திருக்குறள்

வைகோ-விற்கு ஒரு மடல்



'தலைவா!
நம்ம கட்சியோட ஜூன் 18 மண்டல மாநாட்டுக்குதான் பரபரப்பா தயாராகிட்டு இருக்கேன். 'ம.தி.மு.கவுக்கு இனி வசந்த காலம்'னு உங்க அழைப்பு உற்சாகமாத்தான் இருக்கு. ஆனா, இதுக்கு முன்னாடி குடவாசல் கூட்டம், திருச்சி திருப்புமுனை மாநாடுன்னு கிளம்பினப்போ இருந்த உற்சாகம் இல்லை தலைவா! சில விஷயங்களை உங்களோடு மனசுவிட்டுப் பேசணும்னுதான் இந்தக் கடிதம்.

'வைகோ எங்க தலைவர்'னு சொல்லிக்கிறதுல எங்களுக்கு எப்பவுமே பெருமைதான். இப்ப இருக்குற தலைவர்கள்ல உங்க அளவுக்குப் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கம்பீரம் இருக்கிறவங்களை ஒரு கை விரல்ல எண்ணி டலாம். உள்ளூர் கல்வெட்டுகளில் இருந்து உலக வரலாறுகள் வரை உங்களுக்குப் பரிச்சயம். எம்.ஜி.ஆர். தி.மு.க வில் இருந்து பிரிந்தபோதுகூடக் கலங்காத கலைஞர், நீங்க தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு கட்சிக் கொடி மற்றும் சின்னத்துக்காகப் போராடவேண்டி வந்தபோது கலங்கித்தான் போனார்! எத்தனையோ போராட்டங்கள், சோதனைகளோடு ராமரின் வனவாசம் மாதிரி 14 வருஷத்தைக் கடந்திருச்சு ம.தி.மு.க. ஆனா, இத்தனை தகுதிகள்கொண்ட உங்களைத் தலைவராகப் பெற்ற நம்ம கட்சி, இந்த 14 வருஷத்துல எத்தனை வளர்ச்சி அடைஞ்சிருக்கணும்?!

இன அமைப்பாக இருந்து அரசியல் கட்சியாக உருமாறிய பா.ம.க. எட்டிய உயரத்தை பக்கா அரசியல் கட்சியாகத் தோன்றிய ம.தி.மு.கவால் ஏன் தலைவா எட்டிப் பிடிக்க முடியலை? தி.மு.கவில் இருந்து வந்தபோது நம்மோடு இருந்த ஒன்பது மாவட்டச் செயலாளர்கள்ல இப்ப எத்தனை பேர் நம்மகூட இருக்காங்க? தி.மு.கவின் மதுரை மாவட்டச் செயலாளரா தென் தமிழகத்தையே கையில் வெச்சிருந்த பொன்.முத்துராமலிங்கம் நம்ம கூட வந்தாரு. தி.மு.கவிலேயே இருந்திருந்தா ரொம்பச் சுலபமா அமைச்சர் ஆகியிருக்க வேண்டியவரோட இப்போதைய நிலைமை எத்தனை பேருக்குத் தெரியும்!

ம.தி.மு.க ஆரம்பிச்சுப் பத்து வருஷங்களுக்குப் பிறகு அரசியலுக்கு வந்த கீதா ஜீவன், தமிழரசி எல்லாம் இப்ப அமைச்சர்கள். ம.தி.மு.க-விலிருந்து மறுபடி தி.மு.கவுக்குப் போன மைதீன்கானும், செல்வராஜும் அமைச்சர்கள். ஆனா, தகுதிக்கும் திறமைக்கும் பஞ்சமே இல்லாத நாஞ்சில் சம்பத், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் சாதாரண தொண்டர்களாவே ம.தி.மு.கவில் முடங்கிட்டாங்களே! 'பதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை'னு நீங்க சொல்வீங்க. ஆனா, நாம அரசியல் செய்யறதே ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான முயற்சிங்றதை உங்களால மறுக்க முடியுமா? அந்த ஆசையில் தானே 96 சட்டசபைத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சியுடனும் கூட்டணி சேராம தமிழகம் முழுக்கப் போட்டியிட்டோம். ஆனா, ஒரு ஸீட்கூட ஜெயிக்கலையே! 2001 பொதுத் தேர்தலிலும் கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து பிரிஞ்சு தேர்தலை எதிர்கொண்டோம். முழுத் தோல்வி! அப்புறம்தான் முதல்வர் பதவி அத்தனை சுலபமில்லைனு நமக்கு உறைச்சுது!

கூட்டணி அருமை உணர்ந்த பிறகும், 2006 தேர்தல்ல ஒரு தப்பான கூட்டணி வெச்சோம். பலமான தி.மு.க. கூட்டணியிலிருந்து கடைசி நிமிஷத்தில் விலகி, அ.தி.மு.கவோடு சேர்ந்தோம். ஆறு எம்.எல்.ஏ. ஸீட் ஜெயிச்சோம். ஆனா, அவ்வளவுக்குதான் ம.தி.மு.க. தகுதியா தலைவா..? தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறினாலும் சில கட்சிகளைப் போல நம்ம கட்சி வளரலையே..!

நீங்க தி.மு.கவில் இருந்து வந்தப்ப எப்பேர்ப்பட்ட ஆரவாரமான ஆதரவு உங்களுக்கு இருந்தது! நம்ம கட்சியின் முதல் பெரிய கூட்டம் குடவாசலில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு வந்தவங்க விடியிற வரை குடவாசலை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். உங்களோட நடைப்பயணங்களின் போதெல்லாம் ஊருக்கு ஊர் உங்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாங்களே! ஆனா, இப்பவும் அதே நிலைமை நீடிக்குதா?

ஒருத்தரை வானளாவப் பாராட்டுறதும், கொஞ்ச நாள் கழிச்சு அவரையே வசைபாடுறதும் உங்க மீது ஜனங்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைக் குறைக்கும்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும். ஈழத்து அகதிகளுக்காகப் போராடுற நீங்க, ம.தி.மு.கவில் அகதிகள் போல இருக்குற எங்களையும் கொஞ்சம் கவனிங்க தலைவா! தமிழகத்தின் எந்தக் கட்சித் தொண்டனும் கொடுக்காத அளவுக்கு ம.தி.மு.க. தொண்டர்கள் ரத்த தானம் பண்ணியிருக்காங்க. அது பொதுநலம். கூடவே, கொஞ்சம் சுயநலமும் பாக்குறதுதானே தொண்டனுக்கு இயற்கை! இனிமேலும் கட்சிக்காக தொண்டர்களை ரத்தம் மட்டுமே சிந்த வைக்காதீங்க தலைவா! பளிச்சுனு கணக்குப் போட்டு, பதவியும் செல்வாக்கும் கிடைக்கிற மாதிரி காய் நகர்த்தினாதான், கொள்கையும் கூட்டமும்கூட தொடர்ந்து கூட இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

நீங்க அடிக்கடி சொல்வீங்க, 'நாங்கள் வெற்றியைத்தான் இழந்தோம். களத்தை இழக்கவில்லை'னு! நமக்கான வெற்றிகள் எதிர்காலத்தில் வரணும்னா, அதுக்கான களத்தைக் காப்பாத்திக்கணும். அதை மனசுல வெச்சு இந்த மாநாட்டுக் களத்தில் அதிரடியா ஏதாவது பண்ணுங்க தலைவா!

இப்படிக்கு,
உங்க உண்மையுள்ள தொண்டன்

- நன்றி
ஆனந்த விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற