திருக்குறள்

காவல் நிலையங்களில் வாகனக் குவியல்

காவல் நிலையங்களுக்கு அடையாளமாக இருப்பது அதன் சிவப்பு நிற வண்ணம் மட்டுமல்ல; வளாகம் நிறைய குவிந்து கிடக்கும் அழுக்கேறிய வாகனங்களும் தான். இற்று, இரும்பெல்லாம் தூளாகி, உள்ளுறுப்புகள் களவு போன பின், மண்ணோடு மண்ணாக மட்கிப் போவதற்கு நாள் பார்த்துக் கிடக்கும் இந்த வாகனங்களுக்கு உரியவர்கள் யாரோ? எங்கே இருக்கிறார்களோ?

தமிழக காவல் நிலையங்களிலும், ஆர்டிஓ அலுவலகங்களிலும் வீணாய் கிடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடும். மதிப்போ நூறு கோடியை தாண்டும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவற்றில் பாதி வழக்கு விசாரணையில் இருப்பவை. மீதி கேட்பாரில்லாதவை.

திருட்டு, கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட வாகனங்கள் தான் இங்கே இப்படிக் கிடக்கின்றன. பறிமுதல் செய்த போலீசாருக்கு பாதுகாக்க இடமில்லை. ஏலம் விட வேண்டிய நீதிமன்றங்களுக்கோ ஏனோ நேரமில்லை. விளைவு, நாள் கணக்கு, மாதக் கணக்கு, வருடக் கணக்கை கடந்து வெள்ளி விழா காணும் வாகனங்கள் கூட இங்கே உண்டு. பிடிபடும்போது உருப்படியாக இருந்த வாகனங்கள், இங்கே உள்ளுறுப்பை இழந்து வெறும் கூடாக கிடப்பதற்கு யார் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால், நல்ல நிலையில் இருந்தபோதே இவற்றை ஏலம் விட்டிருந்தால், அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்திருக்கும். விலை போகக்கூடிய பொருள் விரயமாவதற்கு என்ன காரணம்?

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒரு நடைமுறை இருக்கிறது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனடியாக ஏலம் விடப் படுகின்றன. அதில் கிடைக்கும் தொகை, வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது. 10 ஆண்டோ, 20 ஆண்டோ வழக்கு முடியும் நாளில், அந்த பணம் பெரும் தொகையாகி விடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாகவோ அல்லது அரசுக்கு வருவாயாகவோ போய்ச் சேருகிறது. அரியானா போன்ற மாநிலங்களில், பிடிபட்ட வாகனங்கள் பற்றிய முழு விபரங்கள் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. உரிமையாளர்களுக்கு உதவ இந்த ஏற்பாடு. அந்த நடைமுறை இங்கே வர என்ன தடை?

திருட்டும் வாடகையும்...


காவல் நிலையங்களில், போக்குவரத்து துறை அலுவலகங்களில், நீதிமன்றங்களில் போட்டு வைத்திருக்கும் கார், ஆட்டோ, லாரி, பைக் போன்ற வாகனங்களின் உதிரி பாகங்கள் ஒவ்வொன்றாக காணாமல் போய்விடுவது வாடிக்கை. சின்னச்சின்ன உதிரிபாகங்கள் மட்டுமல்ல, இன்ஜின் போன்ற பெரிய பாகங்களும் மாயமாகி விடுகின்றன. எஞ்சியவை மழைக்கும், வெயிலுக்கும் பலியாகி விடுகின்றன.

மணல் லாரி மோதிய விபத்து தொடர்பாக ஒரு வழக்கு. லாரி மோதியதில் பாதிக்கப்பட்டவர் நிவாரணம் கோரி தொடர்ந்திருந்தார். விசாரணையில் காப்பீடு நிறுவனம் அதிர்ச்சி தகவலை அளித்தது. Ôஅந்த லாரி, மணல் திருட்டு தொடர்பாக காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் பொறுப்பில் இருந்த வண்டி. எனவே அந்த வண்டிக்கான காப்பீடு ரத்தாகி விட்டது. நிவாரணம் அளிக்க முடியாதுÕ என்று சொல்லிவிட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், காவல்துறை பொறுப்பில் இருந்த லாரி எப்படி சாலைக்கு வந்தது என்று விசாரிக்க உத்தரவிட்டது. இதுபோல பல வாகனங்களை வாடகைக்கு விடப்படுவதும் தொடர்கிறது.

கோவையில் ஒரு சம்பவம். கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டபோது, கார் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் பற்றிய விசாரணையில், அது ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்று எனத் தெரிந்தது. பறிமுதல் செய்த வாகனத்தை, கேட்க ஆளில்லை என்பதால், கள்ளநோட்டுக் கும்பலுக்கு விற்று விட்டனர். அதேபோன்ற குற்றச்சாட்டுக்காக பீளமேடு போலீசில் இரண்டு அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது எல்லாம் பழைய வரலாறு.

அதுக்கு உதவும் கார்களுக்கும் இதே நிலைமை

செல்போன் சகிதமாக காரில் அழகிகளை வைத்து நடத்தப்படும் நவீன விபசாரம் 10 ஆண்டுகளாக பழக்கத்தில் இருக்கிறது. சிக்கும் போது வாகனங்களும் சாட்சிப் பொருளாகி விடுகின்றன. அதுமட்டுமல்ல நட்சத்திர விடுதிகளில் விபசார ரெய்டு நடத்தும் போது மாட்டும் விஐபிகளின் கார்களும் தூக்கிச் செல்லப்படும். அதன் பிறகு இந்த வாகனங்கள் எதற்கும் பயன்படாமல் அப்படியே காவல் நிலையங்களில் வீணாய் போடப்படும். சென்னை சிந்தாதரிப்பேட்டை விபசார தடுப்பு காவல் பிரிவு அலுவலகத்தில் மட்டும் 20 கார்கள் கிடக்கின்றன.

இங்கே மட்டும் தான் இந்த நிலைமை என்றில்லை. போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம், சென்னை ராஜாஜி பவனில் உள்ளது. இதன் வாசலில் 42 வாகனங்கள் கிடக்கின்றன. 20 ஆண்டுகளாக கிடக்கும் வாகனங்களும் இதில் உண்டு. சில கோடிகள் மதிப்புள்ள இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்து இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது இந்த துறை.

சட்டத்தை திருத்தினால் தேவலை


வழக்கு சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தில் இடம் இல்லை என்பதால் காவல் நிலையங்களில் போட்டு வைக்கப்படுகின்றன. இருக்கும் வேலையில் அந்த வாகனங்களை காவல்துறையினர் பராமரிப்பதெல்லாம் சாத்தியமில்லை. போதாக்குறைக்கு இந்த வாகனங்களால் காவல்துறை வாகனங்களையும் நிறுத்த இடமில்லாமல் போய் விடுகிறது. வாகனங்களை அனாமத்தாக போட்டு வைத்து வீணாக அழிய வைப்பதை விட அவற்றை விற்று காசக்காலாம். போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றும் வண்டிகளை ஏலம் விட சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல் உணவு கடத்தல், மணல் கடத்தல், கொலை வழக்குகளில் பயன்படுத்தபட்ட வாகனங்களையும் ஏலம் விடும் வகையில் ஏற்கனவே இருக்கும் சட்டத்தை திருத்தினால் போதும். வாகனங்களை ஏலம் விட வருவாய்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஏற்படுத்தலாம். அக்குழு மாவட்டந்தோறும் கைப்பற்றப்படும் வாகனங்களை 3 முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏலம் போடலாம். சட்டரீதியாக உரிமையாளர்கள் திரும்ப கேட்கும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை இப்படி செய்யலாம். அதன்மூலம் வாகனங்களை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களும் யோசிப்பார்கள். பல கோடிகள் மதிப்பிலான வாகனங்கள் வீணாவதையும் தடுக்கலாம். அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.

அரசு அலுவலகங்களிலும்...


இப்படி வீணாகும் வாகனங்கள் இருக்கும் இடங்களின பட்டியலில் அரசு அலுவலகங்களும் வருகின்றன. அங்கும் ஓடி களைத்த வாகனங்களை அப்படியே போட்டு விடுகின்றனர். போக்குவரத்து கழகங்கள், பழைய வாகனங்களை ஏலம் விட்டு விற்பது போல் அரசு அலுவலகங்களில் செய்வதில்லை. அதனால் அவையெல்லாம் வீணாகி கொண்டிருக்கின்றன
தீர்ப்பு வரும்போது பழைய இரும்பு


போக்குவரத்து வாகனத் துறையினர் (ஆர்டிஓ) அடிக்கடி வாகன சோதனை நடத்துகின்றனர். அதிக ஆட்கள், அதிக பாரம், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களால், ஆட்டோ, கார், வேன், ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பிடித்து வைக்கப்படும். பாதிக்கும் மேற்பட்டவற்றை, உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி எடுத்துச் சென்று விடுகின்றனர். உரிய அனுமதியின்றியும் முறைகேடாகவும் இயக்கப்படும் வாகனங்கள் பிடிபட்டால், அதை உரிமை கேட்க வருவோர் குறைவு.

இதுபோன்ற வாகனங்களை, சென்னையில் குரோம்பேட்டை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், தரமணி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வைத்துள்ளனர். பராமரிப்பின்றி நீண்ட காலமாக ஒரே இடத்தில் இருப்பதால், துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவுக்கு போய் விட்டன.

அபராதம் விதித்து விடுவிக்க வேண்டிய வாகனங்களைகூட போக்குவரத்துத் துறையினர் பிடித்து வைக்கின்றனர். கொலை போன்ற குற்ற வழக்குகளில் தொடர்பே இல்லாத வாகனங்களையும் போலீசார் வழக்கில் சேர்த்து விடுகின்றனர். இதனால் அந்த வழக்கு முடியும் வரை வாகனங்கள் போலீசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டிய நிலை. நீண்ட காலத்துக்குப் பிறகு, வழக்கு ஒரு வழியாக முடிந்து, வாகனத்தை உரிமையாளரிடம் கொடுக்குமாறு நீதிமன்றம் குறிப்பிடும்போது, குறிப்பிட்ட வாகனம் பழைய இரும்புக் கடைக்குப் போகும் நிலையில் இருக்கும். இந்த நிலையை மாற்ற அரசு நிலையான விதிகளை வகுக்க வேண்டும் என்கிறார் செங்கொடி ஆட்டோ&டாக்சி&வேன் ஓட்டுநர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன்.

போக்குவரத்து வாகனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இது போன்ற வாகனங்கள் அனைத்தும் அதிகபட்சம் ஓராண்டு, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனி குழு அமைத்து ஏலம் விடப்படும். இந்தக் குழுவில் போக்குவரத்து வாகனத் துறையினர் தவிர, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை, போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். ஏலம் மூலம் கிடைக்கும் தொகை போக்குவரத்துத் துறையின் கணக்கில் சேர்க்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் மட்டும் இப்போதைக்கு 382 வாகனங்கள் உள்ளன’’ என்றார்.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டச் சிக்கலில் சிக்கி சீரழியும் வாகனங்களை திரும்ப பெறுவது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?
ஏதாவது வழக்கில் சிக்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் சட்டப்படி திரும்ப பெறலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 451ன் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போதும், விசாரணையின் போதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னரும், வழக்கு விசாரணையின் போதும், தீர்ப்புக்கு முன்பும் திரும்ப பெறலாம். தீர்ப்புக்கு பிறகும், மேல்முறையீட்டின் போதும் இதே சட்டம் பிரிவு 452ன் கீழ் வாகனத்தை திரும்ப பெறலாம்.

வாகன உரிமையாளர்கள், வாகனங்களை தவணை முறையில் விற்றவர்கள், வாடகைக்கு விட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும். தேவைப்படும் போது வாகனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக உறுதி அளித்தும், நீதிமன்றம் சொல்லும் மதிப்பிற்கு பத்திரம் எழுதிக் கொடுத்தும் வாகனங்களை கொண்டுச் செல்லலாம். வழக்கு முடியும் வரை நீதிமன்ற அனுமதியின்றி அந்த வாகனங்களை விற்க மாட்டோம், அடகு வைக்க மாட்டோம் என்ற உறுதி அளிப்பது அவசியம்.

சில வழக்குகளில் குற்றங்களில் சம்பந்தமில்லாத வாகனங்களும் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இப்படி யாரும் உரிமை கோராத வாகனங்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 458ன் படி ஏலம் விட அனுமதிக்கப்படுகிறது. அதாவது 6 மாதங்கள் வரை வாகனங்களை யாரும் சட்டப்படி உரிமை கோரி வராவிட்டால் நீதிமன்ற அனுமதி பெற்று ஏலம் விடலாம்.

எப்படி வந்தன இவ்வளவு வாகனங்கள்?

கொலை, ஆட்கடத்தல், சாராயம், எரிசாராயம் போன்ற போதைப் பொருட்கள் கடத்தல், மணல் திருட்டு, விபசாரம், விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம், பர்மிட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை போக்குவரத்து துறையினரும் கைப்பற்றுகின்றனர். போதை பொருட்கள் கடத்தும் வாகனங்களை மத்திய போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவினரும் கைப்பற்றுகின்றனர். இதபோல்தான் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு துறையினரும் செய்கின்றனர். விபத்தில் சிக்கும் வாகனங்கள் பயன்படுத்தும் நிலையில் இருந்தால், அந்த வாகனங்கள் வழக்கு பதிவு செய்ததும், நீதிமன்ற அனுமதியுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணம் இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் அல்லது கைப்பற்றப்படும்.

பொதுவாக குற்றச் செயல்களுக்கு பயன்படும் வாகனங்கள், திருட்டு வாகனங்களே. அதனால், பிடிபடும்போது கேட்க யாரும் வருவதில்லை. திருட்டு கொடுத்தவர் இன்சூரன்ஸ் மூலம் பயன் அடைந்திருப்பார். பொதுவாக திருட்டு வழக்குகளில் எப்ஐஆர் போடுவதில்லை. அப்படியே எப்ஐஆர் போட்டிருந்தாலும், கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் கொடுத்து முடித்திருப்பார்கள். திருடன் பிடிபடும்போது, அவனிடம் இருந்து 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஆனால், அவற்றிற்கு புகார் இருக்காது. அவற்றில் பல வாகனக்குவியலுக்கு போகும். மெல்ல மெல்ல போலீசார் பாக்கெட் நிறையும். இதில் என்ன வேதனை என்றால், தமிழக போலீசில் சல்லடை போட்டுத் தேடினாலும், இந்த வாகனக்குவியல் பற்றிய எந்த புள்ளிவிவரமும் இல்லை என்பதுதான்.

- Dinakaran

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற