திருக்குறள்

என் பணம்...- அனு ஹாசன்


''பணத்தை வைத்து சில பாடங்களைக் கற்றிருக்கிறேன். சிறுவயதில் 'வீட்டுக்கு வருபவர்களை அவர்களுடைய 'பளபள'ப்பை வைத்து எடைபோடக் கூடாது' என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான் பணம் குறித்த முதல் பாடம்


எப்படி முதல் வகுப்பில் படித்த அ, ஆ காலத்துக்கும் மறக்காமல் இருக்கிறதோ... அதுபோல, இந்த அரிச்சுவடி எனக்கு இன்றும் மறக்காமல் இருக்கிறது.
அடுத்து, நானே உழைத்துச் சம்பாதித்த பணம் எனக்குக் கற்றுக்கொடுத்த இரண்டாவது பாடம்... நான் மும்பையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில்
1,200 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கும் பெண்ணுக்கு அந்தப் பணம் போதுமானதாக இருக்காது. ஆனால், நான் ஹாஸ்டலில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்துசெல்வது, சலுகை விலையில் வங்கி கேன்டீனில் கிடைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவது என்று அந்த வருமானத்துக்குள் என் வாழ்க்கையை நடத்தினேன். இன்றைக்கும் கையில் இருக்கும் பணத்துக்குள் வாழ்கிறேன் என்றால் அதற்கான பாடத்தை நான் கற்றுக்கொண்டது அப்போதுதான்.


அடுத்து தெர்மேக்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் டிரைனியாகச் சேர்ந்தபோது 3,500 ரூபாய் மாதச் சம்பளம். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தால் அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாக நிறைவேற்றிக்கொள்ள அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற பாடம் அப்போதுதான் கிடைத்தது. முதல்மாதச் சம்பளத்தில் ஒரு அயர்ன்பாக்ஸ் வாங்கினேன். இன்றுவரை அதுதான் என் உடைகளை சுருக்கமில்லாமல் வைக்க உதவுகிறது. உடைகளில் மட்டுமல்ல... என் செலவுகளிலும்..!
எவ்வளவு பணம் கிடைத்தாலும் நகைகளோ துணிமணிகளோ வாங்கிக் குவிப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறேன். 'பொண்ணா நீ' என்றுகூட சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். பெண் என்றால் தங்க நகை ஸ்டாண்டாகத்தான் இருக்கவேண்டுமா?


இப்போது என் வாழ்க்கைமுறை கொஞ்சம் மாறியிருக்கிறது. இன்ஷ¨ரன்ஸ் பற்றியும், பி.பி.எஃப். முதலீடு பற்றியும் தெரிந்து அவற்றில் பணம் போட்டிருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்டுகளில் கவனம் செலுத்துகிறேன். பங்குச் சந்தை பற்றி பலரும் சொல்கிறார்கள். நல்ல சிறப்பான பங்குகளில் பணத்தைப் போட்டுவிட்டு மறந்துவிடலாம். மற்றபடி அடிக்கடி கவனித்து முதலீட்டை மாற்றிக் கொண்டேயிருப்பது எனக்குச் சரிப்பட்டு வராது.
பணத்தை வைத்து ஆளை எடைபோடக் கூடாது என்ற பால பாடம் எனக்கு மறக்காமல் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு அதை வைத்துதான் மதிக்கிறார்கள் என்ற உண்மையும் எதிரே நிற்கிறது... முரண்பாடுதானே வாழ்க்கை!”

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற