நடந்து முடிந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் குறித்த லயோலா சர்வேயில், 47.4 சதவீத வாக்காளர்கள்... ஓட்டு போட பணம் வாங்குவது தவறில்லை என கருத்து தெரிவித்திருக் கிறார்கள். கிட்டதட்ட பாதிக்கு பாதி வாக்காளர் கள் பணம் வாங்குவதில் தவறில்லை என்கிற மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சிந்தனையாளர்களின் கவலையாகவும், அதிர்ச்சியாக வும் இருக்கிறது.
சர்வேயின் போது மாணவர்களை வழிநடத்திய லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம், “ ""கடந்த சில வருடங்களாகவே தேர்தலை வாக்காளர்கள் அணுகும் முறை மாறிக்கொண்டிருப்பதாக தெரி கிறது. தேர்தல் என்பதே ஒரு திருவிழாவாக மாறி வருகிறது. கோயில் திருவிழா என்றால் கூட அதிக பட்சம் 3 நாள் கொண்டாட்டம்தான் இருக்கும். ஆனால் தேர்தல் திருவிழா ஒரு மாதத்துக்கு மேல் நீடிப்பதாக இருக்கிறது. கொண்டாட்டத்தின் பிரதான அம்சமாக பணம்தான் இருக்கிறது.
பொதுவாக தேர்தல் களத்தில் அரசியல்வாதி களுடன் வாக்காளர்கள் பேரம் பேசுவதுண்டு. முன் பெல்லாம் உங்களுக்கு இந்த திட்டங்களை நிறைவேற்றித் தருகிறேன் என்று பேரம் பேசு வார்கள் அரசியல்வாதிகள். ஆனால் இப்போதெல்லாம் திட்டங்களுக்கு பதிலாக பணம் என்பதாக மாறியிருக்கிறது இந்த பேரம். வாக்குக்கு பணம் வாங்கு வது என்பது தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்காக மக்களை நாம் குறை சொல்ல முடியாது. தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் வாக்காளர்களுக்கு சாய்ஸ் குறைவாகவே உள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அரசியல்வாதிகள் மீது இந்திய அள விலேயே கூட பெரிய அளவுக்கு தண்டனை எதுவும் வழங்கப்பட்டு விடவில்லை. மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரின் பொருளாதார வளர்ச்சியை கண் எதிரில் பார்க்கும் வாக்காளர்கள்... சம்பா தித்த பணத்தை திருப்பி கொடுக்கட்டுமே என்று நினைக்கிறார்கள். கும்பிட்டு வாக்கு கேட்பதையும், பணம் கொடுப்பதையும் தங்களுக்கான கவுரவமாக நினைக்க தொ டங்கிவிட்டார்கள் வாக்காளர்கள். தங்க ளின் வாக்கு என்கிற பலமான ஆயு தத்தை அரசியல்வாதிகளிடம் கொடுத்து தங்கள் வாழ்க்கையை அடமானம் வைப்பதாக வோ, விற்பதாகவோ அவர்கள் உணர வில்லை என்பதுதான் வருத்தம்.
வாக்காளர்களை இந்த நிலைக்கு மாற்றி வருகிறார்கள் அரசியல்வாதிகள். இது நீடித்தாலோ, அதிகரித்தாலோ ஜனநாயகம் அர்த்தமிழக்கும் நிலை வரலாம். ஒரு கட்டத்துக்கு மேல் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாற்றம் உருவாகாவிட்டால் போராட்டமாக வோ, குழப்பமாகவோ மாறும் நிலை ஏற்படும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின்மை என்கிற மனநிலை தற்போது இடை நிலையில்தான் இருக்கிறது. எங்களுடைய கணிப் பின்படி 2016 தேர்தலில் இது முதிர்ந்த நிலை அடைந்துவிடும். அப்போது நிலைமை மிக மோசமாகிவிடும் வாய்ப் பிருக்கிறது. எனவே பொறுப் பில் இருப்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்வது அவ சியம்'' என்று தன்னுடைய கள அனுபவத்தை வெளிப் படுத்தினார் பேராசிரியர் ராஜநாயகம்.
சமூக ஆர்வலரும், அடித்தட்டு மக்களோடு நெருக்கமாக இருப்பவரு மான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், "தற்போ தைய தேர்தல் நடை முறையிலேயே தனக்கு நம்பிக்கை இல்லை' என்கிறார். தன்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று சொல்லும் கிருஷ்ணம்மாள் இது வரை ஒரு முறை கூட ஓட்டு போட்டதில்லையாம்.
""வாக்காளர்களின் ஏழ்மை நிலையும், அறியாமையும்தான் ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் என்பதே ஒரு நாடகமாகத்தான் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திற்கும், பாராளுமன் றத்திற்கும் செல்பவர்களுக்கு தங்க ளுடைய கடமை பற்றிய சிந்த னையே இருப்பதில்லை. பல வருடங்களுக்கு முன்பு பீகாரில் நாங்கள் மக்கள் பணியாற்ற சென்றபோதே வாக்காளர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி ஓட்டு பெறுவதை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அடித்தட்டு மக்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்துப் போய் அவர்கள் ஓட்டை போடவைத்து, அருகி லேயே இருக்கும் இடத்தில் பூரி கிழங்கு சாப்பிடக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அன்றைக்கு பூரி கிழங்காக இருந்தது இன்று பணமாக மாறியிருக்கிறது.
தற்போதைய சிஸ்டமே பணக்காரர் களுக்கானதாக மாறிவிட்டது. பிரிட்டிஷ் பீரியடை விட மோசமான நிலையில் இருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஓட்டுக்கு பணம் என்கிற மனப்போக்கை மாற்ற பாடுபட வேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெறுமனே பிரச்சா ரம் என்பதோடு நிற்காமல் இதை ஒரு போராட்டமாகவே மாற்ற வேண்டும். தேசத்தின் மீது அக்கறை கொண்ட அத்தனை பேரும் இதில் பங்கெடுக்க வேண்டும்'' என அழுத்தமாக சொல்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்.
தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வரும் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியும் தற்போ தைய நிலைக்காக கவலை தெரிவிக்கிறார். ""2004-ம் ஆண்டு ஜூலையில் நாங்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு ஒரு பரிந்துரை அனுப்பியிருந்தோம். அந்த பரிந்துரையில் அரசியல் கட்சிகளின் கணக்குகளை சரிபார்ப்பது, கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது, விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தருவது உள்ளிட்ட 22 சீர்திருத்தங்களை வலியுறுத்தியிருக்கிறோம். அந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்படும்போது இப்போ தைய தவறுகள் பெருமளவு களையப்படும். ஓட்டுப் போட பணம் பெறுவது தவறு என்று வாக்காளர் களுக்கு தெரிவதில்லை. தற்போதைய சிஸ்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக மக்களின் மனநிலை யையும் மாற்ற முடியும். தேர்தல் சீர்திருத்தங்களுக்காக ‘கேட்ட லிஸ்ட்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பல மேடைகளில் நானும் இதற்காக பேசி வருகிறேன்'' என்கிற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர், "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை பேரும் இதற்காக முயற்சி எடுக்க வேண்டும்' என விரும்புகிறார். "வலுவான தேர்தல் ஆணையம் - வளமான ஜனநாயகம்' என்கிற தன்னுடைய நூல் ஒன்றிலும் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி எழுதியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
இந்தியாவின் இளைய தலை முறையினர் மத்தியில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டாக்கி வரும் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அப்துல்கலாம் தேர்தலில் பணம் வாங்கி ஓட்டு போடுவதை தடுக்க சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அவருடைய இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத் திருக்கிறது.
லீட் இந்தியா 2020 என்ற அமைப்பை சேர்ந்த 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், இளைஞர்களும் தேர்தலில் ஓட்டளிக்க பணம் வாங்க மாட்டோம் என தங்கள் பெற்றோரிடம் உறுதி மொழி வாங்கிவந்து கலாமிடம் கொடுத் திருக்கிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் இதுபற்றிய பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். ""ஓட்டுக்கு பணம் பெறுவதன் மூலம் எங்கள் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுவ தாக நினைக்கிறோம். சில நூறு ரூபாய் களுக்காக எங்கள் எதிர்காலத்தை விற்காதீர்கள் என்று தங்கள் பெற்றோரிடம் சண்டை போட்டிருக்கிறார்கள் ஆந்திராவின் சித்தூர் மாவட்ட இளைஞர்கள். தங்கள் பெற்றோர்களிடம் பெற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான உறுதிமொழி கடிதங்களை அந்த இளைஞர்கள் கொடுத்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வளர்ச்சி அரசியலில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் இந்த இளைஞர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள அரசியல்கட்சிகள், சிந்தனையாளர்கள், நீதித்துறையினர், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வதும் அவசியம்'' என நாட்டின் வளர்ச்சி குறித்த அக்கறையோடு நம்மிடம் பேசினார் டாக்டர் அப்துல் கலாம்.
ஓட்டுக்கு பணம் என்கிற நிலைமை இன்னும் தீவிரமானால் பெரும் பணக்காரர்களும், ஆளும் கட்சியும் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற சூழல் உருவாகும். மக்களின் மனநிலை மாற்றப்படுவது எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கே எதிரானதாக போகும். பணம் கொடுத்து வாக்கு கள் வாங்குவதை ஒரு வெற்றி ஃபார்முலாவாக அறிவிப்பதும் அதை மற்ற கட்சிகள் பின்பற்றுவதும் ஆபத்தானது. இதை உணர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சிந்த னையாளர்கள். மாறுவார்களா அரசியல்வாதிகள்?
-ச.கார்த்திகைச்செல்வன்
- நன்றி_ நக்கீரன்