திருக்குறள்

மகிழ்ச்சி வேண்டும்....

ஏழை, பணக்காரன் என எல்லோரும் விரும்பும் விஷயம் பணம். ஆனால் பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுக்காது. பீரோ நிறைய பணம் இருந்தும், எப்போது இன்கம்டாக்ஸ் ரெய்டு வருமோ என பயந்து கொண்டிருந்தால் அங்கு சந்தோஷம் இருக்காது. அதேபோல், கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் ஆரோக்கியமாக இல்லையென்றால் அத்தனை பணமும் வீண். பொருளாதார ரீதியாக மக்கள் முன்னேறினால் போதாது, அவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என பல நாடுகள் விரும்புகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அளவிட ஜிடிபி உதவுகிறது. அதேபோல், தேசிய ஒட்டுமொத்த சந்தோஷத்தை அளவிட ஜிஎன்எச் என்ற அளவீட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். பூட்டானின் அரசராக இருந்த ஜிக்மே சிங்கே வாங்சுக் தான் முதலில் இதை உருவாக்கியவர். 1972ல் தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்றதும், மக்களின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் எனக் கூறினார். அதன்பிறகே அந¢த வார்த்தை பிரபலமானது. மக்களின் மன நலம், உடல் நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், அரசு நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் சந்தோஷத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அளவீட்டின்படி, உலகிலேயே மகிழ்ச்சியாக இருப்பவர்கள் டென்மார்க் நாட்டவர்தான். 8.3 மதிப்பெண்ணுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 5.5 மதிப்பெண். நமக்கு முன்னால், அமெரிக்கா (7.4), இங்கிலாந்து (7.1), சீனா (6.3) நாடுகள் இருக்கின்றன.
எல்லா வசதிகளும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என சொல்ல முடியாது. கல்வி, சுகாதார வசதி இல்லாதவர்கள் கூட மற்ற காரணங்களுக்காக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கொல்கத்தாவை சேர்ந்த சமூக அறிவியல் நிபுணர் சுகதா மர்ஜித் கூறியிருக்கிறார். உங்கள் வருமானத்தையும் என் வருமானத்தையும் கூட்டினால் மொத்த வருமானம் கிடைக்கும். வகுத்தால் சராசரி கிடைக்கும். சந்தோஷத்தை எப்படி கூட்டி, வகுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர் சிலர்.
இத்தனை கோடி ஏழைகள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5.5 மதிப்பெண் கிடைத்திருப்பதற்கும் காரணம் சொல்கிறார்கள். தங்களை விட கஷ்டப்படும் ஏழைகளைப் பார்த்து தங்கள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என சந்தோஷமாகி விடுகிறார்களாம்.
Source - Dinakaran

ஜெயலலிதாவின் கூட்டணி தர்மம்! - சோலை

 
த்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து நீக்கினால்  அ.தி.மு.கழகம் மன்மோகன்சிங் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரும் என்று செல்வி ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு புயலைக் கிளப்பியதா? புழுதியைக் கிளப்பியதா?

மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. விலகுமானால் அதனை ஈடுகட்ட 18 உறுப்பினர் களை அணிதிரட்டித் தருகிறேன் என்றும் அவர் காங்கிரஸ் தலைமைக்கு நம்பிக்கை தெரிவித்தார். மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராக இல்லை என்பதனை காங்கிரஸ் தலைமை உடனடியாகத் தெளிவுபடுத்திவிட்டது.

தமிழகத்தில் செயல்படும் காங்கிரஸ் -தி.மு.க. -விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இடம் காலியில்லை. "நோ வேகன்ஸி' என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு என்ற அம்மாவின் அறிவிப்பை எல்லா ஏடு களும்  ஊடகங்களும் அமர்க்களமாக வெளியிட்டன.  அம்மா பெரிய ராஜ தந்திரி என்று டெல்லி தொலைக் காட்சி களின் சதுர்வேதிகளும் திரிவேதிகளும் கோஸ்வாமிகளும் பாஷ்யமே (விரிவு ரையே) எழுதிப்  படித்துவிட்டனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதே தொலைக்காட்சிகள் எப்படிக் கணித்தன? தமிழகத்தில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று அம்மாவுக்கு லட்சார்ச்சனை செய்தன.  மக்கள் தந்த தீர்ப்பு என்ன என்பது  நாட்டிற்குத் தெரியும்.

வடமாநில தேர்தல் நிலவரம் பற்றி அதே தொலைக்காட்சிகள் எப்படிச் செய்தி வாசித்தன? பி.ஜே.பி.யின் பலம் பெருகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கும் பி.ஜே.பி.க்கும் கடுகளவு தூரம்தான் இடைவெளி இருக்கும் என்று வாசித்தன. ஆமாம், அங்கே பி.ஜே.பி. வெற்றிபெற வேண்டும் என்று துடிப்பர். இங்கே அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண் டும் என்று ஆசைப்படுவர்.

அ.தி.மு.க.வை நம்பி மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்தது.  தாங்கள் எதிர்கொள்ளும் நம் அன்னியச் செலா வணி வழக்குகள் -வெளிநாட்டு நிதி தொடர்பான வழக்குகள் என்று எல்லா வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிர்பந்தித்தது. அப்போதுதான் அந்த தலைமை தந்த  நிபந்தனையற்ற ஆதரவின் அர்த்தம் பி.ஜே.பி.க்கு புரிந்தது. கடைசியில் வாஜ்பாய் அரசை செல்வி ஜெயலலிதா கவிழ்த்தேவிட்டார். நாடு  இன்னொரு இடைத்தேர்தலை எதிர் கொண்டது.
வாஜ்பாய் அரசு கவிழ்ந்த பின்னர் மீண்டும் மையத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தொடர்ந்தது. செல்வி ஜெயலலிதா டெல்லியில் முகாமிட்டார். ஒரு நட்சத்திர ஓட்டலின் பாதி அறைகள் ரிசர்வ் செய்யப்பட்டன.

சோனியாகாந்தியை பிரதமராக்க ஓர் முயற்சி நடந்தது. செல்வி ஜெயலலிதா நேராக அவ ரது இல்லம் சென்றார்.  அவர்  பிரதமர் பீடம் ஏற ஆதரவு என்றார். அம்மாவின் பரந்த மனதைப் பாராட்ட பாரதம் காத்திருந்தது.  என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் சோனியா இல்ல படிகளில்  ஏறினார். நேற்று தந்த ஆதரவை இன்று வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்றார். சோனியா அமைதி காத்தார். 

இதில் என்ன சிறப்பு என்றால் ஜெய லலிதாவின் ஆதரவை சோனியா கோரவே யில்லை. இப்போது எப்படி அழையா விருந்தாளியாக காங்கிரஸ் கதவுகளைத் தட்டுகிறாரோ அப்படியேதான் அன்றைக்கும் தட்டினார். ஆதரவு என்றார். வாபஸ் என்றார். 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் செல்வி ஜெயலலிதா டெல்லி சென்றார். அனு பவத்தால் பக்குவப்பட்ட ஜெயலலிதா வந்திருக் கிறேன், கூட்டணிக்குத் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார். தலைநகரத் தொலைக்காட்சி களெல்லாம் தகுந்த முக்கியத்துவம் தந்து ஒளிபரப்பின. ஆனால் காங்கிரஸ் தலைமை அம்மாவின் சரணாகதியைக் கண்டுகொள்ள வில்லை.  தென்திசை வாடைக்காற்று அழையா விருந்தாளியாக வீசினாலும் வீசும் என்று சோனியா இல்ல ஜன்னல்களும் சாளரங்களும் மூடப்பட்டன.

அழையா விருந்தாளியாக   செல்வி ஜெய லலிதா எங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறார், திறப்பதாக இல்லை என்று கடைசியாக இப்போது மத்திய அமைச்சர் நாராயண சாமியும்  தெரிவித்துவிட்டார்.

தங்கள்  கூட்டணி தி.மு.கழகத்துடன்தான் என்று பிரதமரும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அம்மா சரணாகதியடையவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்காகக் கூறினார் என்று இங்கே சில அரசியல் புரோகிதர்கள் அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் இருந்து இன்று வரை அவர் காங்கிரஸ் உறவிற்காக பகீரத முயற்சி செய்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் எப்படியும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி காண இமாலய முயற்சி செய்தார். ஆனால் சோனியா இருக்கும்வரை அத்தகைய கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்பதனை அரசியல் விமர்சகர்கள் அறிவார்கள்.

காங்கிரஸ் கட்சியின் உதவியின்றி கரை சேர முடியாது என்பதனை செல்வி ஜெயலலிதா அறிவார். ஆனால் அதற்கான வாய்ப்புகளுக்கு வழியேயில்லாது போனதற்கு அவரேதான் காரணம். அவர் அவ்வப்போது தெரிவித்த கருத்துகளும், விடுத்த அறிக்கைகளும்தான் காரணமாகும். அவைகள் அறிக்கைகளா? ஏவப்பட்ட அக்னிச்சரங்கள். பெண்மைக்கு முடிசூட்ட வேண்டிய அவரே சோனியாவை எப்படியெல்லாம் கொச்சையாக, பச்சையாக விமர்சித்தார் என்பதனை எப்படி மறப்பர்?

காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற  ஆதரவு என்று இப்போது அவர் கூறியது ராஜதந்திரமல்ல... சரணாகதி. உண்மையிலேயே காங்கிரஸ் உடன்பாட்டிற்கு பலப்பல வழிகளிலும் முயன்றார். முடியவில்லை. இனி நாமே கூட்டணிக்குத் தயார் என்பதனை அறிவித்துப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தார். எனவே மத்திய அமைச்சர் ஆ.ராசா எதிர்நோக்கும் பிரச்சினையின் பின்னணியில் நின்று தயார் தயார் என்றார்.

அவருக்காக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பும் சில சிட்டுக்குருவிகள் உண்டு. அவர்களை அவர் நம்பினார். ஆனால் அந்தக் குருவிகளின் கீச்சுக் குரல் வண்ணாரப்பேட்டைக்குக் கூட எட்டுவதில்லை. டெல்லிப் பட்டணத்தை எப்படி எட்ட முடியும்?

கழகத்தின் வலிமையைக் காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கோவை, திருச்சி, மதுரையில் பெரும் பேரணிகள் நடத்தினார். ஆனால் அந்தப் பேரணிகளுக்குச் செலுத்தப்பட்ட முத லீடுகள் என்ன என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும். இந்தப் பேரணிகள் மூலம் தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றார். வெற்றிக் கூட்டணியில் கைகோர்ப்போம் என்றார். ஆனால் இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க.விற்கு இடம் இல்லை என்று அறிவிக்கப் பட்டது அந்தத் தொண்டர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில் காங்கிரஸ் உடன் பாடு என்று அவர் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி வந்தார்.

இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருதுகின்றனவா? தனியாகப் பேரணி வேண்டாம். கூட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று அந்தக் கட்சிகள் மனு போட்டு மனு போட்டு சோர்வடைந்து விட்டன. அந்தக் கட்சித் தலைவர்களை அ.தி.மு.க. பேரணி மேடைகளில் கூட ஏற்றுவதில்லை. ஆனால் கூட்டணி தர்மத் திற்கு எந்த அளவு அ.தி.மு.க. தலைமை மரியாதை தரும் என்பதனை எண்ணிப் பார்க்க வேண்டும். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நாடாளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி களுடன் அ.தி.மு.க. கூட்டணி கண்டது. பிரச் சாரத்திற்கு வந்த சோனியாவிற்கு விழுப்புரத்தில் எவ்வளவு பெரிய மரியாதை கிடைத்தது என்பதனை நினைவுபடுத்தத் தேவையில்லை.

தேர்தல் முடிந்தது. செல்வி ஜெயலலிதா முதல்வரானார். டெல்லி சென்றார். சோனியாவை சந்தித்தார். கூட்டணியில் அங்கம் பெற்றதற்கு நன்றி என்றார். அடுத்த சில நிமிடங்களில் திரும்பினார். சோனியா இல்ல வாசலில் நிருபர்கள் காத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கண்ட கூட்டணி இத்துடன் முடிவுற்றது என்று அறிவித்தார். காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண் டது. இனி தி.மு.க.வுடன்தான் அணி என்று இறுதி முடிவு செய்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அம்மா பாடம் கற்றுக் கொடுத்தார். சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் வந்தது. சில தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட்டது. ஆனால் தோழமைக் கட்சிகளின் ஆதரவை அம்மா கேட்கவில்லை. வேறு வழியின்றி வலியச் சென்று ஆதரித்தன.

தொண்டாமுத்தூர், கம்பம், இளையான் குடி, பர்கூர் தொகுதிகள் இடைத்தேர்தலை எதிர்நோக்கின. இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அ.தி.மு.க. அறிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிர்ச்சி. எதிர்ப்பின்றி தி.மு.க. வெற்றி பெறுவது கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்று கருதின. ஜனநாயகம் கருதி இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்தன. களம் கண்டன.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அ.தி.மு.க. ஆதரித்ததா? இல்லை.

ஆதரியுங்கள் என்று தொண்டர்களுக்குக் கட் டளையிட்டதா? இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி யிடும் தொகுதிகளில்? அ.தி.மு.க. அமைதி காக்க வேண்டும், தேர்தல் பணி கூடாது என்று வாய்மொழி உத்தரவுகள் பறந்தன. அ.தி.மு.க.வின் நம்பகத்தன் மைக்கு இந்த நிகழ்வுகள் இன்னொரு எடுத்துக்காட்டு.

இந்தியாவிலேயே தர்மபுரி மாவட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உறுப்பினர்கள் அதிகம் என்பார் கள். பர்கூர் தொகுதி தங்கள் பாசறை என்பார்கள். அந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிட்டது. வெறும் ஆயிரத்து 400 ஓட்டுக்கள்தான் வாங் கியது. அ.தி.மு.க. கிளைக்கழக நிர்வாகிகள் ஓட்டுப் போட்டாலே அதற்கு டெபாசிட் கிடைத்திருக்கும்.

கம்பம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 2 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் சற்று ஆறுதல். 9 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி. மு.க.விற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஏணி. ஆனால் இடைத்தேர்தலில் அந்தக் கட்சிகள் போட்டி யிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. தோணியாகப் பயன்படக் கூடாதா? காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு இல்லை என்ற நிலையில்தான் வந்த வழித்துணையை விடவேண்டாம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அ.தி.மு.க. உடன்பாடு கண்டது.

செம்மொழி மாநாட்டினைத் தொடர்ந்து கோவையில் அ.தி.மு.க. பேரணி நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்தப் பேரணி மேடையி லாவது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை ஏற்றியிருக்கலாம். ஏன் இடம் கொடுக்கவில்லை?

காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிய ரகசியத் தூதர்கள் நல்ல செய்தி கொண்டு வருவார்கள் என்று அ.தி.மு.க. தலைமை காத்திருந்தது. எனவே கம்யூ னிஸ்ட் கட்சிகளைத் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்க விட்டது.

இனி அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் நிம்மதியாக இருக்கலாம். ஏனெனில், அ.தி.மு.க.வோடு உறவு இல்லையென்று காங்கிரஸ் கட்சி கதவுகளைத் தாழிட்டுவிட்டது.

- Source - Nakheeran

சிறை மட்டும்தான் தமிழனுக்கு மிச்சம் !!!!


சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில்
முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். 'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.
"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,
நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்.
'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?
இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.
உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது
இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?
ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!
அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர,
சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்தகடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம், 'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம்.
"கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.
பாரதி தம்பி  Source - Vikatan

இந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி ?


ண்மையில் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்த நாட்டில் இஸ்லாமிய வங்கிகள் (Islamic Banking) சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியைத் தொடங்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய வங்கி என்றால் என்ன? அது எப்படி நடக்கிறது என்கிற ஆர்வம் பலரது மனதில் எழுந்திருக்கிறது.
இஸ்லாமிய கொள்கையான 'ஷரியா'-வின்படி (Sharia) நடக்கும் வங்கிகளைத்தான் இஸ்லாமிய வங்கிகள் என்கிறார்கள். கடனுக்கு வட்டி வாங்குவது 'ஷரியா'-வின் படி தவறாகும் . இஸ்லாமிய மதத்தின்படி இது குற்றம். ஒருவருக்குக் கொடுக்கும் கடனுக்கு வட்டி வாங்காமல், அவர் முதலீடு செய்யும் தொழிலில் கிடைக்கும் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. பல நூற்றாண்டுகளாகவே இந்த முறை முஸ்லீம் நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் 20-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் இஸ்லாமிய வங்கிகள் நடைமுறைக்கு வந்தன.
வழக்கமாக வர்த்தக வங்கிகளில் கொடுக்கப்படும் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படும். இஸ்லாமிய வங்கியைப் பொறுத்தவரை, கடன் கொடுப்பவரும் வாங்குபவரும் பங்குதாரர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்கள் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி லாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டம் ஏற்பட்டால் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதை முன்னரே ஒப்புக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பது இஸ்லாமிய வங்கியின் சிறப்பு. மனை, வீடு போன்ற ஏதாவது சொத்தை ஜாமீனாகக் கொடுத்தால் மட்டுமே இஸ்லாமிய வங்கிகளில் தொழிற்கடன் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.
சரி, வாகனக் கடனை இஸ்லாமிய வங்கிகள் எப்படிக் கொடுக்கின்றன? வாகனத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இஸ்லாமிய வங்கி முதலில் காரை வாங்கிவிடும். அதனை வங்கி வாடிக்கையாளருக்கு லாபம் வைத்து அதிக விலைக்கு விற்கும். வாகனத்தை வாங்கியவர், அதற்கான தொகையை மாதத் தவணையில் கட்டி வர வேண்டும். முழுவதும் பணம் கட்டி முடிக்கும் வரை வாகனத்தின் உரிமை இஸ்லாமிய வங்கியிடம் இருக்கும்.
இஸ்லாமிய வங்கிகள் வீட்டுக் கடனை வழங்கும் விதமும் வித்தியாசமானது. வாடிக்கையாளர் வாங்க விரும்பும் வீடானது, வங்கி மற்றும் வாடிக்கையாளரின் பெயரில் கூட்டுச் சொத்தாக பதிவு செய்யப்படும். இதில், யார் எவ்வளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றும் குறிப்பிடப்படும். பிறகு இந்தச் சொத்து வாடிக்கையாளருக்கு வாடகைக்கு விடப்படும். இந்த வாடகைத் தொகை, சொத்தில் வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு, வங்கிக்கு உரிய பங்கை (அதிகரிக்கப்பட்ட விலையில்) மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வாடிக்கையாளர் அந்த வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடனுக்காக நாம் கட்டும் இ.எம்.ஐ. போல் இருக்கும். வாடிக்கையாளரால் பணத்தைச் சரியாகக் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்று, வங்கி மற்றும் வாடிக்கையாளருக்கு உள்ள பங்கிற்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும்.
ஈரான், மலேசியாவில் இஸ்லாமிய வங்கிகள் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஜப்பான், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவது முக்கியமான விஷயம். வர்த்தக வங்கி மற்றும் இஸ்லாமிய வங்கி நடைமுறைகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீதாராமன், இஸ்லாமிய வங்கிகள் சிறப்பான வளர்ச்சி கண்டு வருவதாகச் சொன்னார்.
''உலகம் முழுக்க கடந்த ஐந்தாண்டுகளில் வர்த்தக வங்கிகளின் வளர்ச்சி 2%-மாக உள்ளது. இதே காலத்தில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி 12-15%-மாக இருக்கிறது. இப்போது உலக அளவில் இஸ்லாமிய வங்கிகள் நிர்வகித்து வரும் சொத்துகளின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். சர்வதேச நிதியம் (IMF- International Monetary Fund) மற்றும் உலக வங்கிகளின் நிதி நிர்வாக அமைப்பான பேசல் (Basel) இஸ்லாமிய வங்கி நடைமுறைகளை அங்கீகரித்துள்ளன'' என்றார்.
தற்போது இந்தியாவில் ஷரியா கொள்கை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள். இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் இஸ்லாமிய வங்கி ஒன்றை ஆரம்பிக்க ஐ.டி.பி.ஐ. வங்கி முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளைக் கொண்டு வர வேண்டும் என்றால் அவற்றுக்கென பிரத்தியேக சட்டம் தேவை என ஆர்.பி.ஐ. கவர்னர் சுப்பாராவ் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கிகள் வந்தால் நம் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.
- சி.சரவணன்.
இஸ்லாமிய நாடுகள் இணைந்து 1975-ம் ஆண்டில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியை உருவாக்கின. அதே ஆண்டில் வர்த்தக ரீதியிலான இஸ்லாமிய வங்கி, துபாய் இஸ்லாமிய வங்கி என்ற பெயரில் உருவானது.ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 1994-ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் ஆண்டு தோறும் உலக இஸ்லாமிய வங்கிகளின் மாநாடு நடந்து வருகிறது. இதில், இஸ்லாமிய வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்று அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறார்கள்.
உலக அளவிலான இஸ்லாமிய வங்கிகளில் 60% ஈரானில் மட்டுமே இருக்கின்றன.
மதுபானம், சூதாட்டம் தொடர்பான முதலீட்டு விஷயங்களை இஸ்லாமிய வங்கிகள் தவிர்த்துவிடுகின்றன.
 
 Source - Vikatan groups

வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா

வெற்றியை தலையில் ஏற்றக்கூடாது - வாலி ‘80’ விழா


         உலகிலேயே அதிக திரையிசைப் பாடல்களை எழுதியிருக்கும் வாலிப கவிஞர் வாலியின் 80வது பிறந்தநாள் விழா சென்னை நாரத கானசபாவில் 13 .11. 2010 அன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் வாலி எழுதிய திரையிசைப் பாடல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பாடல்களின் தொகுப்பான “வாலி - 1000” என்ற நூல் வெளியீடும் நடந்தது. நல்லி குப்புசாமி செட்டியார் தலைமையில்,பொதிகை தொலைக்காட்சி நடராஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவில், நடிகர் கமலஹாசன் நூலினை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.
  
வாலியின் 80 வது பிறந்த நாள் விழாவில் சோ, நல்லி குப்புச்சாமி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வைரமுத்து, பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசிலா,  வாணிஜெயராம், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், சூர்யா, சரோஜா தேவி, இயக்குனர் சங்கர், கவிஞர் பழனிபாரதி உள்ளிட்ட பலர் கவிஞர் வாலியை வாழ்த்தி பேசினர். 

இது கவிஞருக்கான விழா என்பதை, நிகழ்ச்சியை கவிதைத் தமிழில் தொகுத்து வழங்கி கவிஞர் நெல்லை ஜெயந்தா நிரூபித்தார். இவரின் தொகுப்புரையே அவ்விழாவினை மேலும் இனிமையுற செய்தது எனலாம். 

கவிஞர் வாலியிடம் வாழ்த்து பெற்றால் வெற்றி நிச்சயம் என்பது தமிழ்த் திரைத்துறையினரின் நம்பிக்கை. அத்தகைய புகழ்மிக்க கவிஞர் வாலியை வாழ்த்தியவர்களின் வாழ்த்துகளின் தொகுப்பு(பூ) நமது நந்தவனத்திலும் பூக்கிறது.


“ஈரெழுத்துக்காரருக்கு வாழ்த்துரை வழங்க ஓரெழுத்துக்காரரை அழைக்கிறோம்” என்று தொகுப்பாளர் நெல்லை ஜெயந்த அழைக்க, வாழ்த்துரை வழங்க வந்தார் சோ.

 “நடிகை சரோஜா தேவி என்னிடம் கேட்டார்,  கவிஞர் அவர்களுக்கு 80 வயதாகிறது.  உங்கள் வயது என்ன? என்று. 76 கடந்து 77 ஓடிக்கொண்டிருக்கு என்றேன். அதற்கு அவர் ஒரு மாதிரி பார்த்தார். சரி, சரி ஓடவெல்லாம் இல்லை மொதுவாக நடந்து கொண்டுதானிருக்கு என்றேன்” என்று சோ, தனது பேச்சை துவக்கி அரங்கத்தை சிரிப்பொலியாலும், கைத்தட்டல் ஓசையாலும் நிறைய வைத்தார்.
 
மேலும் அவர்,  “கவிஞர் வாலிக்கு வயதின் எண்ணிக்கைதான் 80. ஆனால் அவரின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை.  வாலியால், ராமாயணத்தைப் பற்றியும் எழுத முடிகிறது. முக்காப்புல்லாவும் எழுத முடிகிறது. வாலியால் ஆன்மிகம் பற்றியும் பேச முடியும். நாத்திகர்களை பாராட்டவும் முடியும். அது ஒன்றும் தப்பில்லை.

வாலி மிகவும் கோபக்காரர். கோபக்காரர்கள் திரைத்துறையில் ஜெயிக்கமுடியாது என்பர். ஆனால், வாலி ஜெயித்திருக்கிறார். சோவுக்கு 80 வயதை வரை நண்பராக இருக்கும் ஒருவர் உருப்பட முடியும் என்பதை வாலி நிரூபித்திருக்கிறார். (அரங்கம் கைத்தட்டலில் அதிர்ந்தது.)  

கண்ணதாசன் காலத்தில் புகழ் பெற்ற கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன் பாடலுக்கும் இவரின் பாடலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது. கவிதை எழுதும் போது வாலி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார். அவரால் எவரையும் கவர முடியும். வாலி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும். இன்னும் பால நூறு பாடல்கள் தரவேண்டும்.

இவ்வாறு சோ வாழ்த்துரை வழங்கினார். இவரின் வாழ்த்துரைக்கு பிறகே நல்லி குப்புச்சாமி செட்டியாரின் தலைமையுரையே நிகழ்ந்தது. தலைமை உரையாற்ற நல்லி குப்புச்சாமியை நெல்லை ஜெயந்தா அழைக்கும் போது,  “எப்போதுமே தலைமை உரைக்கு பிறகுதான் வாழ்த்துரை.  ஆனால், இங்கு வாழ்த்துரைக்கு பிறகே தலைமையுரை. தலைமையை அசைத்து பார்ப்பதுதானே சோவின் வழக்கம்” என்று கூறினார். அதேபோல், பாடகி எஸ்.சுசிலாவுக்கு பொன்னாடை போர்த்தியபோது, “மயிலுக்கு போர்வை போர்த்தியது பேகன். குயிலுக்கு பொன்னாடை போர்த்துவது நல்லி குப்புச்சாமி செட்டியார்,”  என்று அவர் கூறியதும் அருமையான தொகுப்புரையாக இருந்தது.

வாழ்த்துரை - பழனி பாரதி :

“பூகம்ப ஓசைக்கு மத்தியிலும்
பூ உதிரும் ஓசை கேட்பவன் - கவிஞன்...!” என்பர்.

வாலி, பூகம்ப ஓசையின் மத்தியில், மகரந்தம் உதிரும் ஓசையையும் பதிவு செய்பவர். தனது இதய அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய நேரத்திலும்,  சிம்புவின் படம் ஒன்றிற்காய் இளமை துள்ளும் பாடல் எழுதித்தந்தவர். 

எல்லோரும் வாழ்த்து கூறும் இந்நேரம், வானில் இருந்து ஒரு குரல் வாழ்த்துவது காற்றில் கலந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அந்தக் குரல் கவியரசர் கண்ணதாசன் குரல். அது தமிழை தமிழ் வாழ்த்தும் குரல்.

‘பாரத விலாஜ்’ படத்தில் பாடல் எழுதியதற்காக தேசிய விருது கிடைக்கவிருந்தது.  அதை வாலி தேவையில்லை என்றார்.  அத்தகையவரின் பாடலைத்தான் வானில் நட்சத்திரங்கள் வாயசைத்து பாடுவதாக நினைக்கிறேன். காற்றில் கலந்திருக்கும் வாலியின் பாடல்களை கொண்டே காற்றின் ஈரப்பதம் கணக்கிடப்படுகிறது.

வாழ்த்துரை - எஸ்.பி முத்துராமன் :
  
வாலி கம்பனுக்கு வெண்பா எழுதியிருக்கிறார். அதில், ஒரு கவிஞன் என்பவன், கம்பனின் கவிதைகளை படித்து கவிதை தெளிவு பெற்ற வேண்டும். அப்போது தான் அவனால் வெற்றிப்பெற முடியும் என வளரும் கவிஞனுக்கு வாலி அறிவுரை கூறியுள்ளார்.  வள்ளுவரின் அறத்துப்பாலுக்கும் வாலி உரை எழுதியிருக்கிறார்.

அதே போல், வள்ளுவரின் பொருட்பாலுக்கும், இன்பத்துப்பாலுக்கும் வாலி உரை எழுதவேண்டும். வள்ளுவரின் இன்பத்துப்பால் எத்தகைய இனிமையானது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த இனிமைக்கு இனிமை சேர்க்க வேண்டும் வாலியின் உரை. அதற்கு வாலி இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிய வேண்டும். 

வாலி அப்பலோ மருத்துவமனையில் இருந்தபோது, அவரின் மனைவி ரமன திலகம் மலர் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்கச் சென்றிருந்த என்னிடம்,  என்னை பார்க்க பலபேர் வருவார்கள் ஆனால், என் மனைவியை பார்க்க யார் செல்வார்கள். அதனால் என் சார்பாக நீங்கள் சென்று பார்த்து வாருங்கள் என்றார் வாலி. 

வாலியின் வெற்றிக்கு பின்னால் உறுதுணையாக இருந்த அவரின் மனைவியார் அப்போது காலமாகிவிட்டார். அதன் பிறகு வாலி மிகவும் நொறுக்கிப் போய்விட்டார். அவரின் கவலைகளை எல்லாம் தீர்ப்பது அவரின் கவிதைகள்தான்.  அவர் பாடல் எழுதும் போது எல்லாக் கவலைகளையும் மறந்து போகிறார். இதேபோல் வாலி இன்னும் பால நூறு பாடல் எழுத வேண்டும். என முத்துராமன் வாழ்த்தினார். 

சுசிலா அவர்கள், தேசிய விருது பெற காரணமாக இருந்தது வாலி எழுதிய “நாளை இந்த நேரம் பார்த்து” என்னும் பாடலாகும். அதற்கு நன்றி கூறி வாலிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கினார். வாலி முதன் முதல் எழுதிய பாடலுக்கு குரல்ஒலி கொடுத்து வாலியின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் சுசிலாதான்.  


வாழ்த்துரை - சூர்யா :

அப்பாதான் என்னை கவிஞர் வாலியிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினேன். அவரின் வாழ்த்துதலால்தான் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளேன். 

நான் முதலில் காதலித்தது ‘ஜோ’வாக இருக்கலாம். ஆனால் பார்த்த வேகத்தில் நான் காதல் கொண்டது வாலியிடம்தான்.  கவிஞர் வாலி,  “ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால்... ‘ஊக்கு’விற்பவன்கூட ‘தேக்கு’ விற்பான்” என்று கூறுவார். நமக்கு எவ்வளவு பெரிய துயர் என்றாலும், கவிஞரிடம் சென்றால் நமக்கு ஒரு புத்துணர்வு வந்துவிடும்.

நண்பர்கள் என்னிடம், “அடுத்தப் பிறவியில் என்னவாக இருக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன், “அடுத்தப் பிறவில் கவிஞர் வாலியாக பிறக்கவேண்டும்” என்று கூறி, வாழ்த்துவதற்கு வயதில்லை அதனால் வணங்குகிறேன்.

வாழ்த்துரை - ஷங்கர் :   

எஸ். ஏ. சந்திர சேகர், பவித்திரன் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்த போது,  கவிஞர் வாலி பாட்டெழுதும் போது கூட இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது பல்லவி வரவில்லை என்றால். வெற்றிலைப் பெட்டியை எடுப்பார் வெற்றிலையை போட்டுவிட்டு கழிவறைக்கு சென்று துப்பிவிட்டு வருவார். உடனே பல்லவியையும் எழுதிவிடுவார்.

இப்போது எனது படங்களுக்கு பாட்டெழுதும் போது பல்லவி வரவில்லை என்றால், “அண்ணா வெற்றிலை போட்டு,  துப்பி விட்டு வாருங்கள்” என்று நாங்களே சொல்வதுண்டு. அப்படி வெற்றிலைப் போடும் நேரத்தில் வாலி பாடல்களை எழுதிவிடுவார்.


இசைக் கீற்றாக மட்டுமே பாடல் மெட்டு போட்டுவந்த ஏர்.ஆர். ரகுமானை, தத்தகாரம் பாடி மெட்டுப் போடவைத்தவர் வாலி. இன்றுவரை ரகுமான் 
எல்லாப் பாடலுக்கும் பாடியே மெட்டு போட்டு கொடுக்கிறார்.  அதற்கு காரணம் வாலி.

முதல் பாடலுக்கு ‘மா’வில் தொடங்குமாறு பல்லவி எழுதுவது வாலி அண்ணாவின் வழக்கம். முக்காப் புல்லா,  மாயா மச்சிந்திரா, முஸ்தபா, மரியா மரியா, மாரோ மாரோ, முன்னால் முன்னால் முன்னால் வாடா... இப்படி அவர் ‘மா’ வினை முதலாக வைத்து எழுதிக் கொடுத்த பாடல்கள் எல்லாமே வெற்றிப் படல்களே. 
 
வாழ்த்துரை - வைரமுத்து :

இந்த மேடையை பார்க்கும் போது பேரதிசயமாக இருக்கிறது. பாபநாசம் சிவன் காலத்தில், அவரை வாழ்த்த தியாகராச பாகவதரோ, பி.யூ. சின்னப்பாவோ வரவில்லை. கண்ணதாசனையும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஒன்றாக வாழ்த்தியதில்லை. ஆனால் வாலியை வாழ்த்த ரஜினியும், கமலும் ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.

எனது பள்ளிப் பருவத்தில்,  ‘நான் பார்த்ததிலே அந்த ஒருவனைத்தான்’ என்ற வாலி எழுதிய பாடலை பாடி இரண்டாம் பரிசு பெற்றேன். அந்தப் பாடலுக்கு நடித்த நடிகையான சரோஜா தேவியும் இங்கு இருக்கிறார். இசையமைத்த எம்.எஸ்.வியும், அந்தப் பாடலை எழுதிய வாலியும் இங்கு இருக்கிறார்கள். அந்தப் பாடலை பாடி பரிசுப் பெற்ற மாணவனும் இங்கு இருக்கிறேன்.

கண்ணதாசன் , பட்டுக்கோட்டை போன்றவர்களைப் போல் பாட்டெழுத 100 ஆண்டுகள் ஆகும், என்று சொன்னார்கள். ஆனால் 10 வது ஆண்டே வாலி வந்துவிட்டார். நான் பல இலக்கியங்களை படித்த மாணவன் என்பதால், அந்த இலக்கியத்தை எல்லாம் திரைப்பாடலில் புகுத்த நினைத்தேன். ஆனால், வாலி அவர்கள் எதார்த்தத்தை பாடலில் ஏற்றினார். கண்ணதாசனும் அதையே செய்தார். திரை இசை என்பது பாமரனுக்கும் புரியவேண்டியது. இது கற்றறிந்தவர்களை மட்டும் சென்று சேரவேண்டிய ஒன்றல்ல. உழைப்பவனையும் சென்று சேரவேண்டியது. இந்த உண்மையை எனக்கு கற்றுத் தந்தவர்கள் கண்ணதாசனும் வாலியும்தான். 

‘பூவில், வண்டு தேன் எடுப்பது. கரும்பில் சாறு எடுப்பது’ என்று இரண்டு வகையுண்டு. கரும்பில் சாறு எடுக்கும் போது கரும்பு நசுக்கப்பட்டுவிடும். ஆனால், பூவில் வண்டு தேனை எடுக்கும் போது, பூவுக்கு வலிப்பதும் இல்லை. பூ கசங்குவதும் இல்லை. அப்படி பூவில் தேனை எடுக்கும் வண்டைப் போல் யாருக்கும் நஷ்டம் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் இனிமையான பாடல் தேனை எடுத்து தரக்கூடியவர் வாலி.

படைப்பளிகளை, கலைஞர்களை போற்றும் தேசம் சிறப்பு பெறும். இன்று வாலியை போற்றுவதால் இந்த தமிழ்தேசம் சிறப்பு பெறுகின்றது. என வாழ்த்தினார் வைரமுத்து.

பாடுநிலா பாலசுப்பிரமணியம், வாலி எழுதிய பாடல்களில், தான் பாடி வெற்றிப் பெற்ற பாடல்களில் மிகச்சிறந்த 10 பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். ‘மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ’ என்று அவர் பாடிக்கொண்டிருக்கும் போது... அந்த மன்றத்திற்கு திடீர் புயலாக ரஜினியும், வைரமுத்துவும் வந்தார்கள். அவர்களின் வருகையால் ஏற்பட்ட ஆரவாரம் அடங்கிய பின், ‘மீண்டும் சிறிய இடைவேளைக்கு பிறகு’ என்று கூறி அதே பாடலில் இருந்து பாடி தன்குரலால் வாலிக்கு வாழ்த்துத் தெரிவித்தார் தேனையே குடித்த குரலுக்கு சொந்தக்காரர். 



வாழ்த்துரை - ரஜினி : 

இந்த விழாவிற்கு, கமல் என்னை அழைத்த போது, ‘என்மகள் திருமணத்திற்கு நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்தும், வராதவரின் விழாவிற்கு நான் வரமாட்டேன் என்று கமலிடம் கூறிவிட்டேன். ஆனால் என்னால் வராமல் இருக்கமுடியவில்லை. வந்துவிட்டேன். இங்குவந்து பார்த்தபின்புதான் தெரிகிறது எவ்வளவு சிறப்பான விழா என்று. ஒருபுறம் பாலு, அருமையாக பாடிக்கொண்டிருக்கிறார். எனக்கு முதன்முதல் குரல் கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் இங்கு அமர்ந்திருக்கிறார். அவரைப்போல் இன்னும் சிறப்பானவர்கள் பலர் இங்கு வந்திருக்கிறார்கள்.


வாலி எனக்காக எத்தனையோ சிறந்தப் பாடல்களை எழுதியிருக்கிறார். ‘அம்மா என்று அழைக்காத’ பாடலுக்கு இணையான ஒருபாடல் இருக்கமுடியுமா. ராமாயண வாலிக்கு முன்பாக எதிர்த்து நிற்பவர்கள் சக்தியில் பாதி வாலியிடம் சென்று விடும். வாலியே பலசாலி அதில் எதிரியின் பாதி பலமும் சேர்ந்து ஒன்றரை மடங்கு பலசாலியாகிவிடுவார். பிறகு அவரை வெல்ல யாரால் முடியும். அதே மாதிரிதான், வாலி பாட்டெழுத வந்தால் எல்லாம் காலி. அவரது பாட்டில், என்ன ஒரு துடிப்பு. என்ன ஒரு வேகம். இளமை துள்ளல். அதே போல் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பாடல்களை எழுத, எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்த்துரை - கமலஹாசன் :

வாலியைப் பற்றி பகிர்ந்து கொள்ள என்னிடம் நிறைய நினைவுகள் இருக்கின்றன. ஆனால் அந்த அளவிற்கு நேரம் இல்லை. அவருக்கு இப்போது 80 வயது அல்ல. ஆயிரம் வயது. அத்தனை ஆண்டுகள் அவர் புகழோடு வாழ வேண்டும். அப்படி வேண்டிக் கொள்கிறவர்களில் நானும் ஒருவன்.

வைரமுத்து சொன்னது போல், பூவில் தேனெடுப்பதுக்கு பதில், வாலி ஒரு கரும்பென்று தெரியாமல் கடித்து பல்லுபோன வண்டு நான். அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு வாலி முதலில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். அதைவிட இன்னும் நன்றாக வேண்டுமென்று கேட்டுவிட்டேன். உடனே வாலி கோபித்துக்கொண்டார். அதன் பிறகு ஒருவழியாக, அவரது வீட்டிற்கே சென்று பாட்டுக்கேட்டு வாங்கினேன். அப்போது என்னை மனசுல வைத்து அவர் எழுதியதுதான், “ உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன், என்னை நினைச்சேன் நானும் சிரிச்சேன்” பாடல். வாலி அந்தப் பாட்டை  எழுதிக்கொடுத்துவிட்டு அந்தப் பாட்டுக்கு சிறந்த பாடலுக்கான விருதையும் வாங்கிட்டு போய்விட்டார்.  

அந்தப் பாடலில், ‘வானம் போல் சில பேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்’ என்ற ஒரு வரி எழுதியிருப்பார். அதைப் போல், வானமாக வாலி இருக்கிறார். நாங்கள் எல்லாம் அந்த மழையில் பூத்த பூக்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதில் இப்போது நிறைய பேர் தேன் எடுத்து செல்கிறார்கள். 

எனது கவிதையையும் வாலி அவர்கள் படித்துப் பார்க்கும் ஒரு தர்ம சங்டமான நிலையும் ஏற்பட்டிருக்கு. நான் கவிதை எழுதி காட்டியபோது என் கவிதைகளை படித்து பிழை சொல்லாமல் பாராட்டியிருக்கிறார். தைரியமாக எழுது. கண்ணதாசன் பட்டுக்கோட்டைக் காலத்திலேயே நான் எழுதி நிலைச்சு நிற்கலையா. அதே மாதிரி, எதைப் பத்தியும் பயப்படாமல் உனக்கு என்ன தோன்றுதோ அதை செய் என்றார். இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பவர் வாலி. தைரியம் அளிப்பவர் வாலி.

அனைவரின் வாழ்த்துகளையும் பெற்ற வாலியின் ஏற்புரை :


எனது நூலை வெளியிட்ட கமல், ஷங்கருக்கு நன்றி. என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கு நன்றி.எனது பாடலான “கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்” என்ற பாடல் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு டி.எம்.சௌந்தரராஜன்தான் காரணம்.  நான் திரைத்துறைக்கு வருவதற்கும் அவர்தான் காரணம்.  சுசிலா எனது முதல் பாடலை பாடி என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். இருவரும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி.

இந்த நிகழ்ச்சியை முடிவு செய்ததும் முதலில் சரோஜா தேவியைத்தான் அழைத்தேன். சொன்னதும் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறார். “படகோட்டி” படத்தில் நான் எழுதிய பாடல்கள் இன்றும் உயிரோட்டமாய் இருப்பதற்கு அவர்தான் காரணம். முந்தானைகூட சிறிதும் ஒதுங்காமல் நடித்தவர். தனது முகப்பாவத்தினாலேயே எல்லாரையும் கட்டிப்போட்டவர் சரோஜா தோவி. (ஆமாம், நெல்லை ஜெயந்தா கூறியது போல், கறுப்பு வெள்ளைக் காலத்தில் கலராக தெரிந்தவர் இந்த கன்னடத்து பைங்களி.)

ரஜினியின் மகள் திருமணத்திற்கு வரவில்லை என்று சொல்லி அவர் வருத்தப்பட்டார். எனது மனைவி இறந்த முதல் ஆண்டு நினைவு நாளன்று ரஜினிகாந்தின் மகள் திருமணம் நடைபெற்றதால் என்னால் செல்ல முடியவில்லை. அதை அவரிடமே ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். நான்  போகாவிட்டாலும் அவரது மகள், மருமகன் இருவரையும் எல்லாம் வல்ல முருகன் அருளால் பல்லாண்டு வாழ்க என்று மனதால் வாழ்த்தினேன்.

கமலஹாசன் கலைஞானி மட்டுமல்ல. கவிஞானியும்கூட. தமிழை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர். டி.கே.சகோதரர்கள் குழுவில் இருந்து கலை உலகுக்கு வந்தவர்.மொழியை உச்சரிக்க தெரியாதவர்கள் அங்கிருந்து வர முடியாது.   இந்த விழாவுக்கான அழைப்பிதழை கமலிடம் கொடுக்க நேரம் கேட்டபோது என் வீட்டுக்கே வந்து அழைப்பிதழை பெற்றுக் கொண்டார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் புகழின் உச்சியில் இருப்பதற்கு காரணம் அவர்கள் வேர்களை மறக்காததுதான். எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன். 20ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.வி.தான். அவருக்கு நிகரான ஒரு ஆள் இன்னும் பிறக்கவில்லை. (கர்நாடக இசை என்று கூறுவது போல், மெல்லிசை என்று கூற வைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு 2 லட்சம் அன்பளிப்பை நன்றிக்கடனாய் வாலி வழங்கினார்.) 


ரஜினி என்னை துர்வாசகரை போல் கோபப்படுவதாக கூறுகிறார். இந்த‘துர்’வாசகனிடமும் ஒரு நல்வாசம் உண்டு. ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புக்கு சிறந்த உதாரணம். ரஜினி தனக்கென ஒரு தனி வழியை அமைந்துக் கொண்டு அதில் அவர் போகிறார். கமல், அவருக்கென ஒரு வழியை அமைத்துக்கொண்டு அந்த வழியில் அவர் போகிறார். இருவருமே தமிழ் திரைப்படத்தை உலக அளவில் உயர்த்தி வருகிறார்கள். ரஜினி கமலுக்கு அடுத்து சூர்யா அந்த இடத்தில் இன்று இருக்கிறார். 

வைரமுத்துவும் நானும் ‘மோதுறோம் மோதுறோம்’ என்கிறார்கள். அந்த வைரமுத்து எனக்கு மோதிரம் அணிவிதுள்ளார்.யாரும் வெற்றியை மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அதே போல், தோல்வியையும் மனதுக்குள் போட்டுக் கொள்ள கூடாது.

வெற்றியை மண்டைக்குள் போட்டுகொண்டால் கர்வம் வந்துவிடும், தோல்வியை மனதுக்குள் போட்டுக்கொண்டால் கவலை வந்து விடும். இந்த இரண்டாலும் அழிவு வந்துவிடும்.

என்னை கோபக்காரன் என்கிறார்கள். கோபப் படாமல் இருக்க நான் ஒன்றும்
மரவட்டையல்ல மண்புழுவும் அல்ல. கோபம் வேண்டும். கர்வம்வேண்டும். 
அப்போது தான் நமக்குள் ஒரு வேகம், வெறி இருக்கும். தான் கர்வப்படுவது தப்பில்லை. தனது கர்வத்தை அடுத்தவர் மண்டையில் ஏற்றக்கூடாது. 

வைரமுத்துவும் அப்படித்தான் தனது மண்டைக்குள் கர்வம் வைத்துள்ளார். அது வேண்டும். அதுதான் அவரின் வெற்றிக்கு ஆதாரம். 

இவ்விதம் தன்னை பாராட்டி வாழ்த்தியவர்கள் அனைவரையும் கவிஞர் வாலி நன்றி 
பாராட்டினார்.
Source - Nanthavanam

சிவாஜி இருந்தபோதும்... இறந்தபோதும்.

நாடகம், நடிகர் திலகம், நான்...' என்ற தலைப்பில் கலைமாமணி எஸ்.ஏ.கண்ணன்ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதன் வெளியீட்டு விழா திடீரென ரத்தானது பற்றி கழுகார் சொல்லியிருந்தார்.

எஸ்.ஏ.கண்ணனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் 17 வயது முதல் உயிருக்கு உயிரான நண்பர்கள். கண்ணனைவிட சிவாஜி மூன்று மாதங்கள் மூத்தவர். 1951-ல் 'சிவாஜி நாடக மன்றம்' தொடங்கிய இருவரில் கண்ணனும் ஒருவர். தமிழ் நாடக வரலாற்றில் பல பக்கங்களில் இடம்பெறக்கூடிய இவர் எழுதி இருக்கும் புத்தகத்திலிருந்து ஓரிரு செய்திகள் மட்டும் இங்கே.....
11.8.1946-ல் வி.சி.கணேஷ், ஸ்ரீசக்தி நாடக சபைக்கு ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு சேர்ந்தார். மூன்று நான்கு மாதங்களிலேயே எனக்கும் அவருக்கும் ஆழ்ந்த நட்பு. 1952-ம் வருடம் தீபாவளித் திருநாளில் 'பராசக்தி' படத்தின் மூலம் கதிரவன்போல் தோன்றினான். பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. அப்பப்பா! அவன் உதயமாவதற்குள், எத்தனை ஏச்சுகள், பேச்சுகள், கிண்டல்கள், கேலிகள், தடைகள்...

அதன்பிறகு தன்னிகரில்லா நடிகரானார். விருதுகள் பல பெற்றார். தன் சூரக்கோட்டைப் பண்ணையில் யானை கட்டிப் போரடித்தார். நாடகத்தின் மூலம் பொது ஸ்தாபனங்கள், கல்விக் கூடங்கள் சிவாஜி மன்றத்தின் நாடகத்தின் வாயிலாக பல தர்ம காரியங்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உதவி வந்தார் கணேஷ்.

சிவாஜி மற்றவர்களைவிட தன் உழைப்பால் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தார். பெரும் பகுதி இழந்தார். இழந்தும் அவருக்கு நல்ல பெயர் சொல்ல ஆள் இல்லை. காரணம்? நிலம் பார்த்து, மக்களின் தரம் பார்த்து அதை விதைக்கவில்லை. சிவாஜி செய்த தவறுகள் எல்லாம்... யாருக்குக் கொடுத்தால் மனம் நிறைவு பெற்று வாழ்த்துவார்களோ, நாடெல்லாம் புகழ்ந்து உரைப்பார்களோ, அவர்களை சரியாக அடையாளம் காண்பதில் தவறு செய்துவிட்டார். ஈரமனம் உள்ள நலிந்த ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் பணத்தை அள்ளி வீசித் தெளித்திருந்தால், பலன் தானாக இவர் கேட்காமலே வந்து சேர்ந்திருக்கும். அவர் கொடுத்ததெல்லாம் அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சுயநலவாதிகளுக்கும்தான். நீலிக் கண்ணீர் வடித்தவர்கள் எல்லாம் சிவாஜியைக் கவிழ்த்துப்போட்டு, முதுகின் மேல் ஏறி மிதித்து மேலேறிப் போய்விட்டார்கள்.

1967 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக சிவாஜி பிரசாரத்தில் ஈடுபட்டார். சிவாஜி பேச்சுத் துணைக்கு குருமூர்த்தியையும், என்னையும் அழைத்துச் சென்றார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. தோற்றதற்குக் காரணம் சிவாஜிதான் என்று ஏளனமாக பேசப்பட்டது. அப்போது நான் நினைத்தேன். 'ஐயோ, இந்த அரசியல்வாதிகளுக்கு, எம்.எல்.ஏ-க்களுக்கு கொடுத்த பணத்தை ரோடு ஓரங்களில், வயல்களில்... ஏர் உழுது பாடுபடும் ஏழை விவசாயப் பெருமக்களுக்கு ஆளுக்கு100, 200 என்று கொடுத்திருந்தால், 'மகாராசன்... நீ நல்லாயிருக்கணுமய்யா!' என்று வாயார... மனமார வாழ்த்தி இருப்பார்களே! மொத்தத்தில் சிவாஜி காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டதும், செலவழித்த பணமும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது!

'அக்கரைப் பச்சை', 'இளைய தலைமுறை' போன்ற திரைப்படங்களைத் தயாரித்த தர்மராஜ், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற நிலையில் இருந்து மாற்றம் அடைந்து மாபெரும் ஜோசியர் ஆகிவிட்டார். அவரை அழைத்துக்கொண்டு சிவாஜியை சந்தித்தேன். வெற்றிலை வைத்து சோதிடம் பார்த்தார். 'உங்கள் அரசியல் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து நல்லபடியாக நடக்க வேண்டுமானால் திருச்செந்தூர் சென்று முருகனுக்கு 100 லிட்டர் பால் அபிஷேகம் மற்ற அபிஷேகங்களும் செய்யவேண்டும். அதோடு, 50 ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்யவேண்டும். உங்கள் ஹெல்த் பாதிக்காமல் இருக்க நான் சொல்றபடி நவரத்தினக் கற்கள் பதித்த தங்கத்திலே ஒரு டாலர் செய்து கழுத்தில் செயினாக போட்டுக்கொள்ள வேண்டும்...' என்றார்.

'கமலா! தர்மு சொல்றபடி எல்லாத்தையும் செய்து முடிச்சிடு' என்று சிவாஜி சொன்னார். 'ஏங்க இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும்?' என்று கமலாம்மா கேட்டார். சொன்னார் தர்மராஜ். 'நாளைக்கு காலையிலே ஆச்சாரியாரை கூட்டிட்டு வாங்க. பவுனு தர்றேன்...'' என்று கமலாம்மா என்னிடம் சொன்னார்.

காரில் போகும்போது தர்மராஜ் என்னிடம் சொன்னார். 'சிவாஜி அண்ணனோட ஹெல்த் இன்னும் 20 நாளைக்குள்ளே பாதிக்கும். அதனால், இந்த பரிகாரத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதை நீங்கதான் செய்து முடிக்கணும்...' என்றார். மறுநாள் மாம்பலம் பொற்கொல்லரை அழைத்துக்கொண்டு சகோதரி கமலாம்மாவை சந்தித்தேன். ஐந்து பவுனாக பழைய நகைகளைக் கொடுத்து, 'இதை அழித்து டாலர் செய்யுங்கள். மற்றவைகளுக்கு நாளை மறுநாள் தருகிறேன்...' என்றார். மறுநாள் அவரைப் பார்த்தேன். 'இன்னும், அலமேலு வரலை. அவகிட்டதான் பணம் இருக்கு...' என்றார். மறுநாள் சென்றேன். அன்றும் இதே வார்த்தை. அடுத்து மறுநாள் சென்றேன். வைரக்கல் ஒன்றைக் கொடுத்தார். ஏதோ பழைய நகையில் இருந்து எடுத்ததாகத் தெரிந்தது. பொற்கொல்லரிடம் கொடுத்தேன். 'இந்த கல்லில் கரும்புள்ளி இருக்கு. வேறு தாருங்கள்...' என்று திருப்பித் தந்தார். கமலாம்மாவிடம் கொண்டுபோய் கொடுத்தேன். 'நாளைக்கு வாங்க...' என்று அனுப்பினார். மறுநாள் சென்றேன். 'அலமேலு வரவில்லை' என்றார்.

பயம் என்னைக் கவ்விக்கொண்டே இருந்தது. நடக்க இருக்கும் விபரீதத்தை அவர்களிடம் சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை. மறுநாள் போனேன். 'ஹாலில் உட்காருங்கள். இதோ வருகிறேன்...' என்று சொல்லிச் சென்றார். அரை மணி நேரம் கழித்து வேறு ஒருவர் வந்தார். 'நீங்க ஏதோ பூஜை போடணும்னு சொன்னீங்களாமே! இதுவரை எங்க குடும்பத்தில் 35 வருஷமா இல்லாத புதுப் பழக்கமா? யார் இந்த தர்மராஜ்? இதை சொல்றதுக்கு நீங்க யார்?'' என்று பொரிந்து தள்ளினார். சிவாஜியின் வீட்டைவிட்டு வெளியேறினேன். நேராக மாம்பலம் பொற்கொல்லரிடம் சென்று வைரக்கல்லை வாங்கிவந்து, சகோதரி கமலாம்மாவிடம் கொடுத்தேன். 'இனி இந்தக் கண்ணன் இந்த வீட்டுப் பக்கம் வரமாட்டான்...' என்று சொல்லிவிட்டு வெளியேறினேன்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும்... காலை தந்தி பத்திரிகையின் முதல் பக்கத்தில் சிவாஜி கணேசன் நெஞ்சுவலி காரணமாக விஜயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைப் படித்தேன். துடிதுடித்துவிட்டேன். சபதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சிவாஜி வீட்டுக்குப் போனேன்.
சிவாஜியின் தம்பி சண்முகத்தைப் பார்த்து, 'ஒழுங்கா திருச்செந்தூர் சென்றுபரிகாரத்தை செய்துவிட்டு வந்துடுங்க. நான் சொல்றது புரியுதா?' என்று காட்டுக் கத்தல் கத்திவிட்டு வந்துவிட்டேன். ஆறு ஏழு மாதம் கடந்து, சண்முகம் மறைந்தார். இதுவும் தர்மராஜ் ஜோசியம் சொன்னதுபோலவே நடந்துவிட்டது. மேற்கண்ட நிகழ்வுகளில் எனக்கும், சிவாஜிக்கும் உள்ள 40 வருட தொடர்பு அறுந்துபோனது.
கடைசியாக, அவர் மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியைப் பத்திரிகையில் படித்தேன். அடுத்த நாள் காலையில் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன். முக்கியச் செய்தியாக தொலைக்காட்சியில் ஓடியது: 'நடிகர் திலகம் மரணம்!' அவரது உடலைப் பார்த்து கதறினேன்.
'டேய் கண்ணா, நான் உங்களுக்கு முன் செத்துட்டேன்னா சவுக்குக் கட்டைக்குப் பதிலாக சந்தனக் கட்டையை வெச்சு எரிக்கச் சொல்லுங்கடா...' என்று சிறு வயதில் சிவாஜி ஒரு முறை சொன்னது ஞாபகம் வந்தது.

 இதை நான் சொன்னேன். 'பெசன்ட் நகர் எலெக்ட்ரிக் சுடுகாட்டில் எரிக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டாங்க...' என்று சொல்லி விட்டார்கள். .
சிவாஜி உயிரோடு இருக்கும்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது கிடைக்கவில்லை. தான் செத்தபிறகு தனக்கு நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதும் நடக்கவில்லை!''
- தொகுப்பு: பதி
source - vikatan
 

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா. பாலசந்தர்...

பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் என மூத்த தலைமுறை இயக்குநர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள். புதிய தலைமுறை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் எனத் திரையுலகத் திருவிழாவாக கொண்டாடிக்கொண்டு இருந்தது திரையுலகம்!
'நவரச நாயகன்' கார்த்திக் மேடை ஏறியதும் ராதாவையும் மேடைக்கு அழைத்தார்கள். "முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு தமிழ் தெரியாது. மத்தவங்க பேசுறதைக் கவனிப்பேன். அப்பவே, கார்த்திக் பேசுற தமிழ் வித்தியாசமா இருக்கும். 'ஓ... ரெண்டு தமிழ் கத்துக்கணும்போல'ன்னு நினைச்சேன்!" என்று கார்த்திக்கைக் கலாய்த்தார் ராதா. " 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் எனக்கு பாரதிராஜா கொடுத்த முதல் வசனம்... 'ஏன் லேட்டு?' அதுக்கு ராதா 'கொஞ்சம் லேட் ஆகிருச்சு'ன்னு சொல்வாங்க. முதல் டயலாக்கை மறக்கக் கூடாதுல்ல... அப்புறம் நான் எல்லாப் பட ஷூட்டிங்குக்கும் லேட்டாப் போக ஆரம்பிச்சேன். 'ஏன் லேட்டு?'னு கேட்டா, 'கொஞ்சம் லேட் ஆகிருச்சு'ன்னு பதில் சொல்ல ஆரம்பிச்சேன். ஆக, நான் லேட்டா வர ஆரம் பிச்சதுக்குக் காரணம் இயக்குநர்கள்தான்!" என்று கார்த்திக் சொல்ல, ரசித்துச் சிரித்தார்கள் இயக்குநர்கள்!
சத்யராஜோடு மேடையேறினார் குஷ்பு. "என்கூட அதிக தடவை ஜோடியா நடிச்சவங்ககுஷ்பு. அதற்காக நான் இயக்குநர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்!" என்று சத்யராஜ் தன் டிரேட் மார்க் லொள்ளு காட்ட, அடக்க முடியாமல் சிரித்தார் குஷ்பு. "நான் இயக்குநர்கள் மேல் நிறைய மரியாதை வெச்சிருக்கேன். அதுக்குச் சின்ன உதாரணம், நான் ஒரு இயக்குநரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!" என்று குஷ்பு சொல்ல, சுந்தர்.சி முகத்தில் நவரசப் பரவசம்!
கணவர் செல்வமணியோடு மேடை ஏறினார் ரோஜா. செல்வமணியிடம் காதல்பற்றி தொகுப்பாளர் கேட்க, "நானும் ரோஜாவும் 12 வருடங்கள் காதலிச்சோம். ஆனா, திருமணம் முடிஞ்ச மூணாவது நாளே சண்டை. ஹனிமூனுக்குப் போன 40 நாட்களும் தினம் தினம் சண்டை தான். என் காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்துருச்சோனு பயந்து, நண்பர் வி.சேகரிடம் பிரச்னையைச் சொன்னேன். 'மனைவியிடம் ஜெயிச்சா, வாழ்க்கையில் தோத்துடுவோம். மனைவியிடம் தோத்தா, வாழ்க்கையில் ஜெயிச்சுடுவோம். நீ உன் மனைவியிடம் தோத்துப்போயிடு!'னு சொன்னார். அன்னிக்கு இருந்து எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!' என்று செல்வமணி சொல்ல, தலைக்கு மேல் கைகளைத் தூக்கித் தட்டினார் ரஜினி. அப்போது அவருடைய கைகளைப் பிடித்து, தலை குனிந்து லதா ரஜினிகாந்த் சிரித்தது அழகு!
'ரத்தக் கண்ணீர்' நாடகத்தின் ரீ-மிக்ஸில் நடித்தார் ராதாரவி. 'மக்கள் வளர்ச்சியை நினைக்கிறவன் கட்சி ஆரம்பிக்கணும்னு அவசியம் இல்லை!' என்று ராதாரவி சொல்ல, ரஜினி, விஜய் இருவரின் முகத்திலும் கலவையான உணர்ச்சிகள். 'இவர் ஏன் கட்சி ஆரம்பிக் கலைன்னு யோசிச்சேன். கொடிக்குக் கலரே இல்லை. ஜெமினி லேப்பில்கூட கலர் இல்லையாம். இவர் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனா, மறந்துட்டாரு!' என்று ராதாரவி நேரடியாகவே கோடி காட்ட, நெற்றியில் கைவைத்து அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார் ரஜினி. 'நான் கட்சி ஆரம்பிக்கப்போறேன். கைச் சின்னம்!' என்று ராதாரவி சொல்ல, 'ஏற்கெனவே ஒரு கட்சி அந்த சின்னத்தை வெச்சிருக்கே!' என்றார் ஒருவர். 'நம்ம கைதான் வேற மாதிரி இருக்குதே!' என்று 'ரத்தக் கண்ணீர்' எம்.ஆர்.ராதாபோல கை விரல்களை மடக்கிக் காட்ட, ரஜினி முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு!

தமிழ் சினிமாவுக்கு இந்திய அளவில் பெருமை சேர்த்ததற்காக மணிரத்னம், அகத்தியன், பாலா மூவருக்கும் தங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. பாலாவுக்கான அடையாள அட்டையை ரஜினியும் மணிரத்னமும் வழங்க முன்வர, "தப்பா எடுத்துக்காதீங்க... இதை என் குருநாதர் பாலுமகேந்திரா கையால் வாங்க ஆசைப்படுறேன்!" என்று மைக்கில் அறிவித்தார் பாலா. மகிழ்ச்சி பொங்க பாலுமகேந்திரா மேடை ஏறி பாலாவுக்கு அடையாள அட்டை வழங்கினார்!
பாலசந்தர் கேள்வி கேட்க, ரஜினி பதில் சொல்லும் நிகழ்ச்சி. "உனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லைன்னா, 'நோ கமென்ட்ஸ்'னு சொல்லலாம்!" என்றார் பாலசந்தர். உடனே ரஜினி கையெடுத்துக் கும்பிட, "எவ்வளவு சந்தோஷம் பாருங்க!" என்று வாய்விட்டுச் சிரித்தார் கே.பி.
"ரஜினியான நீ, திரும்ப சிவாஜி ராவ் ஆக முடியுமா?"
"நான் சிவாஜி ராவா இப்பவும் இருக்கிறதாலதான் ரஜினிகாந்தா இருக்க முடியுது. இந்தப் பேர், புகழ் எதுவுமே சிவாஜி ராவைப் பாதிக்கவே இல்லை!"
"நீ எல்லா சரவண பவனையும் விலைக்கு வாங்கலாம். ஆனா, அங்கே போய் உன்னால் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டார் ஆக நீ கொடுத்த விலை என்ன?"
"என் நிம்மதி, சந்தோஷத்தைப் பறி கொடுத்திருக்கேன். ஒரு சாதாரண குடிமகனா என்னால வெளியில நடமாட முடியலை. ஒரு சூழ்நிலைக் கைதி மாதிரி இருக்கேன்!"
"உன் சுயசரிதையைப் படிக்க தமிழ்நாடே ஆவலா இருக்கு. சுயசரிதை எழுதுவியா?"
"சுயசரிதைன்னா உண்மை மட்டும் தான் எழுதணும். அப்படி உண்மையா எழுதலைன்னா அது சுயசரிதையே இல்லை. மகாத்மா காந்தி தன் சுயசரிதை யில் தைரியமா நிறைய உண்மைகள் சொல்லி இருந்தார். அந்தத் தைரியம் எனக்கு வந்தா... எழுதுவேன்!"
"இந்தியாவின் நம்பர் ஒன் நடிகன் அந்தஸ்துக்கு வந்தாச்சு. அந்த இடத்தைக் காப்பாத்தணும்னு பயமா இருக்குதா?"
"(கையெடுத்துக் கும்பிடுகிறார்) இந்த இடத்தை நானே எதிர்பார்க்கலை. இது 'ரோபோ'ங்கிற ஒரு படத்தில் கிடைத்த இடம். என்ன பண்ணப்போறோம்னு பயம் ஜாஸ்தியா இருக்கு!"
"இந்த 30 வருஷத்தில் ஏதாவது படங்கள் பார்த்துட்டு, 'இந்தப் படத்தை நாம பண்ணி இருக்கலாமே'ன்னு நினைச்சது உண்டா?"
"ஒண்ணு, ரெண்டு படங்கள் பார்த்துட்டு நினைச்சிருக்கேன். அந்தப் படங்களோட பேர் சொல்ல விரும்பலை!"
" 'மொகல் இ ஆஸம்', 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' போன்ற படங்கள் இப்பவும் பேசப்படுது. 50 வருஷங்கள் கழிச்சு உன்னோட எந்தப் படங்கள் பேசப்படும்?"
" 'ஸ்ரீராகவேந்திரா', 'பாட்ஷா', 'எந்திரன்'!"
('என் படங்களைச் சொல்ல மாட்டேங்குற பார்த்தியா?' என்று பாலசந்தர் சொல்ல, அவருக்குக் கை கொடுத்துச் சிரிக்கிறார் ரஜினி)
"ரஜினிகாந்த் என்கிற நடிகன்கிட்டே ஆயிரம் திறமைகள் இருக்கு. நீ ஏன், அமிதாப் மாதிரி கேரக்டர் ரோல் பண்ணக் கூடாது? 'சீனி கம்' மாதிரி ஒரு படத்தில் நீ நடிச்சுப் பார்க்கணும்னு ஆசையா இருக்குப்பா!"
"ஆர்ட்டிஸ்ட் ஆசை ஜாஸ்தி கிடையாது. பெரிய கமர்ஷியல் படங்கள் பண்ணத்தான் எனக்கு விருப்பம்!"
"நீ இன்னும் தேசிய விருது வாங்கலையேன்னு எனக்கு வருத்தமா இருக்கு. உனக்கு இல்லையா?"
"அது டைரக்டர்ஸ் கையில்தான் இருக்கு!"
"உன்னைவெச்சு என்னால் படம் பண்ண முடியாது. ஆனா, நாடகம் போடலாம். என்னோட 'மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் நீ மேஜரா நடிப்பியா?"
"கண்டிப்பா நடிக்கிறேன்."
"ஏப்ரல் 15 டிராமா போடப் போறேன். நீ ரெடின்னா, நான் ரெடி!"
(கீழே அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா தனுஷ், அவசர அவசரமாகத் தலையை இட வலமாக ஆட்டுகிறார். மேடையில் ரஜினி ஒரு மாணவனைப்போல கைகளைக் கட்டுகிறார். உடம்பைக் குறுக்குகிறார்) "நீங்க செய்னு சொன்னா... நான் செஞ்சுடுறேன்!"
"நான் உனக்கு ரஜினின்னு எப்போ பேர் வெச்சேன்னு ஞாபகம் இருக்குதா?"
"ஃபுல் மூன் டே. அன்னிக்கு ஹோலி பண்டிகை!"
"பேர் வெச்சதில் இருந்து ஏழெட்டு வருஷம் ஹோலி பண்டிகை அன்னிக்கு என்னை வந்து பார்ப்பே. வர முடியலைன்னா... போன்லயாவது பேசுவே. அப்புறம் மறந்துட்டியேப்பா!"
(முகம் மாறுகிறது) "ஸாரி சார்... கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். இனிமே அப்படி நடக்காது!"
"கண்டக்டரா இருந்தப்போ, யாரையாவது லவ் பண்ணியிருக்கியா?"
"பண்ணியிருக்கேன்!"
"யார்னு என்கிட்ட மட்டும் சொல்லுவியா?"
"அப்புறம் சொல்றேன்!" (வாய்விட்டுச் சிரிக்கிறார்)
"உன் மனைவி லதாவை நீ எனக்கு அறிமுகப்படுத்தியது ஞாபகம் இருக்கா?"
"நல்லா ஞாபகம் இருக்கு. கலாகேந்திராவில் உங்களைச் சந்திச்சேன். 'இதுதான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு'ன்னு சொன்னேன். 'அது நல்லாப் படிச்ச பொண்ணு. நீ கோபக்காரன். எப்படிச் சமாளிப்பே?'னு கேட்டீங்க. அப்புறம் லதாகிட்ட, 'இவன் ரொம்ப நல்ல பையன்மா. நிறையக் கோபப்படுவான். நீதான் சமாளிக்கணும்'னு அட்வைஸ் பண்ணீங்க!"
"ஒரு குட்டிக் கதை சொல்ல முடியுமா?"
(கண்கள் அலைபாய யோசிக்கிறார்) "ஸாரி சார். நான் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன். இப்போ சொல்ல முடியலை!"
"உனக்குப் பிடிச்ச சூப்பர் ஸ்டார் யார்?"
"அரசியல்ல சொல்லலாமா... லீ க்வான் யூ. முன்னாள் சிங்கப்பூர் பிரதம மந்திரி!"
"நாம இவர்போல இல்லையேன்னு யாரையாவது பார்த்து ஆதங்கப்பட்டு இருக்கியா?"
"இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ஆதங்கப்பட்டு இருக்கேன்!"
"இப்போ ரேபிட் ஃபயர் ரவுண்ட். கேள்விகளுக்கு ஒரு வரியில், ஒரே வார்த்தையில பதில் சொல்லணும். உனக்கு தமிழ்ல ரொம்பப் பிடிச்ச இயக்குநர் யார்?"
"மகேந்திரன்."
"பிடித்த புத்தகம்?"
"பொன்னியின் செல்வன்."
"உன் பெஸ்ட் ஃப்ரெண்ட்?"
"ராஜ் பகதூர்!"
"ரொம்ப வருத்தப்பட்ட விஷயம்?"
"என் தந்தையின் மரணம்!"
"மறக்க முடியாத அவமதிப்பு?"
"நோ கமென்ட்ஸ்!"
"நிறைவேறாத ஆசை?"
"நோ கமென்ட்ஸ்!" (கண் கலங்குகிறது. மெதுவாக, விழியோரம் துடைத்துக்கொள்கிறார்.
"உன்னைப்பத்தி உனக்குப் பிடிச்ச விஷயம்?"
"உண்மையாப் பேசுறது!"
"நீ அரசியலுக்கு வருவியா... வர மாட்டியா?"
"அது ஆண்டவன் கையில் இருக்கு!"
"உன்கிட்ட நான் இவ்வளவு நேரம் கேள்வி கேட்டேனே... என்கிட்ட நீ ஒரே ஒரு கேள்வி கேளு!"
"எப்போ இதை முடிப்பீங்க?"
டாட்!

லஞ்சத்தை காமெடி செய்து ஒழிக்க முடியாது!

இப்படிக்கு 'டிராஃபிக்' ராமசாமி...

ந்த வார நாளிதழ்களில் வந்திருக்கும் விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்புவந்தது. அதாவது... லஞ்ச ஒழிப்பு வாரமாம் இது! இந்த ஒரு வாரம் லஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதுமா... அல்லது லஞ்சத்தை ஒரே வாரத்தில் ஒழித்துவிடத்தான் முடியுமா?
'எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்சம் இந்த அளவுத் தொகையை லஞ்சமாக வாங்கலாம் என்று சட்டம் கொண்டுவந்து விடலாம்!' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வருத்தத்துடன் சொன்னார்கள். எவ்வளவு வேதனை அந்த நீதிமான்களுக்கு இருந்தால், இப்படி ஒரு கமென்ட் வந்து விழும்?

லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் செயல்பாடு மீது நீதிபதிகளுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்ட பிறகு, நாட்டில் அதை ஒழிக்க முடியும் என்பதுசந்தேகம்தான். லஞ்சம் யார் வாங்கினாலும், யார் கொடுத்தாலும்... அது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது!
அரசியல்வாதிகள் மட்டுமே லஞ்சம் உருவாகக் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். அதைவிட முக்கியக் காரணம் அதிகாரிகள்தான். அரசு தவறு செய்யும்போது, அதை உணர்த்தி நல்ல வழியில் செலுத்த வேண்டிய கடமை, அதிகாரிகளுக்கு இருக்கிறது. கட்சியினர் தவறு செய்தாலும், அது அதிகாரிகள் மீதே விழும். அதைப்பற்றிக் கவலைப்படாமல், தனக்குப் பங்கு வந்தால் போதும் என்று அரசியல்வாதிகளைத் தவறான வழிக்கு சில அதிகாரிகளே அழைத்துச் செல்கிறார்கள். விவரம் தெரியாமல் பதவிக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எங்கெல்லாம் மாமூல் ஊற்று சுரக்கும் என்று காட்டுவதே பங்குக்கு ஆசைப்படும்
அதிகாரிகள்தான்!

சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதில் இருந்து கடை உரிமையாளர்கள் எப்படி எல்லாம் தப்பிக்கலாம் என்பதை அதிகாரிகளே சொல்லித் தருகிறார்கள். இவர்களைத் திருத்தாமல், ஊழலை எப்படி ஒழிக்க முடியும்? அதிலும் காவல் துறை இருக்கிறதே..!

நான் ஏதோ ஒரு பெண்மணியை மிரட்டிய தாகவும் அவரைப்பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருக்க லஞ்சம் கேட்டதாகவும், என் மீது வழக்கு போட்டார்கள். அதற்காக, சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு நான் அழைத்து விசாரிக்கப்பட்டேன். அது பொய்யான புகார் என்று போலீஸ்காரர்கள் அத்தனை பேரின் மனசாட்சிக்கும் தெரியும். அந்த சமயம் ஒரு போலீஸ்காரர், 'பொதுமக்கள் லஞ்சம் கொடுத்துப் பழகிவிட்டார்கள். நாங்கள் வாங்கிப் பழகிவிட் டோம்' என்றார். தமிழகத்தின் இன்றைய மனநிலையே இதுதான்!

லஞ்ச ஒழிப்புத் துறையிலேகூட ஓர் அதிகாரி சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாகச் செய்திகள் வந்தன. லஞ்சத்தை ஒழித்தாக வேண்டும் என்ற உண்மை யான எண்ணம் இவர்களுக்கே இல்லை என்றால்..? ஊழல் செய்தவர்கள் தப்பிக்க வழி செய்து தருவதற் கும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திலேயே ஆட்கள் இருக்கிறார்கள்!
அதேபோல, 'லஞ்சத்தை ஒழிக்கிறேன்... விழிப்பு உணர்வு ஊட்டுகிறேன்...' என்று பல தன்னார்வ நிறுவனங்கள் முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சில அமைப்புகள், விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், தவறு செய்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு... அவர்களைமீடியாக்களிடமும் சட்டத்தின் முன்பும் அம்பலப்படுத்துவதாக மிரட்டியே பணம் கறக்கின்றன. ஊழலை செய்வதற்கு இந்த 'தன்னார்வ' முகமே இதுபோன்ற சிலருக்கு கவசமாக அமைந்துவிடுகிறது.
ஊழலை அரசாங்கம் ஒழிக்கும் என்று எதிர் பார்ப்பதில் இப்போதைக்கு அர்த்தமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் துணிச்சலோடு கையில் எடுக்க வேண்டிய காரியம் இது. இந்த நோக்கத்தோடுதான் நான் குடும்பத்தைவிட்டே வெளியே வந்தேன். தவறு எங்கு நடந்தாலும், அதைத் தட்டிக்கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மிரட்டல்கள் வருவது என் வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது! இறப்பு என்பது இருக்கிறது என்று தெரிந்துவிட்டால்... துணிச்சல் தானாகப் பிறந்துவிடும்.

மாளிகைக்குள் இருப்பவர்களுக்கு, அவர்களின் பதவியும் செல்வமும் கமாண்டோ வசதி பெற்றுக் கொடுக்கிறது. அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு கட்சி அல்லது இயக்கத்திலிருந்துதான் மிரட்டல்கள் வரும். எனக்கோ அனைத்துக் கட்சியினரும் எதிரிகள்தான். இருந்தும், நான் சுதந்திரமாகவே நடமாடுகிறேன்.

சட்டத்தை நான் குறை சொல்ல மாட்டேன். சட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. அதைக் கையாளும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும்தான் கோளாறு! அவர்களிடம் தங்களின் அவசரத்துக்காக, 'கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க.' என்று தானாகவே முன்வந்து அன்பளிப்பு தருவதை மக்கள் எப்போது நிறுத்துகிறார்களோ, அப்போதுதான் லஞ்சத்தை ஒழிப்பதற்கான முதல் அடியை நாம் எடுத்து வைத்ததாகச் சொல்வேன்!

அப்படியிருக்க, யாருமே தங்களை சரிப்படுத்திக் கொள்ளாத வரையில் லஞ்ச ஒழிப்பு வாரம் கொண்டாடு வது என்பது சோகமான ஒரு காமெடிதான்!

சட்டத்தை முழுமையாக மதிப்பவராக நீங்கள் இருந்தால்... சென்னை நகரத்தில் சாலையில் எங்கேனும் எந்தக் காவலராவது நிறுத்தி லஞ்சம் கேட்கும்போது, 'டிராஃபிக் ராமசாமி' என்று என் பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்கள் நகர்ந்து நிற்பார்கள். அப்படி உங்கள் ஒவ்வொருவரின் பெயரும் தவறு செய்பவர்களை விலகிச் செல்ல வைக்கும் வரை... லஞ்சத்தை ஒழிக்க முடியாது!
Source - vikatan
சந்திப்பு: ந.வினோத் குமார்