ஆசியாவிலேயே ஜாக்கி ஜானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்தை பிச்சைக்காரராக நினைத்த ஒரு பெண்மணி ரூ.10 தானம் அளித்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் வருமானத்தை குவித்த 'சிவாஜி' பட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் வெளிநாடுகளுக்கு செல்லாமல், இந்தியாவிலேயே உள்ளார்.
தமிழ் திரையுலகத்தினால் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினி திடீரென பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலுக்கு தனது நண்பருடன் சென்றார். கசங்கிய சட்டை, சாதாரண லுங்கி அணிந்தோடு மட்டுமல்லாமல், பழுப்பு நிற துண்டை தலையில் கட்டியிருந்தார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் கோயிலில் ரஜினி மிக எளிமையாக இருந்ததால், அவரை பலருக்கும் அடையாளம் தெரியவில்லை.
அப்போது ஒரு பெண்மணி ரஜினியை பிச்சைக்காரர் என்று தவறுதலாக நினைத்து ரூ.10-யை தானமாக வழங்கியுள்ளார்.
இத்தகவல், சமீபத்தில் வெளியிடப்பட்ட 'தி நேம் இஸ் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் கண் மருத்துவரான காயத்ரி ஸ்ரீகாந்த்.
கோடிக்கணக்கான சொத்திற்கும், புகழுக்கும் சொந்தக்காரர் பிச்சைக்காரராக நினைக்கும் அளவுக்கு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவரது நண்பர் கேட்டதற்கு, 'எனக்கு சுதந்திரமாக இருப்பது பிடிக்கும். யாராலும் என்னை தங்க கூண்டிற்குள் அடைத்து வைத்திருக்க முடியாது' என்று ரஜினி பதிலளித்துள்ளதாக அந்த புத்தகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.