வெறும் நம்பரை வைத்து பணம் பண்ண முடியுமா? ஏன் முடியாது, நியூமராலஜியில்கூட சம்பாதிக்கலாமே என்கிறீர்களா? அதெல்லாம் பழைய கதை..! லேட்டஸ்டாக இந்த நம்பர்களை வைத்து சூப்பராக சிலர் பணத்தை அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஏதோ லாட்டரி, சூதாட்டம் என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்... பீடிகைகளை நிறுத்திவிட்டு விஷயத்துக்கு வருவோம்...
ராசி நம்பர்களுக்கு இணையாக நல்ல டிமாண்ட் உள்ளது என்றால் அது ஃபேன்சி நம்பர்களுக்குதான். பொதுவாக வாகனங்கள் வாங்கும்போது தங்களுக்குப் பிடித்தமான ஃபேன்சி நம்பர் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆர்.டி.ஓ. ஆபீஸில் கூடுதல் பணம் கட்டி அந்த நம்பரை வாங்குவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
காருக்கு நம்பர் வாங்குவதற்கு இணையாக இப்போது தங்களுடைய செல்போன்களுக்கும் ஃபேன்சி நம்பர் வாங்குவது அதிகரித்துவிட்டது. தனிநபர்களை விட சேவைத் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதாவது கால் டாக்ஸி, ரீடெய்ல் ஸ்டோர்கள், கஸ்டமர் கேர் சென்டர்கள் போன்றவற்றுக்கு ஃபேன்சி நம்பர்கள் மிக மிக அவசியமாகிவிட்டது. காரணம் வாடிக்கையாளர்கள் அந்த நம்பரை எளிதாக நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்பதால்தான். அதேபோல் தனிநபர்களும் தாங்கள் தனித்து தெரியவேண்டும் என்பதற்காக ஃபேன்சி நம்பர்களை விரும்பி வாங்குகிறார்கள்.அப்படித் தனித்து தெரிய வேண்டும் என்று நினைக்கும் ஆட்களைக் குறிவைத்து பணம் பார்த்துவிடும் போக்குதான் இப்போது பரவலாகி வருகிறது.
செல்போன் இணைப்பு வாங்கும்போது ஃபேன்சி நம்பர் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டால் அதற்கு தனியாக கட்டணம் வாங்கிக்கொண்டு நாம் விரும்பும் நம்பரைத் தருகிறார்கள் செல்போன் சேவை நிறுவனத்தினர். இந்த ஃபேன்சி நம்பருக்கு ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து இருபத்தைந்தாயிரம் வரை வாங்குகிறார்கள். சில நிறுவனங்கள் இந்த எண்களை ஏலம் விடுகிறது. செல்போன் நிறுவனங்கள் இந்த நம்பர்களை அதன் வரிசைக்கேற்ப சில்வர், கோல்டு, பிளாட்டினம் என பிரித்து வைத்துள்ளன.
சுருக்கமாகச் சொன்னால் சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்பதுபோலத்தான் இதுவும். ஆனால் அது சட்டப்படி குற்றம். சினிமா தியேட்டர்காரர்களும் போலீசில் இதுகுறித்து புகார் செய்துவிடுவார்கள். காவல்துறையும் நடவடிக்கை எடுத்துவிடுகிறது. ஆனால் செல்போன் நம்பர் விவகாரத்தில் கம்பெனிகள் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் கூடுதல் கட்டணம் கட்டி நம்பரை வாங்கி வைத்திருக்கும் நபர் அதைவிட அதிக விலைக்கு அதை இன்னொரு நபருக்கு தாராளமாக விற்கிறார். செல்போன் நிறுவனமும் அந்த நம்பரை பிளாக்கில் வாங்கியவருக்கு மாற்றிக்கொடுத்துவிடுகிறது. ஒரு சிம் கார்டை வாங்குவதற்கு என்னென்ன அத்தாட்சிகளைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுத்தால் போதுமானது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நம்பரை மாற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் பெரிதாக எதுவும் இதுவரை இல்லை.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இப்படி ஃபேன்சி எண்களை ஒருவர் தொடர்ந்து வாங்கி வருகிறார் என்றால் சம்பந்தபட்ட நிறுவனத்திட மிருந்தே புதிய ஃபேன்சி எண்கள் என்னென்ன வந்திருக்கின்றன என்று அவர்களே எஸ்.எம்.எஸ். அனுப்பி விடுகிறார்கள். வாடிக்கையாளருக்கு என்று நினைத்து அவர்கள் அனுப்பும் அந்த தகவல் பழம் மாதிரி இந்த பிளாக் பார்ட்டிகளுக்கு கிடைத்துவிடுகிறது!
இப்படி ஃபேன்சி நம்பரை வாங்கி விற்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம்...
''இதுவரை இதை சட்டப்படி தவறு என்று யாரும் சொல்லவில்லை. அதனாலதான் இதில் இறங்கினேன். முதன்முதலில் நானே ஆசைப்பட்டு ஒரு நம்பரை வாங்கினேன். சூப்பரான நம்பர் அது. என்னுடைய நம்பரைச் சொன்னதுமே எல்லோருமே ஒரு பொறாமையுடன்தான் பார்த்தார்கள். ஒருநாள் என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவருடன் ஒரு பிஸினஸ்மேனும் இருந்தார். அவர் என்னுடைய நம்பரைப் பார்த்துவிட்டு அதை தனக்குத் தருமாறு கேட்டு கூடவே ஒரு பெருந்தொகையும் தருவதாகச் சொன்னார். நல்ல தொகை என்பதால் நானும் அவருக்கு அந்த நம்பரை மாற்றிக் கொடுத்துவிட்டேன். அதிலிருந்து இப்படி வாங்கி விற்பது தொற்றிக்கொண்டுவிட்டது. இப்போதெல்லாம் நான் வீட்டில் பாக்கெட் மணி கேட்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் சிலசமயங்களில் நான் பணம் கொடுத்து உதவுகிறேன்!'' என்றார்.
ஃபேன்சி நம்பர் மீது அப்படி என்ன மோகம் என்று இத்தகைய நம்பர் ஒன்றை வாங்கியவரிடம் கேட்டோம்...
''நீங்களே பார்த்தால் தெரியும் ஃபேன்சி நம்பர் வைத்திருப்பவர்கள் சாதாரண நபர்களாக இருக்க மாட்டார்கள். அது ஸ்டேட்டஸ் சிம்பல்! அந்த நம்பரே சொல்லிவிடும் நாம் யாரென்று. அதனால் பல விஷயங்கள் எளிதாக நடக்கிறது. இன்றைக்கு நாம் யாரையாவது தொடர்பு கொண்டால் அவர்கள் போனில் நம் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே போனை எடுக்கிறார்கள். இல்லாவிட்டால் தொந்தரவாகக் கருதி எடுப்பதில்லை. ஆனால் நாம் ஃபேன்சி நம்பரிலிருந்து பேசும்போது பெரும்பாலும் எடுத்துவிடுவார்கள். இன்னொரு வசதி நீங்கள் கஸ்டமர்கேருக்கோ அல்லது சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களுக்கோ தொடர்பு கொள்ளும்போது நமது நம்பரைப் பார்த்துவிட்டு உடனே நமது பிரச்னையை சரிசெய்துவிடுகிறார்கள்... இப்படி நிறைய லாபங்கள் இருக்கிறது. அதனால்தான் விலை அதிகமாக இருந்தாலும் ஃபேன்சி நம்பரை வாங்கி வைத்துக்கொள்கிறேன்'' என்று அவர் சொல்லச் சொல்ல நமக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்படி ஃபேன்சி எண்களை வாங்கி அதிக விலைக்கு விற்பது குறித்து மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உயரதிகாரியிடம் பேசியபோது, ''ஒருவர் பெயரில் இருக்கும் சிம் கார்டை மற்றொருவரின் பெயருக்கு மாற்றித் தருகிறோம், இதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதில் எவ்வளவு பணம் கைமாறுகிறது என்று எங்களுக்குத் தெரியாது. அதனால் அதைப் பற்றி நாங்கள் கருத்து சொல்ல முடியாது'' என்றார்.
எண்களை வைத்து இவ்வளவு பணம் கைமாறுகிறதே இது சட்டப்படி சரியா என்று வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்.
''சட்டப்படி தவறு என்று சொல்ல முடியாவிட்டாலும் இது தவறுதான். இது போன்று நடப்பதினால் செல்போன் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு நஷ்டம், வாடிக்கையாளர்களுக்கும் நஷ்டம். நண்பர், உறவினருக்கு இப்படி ஏதோ ஒன்றை மாற்றிக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அதையே ஒரு பிஸினஸாக செய்வது முறையல்ல. இருப்பினும் இதற்குரிய சட்ட முறைகள் இனிதான் உருவாக்கப்பட வேண்டும்.
இணையதளங்கள் பிரபலமாக ஆரம்பித்தபோது இதே போல 'சைபர் பார்கிங்கில்’ குற்றங்கள் நடந்தது. அதாவது முக்கியமான நிறுவனங்களின் பெயரில் இணையதளத்தை தொடங்கி விடுவார்கள். சம்பந்தபட்ட நிறுவனங்கள் இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் முடியாமல் போய்விடும். வேறுவழியின்றி அவர்களுக்குப் பணம்கொடுத்து அந்த இணையதளத்தை வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்தார்கள். அதே போலதான் இந்த பிஸினஸும் நடப்பதால் இப்போதே தேவையான நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பது நல்லது!'' என்றார்.
செல்போன் என்றாலே விவகாரம்தான் போலிருக்கிறது. நாடே பேசும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் என்ன நடந்தது? சில பெயர் தெரியாத கம்பெனிகள் உரிமையை வாங்கிக்கொண்டு பின்னர் பிரபலமான நிறுவனங்களுக்கு அந்த உரிமையை அதிக விலைக்கு கொடுத்து காசு பார்த்துவிட்டது. அந்தத் தொகை அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டியது என்பதுதானே குற்றச்சாட்டு. அதே கதைதானே இந்த ஃபேன்சி நம்பரிலும் நடக்கிறது!
Source-vikatan