மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது. ஆனால் அவரது மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது, அதன் பின் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது என்று தகவலும் கிடைத்தது.
அவரை சென்று பார்த்தோம், அவர் உறங்கிக் கொண்டிருந்தார், மீண்டும் ஒருநாள் முயற்சி செய்து அவர் விழித்திருக்கும் போது சென்று அவரிடம் பேசியபோது அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது.
ஒரு சில விஷயங்களைத் தெளிவாக பேசினாலும் பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். உதாரணத்திற்கு, தான் தினந்தோறும் இரவு நேரங்களில் துபாயிலுள்ள வீட்டுக்கு சென்று விடுவதாகவும், பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு வந்துவிடுவதாகவும் சொல்கிறார். ஆனால் விசாரணையின் போது நம்முடன் இருந்த நர்ஸ் அவர் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து யாரும் வந்து பார்க்கவுமில்லை, இதுவரை மருத்துவமனையை விட்டு இவர் சென்றதுமில்லை எனக் கூறினார்.
அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசி அவரைப் பற்றிய விபரங்களைத் தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யும் போது ஏதாவது தொடர்பு எண் அவருக்கு நினைவுக்கு வருகிறதா என சோதிக்கும் போது துபாயிலுள்ள ஒரு லோக்கல் நம்பரைச் சொன்னார் அதை ஆர்வமாக டயல் செய்துப் பார்த்தால் அந்த எண் தவறாக இருந்தது. ஊரில் ஏதாவது எண் நினைவில் இருக்கிறதா என கேட்கும் போது கொஞ்ச நேரம் யோசித்து ஒரு நம்பரைச் சொன்னார் அதை நம்பிக்கையில்லாமல் டயல் செய்யும்போது அது ரிங் ஆனது, அதில் அவரது மகள் வசுமதி பேசினார்.
இவரைப் பற்றி சொல்லும்போது நிதானமாக கேட்டுவிட்டு அவருடன் கடந்த 25 வருட காலமாக தொடர்பில் இல்லை எனவும், ஆகையால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறிவிட்டார். மேலும், தனது தம்பி சுந்தரிடம் பேசுங்கள் என சொல்லி ஒரு நம்பரைத் தந்தார்.
சுந்தரைத் தொடர்புக் கொள்ளும்போது அவரும் கடந்த 25 வருட காலமாக எங்களுக்குள் எந்தவித தொடர்புமில்லை எனக் கூறினார். அதனைத் தொடந்து சுந்தர் சொன்ன விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
துபாய்க்கு டிரைவராக வந்து, பிறகு சொந்தமாக 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்து தொழில் செய்து செல்வச் செழிப்போடு இருந்த ராஜகோபால், தன் வாழ்க்கையில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்திருக்கிறார். நன்றாக இருந்த காலத்தில் தந்தையாக இருந்து செய்யவேண்டிய எந்த கடமையையும் ராஜகோபால் செய்யவில்லையெனவும், அவசர தேவைக்குக் கூட பண உதவி செய்ததில்லை எனவும் வேதனையோடு சுந்தர் கூறினார்.
முதல் மனைவியைத் திருமணம் செய்து சிறிது நாட்களில் விட்டுவிட்டு இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் ஒரு கிருஸ்துவ மதப் பெண்ணை கோயம்புத்தூரில் திருமணம் செய்திருக்கிறார். கடைசியாக துபாயில் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்யும் போது ராஜகோபாலும் முஸ்லிமாக மாறியிருப்பதாகவும் சுந்தர் கூறினார்.
மேலும், ராஜகோபால் கடைசியாக அதிகமாக தொடர்பில் இருந்தது திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியிடத்தில்தான் எனவும், சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவியின் பேரில்தான்; உள்ளது எனவும், அவர்கள்தான் அவரை கவனிக்க வேண்டுமெனவும் கூறி முடித்துக் கொண்டார்.
திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியின் தொடர்பு எண்ணை சுந்தரிடமிருந்து வாங்கி அவரிடம் பேசும் போது, சம்பாதித்து எங்களுக்கு தந்தது உண்மைதான். ஆனால் இந்த வீட்டைத் தவிர எந்த சொத்துமில்லை. அவருக்கு மருத்துவ செலவு பார்க்க, கவனிக்க எங்களால் முடியாது எனக் கூறிவிட்டார். ஆகையால் இப்போது தாயகத்திற்கு அனுப்பினாலும் அவரை ஏற்பதற்கு யாரும் தயாரில்லை.
கோயம்பத்தூரில் திருமணம் செய்த மனைவியைப் பற்றியும், துபாயில் வைத்து திருமணம் செய்த மனைவியைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. நான்கு மனைவிகள், 12க்கும் மேற்பட்ட குழந்தைகள், துபாயில் செல்வச் செழிப்பான வாழ்க்கை, ஊரில் சொத்துக்கள் என அனைத்தும் இருந்தாலும் ராஜகோபாலுக்கு கை கொடுக்கவில்லை!
மனைவிகளிடத்தில் முறையாக நடந்துக் கொள்ளாதது, பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை செலுத்தாதது போன்ற செயல்களால் ராஜகோபாலைப் பார்க்க யாரும் முன் வரவில்லை என புரிய முடிந்தது. வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல் பயணிக்கிறவர்களுக்கு ராஜகோபால் ஒரு பாடம்.
கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின. என் பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான் போறாங்க, நீங்க அடிக்கடி வந்து போங்க என்று சொன்னது நெஞ்சில் காயத்தை ஏற்படுத்தியது.
கட்டுரையாளர்- ஹுசைன் பாஷா (துபாய்)
Thanks - Thats Tamil