திருக்குறள்

மக்களவைத் தேர்தலும் மக்களின் குழப்பமும்

15வது மக்களவையைத் தேர்வு செய்வதற்கான முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அறிவிக்கை செய்துள்ளதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், மேலும் ஒரு தேர்தலை எதிர்கொள்ளும் மக்களின் சிந்தனை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் அரசியல் கட்சிகளுக்கிடையே பயம் கலந்த குழப்பம் நிலவுகிறது.
இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் - அது தேச கட்சியாக இருந்தாலும் மாநிலக் கட்சியாக இருந்தாலும் - முழுமையான வெற்றியை அள்ளிக்கொண்டு போகும் அளவிற்கு ஆதரவு இல்லாத நிலையே கட்சிகளின் இந்தக் குழுப்ப நிலைக்கு காரணம்.
மாநிலக் கட்சிகளுடன் கூட்டு வைத்தாலும் அந்த அந்தந்த மாநிலங்களைத் தாண்டியதாக இருக்காது என்று காங்கிரஸ் கட்சி வீராப்பாக அறிவித்தது. ஆனால் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தியபோதுதான் தனக்கு இருக்கும் ‘மரியாதை’யை அக்கட்சி புரிந்து கொண்டது.
பீகார் மாநிலத்தில் மட்டும்தான் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடனும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சியுடனும் கூட்டணி என்று காங்கிரஸ் முழங்கியது. ஆனால் அவ்விரு கட்சிகளும் தங்களுக்குள் பேசி கூட்டணி அமைத்துக் கொண்டு, மொத்தம் உள்ள 40 இடங்களில் 37 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தன. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 3 இடங்களை மட்டுமே ஒதுக்கின.

கோபத்தால் கண் சிவந்த காங்கிரஸ் கட்சி, பீகாரி்ல் 37 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்து. அது மட்டுமின்றி, ஜார்க்கண்டில் செல்வாக்குப் பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சியுடன் கூட்டணி போட்டிக்கொண்டு லாலு பிரசாத்திற்கு பதிலடி கொடுக்க முற்பட்டது. அந்த கூட்டணி அறிவிப்பு ஒரு நாள் கூட நிற்கவில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரின் மகன் கூட்டணி அறிவிப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

80 மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள காங்கிரஸ் பேசியது. அதிகபட்சமாக 14 தொகுதிகள்தான் தர முடியும், வேண்டுமென்றால் எடுத்துக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்றது சமாஜ்வாடி. 25 தொகுதிகள் கேட்டு கிடைக்காமல் தனித்துப் போட்டி என்று அறிவித்தது காங்கிரஸ்.பீகாரிலும், உ.பி.யிலும் உள்ள 120 தொகுதிகளில் கூட்டணி அமைத்தால்தான் வெற்றி வாய்ப்பு என்ற நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, பலம் வாய்ந்த மூன்று மாநிலக் கட்சிகளின் துணையை இழந்ததால் வெற்றி வாய்ப்பற்று நிற்கிறது

காங்கிரஸிற்கு மட்டுமல்ல, மற்றொரு அகில இந்தியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் மாநிலக் கட்சிகளிடமிருந்து இதே ‘மரியாதை’தான் கிடைத்துள்ளது.ஒரிசா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுக் காலமாக பலமான கூட்டணியைக் கொண்டிருந்த பிஜூ ஜனதா தள கட்சியுடனான உறவு ஓரே நாளில் முறிந்ததில் அக்கட்சி அதிர்ச்சியடைந்தது. 21 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட ஒரிசாவில் பலமான துணையாக இருந்த பிஜூ ஜனதா தள கட்சியுடன் இருந்த உறவு அற்றுப் போனதில் வெற்றி வாய்ப்பு சற்றும் இல்லாத நிலையில் தேர்தலை சந்திக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

பாரதிய ஜனதா உறவு அறுந்த அடுத்த கனமே பிஜூ ஜனதா தளக் கட்சியை ‘மதச் சார்ப்பற்ற’ ஞானஸ்தானம் செய்து மூன்றாவது அணிக்கு இழுத்துக் கொண்டது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தும் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள சில சிறிய கட்சிகளைக் கூட வளைத்துப் போட முடியாத நிலையில் உள்ளது. சொந்த பலத்தை நம்பி தனித்து குதிக்கிறது தேர்தல் கடலில். இதே நிலைதான் பாரதிய ஜனதா கட்சிக்கும்.

2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தனி மாநிலம் கோரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியையும் இணைத்துக் கொண்டு பலமான கூட்டணி அமைத்துக்கொண்டு பாஜக பெட்டியை கழட்டிவிட்டது. நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யமும் சுழன்றடித்து பிரச்சாரம் செய்ய திக்குத் தெரியாத காட்டில் சிக்கிய குழைந்தை கதையாக தனித்து விடப்பட்டுள்ளது 6 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட தேசக் கட்சி.

1998,1999, 2004ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பலமான மாநிலக் கட்சிகளான தி.மு.க.வுடனும், அ.இ.அ.தி.மு.க.வுடனும் களம் கண்ட பாரதிய ஜனதா கட்சி, இம்முறை நேரடி சந்திப்பு, ரகசிய சந்திப்பு என்று எப்படியெல்லாமோ முயன்றும் பெரிய கட்சிகள் வராததால், முதலில் விஜயகாந்தை முயற்சித்தது, பிறகு சரத் குமாருடன் பேச்சு நடத்தி உடன்பாடு கண்டு தனித்து நிற்கும் நிலையை தவிர்த்துள்ளது.
அதிக தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலங்களில் மராட்டியத்தில் மட்டும்தான் காங்கிரஸும், பா.ஜ.க.வும் தங்களுடைய பழைய கூட்டணிக் கட்சிகளுடன் உறவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி, அசோம் கன பரிஷத் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இதைத்தவிர, தங்களுக்கு தனித்த பலம் இருக்கும் மாநிலங்களில் இக்கட்சிகள் இரண்டும் தனித்துதான் போட்டியிடுகின்றன. உதாரணத்திற்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா ஆகியன. கேரளத்தில் எப்போதும் இரண்டு அணிகள் மட்டுமே போட்டியிடும், இப்போதும் அதே நிலைதான். அங்கு எப்போதும் போல பாரதிய ஜனதா தனித்தே நிற்கிறது.
தேசக் கட்சிகளுக்கு ஏன் இந்த நிலை?
இப்படி இந்தியாவின் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் தேசக் கட்சிகளான காங்கிரஸையும், பாரதிய ஜனதாவையும் புறக்கணிக்கக் காரணமென்ன?
2004ஆம் ஆண்டில் நடைபெற்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ‘இந்தியா மிளிர்கிறது’ என்று முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்தது. அதன் 6 ஆண்டுக் கால ஆட்சியில் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும், தொழில் வளர்ச்சியிலும் எட்டிய சாதனைகளை முன்வைத்து அந்த முழக்கத்தை வைத்தது தேச ஜனநாயகக் கூட்டணி. அதனை மக்கள் ஏற்கவில்லை. சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல், பொதுவான மேம்பாட்டை ஒரு முழக்கமாக முன்வைத்ததை மக்கள் நிராகரித்தார்கள். விளைவு, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழந்தது.
5 ஆண்டுக்கால ஆட்சிக்குப் பின்னர் தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி (ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற பல மாநிலக் கட்சிகள் வெளியேறிவிட்டதால் ஒரு கூட்டணியாக காங்கிரஸ் தேர்தலை சந்திப்பதாக கருதுவதற்கில்லை) தனது சாதனையாக கடந்த ஆண்டுவரை எதையெல்லாம் கூறிவந்ததோ - பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சி, அன்னிய முதலீடு வருகை, உற்பத்திப் பெருக்கம் ஆகிய அனைத்தும் 2008ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவால் தலைகீழாக மாறியது. பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியது, ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து வருகிறது, தொழிலக உற்பத்தி பாதிப்பிற்குள்ளாகியுள்ளதால் வேலை இழப்பு அதிகரித்து வருகிறது, அயல் நாடுகளில் பணியாற்றி வந்த இந்தியர்கள் வேலையிழந்து நாடு திரும்பும் நிலை, விவசாய கடன் தள்ளுபடி செய்தும் இந்த நிலையாண்டிலும் 14,000த்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளது என்ற சற்றும் எதிர்பாராத ஒரு சூழலில் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலை சந்திக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் தங்களுடைய ஆட்சியின் திறமையால்தான் என்று அக்கட்சி கூறிவந்தது. ஆனால் உலகளாவிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக நமது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலையும், ஏற்றுமதி சரிவும் அதன் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பும் அதன் சாதனைகள் அல்லது காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பதெல்லாம் உலகளாவிய பொருளாதாரத்தோடு நமது பொருளாதாரமும் பின்னியிருந்ததன் விளைவுதான் என்பதையும், உலக அளவில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட போது அது நம்மை பாதித்ததிலிருந்தே உறுதியானது. ஆக, தங்களுடைய சாதனை இதுவென்று கூறுவதற்கு காங்கிரஸிடம் ஏதுமில்லை.
நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பும் மும்பை பயங்கரவாத தாக்குதலினால் கேள்விக்குறியதாகியுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நாங்கள் ஒரளவிற்கு வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூற முடியாத நிலை காங்கிரஸிற்கு. இந்த பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் பா.ஜ.க.வும் உள்ளது. மும்பைத் தாக்குதலை தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்திக்கொள்ள அக்கட்சி மேற்கொண்ட முயற்சி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதற்கு எந்தப் பயனையும் தரவில்லை.
எங்களின் சாதனை இது என்று கூறி மீண்டும் வெற்றியைத் தாருங்கள் என்று கேட்க காங்கிரஸ் கட்சிக்கு ஏதுமில்லை. அதே நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனை சாதிப்போம் என்று கூறுவதற்குக் கூட முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதுமில்லை என்ற நிலை. ஆக நமது நாட்டின் இரண்டு பெரும் தேசக் கட்சிகள் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை மாநிலக் கட்சிகளை தங்களை நோக்கி ஈர்க்கும் அல்லது இழுக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கை உறுதியாக பெற்றிருக்கவில்லை என்பதே இன்றைய யதார்த்தமாகும்.
நிலையான ஆட்சி தர எங்களை ஆதரியுங்கள் என்று கூட இவ்விரு கட்சிகளும் கூற முடியாது. காரணம் இரண்டு கட்சிகளுமே சிறுபான்மை எண்ணிக்கையில் இருந்தாலும் மற்ற கட்சிகளி‌ன் ஆதரவினால் கடந்த 11 ஆண்டுகளில் சிக்கலின்றி ஆட்சி செய்தன (அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட சவாலைத் தவிர எந்த அச்சுறுத்தலையும் மன்மோகன் அரசு எதிர்கொள்ளவில்லை). எனவே நிலையான ஆட்சி என்று கூறி வாக்கு கேட்கும் சூழலும் இல்லை.
ஆக, நமது நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுக்கு உள்ள மக்கள் செல்வாக்கே இந்தத் தேர்தலி‌ன் முடிவில் அமையவுள்ள ஆட்சியை தீர்மானிக்கும் நிலை உள்ளது.
ஆட்சியில் உள்ள மாநிலக் கட்சிகளும் மக்கள் செல்வாக்கை உறுதியாகப் பெற்றுள்ளனவா என்று பார்த்தால் அதுவும் பெரும்பான்மை மாநிலங்களில் இல்லை என்றே கூறலாம். உதாரணத்திற்கு கேரளா (இடதுசாரிக் கட்சிகளுக்கு இடையிலான அடிதடி, மார்க்ஸிஸ்ட் கட்சிக்குள்ளேயே அதிகார போட்டி), ஆந்திரா (ஆட்சிக்கு எதிரான மக்கள் மன நிலை), தமிழ்நாடு (இலங்கைப் பிரச்சனையில் மக்களின் கோபம்), மராட்டியம் (மும்பைத் தாக்குதல், விவசாயிகள் தற்கொலை, வேலையிழப்பு), மேற்கு வங்காளம் (நந்திகிராம் துப்பாக்கிச் சூடு), ஜார்க்கண்‌ட் (அரசியல் தடுமாற்றங்கள்), ஒரிசா (மதக் கலவரத்தால் சிறுபான்மை மக்கள் எதிர்ப்பு) உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் மன நிலை தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடியவை.
ஆக, தேசக் கட்சிகள் ஆனாலும் மாநிலக் கட்சிகள் ஆனாலும் எந்தவொரு கட்சியும் வலிமையான நிலையில் இல்லாத ஒரு அரசியல் சூழல்தான் எங்கும் நிலவுகிறது (டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் விதிவிலக்கு). இப்படிப்பட்ட அரசியல் சூழலில் எந்தக் கட்சிக்கு என்ன அடிப்படையில் வாக்களிப்பது என்று மக்களிடையேயும் ஒரு குழப்பம் நிலவுகிறது.
நமது நாட்டில் நடைபெற்ற தேர்தல்களை நன்கு ஆய்ந்து பார்த்தால் ஒவ்வொரு தேர்தலின் முடிவையும் நிர்ணயித்த ஒரு பிரச்சனையை அடையாளம் காண முடியும். பிரச்சனை ஏதும் இல்லாத சூழலில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்த நிலையும் உண்டு.
ஆனால் இம்முறை ஆட்சிக்கு ஆதரவான பிரச்சனை அல்லது சாதனை என்று ஏதுமில்லை. அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க மக்கள் நினைத்தாலும் மாற்றுச் சக்திக்கு சாதகமான அரசியல் சூழல் இல்லை.
பார்த்துப் பார்த்து சலித்துவிட்ட கட்சிகளுக்குத்தான் மீண்டும் வாக்களிக்க வேண்டுமோ என்ற நிலைதான் மக்களிடையே உள்ளது. இந்த நிலையில் இந்தத் தேர்தலின் முடிவு இதுவரை நமது நாடு கண்டிராத ஒரு திருப்பத்தை (அது பார்பதற்கு பலவீனமானதாக தெரிந்தாலும்) ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். அது நமது நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உகந்த ஒரு ஆட்சியைத் தருவதாகக் கூட அமையலாம். முடிவு வரை பொறுத்திருப்போம்.
- web duniya















பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற