திருக்குறள்

மது, மாது, திவால்!



ஜரோப்பாவின் பெருமைக்குரிய தேசம் என்றால் அது கிரீஸ்தான்.

சாக்ரட்டீஸ், அரிஸ்டாட் டில் போன்ற பல மேதைகளை உருவாக்கி, உலகத்துக்கே அறிவுச் சேவை செய்த நாடு. பழம் பெருமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் கிரீஸின் நாகரிகத்தை உலகுக்கே பறை சாற்றும்.
பொருளாதார வளர்ச்சி யிலும், அரசியல் ஆளுமை யிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்ற கிரீஸ் இன்று ஏறக்குறைய திவால் நிலையில் உள்ளது. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 சதவிகிதமாக இருக்கும் ஜி.டி.பி., மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன் என தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது அந்த நாடு. என்னவானது கிரீஸுக்கு? ஏன் இந்த நிலைமை?
முதல் காரணம், கிரீஸ் மக்கள் எப்போதுமே மகிழ்ச்சியைத் தேடும் சந்தோஷப் பிரியர்கள். நாமெல்லாம் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை சர்வசாதாரணமாக உழைக்க, கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் உழைத்தாலே அதிகம். உலக அளவில் மிகக் குறைவாக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கிரீஸ்தான் முன்னணியில் இருக்கிறது.   
தவிர, நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடித்து விட்டு கவிதை பாடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். வயிறு முட்ட மது அருந்தியபடியே மோகத்தில் உழல்வதே அவர்கள் வாழ்க்கை.
கிரீஸ் நாட்டில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடி. இதில் பத்து லட்சம் பேர் அரசு ஊழியர்கள். இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுத்தே ஓய்ந்து போனது கிரீஸ் அரசாங்கம். நம்மூரில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 என்றால் கிரீஸில் 62. தவிர, அரசு ஊழியர்களுக்கு கட்டாய மருத்துவ இன்ஷூரன்ஸ், பென்ஷன் என இருக்கும் வசதிகள் எதையும் குறைக்க அந்த நாட்டு மக்கள் ஒப்புக் கொள்வதில்லை.
மக்கள் தொகையில் 80% பேர் வரி கட்டத் தகுதி படைத்தவர்கள்; ஆனால், ஒழுங்காக வரி கட்டுகிறவர்களோ 35 சதவிகிதத்துக்கும் குறைவே! இங்குள்ள தொழிலதிபர்கள் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தே வரியைக் கட்டாமல் தப்பிவிடுகிறார்களாம்.
இத்தனை தவறுகளுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். கடந்த முப்பது ஆண்டுகளாக கிரீஸ் நாட்டு அரசியல்வாதிகளும் ஏகத்துக்கு பொய் சொல்லி, ஐரோப்பாவை ஏமாற்றி இருக்கிறார்கள். கிரீஸ், ஐரோப்பிய யூனியனுடன் சேரும் போது அது கொடுத்த கணக்கு எல்லாமே பொய்க் கணக்குத்தான் என்று இப்போது குட்டு வெளிப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001-ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது. வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று சொல்லி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள். இது நாட்டின் மொத்த உற்பத்தியைவிட 125% அதிகம்!
கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணம் இல்லாததால் இப்போது முழி பிதுங்கி நிற்கிறது. இதுநாள் வரை கடனுதவி செய்த நாடுகள்கூட இப்போது மேற்கொண்டு கடன் கொடுக்கத் தயங்குகின்றன. தவிர, கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.
இப்போது சீனா கொடுத்த உதவியின் காரணமாக கிரீஸின் திவால் அறிவிப்பு கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. சீன உதவி எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை என்றால் கிரீஸ் திவாலாவது உறுதி. அப்படி ஒன்று நடந்தால், அது அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைவிட பெரும் பாதிப்பை உலகுக்கு ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள்.
-  சத்தி.கார்த்தி.
source-vikatan

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற