kalaignar

கலைஞரை இருமுறை நான் விட்டு விலகியிருக்கிறேன். முதல்முறை விலகும்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். இரண்டாம் முறை விலகும்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

அதாவது மைனராக இருக்கும்போது ஒருமுறையும், மேஜரான பிறகு ஒருமுறையும் அவரைவிட்டு விலகியிருக்கிறேன்.

1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து எம்ஜியார் விலகும்போது கலைஞர் மீது எனக்கு வெறுப்பு வந்தது. அது சினிமா பார்க்கும் வயது. திமுக குடும்பமாக இருந்தாலும், கலைஞர் தனது மூத்தமகன் மு.க.முத்துவை சினிமாவில் அறிமுகப்படுத்தி, அதன்மூலம் எம்ஜியாரை கலைஞர் ஒழிக்கப் பார்க்கிறார் என்ற பிரச்சாரத்தை நான் நம்பிவிட்டேன்.

ஆனால், சில நாட்களில் ஒரு மலையாளி டீக்கடையில் அவருடைய மகன் என்னைக்காட்டிலும் சின்னப்பையன், கலைஞர் படத்தை காலில் போட்டு மிதித்ததை பார்த்து எனது அப்பா கொதித்தார். அந்த டீக்கடைக்காரர் பயந்துபோனார். தனது மகனை கண்டித்தார். இருந்தாலும் அது எனது மனதுக்குள் பதிந்தது.

பின்னர், எம்ஜியார் கட்சியினர் ஆடிய ஆட்டம், அதற்கு திமுகவினர் கொடுத்த பதிலடி எல்லாம் கேட்க நேர்ந்தது. துக்ளக் பத்திரிகையில் எம்ஜியாரை கடுமையாக கிண்டலடிப்பார் சோ. இதெல்லாம் எனக்கு எம்ஜியார் திமுகவை எதற்காக உடைத்தார் என்ற விவரத்தை புரியவைத்தன.

மிகக்குறிப்பாக, திமுகவை உடைக்க மத்திய காங்கிரஸ் அரசு ஏன் விரும்பியது. அதற்காக எம்ஜியாரை அச்சுறுத்த என்ன செய்தது என்பதெல்லாம் தெரிந்தபோது நான் கலைஞரிடமே திரும்பவும் வந்தேன். அப்போதெல்லாம் கலைஞரின் நிர்வாகத் திறமை, கட்சியை அவர் வழிநடத்தும் ஆற்றல் இதெல்லாம் எனக்கு தெரியாது.

மதுரையில் பியுசி சேர்ந்த மாதத்தில் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. அதுபற்றிய அறிவிப்பே பரபரப்பான செய்தியாக வெளிவந்தது.  நான் எனது அத்தை வீட்டிலிருந்து கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தேன்.

எமெர்ஜென்சியின் தாக்கம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், எமெர்ஜென்சியை எதிர்த்து திமுக அரசு கடுமையாக போராடிய செய்திகள் கிடைத்தன. திமுகவை எதிர்க்கிற கட்சிகளுக்கு எந்த கட்டுப்பாடையும் கலைஞர் விதிக்கவில்லை. இந்திரா அறிவித்த 20 அம்சத் திட்டம் குறித்து ரேடியோவில் எந்நேரமும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

எனது சித்தப்பா திமுகவின் அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளராக இருந்ததால் நெருக்கடி நிலை குறித்த திமுகவின் பிரசுரங்கள் படிக்கக் கிடைக்கும். வடக்கே இந்திராவின் இளைய மகன் சஞ்சய்காந்தி ஆடிய ஆட்டமெல்லாம் தெரியவந்தது.

பிரதமர் இந்திரா அறிவித்த 20 அம்ச திட்டங்களை வரிசைப்படுத்தி, அவை அனைத்தும் தமிழகத்தில் ஏற்கெனவே திமுக அரசு நிறைவேற்றி இருப்பதை கலைஞர் சட்டமன்றத்தில் விரிவாக பேசினார். அந்த பேச்சு வாளும் கேடயமும் என்ற தலைப்பில் பிரசுரமாக வந்தது. அது ஒரு அருமையான பேச்சு.

கலைஞரின் கடிதங்கள் மட்டுமல்ல, மேடைப்பேச்சு மட்டுமல்ல, சட்டமன்ற உரையும்கூட படித்து ரசிக்கும்படி இருக்கும். அதுபோல தமிழக முதல்வர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா? என்றால், இல்லை என்றுதான் சொல்வேன்.

எம்ஜியார் ஆட்சியில் கவிஞர் கண்ணதாசனை ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டார். கலைஞர் ஆட்சியில் ஏன் இதுபோல ஆஸ்தான கவிஞர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதுகுறித்து ஆசிரியர் சாவியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாவி, ஆஸ்தானமே கவிஞராக இருப்பதால் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என்று கூறினார்.

பல்துறை வித்தகர் ஒருவர் முதல்வராக இருப்பதை நான் உணரத்தொடங்கிய சமயத்தில்தான், 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திமுக ஆட்சியை இந்திரா கலைத்தார். அதாவது பதவிக்காலம் முடிவதற்கு 6 வாரங்களே இருக்கும் நிலையில் கலைக்கப்பட்டது.

கலைஞரின் வரலாற்றிலும், திமுகவின் வரலாற்றிலும் இந்தக் காலகட்டம்தான் மிக முக்கியமானது. ஆம், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட விவரம்கூட மிகத் தாமதமாகவே உறவினர்களுக்கு தெரியவந்தது.

கலைஞரின் மகன் ஸ்டாலின், மருமகன் முரசொலிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். சிறையில் நடக்கும் சித்திரவதைகள்கூட செய்தியாக முடியாத அளவுக்கு பத்திரிகை தணிக்கைத்துறை அமலில் இருந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து எனக்குத் தெரிந்து பூடகமாகவாவது செய்திகளை வெளிப்படுத்த போராடிய பத்திரிகைகள் முரசொலி, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் ஆகியவைதான்.

திமுக சார்பில் ரகசியத் துண்டறிக்கைகள் எங்களுக்கு கிடைக்கும். அவற்றை திமுக கிளைகளுக்கு கொடுக்கும் வேலையை நான் செய்திருக்கிறேன். திமுக கரை வேட்டி கட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள் என்று பீதி கிளப்பப்பட்ட சமயத்தில் நான் கல்லூரிக்கு எனது சித்தப்பாவின் திமுக கரை வேட்டியை கட்டிச் சென்றிருக்கிறேன். அதெல்லாம் ஒரு தில்லான காலம். திமுகவினர் அப்படித்தான் இருந்தார்கள்.

எமர்ஜென்சி கட்டுப்பாடுகளை எப்படி சிக்கிக்கொள்ளாமல் மீறுவது, திமுகவினரை எப்படி சோர்ந்துபோகாமல் உற்சாகப்படுத்துவது என்ற வித்தையை, கலைஞர் பயன்படுத்திய விதம் நவீன ராஜதந்திரங்களின் உச்சமாகக் கருதப்படுகிறது.
kalaignar

இப்படியெல்லாம் கடந்தகால வரலாற்றில் எதுவுமே இடம்பெறவில்லை. திருமண வீடுகளை, பூப்புனித நீராட்டு விழா நடக்கும் வீடுகளை, புதுமனை புகுவிழாக்களை கட்சிக்கூட்டங்களாக நடத்தி கலைஞர் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். அவரை சட்டம் கட்டுப்படுத்த முடியவில்லை.

திருமணம் முடிந்தவர்களுக்கு, கலைஞருக்காக மீண்டும் திருமணம் நடத்தப்படுவதும், பழைய வீட்டை மராமத்து பார்த்து பெயிண்ட் அடித்து புதுமனை புகுவிழாவாக்குவதும் ரொம்ப ஜாலியாக இருக்கும். கலைஞருக்கு தினமும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிகழ்ச்சிகள் இருக்கும்.

ஒரு நகரில் அனைத்துப் பகுதிகளையும் கவர்பண்ற அளவுக்கு எல்லாப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கலைஞர் பின்னால் இளைஞர்கள் சுற்றித் திரிவார்கள். அவரும் தனது உரைகளை அவ்வளவு லாவகமாக அமைத்து நாட்டு நடப்புகளை இலக்கிய கதைகளையும், வரலாற்று சம்பவங்களையும் பயன்படுத்தி ரசிக்க வைப்பார்.

அவருடைய உரைகளும் கடிதங்களும் முரசொலியில் வரும்போது படிக்கவே உற்சாகமாக இருக்கும். அந்தச் சமயத்தில்தான் கலைஞர் எனக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். நானும் ஒரு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் உதித்தது.

அதன்பிறகு, எம்ஜியார் ஆட்சி, அதை வீழ்த்த கலைஞர் வகுத்த வியூகங்கள், அந்த வியூகங்களையும், கலைஞர் மற்றும் திமுகவினரின் உழைப்பை வீணடிக்கும் வகையில், அதிமுகவுக்கு வாய்த்த அனுதாப வாய்ப்புகள், கூட்டணி பலம் எல்லாம் என்னைப் போன்றோரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தோல்விகளும் அவற்றை கலைஞர் எதிர்கொண்ட விதமும் புதிய பாடங்களைக் கற்றுக் கொடுக்கவே பயன்பட்டது.

1989 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்த சமயத்தில்தான் அவர் எவ்வளவு பெரிய நிர்வாகி என்பதை அறிய முடிந்தது. எம்ஜியாரால் செய்ய முடியாத விவசாயத்திற்கு இலவச மின்சாரம் திட்டத்தை அமல்படுத்தியது, எம்ஜியார் சிந்தித்தே பார்க்காத வகையில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட நலத்திட்டங்களை மிக எளிதாக அமல்படுத்தினார். தொலைநோக்குத் திட்டங்கள் என்றால் என்னவென்று கலைஞர் ஆட்சியில்தான் தெரிந்துகொண்டேன்.

1991ல் கலைஞர் ஆட்சியை எவ்வித காரணமும் இல்லாமல் ஆர்.வெங்கட்ராமன் என்ற பார்ப்பன குடியரசுத்தலைவர் கலைத்தபோதுதான், கலைஞரை ஏன் இப்படி சுழற்றி அடிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். 1991ல் ராஜிவ் காந்தி தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டபோது, இரவோடு இரவாக திமுகவினர் ஏன் வேட்டையாடப்பட்டார்கள் என்பதற்கும் காரணம் புரிந்தது.

இந்தக் காலகட்டத்தில்தான் திமுகவை பிளக்கும் இரண்டாவது சதி அரங்கேறியது. இப்போது, திமுகவில் ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாக ஒரு முழக்கத்தை எழுப்பி அந்தப் பிளவு அரங்கேற்றப்பட்டது. இந்த சதிக்கு பெரும்பாலும் துடிப்பான கட்சிக்காரர்கள் இரையானார்கள். நானும் ஒருவனாக இருந்தேன்.

அந்தப் பிளவின் சூத்திரதாரியை அவ்வளவு பேர் நேசித்தார்கள். ஆனால், அவருடன் சென்றவர்கள் பெரும்பாலோர் மீண்டும் திமுகவுக்கே திரும்பிவிட்டார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தபோது நானும் அவரை விட்டு விலகிவிட்டேன். பின்னர் சில ஆண்டுகள் தீக்கதிரில் பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்திலும் கலைஞரை நேசிப்பவனாகவே இருந்தேன்.

இரண்டு மிகப்பெரிய பிளவுகளை தனி ஆளாக, தனது வியூகங்களைப் பயன்படுத்தி எதிர்கொண்டவர் கலைஞர். திமுக மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் என்று நிரூபித்தவர்.

அவர் அரசியலில் தீவிரப் பங்குகொள்ள முடியாத நிலையிலும் இன்றைக்கும் அவருடைய தலைமையிலேயே திமுக இயங்குகிறது. திமுகவுக்கு எதிராக பல சமயங்களில் செயல்பட்டவர்கள்கூட இன்றைக்கு திமுகவின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். பிரிந்து சென்ற வைகோவே இன்றைக்கு திராவிட இயக்கத்தைக் காப்பாற்ற திமுகவை ஆதரிப்பதாக பிரகடனம் செய்திருக்கிறார் என்றால் அதுதான் கலைஞரின் வலிமை. அவருடைய பெருமை!

காலம் கடந்தும் வரலாறு பேசும் தலைவர் கலைஞர் கிரேட்தான்!