தேதிக்கு சினிமா தொழிலாளர்களின் ஹீரோவா? அதுவும் இல்லை என்றால்... அஜீத்துக்கும் ரஜினிக்கும் எதிராக இவர் போலீஸ் வரை போயிருப்பதே வெறும் ஸ்டண்ட்தானா?' - இதுதான் 'ஜாகுவார்' தங்கம் பற்றி தமிழ் சினிமா முழுக்கப் பரபரக்கும் பேச்சு!
அஜீத், ரஜினி பற்றி அடுத்தடுத்து இவர் சொன்ன கருத்தாலும், அஜீத் பேரில் போலீஸில் இவர் கொடுத் திருக்கும் கொலை முயற்சி புகாராலும்... 'ஜாகுவார்' தங்கத்தின் எம்.ஜி.ஆர். நகர் வீட்டில் நாடார் சமூகத் தலைவர்களும், ஃபெப்ஸி அமைப்பில் உள்ள சினிமா பிரமுகர்களும் சரமாரியாகக் குவிந்தபடி உள்ளனர். அதுவும் தவிர, திருமாவளவனும் சீமானும் அவரவர் இயக்கத் தொண்டர்களோடு சேர்ந்து சென்று 'ஜாகுவாரை' தைரியப்படுத்தி விட்டுத் திரும்பியிருக்க... விவகாரம் படுவிறுவிறுப்பாகி இருக்கிறது!
இந்நிலையில், நம்மை நேரில் சந்தித்தபோது 'படுவிவரமாகவே' மூச்சு விடாமல் பேச ஆரம்பித்துவிட்டார் இந்த ஸ்டண்ட் மாஸ்டர்!
'சினிமாத் துறையில் பல்வேறு பிரிவுகள் இருக்கு. இதில் ஹீரோக்கள் மட்டும் ஒரு தனி சாதியாத்தான் நினைச்சுக்கிட்டு உலாத்தறாங்க. கோடி கோடியா இவங்க சம்பளம் வாங்கறது பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனா, முகத்துக்கு மேக்-அப் போடுற தொழிலாளி தொடங்கி... இவங்களுக்கு டிரஸ் மாட்டிவிடுற காஸ்ட்யூமர்... மத்தியானம் சோறு போடுற தொழிலாளினு யாரையெல்லாம் இவங்க சார்ந்திருக்காங்களோ... அவங்க நிலைமையை துளிகூட யோசிச்சுப் பார்க்காம பேசிக்கிட்டு இருக்காங்க ரஜினியும் அஜீத்தும்!
இவங்களுக்கு வேணா, அரசாங்கத் தோட தயவு தேவையில்லாம இருக்கலாம். ஒரு விழாவுக்கு வரும்போதும், இவங்க வீட்டுக் கல்யாணம்-காது குத்துக்கு பெரிய மனுஷங்க வரும்போதும்... போலீஸ் பாதுகாப்புக்கு மட்டும் அரசாங்கத்தோட தயவு தேவையா இருக்கலாம்! அரசாங்கம் ஒதுக்கிக் கொடுக் குற நிலம் இவங்களுக்குத் தேவையில்லாம இருக்கலாம். அரசாங்கம் தர்ற வரிச் சலுகை பத்தியும் இவங்களுக்கு கவலை இல்லாம இருக்கலாம். ஏன்னா, மூணு-நாலு தலைமுறைக்கு இவங்களுக்கு சொத்து இருக்கு! நடிச்சு முடிச்ச பிறகு படம் ஓடினாலும், ஓடாட்டியும் இவங்களுக்கு நஷ்டம் எதுவும் கிடையாது. ஆனா, கடந்த 6-ம் தேதி தமிழக முதல்வருக்கு நேரு ஸ்டேடியத்தில் பாராட்டு விழா எடுத்த மூன்று அமைப்புகளில், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் 'ஃபெப்ஸி' அமைப்புக்கும் இந்த அரசாங்கத்தோட தயவு தேவையா இருக்கு!
கோடி கோடியா பணத்தைப் போட்டுப் படம் எடுக்கிற தயாரிப்பாளர்களையும் சேர்த்தே இந்த அரசாங்கத்துக்கு பகையாளி ஆக்கப் பார்க்குறாங்க அஜீத்தும் ரஜினியும். எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு விருந்தாளியா வந்தவங்களில் ஒருத்தர், அந்த மேடையில வெச்சு எங்க வாழ்க்கையைக் கெடுக்கற மாதிரி பேசிட்டுப் போறதும்... இன்னொருத்தர் எழுந்து நின்னு அதுக்குக் கைதட்டுறதும் என்ன நியாயம்? அத்தனையும் பார்த்துக்கிட்டு முதல்வர் சும்மா உட்கார்ந்திருக்காருன்னா... அது அவரோட பெருந்தன்மை!
குந்தவைக்கறதுக்கு இடம் இல்லாம எழுபது வருஷமா தவிச்சுக்கிட்டு இருக்குற ஏழை சினிமா தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமானது. லைட் பாய், சமையல் பிரிவில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தினக்கூலி முறையே 350, 390 ரூபாய். அதுவும் கூட சமீபகாலமாத்தான் இந்தத் தொகை. ஒரு லைட் மேன் காலைல மூணு மணிக்கே எந்திரிக்கணும். அப்பத்தான், படப்பிடிப்புக்குப் பயன்படுத்துற இரும்பு ஸ்டாண்ட் உள்பட பல சாமான்களை எடுத்துக்கிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்து, லைட்களை செட்டப் பண்றதுக்குள்ள தாவு தீர்ந்துடும். ஹீரோ மட்டும் கரெக்டா ஷூட்டிங் தொடங்கற நேரத்துக்கோ... லேட்டாவோ வந்து சேருவாரு. வந்ததும் கேரவன்ல குளுகுளுனு போய் உட்கார்ந்துக்குவாரு! செல்போன்ல பேசிச் சிரிச்சுக்கிட்டே பொழுதை ஓட்டுற ஹீரோவை வெளியே 'ஷாட்'டுக்கு வரவைக்கிறதுக்கு அசிஸ்டென்ட் டைரக்டர்கள் படுற பாடு இருக்குதே... நேரில் பார்த்தா கண்ணுல தண்ணி வந்துடும்.
லஞ்ச் பிரேக் எல்லாருக்கும் ஒரு மணி நேரம்னா, லைட்பாய்ஸுக்கு கால் மணி நேரம்தான்! அதுக்குள்ளே அடுத்த ஷாட்டுக்கான லைட்டிங் செட் பண்ற பரபரப்புல இறங்கிடுவாங்க. சாயங்காலம் ஆறு மணிக்கு ஷூட்டிங் முடியுதுன்னா... சில ஸ்டாருங்க அஞ்சு மணிக்கே டைரக்டர்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பிடுவாங்க. ஆனா, லைட்மேன்களும் மத்த பல தொழிலாளிகளும் ஏழு, எட்டு மணி வரை இருந்து எல்லாத்தையும் சேகரிச்சு எடுத்துக்கிட்டுத்தான் கிளம்பணும். வீடுபோய் சேர எப்படியும் ராத்திரி 11 மணியாகும். இந்த அழகுல எங்க குடும்பத்தை நாங்க எங்கே கவனிக்குறது?
டான்ஸ் குரூப், ஸ்டண்ட் குரூப்னு ஒவ்வொரு பிரிவினருக்கும் இப்படி பல கஷ்டங்கள் இருக்குது. பையனூர் பக்கத்துல 115 ஏக்கரா இடத்தை முதல்வர் எங்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கறாருன்னு கேள்விப்பட்டதுமே, அத்தனை சந்தோஷப்பட்டோம். அதுல வீடும் கட்டித் தர்றதா இருந்துச்சு. இதுக்காக பாராட்டு விழா நடத்துற நாளை தீபாவளி, பொங்கல் மாதிரிதான் நினைச்சுக்கிட்டு, கோடம்பாக்கத்துக்கு லீவு விட்டுட்டு சந்தோஷமா ஒண்ணு திரண்டோம். ஹீரோக்களை வீடு வீடா போயி தங்கத் தாம்பாளம் வைக்காத குறையாக, மரியாதை கொடுத்துதான் கூப்பிட்டாங்க எங்க சைடுல! யாரையும் மிரட்டலை. மிரட்டல்னா என்ன அர்த்தம்? 'முதல்வருக்கு நடக்கப்போற விழாவுக்கு ஆளுக்கு 40 லட்சம் பணம் கொடுக்கணும்'னு மிரட்டினோமா? உங்களைத் தங்கத்துல வச்சு தாங்குற தொழிலாளர்களை நீங்க தகரத்தைவிட கேவலமா நினைக்கறது சரியா?
அரசாங்கம் இருக்கட்டும்.... இந்த ஹீரோக்கள் நினைச்சுருந்தா ஒண்ணு சேர்ந்து பணத்தைப் போட்டு எல்லா தொழிலாளருக்கும் ஈஸியா வீடுகட்டிக் கொடுத்திருக்கலாமே... ஏன்.. இதுக்காக ரஜினி சார் ஒரு படத்தை இலவசமா நடிச்சுக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவார்? ஆனா, உங்க யாருக்குமே அந்த பெரிய மனசு இல்லை..! அப்படி பெரிய மனசோட குடுக்கறவங்களையும் எரிச்சல்படுத்தி, எங்களை தொடர்ந்து பிளாட்பாரத்துலயே இருக்கவைக்கப் பார்த்தா எப்படிப் பொறுக்க முடியும்?
இந்த விழாவை மட்டுமில்லே... தமிழ் உணர்வுக்காக அழைக்கப்பட்ட மற்ற நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் குறிப்பிட்டுத்தான் அன்னிக்குப் பேசினார் அஜீத். நான் அவரைக் கேக்குறேன்.... எங்களோட தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களைக் கொத்துக்கொத்தா கொன்னு குவித்தபோது, அதுக்கு எதிர்ப்பாக உணர்வுபூர்வமாக குரல் கொடுக்கிற கூட்டத்துக்குக்கூட நீ வரமாட்டேன் என்பது என்ன நியாயம்? தமிழன் காசு கொடுத்து வாங்குகிற டிக்கெட் பணத்தில்தானே இன்னிக்கு முப்பதடி உயரம் கேட் போட்ட பங்களாவுக்குள் நீ இருக்கிறே?
மதம், மாநிலம், சாதி எதையும் பார்க்காம எல்லா ஹீரோக்களுக்கும் வெளிச்சம் காட்டுற தொழிலாளிகள்தான் நாங்க... எந்த மாநிலத்துக்காரராக இருந்தாலும், வித்தியாசம் பார்க்காம உயிரைக் கொடுத்து டூப் போடுறவங்க நாங்க... ஆனா, அதுக்கேத்த மனிதநேயம் மருந்துக்காவது உங்ககிட்டே இருக்கா?
இப்ப கேட்டாலும், 'மேடையில் பேசுனது நியாயம்'னு அஜீத்தும் ரஜினியும் சொல்றதுக்குப் பேர் வீரமா? அப்ப என் கேள்விக்கு இப்போ பதில் சொல்லுங்க..! என் வீட்டுல ஆளுங்க வந்து அடிச்சாங்க... காரை உடைச்சாங்க... என் மனைவிக்குக் காயம் ஏற்படுத்தினாங்க. இதெல்லாம் அஜீத்தும், ரஜினியும் விரும்பி நடக்கலைன்னா... இந்நேரம் எனக்கு ஒரு போன் பண்ணியாச்சும் ஆறுதல் சொல்லியிருக்கலாமே. 'ஏன் மாஸ்டர் எங்களுக்கு எதிரா கருத்துச் சொன்னீங்க? எதுவா இருந்தாலும், உங்க மீது தாக்குதல் நடத்த வந்தது யாராக இருந்தாலும், அது தப்புதான்...'ன்னு ஆறுதலா நாலு வார்த்தை சொல்லியிருக்கலாமே! ஏன் இதுவரை சொல்லலை? அதான் நான் சொல்றேன்... என்னைத் தாக்க வந்த கும்பலுக்குப் பின்னால் இவங்களோட விருப்பமும் இருக்குன்னு!
'காளி' படத்துல சண்டைக் காட்சி எடுக்கப்பட்டப்போ, தீ விபத்து ஏற்பட்டுச்சு. அதுல ஸ்டண்ட் நடிகருங்க பரிதாபமா உயிரை விட்டாங்க. ஏன்... 'ப்ளட் ஸ்டோன்', 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்களில் ரஜினிக்கு நானே டூப்பா உயிரைப் பணயம் வெச்சு சண்டை போட்டிருக்கேன். அப்படிப்பட்ட என் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், என் வீடு மீது தாக்குதல் நடக்குதுன்னா... அந்த சமயத்துல ஒரே ஒரு வார்தையாவது ரஜினி போனில் கூப்பிட்டு ஆறுதல் சொல்லியிருக்கக் கூடாதா? அப்படி நான் எதிர்பார்க்குறது தப்பா?
சிரஞ்சீவி கட்சி பத்தி 'இதுதாண்டா போலீஸ்' ராஜசேகர் ஏதோ சொல்லப் போயி... அவரோட குடும்பத்தை சிலர் வழிமறிச்சுத் தாக்குனாங்க. உடனே அந்த சமயத்துல சிரஞ்சீவி துளிகூட தாமதிக்காம நேரா ராஜசேகர் வீட்டுக்கே போயி, அவரிடமும் ஜீவிதாவிடமும் வருத்தம் தெரிவிச்சாரே... அந்தப் பண்பு ஏன் இங்கேயில்ல? அதுமாதிரி இங்கேயும் நடந்திருந்தா, அஜீத் மற்றும் ரஜினி மேல் எனக்கு சந்தேகம் வந்திருக்குமா?
இதே அஜீத் நடிச்ச 'பகைவன்', 'அவள் வருவாளா' படங்கள்ல நான்தான் ஸ்டண்ட் மாஸ்டரா ஒர்க் பண்ணேன். அஜீத்துக்கு இடுப்பு எலும்புல பாதிப்பு ஆகிப் போச்சு. அதனால சப்போர்ட்டுக்கு பேட் வெச்சுக் கட்டித்தான் சண்டை காட்சிக்கு கேமரா முன்னாடி வருவாரு. அவருக்கு எப்பவுமே நிறைய ஸீன்ல டூப் வச்சுத்தான் ஷூட் பண்ணுவோம். வாகினி ஸ்டுடியோவில் 'பகைவன்' படத்துல நடிக்கும்போது, அவருக்கு டூப் போட்டு நடிச்ச ஒரு பையன் லாரியிலிருந்து கீழே விழுந்து ரத்தக் களறியாக் கிடந்தான். அஜீத் அப்போ 'என்ன ஏது'ன்னுகூட கண்டுக்கலை. இப்ப நான் கேக்குறேன்.... அடிபட்டது தமிழன்... அஜீத் மலையாளி! அதனாலதான் ரத்த பாசம் வராமப் போயிடுச்சா?
ஜனங்களுக்கு சில ஹீரோக்களைப் பத்தி இன்னும் முழுசா தெரியலை. அந்த ஹீரோக்கள் தமிழ் ஆளுங்களை நம்பி, தங்கள் பக்கத்துல வெச்சுக்க மாட்டாங்க செக்யூரிட்டியைக்கூட அவங்க மொழிக்காரங்களா பார்த்துதான் வச்சுப்பாங்க. நான் கொஞ்சங்காலத்துக்கு முன்னாடி செக்யூரிட்டி ஏஜென்சி வச்சு நடத்தினேன். இப்போ தமிழ் சினிமாவுல முன்னணியில் இருக்கிற தெலுங்கு குடும்பத்து ஹீரோ ஒருத்தர், 'ஒரு தெலுங்குக்கார ஆளைத்தான் தனக்கு செக்யூரிட்டியா அனுப்பி வைக்கணும்'னு என்கிட்டேயே கேட்டார்!
ரஜினி சார்... ஒரு தடவை நீங்களே என்கிட்டே வந்து, 'நான் ஒருநாள் வாகினி ஸ்டுடியோ வாசலுல இருக்குற பிளாட்பாரத்துல படுத்துக் கிடந்தேன். அப்போ போலீஸ் புடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு. அப்புறமா வெளியில விட்டாங்க'ன்னு சொல்லிருக்கீங்களே... ஞாபகம் இருக்கா? அன்னிக்கு பிளாட்பாரத்துல படுத்துக் கிடந்த உங்களோட ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது இந்த தமிழ் ஜனங்கதான்னு பிறகு சினிமாவுல நீங்களே பாடினீங்களே..! உங்களை மாதிரி ஹீரோக்களுக்காக ஒரு படி ரத்தம் சிந்தினாலும், சினிமா தொழிலாளிங்க ஒரு கிராம் தங்கமாவது கண்ணால பார்க்க முடியுமா?
கேரளாவுலயோ... கர்நாடகாவுலயோ தமிழன் ஒருத்தனை அல்டிமேட் ஸ்டாராக ஏத்துக்கிட்டாங்களா? தமிழன் உங்களையெல்லாம் ஏத்துக்கிட்டானே? அப்ப தமிழனுக்கு ஒரு பிரச்னைன்னா, மத்த வேலைகளை விட்டுவிட்டு நீங்க ஓடி வந்தாத்தான் என்ன?'' எங்கள் வலி தெரியாமல் விளையாட வேண்டாம்! என்ற வேதனையோடு முடித்தார் 'ஜாகுவார்' தங்கம்!
- விகடன்