திருக்குறள்

வாசகர்களும் நுகர்வோர் தான் - ஞானி

திருச்சி: வாசகரை நுகர்வோர் இயந்திரமாகக் கருதுகிறது பத்திரிக்கைத் துறை என எழுத்தாளர் ஞானி கூறினார்.

திருச்சியில் மிட்-டவுன் ரோட்டரி சங்கம், மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற வாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,வெளியிலிருந்து பார்க்கும்போது பத்திரிகை துறை கவர்ச்சியாகத் தோன்றும். ஆனால், அதில் சகித்துக் கொள்ள முடியாத பல நிகழ்வுகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பது ஊடகத்துக்குத் தெரியாது.

அதேபோல, நமக்கு என்ன தேவை? என்பதும் வாசகர்களுக்குத் தெரிவதில்லை. இந்த இரண்டுப் பக்கமும் தெளிவில்லாத நிலையில், பத்திரிகை பிரமாண்டமாக இயங்குகிறது.ஆளும் கட்சிகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுதான் பத்திரிகையின் நோக்கம் என 1800ம் ஆண்டுகளில் முதன்முதலாக நம் நாட்டில் வெளியான பத்திரிகை குறிப்பிட்டது.

வாசகர்களும் சமூகத்தில் நிலவும் தவறுகளையும், குறைகளையும் அறிய விரும்புகின்றனர். அதிகாரங்கள் சரியான வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை செய்தியைக் கொடுக்கும் நிருபர்களும், படிக்கும் வாசகர்களும் பார்க்க வேண்டும்.பெரிய தலைவர்கள் பத்திரிகை நடத்தும் வழக்கம் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது.

காந்தி கூட ஒரு பத்திரிகையை நடத்தினார். தங்களுடைய கருத்துகளை மக்கள் படிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். சுதந்திரத்துக்குப் முன்பே மக்களின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய தலைவர்கள் பத்திரிகை நடத்தினர்.

எனவே, காந்தி பத்திரிகை நடத்தினால் சரி, கருணாநிதி நடத்தினால் தவறு என சொல்ல முடியாது.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பத்திரிகையின் பார்வை தற்போது மாறிவிட்டது. மக்களை வாசகர்களாகக் கருதாமல் நுகர்வோராகத்தான் பார்க்கிறது.இதனால் பத்திரிகைகள், டி.வி. நிறுவனங்களின் அணுகுமுறை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் செய்திக் கொடுக்கும் வகையிலும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திபடுத்த அரசியல், சினிமா போன்றவற்றையும் கொடுக்கின்றன.

இவை எல்லாமே நுகர்வோரை மனதில் வைத்துத்தான் செயல்படுகின்றன.அதாவது, வாசகரை நுகர்வோர் இயந்திரமாகக் கருதுகிறது பத்திரிக்கைத் துறை.எனவே, பத்திரிகை என்பது இப்போது ஒரு தொழிலாகக் கருதப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்துவது அமைப்புச் சாரா பிரிவைச் சார்ந்த வாசகர்களால் இயலாது.பத்திரிகை நிர்வாகிகள், அவர்களைச் சார்ந்த கட்சிகள், விளம்பரதாரர்கள் போன்றவர்கள்தான் கட்டுப்படுத்த முடியும் என்றார் ஞானி.

- நன்றி தட்ஸ் தமிழ்..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற