திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் பக்கம் பக்கமாகப் பேசுகிற வசனங்கள் அவர்களின் அறிவிலிருந்து உதிப்பவை அல்ல. எழுதிக்கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்து கேமிராவுக்கு முன் ஒப்பிக்கும் கிளிப்பிள்ளைகளே இவர்கள்.
இதுகாறும், இரவல் வசனங்களையே பேசிப்பழக்கப்பட்டவர்கள், சில நடிகைகளைப் பற்றி ஒரு நாளிதழ் அவதூறு செய்தி வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் சொந்த வசனத்தைப் பேசியிருக்கிறார்கள்.
அவதூறு செய்த நாளிதழைக் கண்டிக்கிற பெயரில் கூடிய கூத்தாடிகள்கூட்டம் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும், அவர்களின் குடும்பத்துப்பெண்கள் மீதும் வார்த்தைமலத்தை வாரியிறைத்திருக்கிறது. தங்களின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் முக்கியக் காரணமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் மீது இந்தக் கூத்தாடிகள் வாசித்த குற்றப்பத்திரிகையில் ஒருவேளை நியாயம் இருக்கலாம், ஆனால் நன்றியுணர்ச்சியோ, நாகரிகமோ, கண்ணியமோ எள் அளவுமில்லை. மாறாக, வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் மூலம், இதுநாள்வரை அரிதாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் அசிங்கமான, அருவறுப்பான, ஆபாசமுகம் வெளிப்பட்டிருக்கிறது.
பத்திரிகையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?
திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகளை, அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதும் அங்கே வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இப்படியொரு கருத்தை முன்வைக்கிற நடிகர் சூர்யா, பொது விழாக்களில் ஆபாச உடையணிந்து வந்ததாக சில நடிகைகள் மீது வழக்குகள் பாய்ந்ததை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு பேசியிருக்கிறார். படுக்கையறையில் அணியும் உடைக்கும், பல பேர் கூடும் பொதுஇடத்திற்கு வரும்போது அணிய வேண்டிய உடைக்கும் வித்தியாசம் உண்டு.
இந்த அடிப்படைகூட தெரியாமல், திரைப்படங்களில் அணிந்தாலே ஆபாசம் என்று தணிக்கைக்குழு ஆட்சேபிக்கக்கூடிய படு ஆபாசமான உடைகளை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொதுவிழாக்களுக்கு அணிந்து வரும் எத்தனையோ நடிகைகள் இருப்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இதைத் தற்செயலாகவோ, தவறென்று தெரியாமலோ
செய்வதில்லை - அவர்கள்.
அங்க, அவயங்கள் தெரிவதுபோல் உடை அணிந்து வருவதென்பது, திரைப்படத்துறையினரின், குறிப்பாக - கதாநாயக நடிகர்களின் கவனஈர்ப்பைப்பெற விழையும் முயற்சியே அது. அதன் மூலம் பட வாய்ப்பைப்பெற முடியும் என்று நம்புகிற நடிகைகளுக்கு உடனடிப்பலன் கிடைத்து வருவதும் நாம் அறியாததல்ல! ஆபாச உடையணிந்து வரும் நடிகைகள் தங்களை மீடியாக்கள் புகைப்படம் எடுக்க வேண்டும், அவை பத்திரிகைகளில் வெளியாக வேண்டும் என்று விரும்பித்தான் கர்ச்சீப்பைக் கூட கட்டிக்கொண்டு வரத் தயாராக இருக்கிறார்கள்.
எந்தவொரு புகைப்படக்கலைஞனும், (சூர்யா சொன்னதுபோல்) நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து எடுத்த நடிகைகளின் புகைப்படங்களை தன் வீட்டில் மாட்டி வைத்துக்கொள்வதில்லை என்பதை இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறி கொதித்தெழுந்தவர் புரிந்து கொள்ள வேண்டும்.
''இந்த ஈனப்பயலுக....'' இதுவும் அவரே உதிர்த்த பொன்மொழிதான். அது மட்டுமல்ல, ''இவனுங்களை நசுக்கிடணும்..'' என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் சூர்யா. இதெல்லாம் சக நடிகைகள் மீது அவதூறு செய்தி வெளியிட்ட கோபத்தில் சம்மந்தப்பட்ட பத்திரிகை மீது மட்டும் இவர் கக்கிய அனல் என்று அறிவுள்ள எவரும் நம்பமாட்டார்கள்.
ஆங்கில வழிக்கல்வி கற்ற அவர் வேண்டுமானால், ஒருமைக்கும், பன்மைக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கலாம், மற்றவர்களும் தன்னைப்போலவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது அறிவான செயல் அல்ல! கம்பராமாயணத்தைக் கரைத்துக்குடித்த அவரது தந்தை சிவகுமாரிடம் தமிழ் கற்றுக் கொண்டு இனி மேடையில் முழங்க வேண்டும் என்பதே சூர்யாவுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்!
அது மட்டுமல்ல, தான் பேசிய பேச்சு நியாயமானது, அதில் தவறில்லை என்று அவர் கருதினால் கடைசிவரை தன் கருத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதுதான் நேர்மையாகவும் இருக்கும். பல பேர் கூடியிருக்கும் சபையில் பகிரங்கமாக ஈனப்பிறவிகள் என்று இழித்துப்பேசிவிட்டு, அதன் விளைவுகள் கடுமையாய் இருக்கும், அது தன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தெரிந்த பிறகு, 'ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் நான் பேசவில்லை', 'பத்திரிகை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கிருக்கிற ஆரோக்கியமான நல்லுறவை நான் மதிக்கிறேன்' என்று பல்டியடிப்பது ஏன்? சூர்யாவுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். 'நசுக்குவதற்கு நாங்கள் ஒன்றும் மூட்டைப்பூச்சிகள் இல்லை நண்பரே! உங்களைப் போன்றவர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள்!'
அதே மேடையில் 'நான் மானஸ்தன்' என்று மார்தட்டியதோடு, தன்னை கவரிமானுக்கு நிகரானவராகக் காட்டிக்கொண்ட மூத்த நடிகர் விஜயகுமாரோ, 'உங்க அக்காத்தங்கச்சிங்களை கவர்ச்சியாய் படம் எடுத்து பத்திரிகையில் போடுங்க' என்று ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்துக்கே அரியதொரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவதூறு செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இப்படி பேசியிருக்கும் விஜயகுமாருக்கு அவருடைய பாஷையிலேயே பதில் சொல்வது நமக்கு மிக எளிதானதுதான்.
அதைவிட, அந்த கண்டனக்கூட்டத்தில் ரஜினி பேசியதையே விஜயகுமாருக்கு பதிலாக சொல்வது பொருத்தமாக இருக்கும். ''நீங்க எப்படிப்பட்டவங்க என்பது உங்கள் குடும்பத்துக்கு தெரியும், உங்கள் நண்பர்களுக்குத் தெரியும், உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேலே கடவுளுக்குத் தெரியும்.!'' இதுதான் ரஜினி சொன்னது.
மேடைகளில் பேசும்போது குட்டிக்கதைகள் சொல்லும் ரஜினி, இம்முறை பேசியதும் 'குட்டிக்கதை'தான். இதன் உள்ளர்த்தம் புரிகிறவர்களுக்குப் புரியும். மக்களுக்குப் புரிகிறதோ இல்லையோ.. குறைந்தபட்சம் கோடம்பாக்கத்துக்குப் புரியும்.
தன் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ விருதை பெருமையுடன் போட்டுக் கொள்ளும் கமல் அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் ஒரு வேண்டுகோள்! இனி பத்மஸ்ரீ பட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.! ஏனெனில், நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படங்களில் மிமிக்ரி செய்து பிழைக்கும் விவேக்குக்கு வழங்கப்பட்டபோதே பத்மஸ்ரீ விருது, தன் பெருமையையும், கௌரவத்தையும் இழந்துவிட்டது.
இப்போது அதே விவேக்கினால் பத்மஸ்ரீ விருது இன்னொரு தடவை அசிங்கப்பட்டிருக்கிறது. அவதூறு செய்தியில் அவருக்கு நெருக்கமான நடிகை அஞ்சுவையும் சேர்த்துவிட்டார்களே என்ற ஆத்திரமோ என்னவோ.. தன் பேச்சில் ஆபாசத்தின் உச்சத்தைத்தொட்டிருக்கிறார் இந்த விரசகவி.
பத்திரிகையாளர்கள் அனைவரும் தன் குடும்பத்துப் பெண்களின் புகைப்படத்தை இவரிடம் கொடுக்க வேண்டுமாம். அந்தப் புகைப்படங்களில் உள்ள பெண்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஜட்டியும், பிராவும் அணிவித்து அதை உலகம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டப்போவதாக கொக்கரித்திருக்கிறார் இந்தக்கோமாளி. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கங்களையும், நட்சத்திர ஹோட்டல்களில் இவர் நடத்துவதாக நம் காதுக்கு வருகிற பாலியல் லீலைகளையும் பட்டியலிட்டால், இவரை புகழின் உச்சியில் அமர்த்திய தமிழக மக்களே இந்தக்கோமாளியை தமிழ்நாட்டிலிருந்தே ஓடஓட விரட்டியடிப்பார்கள்.
தன்நிலை மறந்த ஒரு குடிகாரனைப்போல் பொதுமேடையில் ஆபாசஉரை நிகழ்த்திய இந்த அதிமேதாவி, பத்மஸ்ரீ விருதுக்கு மட்டுமல்ல, சின்னக்லைவாணர் என்ற அடைமொழிக்கும் அருகதையற்றவர்தான்.
தன் நகைச்சுவை மூலம் மக்களை சிந்திக்க வைத்த கலைவாணர் எங்கே?
திரையில் கோமாளியாய், நிஜத்தில் இழிபிறவியாய் இரட்டைமுகம் காட்டும் இவர் எங்கே?
இந்தியத்திருநாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீயை உடனடியாய் இவரிடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதே நாம் வைக்கும் கோரிக்கை!
பெயரில் மட்டுமே விவேகத்தை வைத்திருக்கும் இந்தக் கோமாளியின் பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது தெரிந்ததும், அவசர அவசரமாக ஒரு அறிக்கையை அனுப்புகிறார். 'நான் பொதுமக்களை அழைத்துப்பேசிய கூட்டமல்ல அது, என் கலைக்குடும்பம் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட கூட்டம்' இதுதான் அந்தத் தன்னிலை விளக்கத்தின் சாரம்சம்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தை தன் மகளுக்கு நடந்த பூப்புனித நீராட்டுவிழா என்று நினைத்துக்கொண்டாரா இவர்? பெற்ற அம்மாவையே வயோதிகக்காலத்தில் கவனிக்க வக்கத்துப்போன இவர் கலைக்குடும்பத்தைப் பற்றிக்கவலைப்படுவதும், பேசுவதுவும் வேடிக்கைதான். சாத்தான் வேதம் ஓதுகிறது!
கிராபிக்ஸில் ஜட்டி, பிரா போட்டு போஸ்டர் அடிக்க முன்வந்த விவேக்கிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார் சத்யராஜ். ''சின்ன சைஸ் ஜட்டி, பிராவாகப் போடுங்க. வேணும்னா நானே வாங்கித்தர்றேன்'' இதுதான் புரட்சித்தமிழன் அங்கே வைத்த வேண்டுகோள்.
பத்திரிகையாளர்களின் மனைவி, மகளும் தமிழச்சிகள்தான் என்பதை மறந்துவிட்ட. புரட்சித்தமிழனுக்கு பொதுவிழாக்களில் ஆபாசமாகப்பேசுவது புதிதல்ல. சில வருடத்துக்கு முன் ஓகேனேக்கல் பிரச்சனைக்காக திரைப்பட நட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின்போதும் இப்படித்தான் கெட்ட வார்த்தைப்பேசி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினார்.
பெண்ணினத்துக்காகப் போராடிய பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிறவராக தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் சத்யராஜிடம் வைக்கவும் ஒரு கோரிக்கை இருக்கிறது. 'தயவு செய்து இனி பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்காதீர்கள்!'
நடிகைகளின் கற்பைக் காப்பாற்றக் கிளம்பிய இந்த கற்புக்கரசர்களைப்பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவர்களிடம் கேட்கவும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன.சில கேள்விகளை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.
* தமிழ்த்திரைப்படத்துறையில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதே. அதன் அர்த்தம் என்ன?
* சினிமாவில் கதாநாயகியாக நடிக்க விரும்பி வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகளிடம் நீங்கள் போடும் முதல் கண்டிஷன் என்ன?
* கதைக்குத் தேவையில்லை என்று தெரிந்தும் கதாநாயகி சகிதமாக வெளிநாட்டில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறீர்களே ஏன்?
* உங்களுக்கு ஜோடியாக இன்னார்தான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்களே..ஏன்?
* உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளை எந்த அடிப்படையில் சிபாரிசு செய்கிறீர்கள்? கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் என்றா? அல்லது....?
வெளிப்புறப்படப்பிடிப்புக்கு செல்லும்போது கதாநாயகி தங்கும் அறைக்குப் பக்கத்திலேயே எனக்கும் அறை வசதி செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுவது ஏன்?
* விபச்சார வழக்கில் சிக்குமளவுக்கு நடிகைகளின் வாழ்க்கை சீரழிந்ததற்கு யார் காரணம்?
* நடிகைகளின் வாழ்க்கை துயரமானது என்று கிளிசரின் இல்லாமலே கண்ணீர் வடிக்கிறீர்களே? அவர்களின் துயரத்துக்கு யார் காரணம்?
* சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கம் தொடர்பான மோதலில் விஜயகுமாரும், ராதாரவியும் எதிரெதிர் அணியில் இருந்தபோது, 'விஜயகுமார்வீட்டில் அறுபது அறைகள் இருப்பது ஏன்?' என்று ராதாரவி பத்திரிகைப்பேட்டிகளில் கேள்வி எழுப்பினாரே? அதற்கான பதிலை இன்னமும் விஜயகுமார் சொல்லாமல் இருப்பது ஏன்?