திருக்குறள்

பாவம் அவர்கள் தமிழர்கள்!

இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன। இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது

அந்தக் கதறலும், கண்ணீரும்। இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது। இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்!

வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள்; கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள்; எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள், இதையும்கூட வெள்ளி விழாவாகக் கொண்டாடி மகிழலாம்।

உள்ளூர் களேபரத்தில் கொஞ்ச காலமாக இலங்கையை மறந்து விட்டோம்। சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை எண்ணிக் கசிந்து கண்ணீர்விட்ட நேரத்திலும்கூட, தமிழர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்துவிட்டோம். முன் ஜாக் கிரதை முத்தண்ணாக்களான நாம் ஈழப்பிரச்னையில் எளிதில் சிக்கிக்கொள்வோமா என்ன?

சார்க் மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை। ''உலக நாடுகளுடனும் எம்முடைய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப் படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை ராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம்'' என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ''நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது, வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?'' என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை நாமும் பகிர்ந்து கொள் கிறோம்.

எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23-ம் தேதி மாலை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ராணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது। அந்த ஜீப்புக்குப் பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ விடுதலைப்புலிகள்.

கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர் களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம், அந்த உடல்களை கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது। ஜூலை 24-ம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது, அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தாக்கத் தொடங்கியது। தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள்। வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப் பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி, இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை.

கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவரேலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது। சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது-

''இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள்। முதலில் இலங்கை ராணுவத்தினர், தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லித் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்திக் களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்குத் தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.'' தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள், சிங்களவர்களிடம் சிக்கி உயிரிழந் தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.

முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறிவைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது। அதன்பிறகு, அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழிமறித்த கும்பல், டிரைவரும் அந்த வாகனத்தில் பயணம் செய் பவரும் தமிழரா என்று விசாரித்து, அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியரு சம்பவத்தை சிங்களக் கவிஞரான பாஸில் ஃபெர்னாண்டோ என்பவரே தன் கவிதையன்றில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, சிறையில் இருந்தவர்களும் குரூரமாகக் கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25-ம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப் பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படு கொலை செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர்। அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இன ஒதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983-ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிகோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவருடைய உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பைக் கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3-ம் தேதி அரசாங்கம் ஆணையன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, ''இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களுடைய உயிர் களோ, கருத்துக்களோ எங்களுக்குப் பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்'' என லண்டனிலிருந்து வெளி யான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண் டிருந்தார்கள் என்பதுதான் உண்மை। 1977-ம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981-ம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள்।

''மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையைக் கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் செல்வாக் குக்குள் கொண்டுவருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமையேற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை...'' -இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார்। இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர்। ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் தமிழர்களின் வீடுகளின் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது; உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன; இந்தியா வேடிக்கை பார்க்கிறது; தமிழகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது! மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம் என்று சொன்னான் ஒரு கவிஞன். காய்ந்து போனாலும் கவிச்சி மாறாத ரத்தம் அது. உணர்வுள்ளவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் ரத்தம்.

கொழும்பு நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இப்போது சந்தித்துப் பேசவுள்ளனர்। நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்கிறார்। நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியை அங்கு வரும் தலைவர்களோடு அவர் பகிர்ந்து கொள்ளலாம்। அவர்களுக்குப் ரத்யேகமாக விருந்துகூட கொடுக்கலாம்। மாநாடு நடக்கும் இடத்தி லிருந்து சில மைல் தொலைவில் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஞாபகம் அவருக்கு வருமென்று சொல்ல முடியாது. ஏனென்றால், பாவம் அவர்கள் தமிழர்கள்!

- ரவிக்குமார் எம்.எல்.ஏ
நன்றி ஜுனியர் விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற