திருக்குறள்

மகிழ்ச்சி வேண்டும்....

ஏழை, பணக்காரன் என எல்லோரும் விரும்பும் விஷயம் பணம். ஆனால் பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுக்காது. பீரோ நிறைய பணம் இருந்தும், எப்போது இன்கம்டாக்ஸ் ரெய்டு வருமோ என பயந்து கொண்டிருந்தால் அங்கு சந்தோஷம் இருக்காது. அதேபோல், கோடிக் கணக்கில் பணம் இருந்தாலும் ஆரோக்கியமாக இல்லையென்றால் அத்தனை பணமும் வீண். பொருளாதார ரீதியாக மக்கள் முன்னேறினால் போதாது, அவர்கள் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என பல நாடுகள் விரும்புகின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியை அளவிட ஜிடிபி உதவுகிறது. அதேபோல், தேசிய ஒட்டுமொத்த சந்தோஷத்தை அளவிட ஜிஎன்எச் என்ற அளவீட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். பூட்டானின் அரசராக இருந்த ஜிக்மே சிங்கே வாங்சுக் தான் முதலில் இதை உருவாக்கியவர். 1972ல் தந்தையிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்றதும், மக்களின் சந்தோஷத்தை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும் எனக் கூறினார். அதன்பிறகே அந¢த வார்த்தை பிரபலமானது. மக்களின் மன நலம், உடல் நலம், கல்வி, வாழ்க்கைத் தரம், அரசு நிர்வாகம் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் சந்தோஷத்தின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அளவீட்டின்படி, உலகிலேயே மகிழ்ச்சியாக இருப்பவர்கள் டென்மார்க் நாட்டவர்தான். 8.3 மதிப்பெண்ணுடன் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு 5.5 மதிப்பெண். நமக்கு முன்னால், அமெரிக்கா (7.4), இங்கிலாந்து (7.1), சீனா (6.3) நாடுகள் இருக்கின்றன.
எல்லா வசதிகளும் இருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என சொல்ல முடியாது. கல்வி, சுகாதார வசதி இல்லாதவர்கள் கூட மற்ற காரணங்களுக்காக மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கொல்கத்தாவை சேர்ந்த சமூக அறிவியல் நிபுணர் சுகதா மர்ஜித் கூறியிருக்கிறார். உங்கள் வருமானத்தையும் என் வருமானத்தையும் கூட்டினால் மொத்த வருமானம் கிடைக்கும். வகுத்தால் சராசரி கிடைக்கும். சந்தோஷத்தை எப்படி கூட்டி, வகுக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர் சிலர்.
இத்தனை கோடி ஏழைகள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5.5 மதிப்பெண் கிடைத்திருப்பதற்கும் காரணம் சொல்கிறார்கள். தங்களை விட கஷ்டப்படும் ஏழைகளைப் பார்த்து தங்கள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என சந்தோஷமாகி விடுகிறார்களாம்.
Source - Dinakaran

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற