நம்மைப் பாதிக்கும் உதவிகள்; நம்மைப் பாதிக்காத உதவிகள்; பாதித்தாலும் பரவாயில்லை எனும்படியான உதவிகள் என்று உதவிகளை மூன்றாக இரகம் பிரியுங்கள்। இப்படிப் பிரிக்கத் தெரிந்து கொண்டால் உதவுவதா? வேண்டாமா? என்பதில் தெளிவு பிறந்து விடும்.
வேறுவழியின்றித் தலையாட்டிவிட்டுப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள் உண்டு। இவர்கள் இதிலிருந்து விடுபட ஒரே வழி, மறுப்பது எப்படி என்கிற கலையைக் கற்றுக்கொள்வதுதான்.
அமெரிக்காவில் நூறு வெற்றியாளர்களை டான் டெக்கர் என்கிற பத்திரிகையாளர் பேட்டி கண்டார்। ``உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?'' என்று ஒரே ஒரு கேள்வியைத்தான் அத்துணைப்பேரிடமும் கேட்டார். பலரும் புளித்துப்போன காரணங்களையே சொன்னார்கள். ஒருவர் சொன்னார், ``I know how to say no’'என்று.
ஒரு வெள்ளையரிடம் 100 டாலர் கடன் கேட்டால் ‘‘I doubt very much whether I can give you this time; may be next time என்று பிரமாதமாக இழுத்து அழகுற மறுப்புச் சொல்லி விடுவார்।
நம்மிடம் உதவி கேட்பவர்களிடம், முடியாது; நடக்காது; சாத்தியமில்லை; மாட்டேன் என்று ஒரே சொல்லில் மறுப்பைச் சொல்லக்கூடாது। உறவும் நட்பும், தொழில் தொடர்பும் விட்டுப் போகும்.
வீரிய மருந்தில் நீர் கலப்பது போல் அந்த மறுப்பைப் பல வார்த்தைகளின் ஊடே பதித்து நீண்ட நீண்ட வாக்கியங்களாக ஆக்கி, ஏன் மறுக்க நேரிடுகிறது என்கிற விளக்கத்துடன் ஒரு நிமிடக் கலவையாகத் தாருங்கள்.
இப்படி நீளமாக மறுப்புச் சொன்னால், உங்கள் மறுப்பின் நியாய வாதங்கள் எதிராளிக்கும் பிடிபடும்। எதையும் இழக்க வேண்டாம் என்பதோடு வெற்றியும் சாத்தியம்!
- லேனா