எதிலும் விமர்சனப் பார்வை கொண்ட பெரியார் கூட பெண்களின் நீள்முடி ஆசையை கண்டித்திருக்கிறார். 'அதற்கு செலவிடப்படும் தைலங்களுக்கான செலவு, விதவிதமாக அலங்கரிப்பதற்காக செலவிடப்படும் நேரம். இவையாவும் வீணே. எனவே பெண்கள்
யாவரும் ஆண்களைப்போலவே கிராப் வைத்துக்கொள்ளுங்கள். செலவு, நேரம், வேலை என யாவும் மிச்சம்' என்று தைரியமாகவும், அறிவுபூர்வமாகவும் விமர்சித்தார்.
கண்ணகியின் கற்புக் கூந்தல், ஜானகியின் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல், துரியோதனின் ரத்தம் பூசப்படக் காத்திருந்த துரெளபதியின் விரிந்த கூந்தல், மொட்டையடிக்கப் பட்ட மாதவியின் துறவுக் கூந்தல், இறந்த கணவனைக் கட்டிக் கதறும் மண்டோதரியின் சோகக் கூந்தல் எனப்பலவிதமான கூந்தல் கதைகள் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கொட்டிக் கிடக்கிறது. அதில் இது புதுவிதமான கூந்தலிலக்கியம்.
கற்புக்கும், அழகுக்கும், சோகத்துக்கும், அடிநாதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்
கூந்தலை, சென்னையை அடுத்த கிராமப் பெண்கள் அடிக்கு நூறு ரூபாய் வீதம் விற்று வருகின்றனர். வாழவழியற்ற பெண்களை இவ்விதம் மொட்டையடிப்பதற்கென்றே, பல தரகர்கள் பணியாற்றிவருகிறார்கள். சென்னையில் இம்முடிகள் தரம் பிரிக்கப்பட்டு, சாயமேற்றப்பட்டு, ஹாலிவுட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனவாம் விதவிதமான விக்குகளாக. அடர்த்தியான ஒரு கிலோ முடியின் விலை 5000 ரூபாய்களாம் -அது முதலாளிகளுக்கு
கூந்தலுக்கு விதவிதமான தைலம், சாயம் - பலகோடி புழங்கும் வணிகம். விதவிதமான
அலங்காரம் - பலகோடி புழங்கும் வணிகம். முடிமுளைக்காத வழுக்கைத்தலையர்களுக்கு
உடன் நாற்று நட்டு முடி வளர்த்துத்தரும் சிகிச்சை - பலகோடி புழங்கும் வணிகம்.
மூன்றடி கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்கிறாள் இன்றைய தமிழச்சி. உலகமயமாக்கலின்
மறுபக்கம் இது.
கங்கை நதிப்புறத்து கோதுமையை காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ள
பாரதி கண்ட கனவின் விரிவாக்கம் இது.
ஹாலிவுட்டில் திருவள்ளூர் மயிர். மக்களை மொட்டையடிப்பது என்பது இப்படித்தானோ?
கனவு காணுங்கள், கனவு காணுங்கள் இந்தியா வெகு சீக்கிரம் வல்லரசாகப் போகிறது என்று
வாணவேடிக்கை காட்டுகிறார் நமது முதல் இந்தியக் குடிமகன். உண்ண உணவும், ஒதுங்க
இடமும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும், அடிப்படைக் கல்வியறிவுமற்ற பல்லாயிரக் கணக்கான
இந்திய மக்களை ஒதுக்கி விட்டு, பல்லாயிரம் கோடி செலவு செய்து ஒற்றை இந்தியன், நிலவுக்கு போகப்போகிறானாம். இதுதான் இந்தியாவின் வல்லரசு ஜம்பம். இந்திய அழகிகள் உலக அரங்குகளில் அரைகுறை ஆடையுடன் பூனை நடை நடக்க, இந்திய விண் வெளி வீரன் நிலவில் வெற்றி நடை (தாவல்?) நடக்க, பூமியில் சாதாரண மனிதர்கள் தன் உடலிலிருந்து ரத்தம் முதல் சிறுநீரகம் வரை விற்க முடிந்ததனைத்தையும் விற்க நடையாய் நடக்கிறார்கள். நான் எல்லா உயிர்களையும் ஒன்று போல் நேசிப்பவன் என்று வாயாடுகிறார் ஜீவகாருண்யத்தின் சிம்பலான நமது நிதியமைச்சர்.
ஒரு பிராமணன் கொலை செய்து விட்டால், அவனுக்கு தரப்பட வேண்டிய அதிகபட்ச
தண்டனை அவன் தலையை (முடியை மட்டும்தான்) மொட்டையடிப்பதுதான் என்கிறது
மனுநீதி. போன உயிர் பிராமணனின் மயிருக்கு சமம் என்பது மனுவின் நீதி. மளிகைக்கடை பாக்கிக்காக மசுரை விற்கும் பெண்ணுக்கு எது நீதி?
- கு.சித்ரா