திருக்குறள்

தபூ சங்கர் கவிதைகள்


தெய்வமே,

உன்னை என் இதயத்திலிருந்து

வெளியேற்றிவிட்டு,

ஒரு பெண்ணைக்

குடிவைத்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

என்னைக் கைவிட்டு விடாதே!

உன்னால் தூணிலோ,

துரும்பிலோகூட வாசம்

செய்ய முடியும். அவளால் முடியுமா?


*****


ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னைக் காட்டி

என்னிடம் கேட்கிறது

ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!


*****


புத்தர் இந்த உலகத்தில் தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்துக் கொடுத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்துக் கொடுத்துவிட்டாய்


*****


அன்று
நீ குடை

விரித்ததற்காகக்

கோபித்துக் கொண்டு

நின்றுவிட்ட

மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று
சட்டென்று மழை

நின்றால்

நீ எங்கோ குடை

விரிப்பதாகவே

நினைத்துக்

கொள்கிறேன்.


*****


நீ எப்போதும்

தலையைக் குனிந்தே

வெட்கப்படுவதால்

உன் மதிப்புமிக்க

வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி

மட்டுமே தரிசிக்க

முடிகிறது!


ஒரே ஓரு முறை

கொஞ்சம் உன் தலையை

நிமிர்த்தி

வெட்கப்படேன்...

வெகுநாட்களாய்

உன் வெட்கத்தைத்

தரிசிக்கத் துடிக்கிறது

வானம்!


*****

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற