காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இரண்டுமே இனிமையான உணர்வுகள் தான். ஒருவரிடம் நமக்குப் பிடித்த குணங்கள் இருந்தாலோ அல்லது ஒருவருடைய குணங்கள் நமக்குப் பிடித்திருந்தாலோ அவரை நாம் காதலிக்கத் துவங்குவோம்.
மற்றவர்கள் நம்மை காதலிப்பதற்கும் அதுதான் காரணமாக இருக்கும். ஆனால் நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்காக நம்மை நாம் காதலித்திருக்கிறோமா? பலரும் இல்லை என்று கூறலாம் அல்லது அது எப்படி என்று கேள்வி எழுப்பலாம்.நம்மை நாமே காதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா?
நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும்.
நம்முடைய ஒவ்வொரு நல்ல குணங்களையும் பட்டியலிட்டு அந்த பட்டியலை பெரிதாக்க முனைய வேண்டும்.
உங்களைப் பற்றி உங்களை விட உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் தான் நன்கு தெரிந்திருக்கும். எனவே உங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் என்று நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு உங்களையே நீங்கள் விரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.
அதற்காக உங்களிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை வசதியாக மறந்துவிட வேண்டாம். உங்களிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அதையும் நல்ல குணங்கள் பட்டியலில் சேர்க்க முனையுங்கள்.
மன ரீதியான சுய பரிசோதனை, கேள்விகள் கேட்டு நீங்களே உங்களை தெளிவுபடுத்துதல், உங்களுக்கு நீங்களே ஆலோசனைக் கூறுதல், ஒரு சில முடிவுகளை தீர்க்கமாக யோசித்து உணர்ந்து முடிவெடுத்தல் போன்றவற்றின் மூலம் உங்களது ஆளுமை வெளிப்படும்.
இதனால் உங்கள் மீதான தன்னம்பிக்கை, தைரியம் போன்றவை அதிகரித்து பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். அது கர்வமாக வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள். உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து ஒன்று அதனைக் களையுங்கள். அல்லது தேவையில்லாத எண்ணங்களாக இருந்தால் அந்த சிந்தனையை மாற்றுங்கள்.
எண்ணமும், செயலும் சிறப்பாக இருக்கும் போது உங்களை விட உங்களை அதிகமாக நேசிப்பவர் யாராக இருக்க முடியும். உங்களது நல்ல செயல்களுக்கு எல்லாம் நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செயலையும் முழுதாக உணர்ந்து செய்யுங்கள்.
இவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். உங்களது லட்சியம், பாதை போன்றவற்றை தீர்மானித்து அதன்படி வாழ்க்கையை மாற்றுங்கள். உலகின் தலைசிறந்த காதலராக இருப்பீர்கள்.
- நன்றி வெப்துனியா