திருக்குறள்

பத்து முத்துக்கள்...


அவனன்றி...
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்.


காது கொடு!
உங்கள் வாயினால் பெறுவதை விட அதிக நண்பர்களை உங்கள் காதுகளால் பெற முடியும்.


அதே தப்பு!
முழு முட்டாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகையில், அவரும் அதே தப்பைச் செய்யாமல் இருக்கிறாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


அந்தக் கேள்வி!
துன்பங்கள் நம்மைச் சூழும்போது, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று கேட்பதற்கு நமக்கு அருகதை இல்லை இன்பங்கள் சூழும்போதும் அப்படிக் கேட்காதவரை!


அம்பு அல்ல; அன்பு!
'உண்மை' என்கிற அம்பையே எய்தாலும், அதன் முனையை 'கனிவு' என்னும் தேனில் தோய்த்துக் கொள்ளுங்கள்.


வாழ்க்கை
குழந்தைகளுக்கு நாம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறோம்; அவர்கள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறார்கள்.


மாறும் இலக்கணம்
வெற்றி மற்றவர்கள் பெற்றால் அதிர்ஷ்டம்; நாம் பெற்றால், அது நம் திறமை!


தூய்மை
உடம்புக்கு சோப்பு; ஆன்மாவுக்குக் கண்ணீர்!


எல்லாம் நேரம்!
உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவன், நோய்க்கு நேரம் ஒதுக்குகிறான்.


நாக்கு அவுட்!
நாம் யாரைப் பெரிதும் நேசிக்கிறோமோ, பெரும்பாலும் அவரைத்தான் அடிக்கடி காயப்படுத்தி விடுகிறோம். பல் நாக்கைத்தானே கடிக்கிறது


'ஷெல்லி' ராணி

அவள் விகடன்

படித்ததில் பிடித்தது....





















நோன்பின் மாண்பு !


''மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இது மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் பார்த்து கூறுகிறார்.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க மாதம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் ரமளான் மாதம். இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் முப்பது நாள் நோன்பு வைப்பதும், ஜகாத் (மார்க்க வரி) கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்குமான கட்டாய கடமையாகும்.

நோன்பு இருப்பதால் ஒரு மனிதனுக்கு அவனது மன இச்சைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற திறன் வளர்வதோடு, பசித்திருந்து வறுமையில் இருப்போருடைய சிரமத்தை உணர்கிற வாய்ப்பும் உண்டாகிறது. தன் சகோதரன் பட்டினி யுடன் இருக்கும்போது, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்தளிக்கிற பண்பு கூடுகிறது.

ஒருசமயம் ஸஹாபி (நபித்தோழர்) ஒருவர், தன் வீட்டுக்கு வறுமையில் வாடும் நோன்பாளி ஒருவரை நோன்பு திறக்க அழைத்து வந்தார். தன் மனைவியிடம், ''இவர் நபிகள் நாயகத்தின் விருந்தாளி. இவருக்கு எந்தக் குறையும் வந்து விடாமல் மரியாதையுடன் நடத்த வேண்டும்'' என்றார்

இதைக் கேட்ட ஸஹாபியின் மனைவி, ''வீட்டில் எதுவும் இல்லையே.. நம் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக சிறிதளவு உணவு மட்டும்தான் இருக்கிறது.. என்ன செய்வது?'' என்று பதற்றமானார். உடனே அந்த ஸஹாபி, ''குழந்தைகளை தந்திரமாக தூங்க வைத்து விடு. உணவை எடுத்து வைத்ததும், நீ எழுந்து சென்று விளக்கைச் சரி செய்வது போல அதனை அணைத்து விடு'' என்றார்.

விருந்தாளி வந்ததும், எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்தனர். விளக்கும் அணைந்தது. இருந்த உணவை விருந்தாளிக்கு வைத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவது போல் பாவனை செய்தனர். திருப்திகரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தார் விருந்தாளி.

தன் குடும்பம் பட்டினி கிடந்தாலும், அல்லாஹ் உடைய நோன்பாளிக்கு உணவளிப்பதையே பெரிதாகக் கருதினார் அந்த நபித்தோழர்.

நெருப்பில் சூடாக்கப்படும் இரும்பு சுத்தமாவது போல, நோன்பும் மனிதனை சுத்தமாக்குகிறது.

சுத்தமான இதயத்துடன் கொண்டாடுவோம் இந்த ரமளானை!

- தஸ்மிலா அஸ்கர்
அவள் விகடன்

''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்!''

புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது। மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.

அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை। அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.

ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித் தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.
''பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன்। வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.


அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான்। பட்டினத்தார் சமாதியில் போய் உட் கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்க மும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித் தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்டமாருதம் பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக் கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''

இன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது?''

''டைரக்டர் ராம்நாத்। அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு!''

'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம்! திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.
''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது। கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட் டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது? அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோ ரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதி தாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான்.''

கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலை யிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லறஜோதி'.
1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.

அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார்। சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலை யிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.

''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!'' என்கிறார் கண்ணதாசன்.

இவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா!'
ஆனந்தவிகடன்
30.05.1965

தலித் பிரம்மாக்கள்...

''பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார்। அப்போது நான் செதுக்கிக்கொண்டு இருந்த விநாயகர் சிலை யைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட் டார்। 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக்கொண்டார்!''- தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை!

இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன்। சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டுகின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித்தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல்! இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்துகொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள்। சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள்! தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணிலடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண்டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தியாசமான 'பறையடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.

''அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலாசாரத்தையும் பிரதிபலிக்க வேண்டும் இல்லையா? அதற்காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை! பதின்மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன்। வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம்மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உருவாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா? பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? மூலவர் சிலைகளையே தலித்துக்களைக்கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன்। சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததை விடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா?' என்று கேள்வி எழுப்பியவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம்மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென்றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள்। நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலைக்குடிகளின் கரங்களிலிருந்து தப்ப முடியுமா? எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமிமலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும்தான் உருவாக்கினோம். அதன்பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட்டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பிவந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடிவந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தினோம்.

அவ்வளவு ஏன்॥? காஞ்சி சங்கரமடத்தில் உள்ள காமாட்சி அம்மனின் அவதாரமாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்'' என்கிற ராஜனும், அவரது மாணவர்களும் இதுவரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்

சுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன்। அதை வாங்கியவர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்துவிரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். ''அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை'' எனும் ராஜன் சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்துகொள்ளவில்லை.

ராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், ''ஒளிவுமறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயாதான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்। வருமானம், வெளிநாட்டுக்காரர்களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள்கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்.'' ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கி யபடியே பேசுகிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது!

- ஆனந்த விகடன்