப் பட்டதால், ‘போட்டு பார்ப்போமே’ என்று புதிதாகப் பழகியவர்களும் உண்டு. மதுவிலக்கை கலைஞர் அரசு ரத்து செய்ததற்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அதேநேரத்தில், மதுவிலக்கு ரத்து ஏன் என்கிற காரணங்களை வலியுறுத்தி தி.மு.கவுக்காகப் பிரச்சாரம் செய்தவர் எம்.ஜி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சாரத்தின்போது, மது குடிப்பதனால் தனிமனிதர்களுக்கும் அவர்களைச் சார்ந்த வர்களுக்கும் ஏற்படும் தீமைகளையும் எம்.ஜி.ஆர். விளக்கிப் பேசி வந்தார். பின்னர், 1972ல் எம்.ஜி.ஆர், தனிக்கட்சி தொடங்கினார்.

மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதற்கான எதிர்ப்புகள் கடுமையாயின. எனவே, 1974ல் அதே கலைஞர் ஆட்சியில் மீண்டும் மதுவிலக்குக் கொண்டுவரப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன என்பதும் கவனிக்கத்தது.

1977ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. முதல்வர் பொறுப்பேற்ற மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவேன்” என்றார். 

தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும் (யூனியன் பிரதேசம்) ஆட்சியைப் பிடித்த அ.தி.மு.க, அந்த மாநில வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதன்  முறையாக அங்கும் மதுவிலக்கைக் கொண்டுவந்தது.

அதன் விளைவு என்ன தெரியுமா? ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க அடுத்து வந்த  புதுச்சேரி மாநிலத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இன்றுவரை, அந்த மாநிலத்தில் அ.தி.மு.கவால் ஒற்றை இலக்கத்திற்கு மேல் தொகுதிகளைப் பெறவில்லை என்பதுதான் சுமார் 35 ஆண்டுகால வரலாறு. சரி.. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் மதுவிலக்குக் கொள்கை எந்தளவு வெற்றி பெற்றது?

தாய் மீது ஆணையிட்ட எம்.ஜி.ஆர், தனது ஆட்சியில் மதுவிலக்கைக் கடுமையாக நடைமுறை ப்படுத்தப் பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார். “மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை. இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை. மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றிபெறவில்லை. மெல்ல மெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார். கூட்டுறவு அங்காடிகளில் மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன. அங்கே அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா-மைதா வாங்கி வைக்க, வக்கில்லாத நிர்வாகத்திற்கு ரம்மும் ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” என்று கேட்டனர்.

பிராந்தி, விஸ்கி ஆகியவை மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே 1ந் தேதி முதல் சாராயக் கடைகளும் கள்ளுக்கடைகளும்கூடத் திறக்கப்பட்டன. இந்தக் கடைகளுக்கு நம்பர் உண்டு. அதனால், மூணாம் நம்பர் கடை, ஆறாம் நம்பர் கடை என்று ‘குடி’மக்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். 

இந்தக் கடைகளை ஏலம் எடுத்து நடத்தியவர்கள் பெரும்பாலும் அ.தி.மு.கவினரே. சில பல இடங்களில் அவர்களுக்குத் தொழில்பார்ட்னர்களாக இருந்தவர்கள் லோக்கல் தி.மு.கவினர். காங்கிரஸ் கதர்ச்சட்டையினரும் ரகசிய பார்ட்னர்களாக இருந்தது உண்டு. மதுபானத் தொழிலில் அரசியல் கட்சியினர் ருசி காணத் தொடங்கியது இந்தக் கட்டத்தில்தான். 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சாராய ஆலை அதிபர்களும், சாராய வியாபாரிகளும் கொழித்துச் செழித்ததுடன், தனியார் சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்கினர். இத்தகையக் கல்லூரிகளுக்கு எம்.ஜி.ஆர். அரசு தாராளமாக அனுமதி வழங்கியது. சாராயத் தொழில் செய்தவர்கள், ‘கல்வி வள்ளல்’களாக உருமாற்றம் பெற்றனர். எம்.ஜி.ஆர். ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மீண்டும் மதுவிலக்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, கள்-சாராயக் கடைகள் மூடப்பட்டன. பர்மிட் உள்ளவர்கள் பிராந்தி-விஸ்கி குடிப்பதற்கான உரிமை மட்டும் நீடித்து வந்தது. 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப்பின் 1989ல் நடந்த தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, கலைஞர் மீண்டும் முதல்வாரானார். அப்போது, மலிவு விலை மது என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, சாராயம் போலத் தூக்கலாகவும் இல்லாமல், பிராந்தி-விஸ்கி போல மிதமாகவும் இல்லாமல் தரத்திலும் விலையிலும் நடுத்தரமான சரக்கு இது. 

இதனை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் கட்சி பல போராட்டங்களை நடத்தியது. அதற்கு அ.தி.மு.க மறைமுக ஆதரவு தந்தது. எனினும், தி.மு.க அரசோ, கள்ளச்சாராய சாவுகளைத் தடுப்பதற்காக மலிவு விலை மது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று கூறி, இதற்கானக் கடைகளைத் திறந்தது. ‘தாலி அறுக்கும் மலிவு விலை மது’ என்று பத்திரிகைகள் விமர்சனம் செய்தன.

1991ல் முதன்முறையாக முதல்வர் பொறுப்பேற்ற செல்வி.ஜெயலலிதாவின் முதல் கையெழுத்தே, மலிவு விலை மதுவை ரத்து செய்யும் உத்தரவுக்கான கோப்பில்தான் இடப்பட்டது. பெண்களின் தாலியைக் காப்பாற்றிவிட்டார் ஜெயலலிதா எனப் பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் அடுத்த ஆண்டிலேயே, 1992ல் பார் வசதியுடன் கூடிய ஒயின் ஷாப்புகளுக்கான அனுமதியை அளித்தது ஜெயலலிதா அரசு. வாங்குகிற இடத்திலேயே குடிக்க முடியும் என்பதால், விற்பனை பெருகியது. அரசுக்கு வருமானம் அதிகரித்தது.

‘பார்’ போற்றும் அரசு என்று பத்திரிகைகள் விமர்சித்தன. இதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில்,  மதுவின் தீமையை வலியுறுத்தும் பிரச்சாரப் படமான ‘நீங்க நல்லா இருக்கணும்’ என்ற திரைப்படத்தை தமிழக அரசே எடுத்தது. படப்பிடிப்பை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இயக்குநர், விசு. படம் கல்லா கட்டவில்லை. பார்கள்தான் கல்லா கட்டின.

ஒயின்ஷாப்புகளையும் பார்களையும்  ஆளுங்கட்சியினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் ஏலம் எடுத்தனர். வேறு யாரும் ஏலத்தில் மூக்கை நுழைக்கமுடியாதபடி ஆங்ககாங்கே சிண்டிகேட்டுகள் (கூட்டணி) அமைக்கப்பட்டன. இந்த மதுக்கடைகளால் லோக்கல் கட்சிக்காரர்கள் வருமானம் பார்க்க, மதுபானத் தொழிற்சாலை அதிபர்களோ கட்சித் தலைமைக்கு நிதி தரும் காமதேனுக்களாக இருந்தனர். 1996ல் திமு.க வெற்றி பெற்றபோது, ஆட்சி மாறினாலும் ஒயின்ஷாப் விவகாரத்தில் காட்சி மாறவில்லை.
அ.தி.மு.கவினருக்குப் பதில் தி.மு.கவினரும் அவர்களுக்கு வேண்டியவர்களும் ஏலம் எடுத்தனர். மதுபான அதிபர்கள் தி.மு.க தலைமைக்கு நிதியளித்தனர். 1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின்  பொருளாதாரக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அது தமிழகத்திலும் தாக்கம் ஏற்படுத்தத் தவறவில்லை.

வெளிநாட்டு முதலீடுகள், பன்னாட்டு நிறுவனங்கள், சாஃப்ட்வேர் துறையின் வளர்ச்சி, பங்குச்சந்தை வர்த்தகம் ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தின் ஒரு தரப்பிடம் பணம் புழங்கத் தொடங்கியது. ஊதிய விகிதங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.


கேளிக்கைக்கான பணம் பற்றி இளைய தலைமுறைக்குக் கவலையில்லாத நிலை தொடங்கியது. மதுபானக் கடைகளை நோக்கிய அவர்களின் படையெடுப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. குடிப்போர் விழுக்காடு பெருமளவு உயர்ந்தது. எல்லாவற்றுக்கும் ‘ட்ரீட்’ கொடுப்பதும், பீர் குடிப்பது தவறல்ல என்ற போக்கும் அதிகரித்தது.

டான்சி வழக்கில் கீழ்நீதிமன்றம் தண்டித்த நிலையிலும், 2001ல் முதல்வரானார் ஜெயலலிதா. இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க, ஜெ பதவி விலகி, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அவர் பதவியில் இருந்தபோது, சென்னை செங்குன்றத்தையடுத்த கோட்டூர் கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ரசாயனத் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் மெத்தனாலில் தண்ணீர் கலந்து சாராயமாக்கிக் கொடுத்ததில், ‘மிக்ஸிங்’ சரியில்லாமல், 36 பேர் இறந்தனர். பலருக்குக் கண்பார்வை பறிபோனது. இதேபோல கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்அருங்குணம், செம்பேடு, நத்தம் ஆகிய கிராமங்களிலும் இதேபோல விஷசாராயம் குடித்த 52 பேர் பலியாயினர். இந்த சாராயப் பலிகளில் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

உயிர்ப்பலிகள், சாராய விற்பனை என எல்லாவற்றிலும் பெண்களும் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சாராயம் தொடர்பான வழக்குகளில் நான்கில் ஒரு பிரிவினர் பெண்கள் என்பதும் முக்கியமானது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் விஷச் சாராயப் பலிகள் தொடர்ந்ததையடுத்து, மீண்டும் மலிவு விலை மது கொண்டு வரப்பட்டது.

ஒயின் ஷாப்புகளிலேயே ‘மினி குவார்ட்டர்’ என்ற பெயரில் 100 மில்லி அளவிலான பிராந்தி, விஸ்கி, ரம் பாட்டில்கள் விற்பனைக்கு வந்தன. விலை 15 ரூபாய். இதற்கு ஏழைக் ‘குடி’மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஒயின்ஷாப்காரர்களுக்கு இலாபம் குறைவு என்பதால், மினி குவார்ட்டர் பாட்டில்களுக்கு டிமாண்ட் ஏற்படுத்தப்பட்டு, ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. மினிகுவார்ட்டர் பிரியர்கள், கூடுதல் பணம் கொடுத்து குவார்ட்டர் வாங்க ஆரம்பித்தனர். 

மலிவுவிலை மதுவுக்குப் பதில், கள்ளுக்கடைகளைத் திறப்பது ஏழைகளின் வருமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பில்லாமல் இருக்கும் என்றும், பனைத்தொழிலாளர்களுக்கும் வருமானத்தைத் தரும் என்றும் குரல்கள்  ஒலிக்க ஆரம்பித்தன. அதை அரசாங்கம் காதில் வாங்கவில்லை. 

2002ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அதையடுத்து, அரசின் டாஸ்மாக் நிறுவனமே ஒயின்ஷாப்புகளை நேரடியாக நடத்தும் முடிவு எடுக்கப்பட்டது. வருமானம் முழுவதும் அரசுக்கே வரவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஒயின்ஷாப் பார்களை மட்டும் ஆளுங்கட்சி ஆட்கள் ஏலம் எடுத்து நடத்தினர். 

காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 12 மணிவரை ஒயின்ஷாப்புகள் செயல்பட்டன. இளைஞர்கள் பலருக்கு தற்காலிக அரசு வேலை கிடைத்தது. இந்தக் கட்டத்தில்தான், மிடாஸ் நிறுவனத்தின் மதுபானங்கள் ஒயின்ஷாப்களை ஆக்கிரமித்தன. இந்த நிறுவனம் யாருடையதென்று விளக்கவேண்டியதில்லை.
2006ல் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகும், அரசுக்கு வருகின்ற வருமானத்தைக் கணக்கில் கொண்டு, ஒயின்ஷாப்புகளை டாஸ்மாக்கே  நேரடியாக நடத்துவது தொடர்ந்தது. இலவச திட்டங்களுக்கு இந்த நிதி, துணையாக இருந்தது. மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை வாங்குவதிலும் தி.மு.க அரசு தாராளமாகவே நடந்துகொண்டது. எனினும், தமிழகத்தில் குடிகாரர்கள் பெருகிவிட்டார்கள் என்றும், இளைஞர்கள் கெட்டுச் சீரழிகிறார்கள் என்றும் கூட்டணிக் கட்சியாக இருந்த பா.ம.கவின் நிறுவனர் ராமதாஸ் விமர்சித்ததுடன், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து ஒயின்ஷாப் நேரம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என தி.மு.க அரசு முடிவெடுத்தது.


கள்ளுக்கடைகளைத் திறக்கக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்பபடவில்லை. தமிழகத்தில் தற்போது ஒயின்ஷாப்புகள் மட்டுமின்றி, அனுமதிபெற்ற தனியார் பார்களும் இருக்கின்றன. நட்சத்திர ஓட்டல்களில் உயர்வகை மதுபானங்கள் கிடைக்கின்றன. ரிசார்ட்ஸ்களிலும் இந்த வசதிகள் உள்ளன. விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், பிறந்தநாள்-புத்தாண்டு கொண்டாட்டங்கள், கெட் டூ கெதர் என இளைஞர்களும் இளம்பெண்களும் மதுவிருந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஜெயலலிதா 2011ல் மீண்டும் முதல்வரானார். டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் ஒயின்ஷாப்புகள் தொட ர்ந்து இயங்குகின்றன. மிடாஸ் நிறுவன மதுபானங்களின் கொள்முதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் 24 மணி நேரமும் பார் திறந்து வைக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்து இல்லாத ஓட்டல்களில் உள்ள பார்களில் இரவு 12 மணிவரை மது சப்ளை செய்யலாம் என்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கானக் கூடுதல் கட்டணங்களை செலுத்தினால், அனுமதி உண்டு என்று ஜெயலலிதா அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான், டாஸ்மாக் கடைகளை அவர் மொத்தமாக மூடுவது பற்றி ஆலோசித்து வருகிறார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 

இளையதலைமுறையினரிடம் அதிகரித்துள்ள குடிப்பழக்கம் அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தி வருவதை மறுக்கமுடியாது. பழக்கம் என்பதைத் தாண்டி, குடிநோய்க்கு இளைஞர்கள் ஆளாகிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள்கூட குடிக்கும் வேதனைத் தகவல்கள் வெளியாகின்றன. ஆரோக்கியமான வளரவேண்டிய சமூகம் திசைமாறுகிறது என்பது பெருங்கவலைக்குரியது. ஆனால், அரசாங்கத்தின் மதுவிலக்குத் திட்டம், இதையெல்லாம் மாற்றிவிடுமா என்ற கேள்விக்கு, முந்தைய நிகழ்வுகள் சாதகமான பதில்களைத் தரவில்லை. 

இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக மதுவிலக்கு நடைமுறையில் இருப்பது, காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மட்டும்தான். ஆனால், அங்கும் போர்பந்தரில் காந்தியின் பூர்வீக வீட்டுக்குப் பக்கத்திலேயே அடிபம்பு மூலம் சட்டவிரோதமாக சாராய வியாபாரம் நடப்பதை பத்திரிகைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இதுதான் மதுவிலக்கின் லட்சணம். 

தேசிய அளவிலான மதுக்கொள்கை, மாநிலங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு, மதுக்கடை நேரங்களைக் குறைத்தல், தனிநபருக்கான மது அளவு, கள்ளுக்கடைகளை அனுமதிப்பது பற்றிய முடிவு, வேலைவாய்ப்புகள், கலாச்சார மாற்றங்கள், இளையதலைமுறையினருக்கான மாற்றுப் பொழுதுபோக்குகள்,  காவல்துறையின் லஞ்ச ஊழலற்ற நடவடிக்கை, அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்கும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தாமல் மதுவிலக்கு என்பது மோசடியே. 

ஜெயலலிதாவுக்கே அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை மனதில்கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், தேர்தலுக்குப் பிறகு அது ரத்து செய்யப்படவேண்டிய நிலை நிச்சயம் உருவாகும். ஏனெனில், மது குடிப்போரைவிட அதிகம் தள்ளாடுவதாக உள்ளது அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கை.