உழைப்பின் நரம்புகளில்
திரள்கிறது குருதி
வியர்வை சுரப்பிகள்
வற்றாத வடிகால்களாகின்றன
சம்மட்டி எடுத்து அடித்தும்
கடப்பாரை கொண்டு நெம்பியும்
புரள்கிறது வாழ்க்கை
தொண்டைக்குழி வறளும்
வெயிலும்
மூச்சுக்குழல் அடைக்கும்
துர்நாற்றமும்
உயிரின் நிழலென தொடர்கின்றன
பசிமேயும் வயிறுகள்
கட்டாந்தரைகள்
காய்த்த உள்ளங்கைகளில்
கோடை வெடிப்புகள்
செல்போன் சாட்டிலைட்
அய்.டி. இன்டெர்நெட்
ஆயிரம் வந்தாலென்ன
அப்படியேதான் கிடக்கின்றன
உழைப்பவர் கைகளில்
வறுமையும் துயரமும்