காலச் சக்கரம் முன்னே சுழலச் சுழல, காலங்காலமாக மிதி வண்டியில் "க்ளிங்... க்ளிங்... க்ளிங்..." ஓசையுடன் வந்து அஞ்சல்காரர் கொடுக்கும் கடிதங்கள் குறைந்து கொண்டே இருக்கின்றன.
இன்றைய குழந்தைகள் அஞ்சல் அட்டையையும் (Post Card), இன்லேண்ட் லெட்டரையும் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.
தொலைப்பேசி, செல்பேசி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் வந்த பின்னால் கடிதங்களின் போக்குவரத்து குறைந்து தான் இருக்கிறது. தொலைப் பேசியில் ஒருவர் பேசுகையில், பேசி முடிக்கும் முன்னரே, எதிர் முனையில் இருப்பவர் இடை மறித்துப் பேசக் கூடும். இப்படி இடையில் பேசி குறுக்கிடும் இடைஞ்சல்கள் அஞ்சல்களில் இல்லை.
இவ்வாறாக கடிதம் எழுதுவதில் ஒரு சௌகரியமும் இருக்கிறது. நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவர், நாம் சொல்ல வேண்டியதை சொல்லி முடிக்கும் வரை, அதாவது எழுதியதைப் படித்து முடிக்கும் வரை எதிர்ப் பேச்சு எதுவும் பேச முடியாது. இன்றும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்கும் படலம் முடிந்தவுடன், "ஊருக்கு போய் கடிதம் போடுகிறோம்," எனக் கூறுவது இதற்குத் தான் போலும்.
கடுதாசிகளில் பல வகை உண்டு. அவற்றில் ஒரு புதிரான கடுதாசிதான் மொட்டைக் கடுதாசி. திருப்பதியில் போய் மொட்டைப் போட்ட ஒருவரை கண்டுபிடிப்பது எப்படி மிக சுலபமோ, அவ்வளவு சுலபம் இந்த மொட்டைக் கடுதாசி எழுதியவரைக் கண்டுபிடிப்பதும்(!).
கடிதங்கள் வரலாறு ஆன கதைகளும் உண்டு. ஜவஹர்லால் நேரு சிறைச்சாலையில் இருந்து மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், "Glimpses of World History" என ஒரு வரலாற்று புத்தகமாக வந்தது.
கடிதங்கள் பல செய்திகளையும் தாங்கி வருகின்றன. 'இந்த முறையும் ஊர் திருவிழாவுக்கு வர இயலாது', 'விதை நெல் வாங்க பணம் வேறு எங்காவது புரட்ட முடியுமா என்று பார்த்து கொள்ளுங்கள்', 'இந்தக் கோடை விடுமுறையில் குழந்தைகள் நீச்சல் பயிற்சி செல்வதால் இந்த விடுமுறைக்கும் குழந்தைகள் கிராமத்துக்கு வர முடியாது', 'அண்ணாச்சி மகன் திருமணத்துக்கு என் பெயரில் 100 ரூபாய் மொய் எழுதி விடவும்', 'எனக்கு அலுவலகத்தில் தவிர்க்க முடியாத வேலை இருக்கிறது', 'உங்களுக்கு ஒரு பேரன் பிறந்திருக்கான். கைக்குழந்தையும் மருமகளும் சுகம்', 'குழந்தையை உங்கள் மருமகளின் மதத்தில் பதிந்திருக்கிறோம்...'
இவ்வாறாக கடிதங்கள் இயலாமை, மறுப்பு, வெறுப்பு, துக்கம், கோபம், மகிழ்ச்சி என மனிதர்களின் பல்வேறு உணர்வுகளையும் தாங்கிக் கொண்டிருக்கின்றன.
கிராமங்களில் படிக்கத் தெரியாதவர்களுக்கு கடிதம் படித்துக் கொடுப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. படித்து முடித்தவுடன், கடிதத்தில் இருந்த செய்திக்கேற்ப பத்து பைசாவோ, ஐம்பது பைசாவோ கிடைக்கலாம். பெட்டிக் கடைகாரருக்கு கடிதம் படித்துக் கொடுத்தால் தேன் மிட்டாயோ, புளிப்பு மிட்டாயோ கிடைக்கக் கூடும்.
கிராமங்களில் எழுதத் தெரியாதவர்களுக்கும் கடிதம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்டோர் கடிதம் எழுத பெரும்பாலும் சிறுவர்களையே எழுதித் தர சொல்லுவார்கள். அப்போது வெளியிடக்கூடாத (Off the Record) செய்திகள் பலவும் வெளிவரும். ஆனாலும் செய்தியின் முக்கியம் கருதி அதைக் கடிதத்தில் பதிய வேண்டாம் என்றும் சொல்லி விடுவார்கள். இப்படியாக கடிதங்கள் புழுங்கிய மனங்களின் மிச்சம் ஒட்டி இருக்கும் சிறிது சந்தோஷங்களை மட்டுமே செய்திகளாக சுமந்துச் செல்கின்றன.
இன்றும் கிராமங்களில் கூரை வீடுகளின் கொக்கியில் தொங்கும் கடிதங்கள், கடந்த கால் நூற்றாண்டில் மனிதனின் படிமமாக இருக்கின்றது.
அந்தக் கடிதங்கள் வெறும் காகிதங்கள் அல்ல, காலத்தை கடந்து வந்த மனித மனங்களின் பதிவுகள்.
கடந்த காலங்களில் கிராமத்தை விட்டு நகரம் என்னும் நரகத்தை அடைந்த மகன், மகள், பேரன், பேத்தி என உறவுகளின் இதயத்தை தாங்கி கொண்டு இன்றும் கடிதங்கள் கொக்கியில் ஏக்கத்துடன் தொங்குகின்றன, என்றாவது ஒரு நாள் இதை எழுதிய மனிதர்களை பார்த்து விட மாட்டோமா என்று.
கொக்கியில் தொங்கும் அந்த கடிதங்கள் இன்னும் 'கனத்துக் கொண்டும்', 'காத்துக் கொண்டும்' இருக்கின்றன!
நன்றி > - ஹரீஷ்