திருக்குறள்

தந்தை பெரியாரும், அவரது நண்பர்களும்!

-மு।பெருமாள்



தந்தை பெரியாரை நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம்...?

ஓர் ஜாதி மறுப்பாளராக, சமூகப் போராளியாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, சமூக சீர்திருத்தவாதியாக, இன்றைய அரசியல் கட்சிகளுக்கு அடித்தளம் இட்டவராக.... இப்படி பல்வேறு அவதாரங்கள் பெரியாருக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சங்கள்।

யாருக்காவும், எதற்காகவும் தனது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாத கொள்கை வீரராக திகழ்ந்ததன் காரணமாகவே பலரது கண்களுக்கும் அவர் ஓர் கலகக்காரராக தெரிந்தார்

ஆனால், தனது கொள்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு தலைவர்களிடமும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஒரு மாபெரும் தலைவர் பெரியார் மட்டுமே।

அன்புக்குரிய அய்யங்கார்:
பெரியாரின் நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமானவர் ஏ।எஸ்.கே.அய்யங்கார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இவர், சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பெரியாருடன் மிக நட்பு வைத்திருந்த இவர், பெரியாரின் எண்ணங்கள், கொள்கைகள், விருப்பங்கள் என அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தார்.

“பிராமணர்கள் மீது பெரியாருக்கு எந்த வெறுப்போ, கோபமோ கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவரைப் பற்றி தவறாகவே நினைத்து கொண்டிருகிறார்கள். பிராமணீயம் என்ற பெயரில் கடவுள், புராணங்கள், இதிகாசங்களை போற்றும் அந்த கொள்ளையைத்தான் எதிர்த்தார்" என்று தனது நண்பர் பற்றி உலகுக்கு உரக்க சொன்னவர் இவர்தான். அதுதான் உண்மையும் கூட.

ராஜாஜியின் சினேகிதன்:

பெரியார் ஒரு நட்புக்கடல்। அவரது பிராமண நண்பர்களில் மிக முக்கியமானவர் மூதறிஞர் ராஜாஜி.

தனிப்பட்ட முறையில் பிறரது மனம் புண்படும் அளவுக்கு எதுவும் பேசிவிடக்கூடாது, எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் பெரியார்.

அதனால்தான், கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, நட்பு ரீதியாக அவருடன் கடைசி காலம் வரை இணைந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ராஜாஜி.

பெரியார் மிக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரம்; இயற்கை எய்தினார் ராஜாஜி. தனது நண்பனின் மறைவை எண்ணி, சிறு பிள்ளை போல் தேம்பி, தேம்பி அழுதார் பெரியார். எந்த ஒரு துயரத்திலும் அவர் அப்படி அழுது, எவரும் பார்த்தது இல்லை.

ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் வந்திருந்தார். எக்கச்சக்கமான பிரமுகர்கள் அமர்ந்திருந்த நிலையில், தள்ளாத வயது; நிற்கக்கூட காலில் வலு இல்லாத நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்தார் பெரியார்.

அப்போது, அங்கு வந்த குடியரசுத் தலைவர் கிரிக்கு இருக்கை இல்லை. இதை கவனித்த பெரியார், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது சக்கர நாற்காலியில் உட்காரும்படி கிரியை வேண்டினார்.

எனது நண்பருக்கு மரியாதை செலுத்த வந்தவர் நிற்பதா என்று பெரியார் தனது இருக்கையை அளித்தது கண்டு கிரி ரொம்பவே அதிசயித்துப் போனார். இதன் மூலம் தான் நட்புக்கடல் மட்டுமல்ல; பண்பாட்டுக் காவலரும் கூட என்பதை பெரியார் நிரூபித்தார்.

திரு.வி.க.வின் நண்பன்:

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார். ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க॥ இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.

பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்துப் போன திருவிக அப்படியே ஆர தழுவிக்கொண்டாராம்.

பெரியாரின் நட்புள்ளத்துக்கு மற்றொரு உதாரணம் இதோ.திரு.வி.க. காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

ஆனாலும், தொழிலாளர்களின் தோழராகவும், பொதுத்தொண்டுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவருமான திரு.வி.க மறைவுக்கு மிக குறைந்தளவு கூட்டமே வந்திருப்பது கண்டு வேதனை அடைந்தார்.

உடனடியாக தனது திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும்படி தகவல் அனுப்பினார். அவ்வளவுதான் சில மணி நேரத்தில் அந்த பகுதியே கூட்ட நெரிசலில் திணற ஆரம்பித்தது. அதோடு, திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

அன்புள்ள அண்ணா:

பேரறிஞர் அண்ணா, சுமார் 40 ஆண்டு காலம் பெரியாருடன் பழகியவர். பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்து பின்பு, திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட மணியம்மை என்ற பெண்மணியை 1949ம் ஆண்டு மணந்து கொண்டார் பெரியார். அப்போது பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26 மட்டுமே.

பெண் உரிமை, பெண் விடுதலை என்று பேசும் பெரியார் தள்ளாத வயதில் ஒரு இளம்பெண்ணை மணம் முடித்தது கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவும் விலகிச் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார்.

தற்போதைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் அண்ணாவுடன் சென்றனர். திராவிடர் கழகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவே பெரியார் திருமணம் செய்துகொண்டார் என்பது புரியாமல் பிரிந்து சென்றவர்கள் பற்றி கவலைப்படவில்லை.

ஆனால், காலங்கள் பல சென்ற பின்னரும் அண்ணா-பெரியார் நட்பு, கலைஞர்-பெரியார் நட்பு முறியவே இல்லை. முன்பை விட நெருக்கமான நட்பாகவே அது வலுவடைந்தது. கடந்த 1967ல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, முதல்வராக இருந்த அண்ணா சொன்னது இது. 'தி.மு.கழகத்தின் ஆட்சியை பெரியாரிடம் காணிக்கையாக அளிக்கிறேன்”.

பெரியாருடன் நட்புக் கொண்ட பலர் வரலாற்று நாயகர்களாக இடம் பெற்றது இப்படித்தான். பெரியாரின் நட்பு வட்டத்தில் இடம் பெற்றிருந்த நண்பர்களை பட்டியலிட எத்தனை பக்கங்கள் எழுதினாலும் தீராது. அந்த அளவுக்கு பரந்து விரிந்த மனம் கொண்டிருந்தார் பெரியார்.

அரசியலாகட்டும்; சமூக சேவையாகட்டும்; கொள்கை முடிவாகட்டும்; இன்றைய காலக்கட்டத்தில் பெரியார் போல் நட்புள்ளம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, சொல்லுங்கள்...?

நன்றி
வெப்துனியா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற