திருக்குறள்

காற்றுக்கு ஏதடா கடைசி மூச்சு..

- ஈரோடு தமிழன்பன்

அவன் இறக்கவில்லை!
சூரியன் இறந்ததாய்
எவன் சொன்னவன்?

உணர்ச்சித் தமிழனின்
ஒவ்வொரு உதிரத்துளியிலும்
உயிரோடு இருக்கிறான்...
அவன்
சினத்தின் பிடரியில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறான்!

எந்த இருட்டும் அவனைச் செறித்துவிட முடியாது
தமிழுக்கு
வைகறை தயாரிக்கப்
போயிருக்கிறான்.

மரணத்தையும்
ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தியிருக்கிறான்
பிறக்கும் வெற்றியின்
இதயமாய்த் துடிப்பான்.

எந்தச்
செடிகொடிகள் பூக்களைத்
தப்பாய் உச்சரித்தன?

எந்த நாளில்
விண்மீன்கள் பிழைபட ஒளியை
எழுதின? அப்படிக்
குற்றமில்லாமல் நற்றமிழ் பேசும், எழுதும்,
குரலில், விரலில் இருக்கிறான்.

தப்புக் குரல் மீது
அவன் கந்தக மகரந்தம்
கொட்டுகிறான்.
தவறும் விரல்மீது
கண்டனக் கண்களைத் திறக்கிறான்.

அவன்
இறக்கவில்லை...
ஆகாயம் செத்ததென்று
யார் அறிவித்தவன்?

தமிழினப்
பகைமீது திரும்பும்
செங்குட்டுவ விழிகளில்
தீயாய் வளர்கிறான்.

தமிழ் நிலம்
தானியம் வளர்க்கிறது
அவன் இதய ஈரத்தில்.
சிறகடிக்கும்
தமிழ்ச்சிட்டுகள் தொட்டுப் பார்க்கும்முன்
அவன்
மொட்டுவிரல்கள்
கட்டவிழ்ந்து விடுகின்றன.

அவன்
இறைக்கும் எழுத்துக்களைக்
கொத்திப் பறக்கும்
பள்ளிப் பறவைகளுக்குத்
தன் கண்களிலேயே
கட்டி வைத்திருக்கிறான்
தங்கக் கூடுகள்.

பெருஞ்சித்திரன் இறக்கவில்லை!
ஆம்;
காற்றுக்கு ஏதடா
கடைசி மூச்சு?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற