திருக்குறள்

கழகங்களின் கமுக்கக் கணக்கு - யார் சுகவாசி?

அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று தன் தொண்டர் களுக்கு அறிக்கை விட்டதோடு... 'விலைவாசி குறித்த அக்கறை 'சுகவாசி' கருணாநிதிக்கு அறவே இல்லை!' என்று ஒரு சீற்றமும் காட்டியிருந்தார்! இது தி.மு.க. வட்டாரத்தை ரொம்பவே உசுப்பேற்ற... 'எங்கே போனாலும் ஹெலிகாப்டரில் பறக்கும் 'சுகவாசி' அந்த ஜெயலலிதா தான்... எங்கள் தலைவர் இல்லை!' என்று பதில் தகிப்பு காட்டினர்!


''கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்துக்கு தனி ஹெலிகாப் டரில்தான் வந்தார் ஜெயலலிதா. தேர்தல் கமிஷனின் பவளவிழாவுக்கும் தனி விமானத்தில்தான் டெல்லிக்குப் போனார்...'' என்றும் அறிவாலய வட்டாரம் தொடர்ந்து சொல்ல... 'சரி, கணக்கில் வராத - கணக்கு போட முடியாத செலவுகள் ஒருபக்கம் இருக்கட்டும்... இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிகாரபூர்வமாக எவ்வளவுதான் செலவழித் திருக்கின்றன?' என்ற கேள்வியோடு, தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தோம்.

''கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும் கோடிக்கணகான ரூபாய்களை செலவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2009 மார்ச் 2-ம் தேதி அன்று வங்கியிலும் கையிலும் 30 கோடியே 59 லட்சத்து 36 ஆயிரத்து 411 ரூபாய் ரொக்கமாக அ.தி.மு.க-விடம் இருந்தது. தேர்தல் செலவுக்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் பணம் வசூல் செய்தது கட்சியின் தலைமை. அந்த வகையில் 17 கோடியே 97 லட் சத்து 77 ஆயிரத்து 477 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நன்கொடையை சேர்த்தால் மொத்தமாக 48.57 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருந்தது!

தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டறிக்கை, போஸ்டர் கள், நோட்டீஸ்களுக்கு 93 லட்சத்துக்கு மேல் செலவு. தேர்தல் அறிக்கை, பென்டிரைவ் மூலமாகத்தான் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது. அதற்கான செலவு சுமார் 40 ஆயிரம் ரூபாய்! பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்த வகையில் 51 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும் கட் அவுட், ஹோர்டிங், பேனர்கள், கொடிகள், வளைவு கள் ஆகியவற்றுக்காக மூன்று லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது.

தேர்தலின்போது செல்போனில் தன் குரலை 'வாய்ஸ் மெஸேஜாக' ஒலிக்கச் செய்தும் ஜெயலலிதா ஓட்டுக் கேட்டார். இதற்காக 11.5 லட்சம் ரூபாய் செல்போன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்ய, விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜெக்சன், ஏர் லிமோஸின்ஸ், இன்டர்நேஷனல் ஏர் சார்ட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 171 ரூபாய் செலவானது. இதர செலவுகளையும் சேர்த்து தேர்தலுக்காக மட்டும் 4.10 கோடி ரூபாய்க்கு மேல் செலவானது!'' என்று மலைக்கவைத்தவர்கள், தி.மு.க. செலவை சொல்ல ஆரம்பித்தார்கள்.

''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது தி.மு.க-விடம் 28.77 கோடி ரூபாய் கைவசம் இருந்தது. நன்கொடை, வேட் பாளர்கள் விண்ணப்பக் கட்டணம், வட்டி என்று வரவுகளையும் கணக்கு வைத்தால், சுமார் 36 கோடி ரூபாய் தேர்தலுக்கு முன்பு இருந்தது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டறிக்கை, போஸ் டர்கள், ஆகியவை அச்சடித்ததற்காக சுமார் 35 லட்சம் ரூபாயும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்த வகையில் 4.19 கோடி ரூபாயும்... கட் அவுட், பேனர்கள், ஹோர்டிங், கொடிகள், வளைவு கள் ஆகியவற்றுக்காக 1.62 கோடி ரூபாயும், வாகனங் களை விமானத்தில் கொண்டுவந்த வகையில் 1.44 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதர செலவுகளையும் சேர்த்து மொத்தமாக 7.76 கோடி ரூபாயை தேர்தலுக்கு தி.மு.க. செல வழித்திருக்கிறது.

இதெல்லாமே இந்தக் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கணக்குதான்! உதாரணத்துக்கு, பொதுக்கூட்டங்கள் நடத்த மட்டும் 53 லட்சத்துக்கு மேல் செலவெனக் கூறியது அ.தி.மு.க.! ஆனால், ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை பார்த்தவர்களுக்கு அவை எவ்வளவு பிரமாண்டமாக இருந்தன என்பது புரியும். டி.வி-களில் இரண்டு கட்சிகளுக்கும் எவ்வளவு விளம்பரம் செய்தன என்பதையும் மறக்க முடியாது. எனவே, இந்தக் கணக்குகள் எல்லாம் ஒப்புக்கும், ஊருக்கும்தான்! ஒரு இடைத் தேர்தல் நடக்கும் தொகுதியிலேயே சரளமாகப் பணம் விளையாடும்போது, பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு பணம் இறைக்கப்பட்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியுமே!'' என்றார்கள்.

- எம்.பரக்கத் அலி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற