திருக்குறள்

துடிக்கும் தொண்டனின் இதயம்!

''தி.மு.க. என்பது மூளையால் வளர்ந்த கட்சி... அ.தி.மு.க. இதயத்தால் வளர்ந்த கட்சி! தி.மு.க-வின் தொண்டனுக்கு யோசிக்கக் கற்றுக் கொடுத்தே அந்தக் கட்சியை வளர்த்தார்கள் அதன் தலைவர்கள். எம்.ஜி.ஆரோ, தன்னை நேசிக்கக் கற்றுக் கொடுத்தே படை திரட்டினார்!'' என்று அடிக்கடி சொல்வார் ஒரு திராவிட இயக்க மூத்த தலைவர். அதையே இன்னும் விளக்கமாக,

''தி.மு.க. அறிவால் செழித்த கட்சி. அ.தி.மு.க. என்பது அன்பால் முகிழ்த்த கட்சி'' என்றும் சொல்வார் அவர்!

தி.மு.க. கழகத்தின் தலைமையை உணர்ச்சிப் பெருக்கோடு குற்றம் சாட்டிவிட்டு, தனிக் கட்சி கண்ட எம்.ஜி.ஆர்., தான் இருந்தவரையில் ஒட்டுமொத்தத் தொண்டர்களையும் தன் அன்புப் பிடிக்குள் அசை யாமல் வைத்திருந்தார். அதனால்தான் போட்டியிட்ட திண்டுக்கல் எம்.பி. தொகுதி முதல் இடைத் தேர்தலிலேயே சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது அந்தக் கட்சி!

இன்றைக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டைப் பறிகொடுத்து
தலைகுனிந்து நிற்பதும் அதே சாதனைக் கட்சிதான்! 'பென்னாகரம் தொகுதியில் தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மாபெரும் தோல்வி' என்ற அறிக்கையால் இந்தத் தோல்வியை நியாயப்படுத்தி, நிம்மதியாகிவிட்டார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா. ஆனால், தொண்டனின் இதயம் நிம்மதியை மொத்தமாக இழந்துபோனது. ஈரோட்டில் ஒரு தொண்டன் தீக்குளித்திருக்கிறான். இன்னும் எத்தனையோ தொண்டர்களின் இதயத்துக்குள் எரிந்துகொண்டே இருக்கிறது அவநம்பிக்கை நெருப்பு!

டெபாசிட் இழப்பது என்பது அ.தி.மு.க-வின் வரலாற்றில் இதுவரை ஐந்தாறு தொகுதிகளில்தான் நடந்திருக்கிறது. அதுவும் ஒட்டுமொத்தத் தொகுதிகளையும் தலைவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கவனிக்கவேண்டிய பொதுத் தேர்தல்களின்போது!

எம்.ஜி.ஆர். காலத்தில் கிள்ளியூர், ஒசூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. துடித்துப் போனார் எம்.ஜி.ஆர். 'ஏன் இப்படி நடந்தது?' என்று பல மணி நேரம் செலவிட்டு விசாரணை நடத்தினார். 'வேட்பாளர் தேர்வு தவறாகிவிட்டது' என்று சக தலைவர்கள் எத்தனையோ ஆறுதல் சொல்லியும், அவர் மனது அடங்கவில்லை என்பார்கள்.

2006-ல் மைனாரிட்டி பலத்தோடு தி.மு.க. அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் கம்பம், தொண்டாமுத்தூர் உட்பட ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடவே இல்லை.

அப்போதுதான் அக்கட்சியின் தொண்டர்களில் பலருக்கும் வருத்தமும் அச்சமும் மேலிட ஆரம்பித்தது. காரணம், தங்களையெல்லாம் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் அன்பெனும் பட்டு நூல் அறுந்துகொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இருந்தாலும் தேர்தலில் இருந்து விலகியதற்கு அவர்களே வெவ்வேறு காரணங்களைக் கற்பித்துத் தங்களைத் தேற்றிக் கொண்டார்கள்.

ஆனால், பென்னாகரம் நிலைமை அதுவல்ல! கட்சிக்குள் இருந்த குடும்பப் பாச உணர்வெல்லாம் மெள்ள மெள்ள நைந்துபோய், ஆளுங்கட்சியின் அசுரவேக முன்னேற்றமும்... அதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய தங்கள் தலைவியின் துப்புரவான பாராமுகமும்... இதனால் கட்சித் தளபதிகளைத் தாக்கிவிட்ட கடும் சோர்வும் சேர்ந்துதான் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

வறண்ட அவர்கள் மனதோ பசுமையைத் தேடி பின்னோக்கி ஓடுகிறது...

1980-ம் வருடம் அ.தி.மு.க. ஆட்சி பிரதமர் இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது. அப்போது வந்த தேர்தலில் மாபெரும் கூட்டணியாய் காங்கிரஸும் தி.மு.க-வும் இணைந்து மிரட்ட... எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றினார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் அசுர பலத்தையும் தாண்டி 129 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நாட்கள் அ.தி.மு.க. தொண்டனின் இதயத்தில் ஏக்கத்தோடு இப்போது நிழலாடுகிறது. 84-ம் வருட தேர்தலின்போது கடுமையான உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதும்கூட, அவர் படத்தையே தமிழகம் முழுவதும் காட்டி வெற்றிக் கொடியை நாட்டிய பெருமித உணர்வு இன்னும்கூட அந்தத் தொண்டனை விட்டு அகலவில்லை.

அதேபோல, ஜெ. என்றும் ஜா. என்றும் கட்சி இரண்டாக உடைந்து... மீண்டும் ஜெயலலிதா தலைமையில் இணைந்து... இரட்டை இலை சின்னத்தை மீட்டு... 91-ல் மறுபடி ஆட்சியைக் கைப்பற்றிய சமயத்தில், 'எங்கள் தலைவருக்கு மறைவேயில்லை. புரட்சித் தலைவியின் உருவில் அவர் என்றும் வாழ்கிறார்' என்று விண்ணதிர கோஷமிட்ட அதே தொண்டன்தான், 'என்ன ஆனது என் தலைவிக்கு?' என்று விக்கித்துப் போய் உட்கார்ந்திருக்கிறான்:

1996 தேர்தலில் தோற்ற பிறகு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டும் கலங்காமல் வெளியில் வந்து, கர்ஜனையோடு கருணாநிதியை எதிர்கொண்ட தங்கள் தலைவிக்கு, அப்போதெல்லாம் வராத சோர்வு, எந்தவித அடக்குமுறைகளுமே தங்களுக்கு எதிராக இல்லாத இந்த சமயத்தில் ஏன் வந்தது என்ற அவனுடைய கேள்வி அர்த்தமுள்ளது! 'மைனாரிட்டி தி.மு.க' என்று வார்த்தைக்கு வார்த்தை ஆளுங்கட்சியை தங்கள் தலைவி வர்ணித்தபோது, உற்சாகத்தோடு முறுவல் பூத்த காலம் போய், 'டெபாசிட் இல்லாத அ.தி.மு.க.' என்ற ஏளனப் பேச்சுக்கு ஆளாகிவிட்டதை எண்ணி மருகி நிற்கிறான் அந்தத் தொண்டன்!

''ஒரு தகவல் தெரியுமா சார் உங்களுக்கு? தமிழகத்தி லேயே எம்.ஜி.ஆர். சிலைகள் நிறைய இருக்கறது பென்னாகரத்தில்தான். அந்தளவுக்கு அந்த மக்கள் புரட்சித் தலைவர் மேல வெறியா இருக்கறவங்க. அப்படிப்பட்ட தொகுதியில இந்த கதின்னா எங்கே நடந்திருக்கு தவறு? அரசு இயந்திரத்தையும், பணத்தையும், பிரியாணியையும் காட்டித்தான் தி.மு.க. இத்தனை ஓட்டுகளை வாங்கி ஜெயித்தது என்று சொல்லி எங்கள் கட்சித் தொண்டனை சமாதானப்படுத்த முடியலை. 'அப்படியே பார்த்தாலும், பா.ம.க. எப்படி ரெண்டாம் இடத்துக்கு வந்தது. காசு பணத்துக்கு மயங்காத மக்கள் கூடவா நமக்கு ஓட்டுப் போட முன்வரலை'னு எதிர் லாஜிக் பேசுறான் எங்க தொண்டன்...'' என்று உதடு துடிக்கச் சொல்கிறார், அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர்.

''சசிகலா குடும்பத்துக்கு தேவையில்லாம முக்கியத்துவம் கொடுக்குறாங்கனு சொல்லித்தான் மக்கள் ஏற்கெனவே ஆட்சியை விட்டு இறக்கினாங்க. ஆனா, இப்படி டெபாசிட்டே போகிற அளவுக்கான நிலைமை வருவதற்கு, சசிகலா குடும்பத்தின் தலையீடுகளை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு தெரிஞ்சே பொறுப்புகள் கொடுத்து, கட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆக்கியது மட்டுமே இந்த சறுக்கலுக்குக் காரணமில்லை. தொண்டனுக்கும் தனக்குமான இடைவெளியை தானாகவே அதிகப்படுத்திக்கிட்டாங்க அம்மா. அதுதான் முக்கியக் காரணம்!'' என்று குமுறுகிறார் இன்னொரு தலைவர்.

''தள்ளாத வயதிலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தினம் ஒரு மணி நேரமாவது அறிவாலயத்துல உட்கார்ந்து கடைநிலை தொண்டனின் பிரச்னை வரை காதில் வாங்குறாரு கருணாநிதி. அம்மாவோ கட்சி ஆபீஸுக்கு வர்றதே ஒரு அதிசயத் திருவிழாவா ஆகிப்போச்சு. இதோட, கட்சிக்கு அடிக்கடி லீவு விட்டுட்டு கொடநாட்டுக்கு போயிடுறாங்க. எதிர்க்கட்சியா இருந்து செய்ய வேண்டியதை எல்லாம் அறிக்கைகள் மூலமாகவே சாதிச்சிடலாம்னு நினைச்சிட்டாங்க. ஓ.பி.எஸ்., மதுசூதனன், செங்கோட்டையன் மாதிரியான முக்கியஸ்தர்கள்கூட, மிக அவசரமான முடிவுகளை எடுப்பதற்காக அம்மாவை சந்திக்க முடியாதபோது கட்சி எப்படி உயிரோட்டத்தோடு இருக்க முடியும்?'' சீனி பட்டாசு போல வெடிக்கிறார் இன்னொரு சீனியர்.

இன்னும் சிலரோ அம்மாவிடம் நேரிலேயே பேசுவதுபோல் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். ''புதிய சட்டசபை திறப்பு விழாவுல கலந்துக்கக் கூடாதுங்குறதுக்காகத்தான் நீங்க கொடநாடு போனீங்க. இதுதான் நீங்க செஞ்ச பெரிய தவறு. சட்டசபை திறப்பு விழாவுக்கு போயிருந்தா ஒட்டுமொத்த மீடியோவோட பார்வையும் உங்க மேலதான் இருந்திருக்கும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூப்பிட்ட நாகரிகத்துக்கு போனாங்கன்ணு மக்கள் மத்தியிலும் ஒரு இமேஜ் வந்திருக்கும். இதையெல்லாம் உங்களுக்கு யாரு எடுத்துச் சொல்றது? நடக்கக்கூட முடியாத நிலையிலும் பென்னாகரத்துக்கு வந்து கருணாநிதி மேடையில் ஏறி பேசிட்டு போறாரு. நீங்க டெம்போ டிராவலர்ல கண்ணாடியைக்கூட இறக்காம போறீங்க? பென்னாகரம் வந்தப்பவாவது தேர்தல் பொறுப்பாளர் தம்பிதுரையைக் கூப்பிட்டு பேசினீங்களா? வேட்பாளரிடம் பேசினீங்களா? உங்க முகத்தைப் பார்த்ததும் அப்படியே ஓடிவந்து ஓட்டுப் போடுறதுக்கு இது எம்.ஜி.ஆர். காலம் இல்லை. வீட்டுக்குள்ளே டி.வி. வச்சிக்கிட்டு உலகத்தையே மடியில் உருட்டிப் பார்க்கிற விவரமான ஜனங்களின் காலம்! எம்.ஜி.ஆர். விதைச்சுட்டுப் போன அன்பு என்கிற பயிரை, திரும்பத் திரும்ப நேரில் வந்து நீர் வார்த்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்!'' என்றவர்கள் தொடர்ந்து...

''தினந்தோறும் தொகுதிக்குள் சுற்றி வருகிற அனுபவசாலிகள் கருத்துக்கு கொஞ்சமாவது காது கொடுத்திருக்கணும், அம்மா! இடைத்தேர்தல் அறிவிச்சதும் பென்னாகரத்தோட நிலவரத்தை தெரிஞ்சு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிச்சிருக்கணும். அது வன்னிய செல்வாக்குமிக்க தொகுதிங்கிறதால எல்லா கட்சியிலயுமே வன்னிய நிர்வாகிகளைப் பொறுப்பாளரா போட்டாங்க. ஆனா, நீங்க கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தம்பிதுரையை தேர்தல் பொறுப்பாளரா போட்டீங்க. அதே மாவட்டத்துல இருந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனைக் கண்டுக்கக்கூட இல்ல. உங்களால கட்சியைவிட்டுப் போன செல்வகணபதியை முன்னிறுத்திதான் தி.மு.க. வன்னிய மக்களை வளைச்சது. டாக்டர் ராமதாஸும் சாதியை சொல்லித்தான் எல்லா வீட்டுக்குள்ளயும் போயிட்டு வந்தாரு. ஆனா, அ.தி.மு.க-வில எல்லோரும் கடமைக்காகத்தான் வேலை பார்த்தாங்க. தம்பிதுரையில ஆரம்பிச்சு பிரசாரத்துக்கு வந்த அத்தனை பேருமே ஏதோ ஆபீஸ் டூட்டி மாதிரி காலையில 10 மணிக்கு வந்துட்டு சாய்ந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிட்டாங்க.

டாக்டர் ராமதாஸ் தர்மபுரியிலேயே தங்கி ஒவ்வொரு கிராமமாகப்போய் வீடு வீடாக அலைஞ்சு திரிஞ்சு ஓட்டு கேட்டாரு. தி.மு.க-வுலயோ எ.வ.வேலுவோடு மொத்தம் பதினைஞ்சு அமைச்சருங்க வேலை பார்த்தாங்க. துணை முதல்வர் ஸ்டாலின் ஒரு கிராமம் விடாம திறந்த வேன்ல சுத்திட்டு இருந்தாரு. நீங்களோ வந்ததும் தெரியலை... போனதும் தெரியலை! வழக்கம்போல கொடநாட்டுல போய் ஓய்வெடுத்தீங்க. நம்ம வேட்பாளருக்கு தொகுதி முழுக்க சொந்தக்காரங்க இருக்கறதா கேள்விப்பட்டோம். அவங்க மொத்தப் பேரும் ஓட்டுப் போட்டிருந்தாக்கூட டெபாசிட் வாங்கியிருப்போம். ஆனா வேட்பாளரோட சொந்தக்காரங்களையே நம்மால கவர முடியலையே! இதெல்லாம் இப்பவாவது உங்களுக்கு தெரியுமா?'' என்கிறார்கள் எங்கோ இருக்கும் தங்கள் தலைவியின் திசை நோக்கி!

மீண்டும் மீண்டும் அவர்கள் சுட்டிக்காட்டுவது தங்கள் தங்கத் தலைவரின் பொற்காலத்தையேதான்!

''அப்பல்லாம் ஒரு ஆர்.எம்.வீ., ஒரு முத்துசாமி, ஒரு பண்ருட்டி, ஒரு அண்ணாச்சி, ஒரு திருநாவுக்கரசுனு திரும்பின பக்கமெல்லாம் பர்சனாலிட்டிகளின் படையெடுப்பு இருக்கும். கட்சிக்காரர்களின் கஷ்டங் களையும் மக்களின் தேவைகளையும் கவனிச்சுத் தீர்ப்பதற்கான முழு சுதந்திரத்தையும் அவங்களுக்குக் கொடுத்திருந்தார் புரட்சித் தலைவர். அவங்களும் தங்கள் தலைவருக்கான கவர்ச்சியையும் அன்பு உருவத்தையும் நேரில் ஏந்திச் செல்லும் தூதர்களாகவே மாநிலம் முழுக்கச் சுற்றி வந்தார்கள். ஆனா, இப்போ யார்தான் தங்கள் சொந்த ஆளுமையோடு கட்சி வேலைகளைப் பார்க்க முடிகிறது? 'எல்லாமே அம்மாதான். மத்தவங்க சும்மாதான்' என்று கட்சியின் சக தலைவர்கள் சொல்லுவதை அல்லவா அம்மா ரசிக்கிறார். தனிப்பட்டு யாரும் பேர் வாங்கிவிடக்கூடாது என்பதற்கல்லவா அவர் கூடுதலாக கவலைப்படுகிற மாதிரி தெரிகிறது! 'எல்லாமே அம்மாதான்' என்பதே நிஜமாகவே இருந்தாலும், அந்த அம்மா அவ்வப்போதாவது மக்கள்முன் வந்து தரிசனம் கொடுத்தால்தானே கட்சி என்று இருப்பது ஜனங்களுக்குத் தெரியும்? வழியும் விடமாட்டேன்... வரமும் தரமாட்டேன் என்று அம்மா ஏன் இப்படி சும்மாவே இருக்கிறார்?'' என்று ரத்தக் கண்ணீர் வடித்துக் கேட்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

கடைசி நம்பிக்கையோடு காத்திருக்கிறான் தொண்டன். என்ன பதில் சொல்லப் போகிறார் முன்னாள் முதல்வர்?

- நமது அரசியல் நிருபர்
ஜுனியர் விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற