திருக்குறள்

உஞ்சை அரசன் - கவிதைகள்

இருப்பு

வற்றிய முலைகளைச்
சப்பியபடியே
அயர்ந்து தூங்கிவிட்டது
குழந்தை

பால் சுரக்காத மார்புகளோடு
ஒருக்களித்துப் படுத்திருப்பாள்
ஒருத்தி
தன் சதையைப் பிய்த்துத் தின்னும்
சண்டாளனுக்குப் பயந்து

காமத்தின் கொடிய
இரவுகளில்
எழுதப்படுகிறது
உயிர் வதைக்கும் ஒரு கவிதை
எவருக்கும் தெரியாதபடி

வீசும் காற்றின்
வெப்பப் பெருமூச்சில்
உருகிப்போய்
பாதியாய்த் தேய்ந்து கிடக்கிறது
பால் நிலவு

இருட்டின் வெளிச்சத்தில்
கண்ணயர முடியாத
புரண்டு படுக்கும்
பூமி பார்த்து
நட்சத்திரங்களும்
தூரப் போயின

பாழடைந்த
மனப் பிரகாரத்தின்
உள் வெளிகளில்
நினைவின் வெளவால்கள்
பறந்தபடியிருக்க
எங்கும் நிசப்தம்

எல்லாம்
அதனதன் இயல்பில்
அதன்படியே இருக்க
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
விடிகிறது பகல்
ஒவ்வொரு நாளும்
ஒரே சூரியனைச் சுமந்தபடி.

*****************

போரிடு பெண்ணே!

பெண்ணே...
நீ பெண்ணாயிரு.

முடியோ...
புடவையோ...
பூவோ...
பொட்டோ...
இளக்காரமல்ல
என்பதுணர்.

கூந்தலைக் குறைப்பதும்
சேலையைத் தவிர்ப்பதுமே
மீறல் என்றெண்ணாதே.

அடங்க மறுப்பதும்
ஆளுகை புரிவதும்
உடைமை பெறுவதும்
உளமைதுறப்பதும்
மீறலென்றெண்ணு.

சமைப்பதும்
துவைப்பதும்
பெறுவதும்
உற்றார்க்கேயல்லாமல்
உற்பத்தியோடு இணை.

சகலமும் சமமென்று
சண்டைக்கு நில்...
அதிகாரம் பறிக்க
ஆர்த்தெழு... பெண்ணே...
ஆணுக்கு நிகரென்று போடு.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற