ஐந்தில் வளையாதது
ஐந்நூறில் வளைந்தது
அதிகாரியின் கை எழுத்து
தரிசனம்
பாலில் குளித்து
பஞ்சாமிர்தம் பூசி
சந்தனம் மணக்க
கல்லுக்கு அபிஷேகம்
பசியோடு நீட்டிய
பக்தனின் கையில்
சாம்பல்
*
உண்மை
வாய் கூசாமல்
பொய் சொல்கிறார்கள்
முள் குத்தியதாம்
செருப்பு கடித்ததாம்
கல் தடுக்கியதாம்
*
நிதர்சனம்
மாடு தாண்டி
குதிரை ஏறி
எந்திரங்களில் தொற்றிப்
பயணம் போன
மனிதன் மீதேறிப்
பயணிக்கும் காலம்
*
வால்
ஒரு காலத்தில்
மிருகங்களின் பின்னால்.
இன்னொரு காலத்தில்
மனிதருக்கு அறிவால்.
இந்தக் காலத்தில்
மதங்களின் பெயரால்
- அருணன்