திருக்குறள்

நோன்பின் மாண்பு !


''மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இது மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் பார்த்து கூறுகிறார்.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க மாதம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் ரமளான் மாதம். இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் முப்பது நாள் நோன்பு வைப்பதும், ஜகாத் (மார்க்க வரி) கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்குமான கட்டாய கடமையாகும்.

நோன்பு இருப்பதால் ஒரு மனிதனுக்கு அவனது மன இச்சைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற திறன் வளர்வதோடு, பசித்திருந்து வறுமையில் இருப்போருடைய சிரமத்தை உணர்கிற வாய்ப்பும் உண்டாகிறது. தன் சகோதரன் பட்டினி யுடன் இருக்கும்போது, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்தளிக்கிற பண்பு கூடுகிறது.

ஒருசமயம் ஸஹாபி (நபித்தோழர்) ஒருவர், தன் வீட்டுக்கு வறுமையில் வாடும் நோன்பாளி ஒருவரை நோன்பு திறக்க அழைத்து வந்தார். தன் மனைவியிடம், ''இவர் நபிகள் நாயகத்தின் விருந்தாளி. இவருக்கு எந்தக் குறையும் வந்து விடாமல் மரியாதையுடன் நடத்த வேண்டும்'' என்றார்

இதைக் கேட்ட ஸஹாபியின் மனைவி, ''வீட்டில் எதுவும் இல்லையே.. நம் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக சிறிதளவு உணவு மட்டும்தான் இருக்கிறது.. என்ன செய்வது?'' என்று பதற்றமானார். உடனே அந்த ஸஹாபி, ''குழந்தைகளை தந்திரமாக தூங்க வைத்து விடு. உணவை எடுத்து வைத்ததும், நீ எழுந்து சென்று விளக்கைச் சரி செய்வது போல அதனை அணைத்து விடு'' என்றார்.

விருந்தாளி வந்ததும், எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்தனர். விளக்கும் அணைந்தது. இருந்த உணவை விருந்தாளிக்கு வைத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவது போல் பாவனை செய்தனர். திருப்திகரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தார் விருந்தாளி.

தன் குடும்பம் பட்டினி கிடந்தாலும், அல்லாஹ் உடைய நோன்பாளிக்கு உணவளிப்பதையே பெரிதாகக் கருதினார் அந்த நபித்தோழர்.

நெருப்பில் சூடாக்கப்படும் இரும்பு சுத்தமாவது போல, நோன்பும் மனிதனை சுத்தமாக்குகிறது.

சுத்தமான இதயத்துடன் கொண்டாடுவோம் இந்த ரமளானை!

- தஸ்மிலா அஸ்கர்
அவள் விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற