திருக்குறள்

மதங்களும், சாதிகளும் - பாலபாரதி எம்.எல்.ஏ.

இந்து மதத்திலிருந்து, கிறிஸ்துவ மதத்திற்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ ஒருவர் மாறிவிட முடியும். ஆனால், இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்களிலிருந்து ஒருவர் விலகி இந்து மதத்தில் இணைய முடியுமா?. இணைய முடியும் என்றால் எந்த சாதியில் இணைத்துக் கொள்வார்கள்?. வர்ணாசிரம 4 பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கீழ் அவர் கொண்டு வரப்படுவார்?

மேற்காணும் கேள்விகளுக்கான பதில் சிக்கலும் சிரமமும் நிறைந்ததாக உள்ளது. அதற்கு காரணம், இந்து மதம் என்பது ஒரே பிரிவை மட்டுமே கொண்டதாக அமையவில்லை. பிரம்மாவின் நெற்றி, தோள், கால், பாதங்களிலிருந்து பிறந்தவர்கள் எனவும், அவர்கள் முறையே பிராமணன், சத்ரியன், வைஷியன், சூத்திரன் என பிரிக்கப்பட்டும், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சண்டாளர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும், தொன்றுதொட்டு வந்த ஒழுக்க மரபும், மனநிறைவுமாகும். சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படாமல் நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும், மறுமையில் அதீதமான சுகத்தையும் பெறுவான் என மனு ஸ்மிருதியின் விதிகளில் கூறப்படுகிறது. நால் வருண முறையில் யாரும் எந்த படிக்கல்லையும் தாண்டிச்செல்ல இயலாது. கவுண்டர், பிராமணர் சாதிக்கு மாற இயலாது. பிராமணர் நாயுடு சாதிக்கு மாற மாட்டார். அவரவர் சாதிகளில், அவரவர் குல உட்பிரிவுகளில் உடைக்கப்பட முடியாத கோட்டைச் சுவர்களோடு 'சாதியம்' பாதுகாப்பப்படுகிறது இந்து தர்மத்தில் (?!).

வேறு மதத்திலிருந்து இந்த மதத்திற்கு வருபவர் எந்த சாதிக்குள்ளும், எந்த குலப் பிரிவுக்குள்ளும் அத்தனை சுலபமாக அனுமதிக்கப்பட மாட்டார்.

வெளியேற்றம் ஏன்?''மநுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில், அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி'' எனப் போற்றப்படுகிறார்.

''வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானியான'' மநுவின் கட்டளைகள் தீண்டத்தகாதவர் என தள்ளிவைக்கப்பட்ட தலித் மக்கள் மீது எவ்வாறு இருக்கிறது?

ஊருக்கு வெளியில் 'சண்டாளன்' குடியிருக்க வேண்டும்! உலோகத்திலான பாத்திரங்களை பயன்படுத்த கூடாது! இவர்கள் தீண்டிய பாத்திரங்களை துலக்கினாலும், தூய்மையாகாது! நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்து பிழைக்க கூடாது. இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு, பித்தளைதான் அணியவேண்டும். நற்கருமங்கள் நடக்கையில், இவர்களை காண்பதோ, பேசுவதோ கூடாது. தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும், கொடுக்கவும் வேண்டும். மரண தண்டணை பெற்றவர்களை கொல்லுதல் இவர்கள் தொழில். அனாதைப் பிணத்தை அகற்றுதல் இவர்கள் கடன்.''

மேற்காண்பவையாவும் இழி பிறப்பாளர்க்காம்!. (தாழ்த்தப்பட்ட மக்கள்)அந்தணர்களுக்கு ஓதுவித்தல்; சத்திரியனுக்கு உலகாளுதல்; வைசியருக்கு வாணிபம் புரிதல் குலத்தொழிலாம்!இத்தகைய வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் கொண்ட மனு தர்மம். இன்று வரை கட்டி காக்கப்படுகிறது. இந்த அதர்மம் தாளமுடியாமல் சூத்திரர்களில் ஒரு சில பிரிவும், சண்டாளர்கள் எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் சில பிரிவும்,

இந்து மதத்திலிருந்து விலகி, வேறு மதங்களை நோக்கி செல்கிறார்கள். அங்கேயும் தீண்டாமை இல்லாமல் இல்லை. ''தங்களை வேறுபடுத்தி பார்க்கிறார்கள்'' என்ற குரல் இன்று வெளிப்படையாக சில 'சபை'களில் எதிரொலிக்கிறது என்பதையும் காண்கிறோம்! தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவமக்களுக்கு கல்லறைகள் கூட தனிதான். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சலுகைகள் இவர்களுக்கு இன்னமும் எட்டாக்கனிதான்.

சமூகத்தின் அங்கீகாரமற்று, எங்கு சென்றாலும் நிழல்போல் தொடர்கிற தீண்டாமையும், சாதியமும், மிகப்பெரிய சவாலாக இந்திய தேசத்தின் முன்னாள் உள்ளது. இவற்றையே மூலப் பொருளாக்கிக் கொண்டு சாதிய சக்திகளும், மதவாத சக்திகளும், அரசியலுக்குள் புகுந்து அவதாரம் எடுக்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் புரிந்துதான் இயங்குகிறார்கள். எதிர்க்கிறார்கள்! முன்னேறுகிறார்கள். எப்படியோ, மக்களுக்கு மதங்களும் இருக்கின்றன! கூடவே வயிறும், பசியும் இருக்கின்றன!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற