திருக்குறள்

லஞ்சத்தை காமெடி செய்து ஒழிக்க முடியாது!

இப்படிக்கு 'டிராஃபிக்' ராமசாமி...

ந்த வார நாளிதழ்களில் வந்திருக்கும் விளம்பரத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்புவந்தது. அதாவது... லஞ்ச ஒழிப்பு வாரமாம் இது! இந்த ஒரு வாரம் லஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதுமா... அல்லது லஞ்சத்தை ஒரே வாரத்தில் ஒழித்துவிடத்தான் முடியுமா?
'எல்லாத் துறைகளிலும் குறைந்தபட்சம் இந்த அளவுத் தொகையை லஞ்சமாக வாங்கலாம் என்று சட்டம் கொண்டுவந்து விடலாம்!' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வருத்தத்துடன் சொன்னார்கள். எவ்வளவு வேதனை அந்த நீதிமான்களுக்கு இருந்தால், இப்படி ஒரு கமென்ட் வந்து விழும்?

லஞ்சம், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் செயல்பாடு மீது நீதிபதிகளுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்ட பிறகு, நாட்டில் அதை ஒழிக்க முடியும் என்பதுசந்தேகம்தான். லஞ்சம் யார் வாங்கினாலும், யார் கொடுத்தாலும்... அது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது!
அரசியல்வாதிகள் மட்டுமே லஞ்சம் உருவாகக் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். அதைவிட முக்கியக் காரணம் அதிகாரிகள்தான். அரசு தவறு செய்யும்போது, அதை உணர்த்தி நல்ல வழியில் செலுத்த வேண்டிய கடமை, அதிகாரிகளுக்கு இருக்கிறது. கட்சியினர் தவறு செய்தாலும், அது அதிகாரிகள் மீதே விழும். அதைப்பற்றிக் கவலைப்படாமல், தனக்குப் பங்கு வந்தால் போதும் என்று அரசியல்வாதிகளைத் தவறான வழிக்கு சில அதிகாரிகளே அழைத்துச் செல்கிறார்கள். விவரம் தெரியாமல் பதவிக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எங்கெல்லாம் மாமூல் ஊற்று சுரக்கும் என்று காட்டுவதே பங்குக்கு ஆசைப்படும்
அதிகாரிகள்தான்!

சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அதில் இருந்து கடை உரிமையாளர்கள் எப்படி எல்லாம் தப்பிக்கலாம் என்பதை அதிகாரிகளே சொல்லித் தருகிறார்கள். இவர்களைத் திருத்தாமல், ஊழலை எப்படி ஒழிக்க முடியும்? அதிலும் காவல் துறை இருக்கிறதே..!

நான் ஏதோ ஒரு பெண்மணியை மிரட்டிய தாகவும் அவரைப்பற்றிய தகவல்கள் வெளிவராமல் இருக்க லஞ்சம் கேட்டதாகவும், என் மீது வழக்கு போட்டார்கள். அதற்காக, சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு நான் அழைத்து விசாரிக்கப்பட்டேன். அது பொய்யான புகார் என்று போலீஸ்காரர்கள் அத்தனை பேரின் மனசாட்சிக்கும் தெரியும். அந்த சமயம் ஒரு போலீஸ்காரர், 'பொதுமக்கள் லஞ்சம் கொடுத்துப் பழகிவிட்டார்கள். நாங்கள் வாங்கிப் பழகிவிட் டோம்' என்றார். தமிழகத்தின் இன்றைய மனநிலையே இதுதான்!

லஞ்ச ஒழிப்புத் துறையிலேகூட ஓர் அதிகாரி சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாகச் செய்திகள் வந்தன. லஞ்சத்தை ஒழித்தாக வேண்டும் என்ற உண்மை யான எண்ணம் இவர்களுக்கே இல்லை என்றால்..? ஊழல் செய்தவர்கள் தப்பிக்க வழி செய்து தருவதற் கும் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திலேயே ஆட்கள் இருக்கிறார்கள்!
அதேபோல, 'லஞ்சத்தை ஒழிக்கிறேன்... விழிப்பு உணர்வு ஊட்டுகிறேன்...' என்று பல தன்னார்வ நிறுவனங்கள் முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சில அமைப்புகள், விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில், தவறு செய்பவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு... அவர்களைமீடியாக்களிடமும் சட்டத்தின் முன்பும் அம்பலப்படுத்துவதாக மிரட்டியே பணம் கறக்கின்றன. ஊழலை செய்வதற்கு இந்த 'தன்னார்வ' முகமே இதுபோன்ற சிலருக்கு கவசமாக அமைந்துவிடுகிறது.
ஊழலை அரசாங்கம் ஒழிக்கும் என்று எதிர் பார்ப்பதில் இப்போதைக்கு அர்த்தமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் துணிச்சலோடு கையில் எடுக்க வேண்டிய காரியம் இது. இந்த நோக்கத்தோடுதான் நான் குடும்பத்தைவிட்டே வெளியே வந்தேன். தவறு எங்கு நடந்தாலும், அதைத் தட்டிக்கேட்டுக் கொண்டே இருக்கிறேன். மிரட்டல்கள் வருவது என் வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது! இறப்பு என்பது இருக்கிறது என்று தெரிந்துவிட்டால்... துணிச்சல் தானாகப் பிறந்துவிடும்.

மாளிகைக்குள் இருப்பவர்களுக்கு, அவர்களின் பதவியும் செல்வமும் கமாண்டோ வசதி பெற்றுக் கொடுக்கிறது. அவர்களுக்கெல்லாம் ஏதாவது ஒரு கட்சி அல்லது இயக்கத்திலிருந்துதான் மிரட்டல்கள் வரும். எனக்கோ அனைத்துக் கட்சியினரும் எதிரிகள்தான். இருந்தும், நான் சுதந்திரமாகவே நடமாடுகிறேன்.

சட்டத்தை நான் குறை சொல்ல மாட்டேன். சட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. அதைக் கையாளும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும்தான் கோளாறு! அவர்களிடம் தங்களின் அவசரத்துக்காக, 'கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க.' என்று தானாகவே முன்வந்து அன்பளிப்பு தருவதை மக்கள் எப்போது நிறுத்துகிறார்களோ, அப்போதுதான் லஞ்சத்தை ஒழிப்பதற்கான முதல் அடியை நாம் எடுத்து வைத்ததாகச் சொல்வேன்!

அப்படியிருக்க, யாருமே தங்களை சரிப்படுத்திக் கொள்ளாத வரையில் லஞ்ச ஒழிப்பு வாரம் கொண்டாடு வது என்பது சோகமான ஒரு காமெடிதான்!

சட்டத்தை முழுமையாக மதிப்பவராக நீங்கள் இருந்தால்... சென்னை நகரத்தில் சாலையில் எங்கேனும் எந்தக் காவலராவது நிறுத்தி லஞ்சம் கேட்கும்போது, 'டிராஃபிக் ராமசாமி' என்று என் பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்கள் நகர்ந்து நிற்பார்கள். அப்படி உங்கள் ஒவ்வொருவரின் பெயரும் தவறு செய்பவர்களை விலகிச் செல்ல வைக்கும் வரை... லஞ்சத்தை ஒழிக்க முடியாது!
Source - vikatan
சந்திப்பு: ந.வினோத் குமார்
  

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற