திருக்குறள்

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!


முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை:


முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்

முதுபெரும் புலமையில்

வல்லோர்க்கும்


முரசு கொட்டி மொழிப்போரில்

அணிவகுத்தோர் அனைவர்க்கும்

அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே


ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்

அன்பு குழைத்து; அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.


வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்

கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக்

குவிக்கின்றேன்.


அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க

அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்


தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்

ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!


போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும்

அழைத்தபோது

வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;


வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!

பகுத்துணர்ந்து பல்லாண்டுக‌ளாக இனமுழக்கம் செய்கின்ற


பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்

பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்


பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர

மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து


பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்

பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்


"பணிந்திடுக எம் அன்புக்கு!'' என ஆணையிட்ட பின்னும்

துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;


அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!


உன் வாழ்த்தினையேற்று

என் வணக்கமும் வாழ்த்தும்

வட்டியும் முதலுமாய் வழங்குதற்கே!


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற