திருக்குறள்

துபாய்...

~ எஸ். அன்பு ~

வானுயர்ந்த கட்டிடங்கள் வழுக்கிச் செல்லும் சாலைகள், எறும்புகள் போல் ஊர்ந்து செல்லும் கார்கள் என்று ஏனைய நாட்டினரை ஏக்கமிட வைத்த துபாய், கடந்த வருடம் உலகத்தை உலுக்கிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்ட பிறகு அதன் இன்றைய நிலைமை பற்றிய ஓர் அலசல்…


ஒரு காலத்தில் அளவில்லா பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், செய்வது சரிதானா என்பது புரியாமல் விண்ணை முட்டும் கட்டிடங்களும், கடலுக்குள் மண்ணைக் கொட்டி செயற்கைத்தீவுகளும் , பாலைவனத்தை வெட்டி எடுத்து செயற்கை கடல்களும் கட்டிக் கொண்டிருந்தது, துபாய் அரசாங்கம்.

புர்ஜ் கலீபா என்ற உலகின் மிக உயர்ந்த கட்டடம், துபாய் மால் என்ற உலகின் மிகப் பெரிய பேரங்காடி, புர்ஜ் அல்அரப் என்ற உலகின் முதல்தர ஏழு நட்சத்திர தகுதி கொண்ட உல்லாச விடுதி, உலகின் எட்டாவது அதிசயம் எனப்படும் ""ஜுமெரா பாம்'' எனப்படும் ஈச்சமர வடிவத் தீவு, ஜபேல் அலி ஏற்றுமதி மையம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க “மெட்ரோ ரயில்:” என தன் அசூர வளர்ச்சியால் உலக நாடுகளை எல்லாம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானம் தான் எல்லையோ, என்ற எண்ணத்தை மற்றவர்களுக்கும் ஏற்படுத்தியது.

துபாயில் வாழ்ந்தவர்களும், துபாயில் வேலை செய்து தங்களது வாழ்க்கையை வளமாக்க வந்தவர்களுக்கும் துபாய் என்ற நாட்டில் வேலை செய்வதே பெருமிதமாக இருந்தது.

துபாயில் வேலைக்கென்று அங்கு சென்ற முதல் நாளே நமது பாஸ்போர்ட்டை நிறுவனத்தார் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு வேலை, வேலை, வேலை என்று வேலையைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே நிகழாது. வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்றாலும் முதல் ஆறு நாட்கள் செய்த வேலையின் களைப்பு தீர உறங்கத்தான் சொல்லும். இரவு நேரங்களில் வீடியோவில் தமிழ், மலயாள, இந்தி திரைப்படங்கள். வியாழ, வெள்ளிக்கிழமை இரவுகளில் நண்பர்களோடு பெர்மிட்டில் வாங்கிய விஸ்கி, ரம். கிளப்புகளில் கோடம்பாக்க்த்து குயில்களின் ஆட்டம் பாட்டம், அவ்வப்போது சிறிது ஷாப்பிங். போன் பண்ணி சொன்னாலே, ரூமிற்கே வரும் சரவணபன், அஞ்சப்பர் சாப்பாடு உணவருந்திவிட்டு மீண்டும் ஒரு தூக்கம், என்ற இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று நம்மை நாமே கேட்டுக் கொண்டோமேயானால் அதற்கு எளிதில் விடை கிடைக்காது. சில சமயம் இந்த வாழ்க்கையும் ஒரு அழகான வாழ்க்கை போலத் தோன்றும், சில சமயம் எதுவுமே வாழாதது போலவும் தோன்றும். பிரச்சனையற்ற சுதந்திரம் இருப்பது போல ஒரு நாள் மனதிற்கு படும். மறுநாள் இனம் புரியாத சோகம் நம்மை ஆட்கொண்டு மனதை ரணப் படுத்தும். பணம் மட்டும் வங்கி அக்கவுண்டில் மாதாமாதம் சிறிது, சிறிதாக சேர்ந்து கொண்டே வரும்.

ஆனால் இப்போது இப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விட்டது.

“ வாழ்க்கை என்பது மெழுகுவர்த்தியல்ல, அது டார்ச்சு லைட் போன்றது. தம் தலை முறைக்குள்ளாக அதைப் பூர்ணமாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த தலைமுறைக்காக அதிலுள்ள எதையும் மிச்சம் வைக்க கூடாது.” என்ற மேலைநாட்டு அறிஞர் பெர்னாட்ஷாவின் தத்துவதிற்கேற்ப வாழ்ந்து வந்த மனிதர்கள் எங்கே ???

கடந்த வருடம் உலகத்தை உலுக்கிய நிதி நெருக்கடியில் மேலை நாடுகள் சிக்கி சின்னபின்னமாகி கொண்டிருக்கும் போது, துபாய்க்கு பிரச்சினை இல்லை என்ற வாதம் மெல்ல மெல்ல மறைந்து மற்ற நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விட பல மடங்கு பாதிப்புகளை துபாய் சந்திக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி தந்து, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. உலக நிதி நெருக்கடி, வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் நிறுத்தப்பட்டதால் அரைகுறையாக காட்சியளிக்கிறது அடுக்குமாடிக் கட்டிடங்கள்.

ஆடம்பர பங்களாக்களையும், அழகான புல்வெளிகளையும் தன் சுகமான சுமைகளாகத் தாங்கவிருந்த செயற்கைத் தீவுகள் பலவும் கடலுக்குள் கிடக்கும் கான்கீரிட் மேடைகளாகிப் போயின. இவையெல்லாம் கட்டி முடிக்கப்படுமா, அல்லது கைவிடப்படுமா என்று யாருக்கும் தெரியாது.

பாலைவனமெங்கும் அரைகுறையாக கட்டப் பட்ட நூற்றுக்கணக்கான வில்லாக்கள், ஒரு புறம் என்றால், கட்டி முடிக்கப்பட்டு வாங்குவதற்கும், வசிப்பதற்கும் ஆளில்லாமல் பூட்டப்பட்டு கிடக்கும் வில்லாக்கள் எண்ணிக்கையோ கணக்கிலடங்காது. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றை நேரில் கண்டு வந்த துபாய்வாசிகள், உண்மை நிலை அறிந்து உறைந்து போயியுள்ளனர்.

தன் வளர்ச்சியால் உலகநாட்டினரை திரும்பிப் பார்க்க வைத்த துபாய் இன்று கடனாளியாக நிற்கிறது. ஆரவாரம் அடங்கிவிட்டது. எங்கும் மயான அமைதி. எல்லோருடைய முகத்திலும் பீதி. அடுத்து என்ன நடக்குமோ என்று புரியாத குழப்பத்தில் மக்கள்.

பாலைவனத்தை சோலைவனமாக்கிய உழைக்கும் வர்க்கம், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள்; இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் பாதிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது துபாயில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி, பாகுபாடின்றி அனைத்து தரப்பினைரையும் தன் கரங்களுக்குள் சிக்க வைத்துக் கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கு கிரெடிட் கார்டு, பேங்க் லோன் போன்ற தொல்லைகள் இல்லை என்றாலும், துபாய் வாழ்க்கையை நம்பி இந்தியாவில் அவர்கள் ஆரம்பித்து வைத்துள்ள திட்டங்களும், எண்ணங்களும் கேள்விக்குறியாகிப் போனது. “அஸ்திவாரம் போட்டு விட்டு வந்தேன்” “ பையன் பி.இ மூன்றாம் வருஷம் படிக்கிறான், இன்னும் 2 வருஷம் இருந்துவிட்டா போதும்”, “ இந்த வருஷம் லீவில் போய்த்தான் இடத்தை முடித்தேன், பாதி தொகை கொடுத்து விட்டேன், இன்னும் பாதி தொகை கொடுக்க வேண்டும்” என்று ஒவ்வொருவரின் மனதிலும் ஓராயிரம் எண்ணங்கள். ஆனால் அனைவரின் மனதிலும் எழும் ஓரே கேள்வி, “ துபாய் இப்ப இருக்கிற நிலைமையில் முடியுமா”? என்பது தான்.

துபாய் நல்ல நிலைமையில் இருந்த போது வங்கிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு, கிரெடிட்கார்டு, வீட்டு லோன், கார் லோன் என்று அள்ளி அள்ளி கொடுத்தன. நம்மவர்களும் மாதம் ஒரு தொகைதானே கட்டப் போறோம் ஒன்னும் பிரச்சினை இல்லை, கிடைத்ததை வாங்கிக் கொண்டனர். ஆனால் துபாயின் நிலைமை இப்படியாகும் என்று யாரும் கனவில் கூட நினைக்கவில்லை.

கம்பெனிகளும் தங்கள் பங்கிற்க்கு, ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து விட்டது. பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தியவர்களுக்கு இது அடுத்த அதிர்ச்சி. கிடைக்கும் சம்பளம் இங்கு வாங்கியுள்ள கடனுக்கு டியூ கட்டவே சரியாக இருக்கிறது. பின் எப்படி தாயகத்தில்ல உள்ள மனைவி, மக்களுக்கு பணம் அனுப்புவது என்பது தெரியாமல் தவிக்கும் இதயங்கள் பல.

பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், இந்தியாவில் வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர். இனிமேல் அது சாத்தியமா? என்ற கவலை எல்லோருடைய மனதிலும் எழுகிறது. அதன் விளைவாக மனித முகங்களில் புன்னகை இல்லை, அப்படியே இருந்தாலும் அதில் ஜீவன் இல்லை என்பதே உண்மை.

“எனக்கு கம்பெனி ஓருமாதம் நோட்டீஸ் கொடுத்து விட்டது, எங்க புரொக்ஜெட் இன்னும் மூணுமாதம் தான் அப்புறம் வேலை இல்லை. கம்பெனி என்ன செய்யப் போறாங்கனு தெரியலை” என்ற வேதனை குரல்கள் தான் எங்கும் ஓலிக்க ஆரம்பித்து உள்ளது.

வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது.

தாயகம் திரும்பின பிறகு என்ன செய்வது என்கிற கேள்வி. அப்படியே இதுதான் செய்யப் போகிறோம் என்ற திட்டம் மனதில் இருந்தாலும், அதை எப்படி அமல்படுத்தப் போகிறோம் என்கிற நடைமுறை அமல்திட்டம் இருப்பதில்லை. அப்படியே அமல்திட்டம் இருந்தாலும் "போடும் திட்டம் தோல்வியுற்றால் என்ன செய்வது ?" என்கிற நாளைய பயத்தால் இன்றைய வாழ்வில் வசந்தத்தை தொலைத்து விட்டு நிற்கிறோம் நாங்கள்.

என்னதான் தான் எங்களுக்குள் துன்ப அவலங்கள் மனதிற்குள் அலையடித்தாலும், மனதில் ஓரத்தில் நம்பிக்கை சுடர் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. மீண்டும் துபாய் தன் பழைய நிலைமைக்கு வரும் என்று.

“நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை உடையவன் நான். அதற்கு ஏதும் சான்று இருக்கிறது என்பதற்காக அல்ல. நல்லது தான் நடக்கும் என்ற தளராத நம்பிக்கையினால்தான் நான் உறுதியாக நினைக்கிறேன். அந்த நம்பிக்கையினால் தான் உத்வேகம் பிறக்க முடியும்

- மகாத்மாகாந்தி.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற