''பிரணாப்பின் பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. இனி இந்தியத் தொழிலுலகம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். எனவே துணிந்து சந்தையில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர் சமூகம் நினைக்க ஆரம்பித் திருக்கிறது. இதனால்தான் கடந்த இரண்டு வாரங்களில் சந்தை சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்த ஏற்றத்தினால் நம்மவர்களைவிட வெளி நாட்டைச் சேர்ந்த முதலீட் டாளர்கள் அடைந்த லாபமே அதிகம். காரணம் அவர்கள்தான் நிறைய முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை எப்.ஐ.ஐ.கள் நம் பங்குச் சந்தையில் முதலீடு செய்த நிகரத் தொகை சுமார் ரூ.11,000 கோடி. சமீப காலத்தில் இவ்வளவு பணத்தை இத்தனை குறுகிய நாட்களில் அவர்கள் கொண்டு வந்து கொட்டியதே இல்லை என்கின்றனர் சில புள்ளிவிபரப் புலிகள். எப்.ஐ.ஐ.கள் இங்கு வந்து பணத்தைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு வாரங்களில் டாலரின் மதிப்பு கடுமை யாகக் குறைந்திருக்கிறது. டாலரின் மதிப்பு சரியும்போது அதன் மூலம் ஏற்படும் இழப்பைக் குறைக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்வது வழக்கம். அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது''.
''அப்படியானால் இந்த ஏற்றம் தொடர்ந்து இருக்குமா, இருக்காதா?'' - கிடுக்கிப்பிடி போட்டோம்.
''நிச்சயம் ஏறும்; ஆனால் நிச்சயம் இறங்கும்! மார்க்கெட் அதிக ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் ஏறியிறங்கி, இறங்கியேறவே செய்யும். இதைப் பார்த்து நீங்கள் நிம்மதி இழக்கக்கூடாது. அடுத்து வரும் சில மாதங்களில் ஒன்று நீயா, நானா என்று பார்த்துவிடுங்கள் அல்லது நல்ல பங்குகளில் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டு கவலைப்படாமல் இருங்கள்.''
''இன்று வெளியான ஐ.ஐ.பி. டேட்டாவை கவனித்தீரா?'' ஆப்பிள் பழத்தின் ஒரு சிலதை சாப்பிட்டுவிட்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்.
''பிரமாதமான வளர்ச்சிதான். கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொழில்துறை பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி இருந்ததால் 1% மட்டுமே வளர்ச்சி கண்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 16.7% வளர்ச்சி கண்டிருக்கிறது. இப்போது பொருளாதாரச் சலுகைகள் வாபஸாகி இருப்பதால் அடுத்துவரும் மாதங்களில் தொழிற் துறை உற்பத்தி இன்னும் குறையவே செய்யும் என்கிறார்கள்.''
''என்.எம்.டி.சி.க்கு கிடைத்த மரியாதை மிகவும் மோசமாக இருக்கிறதே!'' - நம் கவலையைத் தெரிவித்தோம்.
''முதலில் என்.டி.பி.சி., அடுத்து ஆர்.இ.சி., இப்போது என்.எம்.டி.சி. அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது குறித்து சிறுமுதலீட்டாளர்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கிய பங்குகளில் கொஞ்சத்தைக்கூட அவர்கள் வாங்கவில்லை. அவர்கள்தான் வாங்கவில்லை என்றால் பெரும் பணம் படைத்த தனிநபர்களும் (HNI) வாங்கவில்லை. இந்த முறையும் வேறு வழியில்லாமல் எல்.ஐ.சி. நிறுவனம் பெருமளவில் பணத்தை முதலீடு செய்து பெருவாரியான பங்குகளை வாங்கி இருக்கிறது. 'எந்தப் பங்கு வெளியிட்டாலும் அதனை விற்றுத் தீர்க்க எல்.ஐ.சி.தான் கிடைத்ததா? தனியார் நிறுவனங்களே முதலீடு செய்யத் தயங்கும் போது எல்.ஐ.சி. மட்டும் ஏன் மக்கள் பணத்தை பணயம் வைக்கிறது?' என்கிற விமர்சனம் வந்ததைத் தொடர்ந்து எத்தனைகோடி ரூபாய்க்கு என்.எம்.டி.சி. பங்குகள் வாங்கினோம் என்கிற தகவலை ஐ.பி.ஓ. முடியும் வரை ரகசியமாக வைத்திருந்தது எல்.ஐ.சி.''
''சர்க்கரை பங்குகளுக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்தீர்களா?'' கேள்வியைக் கேட்டபடி சாத்துக்குடி ஜூஸைக் கொடுத்தோம்.
கொஞ்சம் குடித்தவர், ''ஓவர் சர்க்கரை. விலை குறைந்ததற்காக இப்படியா கொட்டுவது?'' என்றவர், குடித்துவிட்டு,
''முன்பு கச்சா எண்ணெயின் விலையை ஏற்றியது போல சர்க்கரை விலையை ஏற்றினார்கள். இதற்கு மேல் விலை ஏற்றமுடியாது என்கிற நிலை வந்தபோது அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டார்கள். இப்போது சர்க்கரை விலை அதலபாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஒரு கிலோ சர்க்கரை 22 ரூபாய்க்குக் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த விலை சரிவால் சர்க்கரை நிறுவனப் பங்குகளின் வருமானம் வெகுவாக குறையும் என்பதால் கிடைத்த விலைக்கு சர்க்கரைப் பங்குகளை விற்று வருகிறார்கள் முதலீட்டாளர்கள். இந்த நிலையில் கோ-ஆப்பரேட்டிவ் மில்கள் விலை அதிகம் வைத்து விற்காமல் வந்த விலைக்கு சர்க்கரையை விற்கும்படி வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறதாம். தவிர, வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் செய்திருந்த 1 லட்சம் டன் சர்க்கரை இப்போது கப்பலில் பாதி தூரம் வந்துவிட்ட நிலையில் அந்த ஆர்டரை கேன்சல் செய்திருக்கிறதாம் சில நிறுவனங்கள். இப்போதைக்கு கையில் சர்க்கரைப் பங்குகளை உடனடியாக விற்றுவிட்டு, கொஞ்ச நாளைக்கு அந்த செக்டார் பக்கமே போகாமல் இருப்பது நல்லது''.
''அமெரிக்க நிலைமை எப்படி இருக்கிறது? அங்கு பொருளாதாரம் சரியாகிவிட்டதா?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.
''பற்றாக்குறையைக் குறைக்கும் விஷயத்தில் நம்முடைய நடவடிக்கைகள் எவ்வளவோ பரவாயில்லை.
அமெரிக்காவின் நடப்பு நிதி ஆண்டு பற்றாக்குறை 1.14 டிரில்லியன் டாலர்களாக இருக்குமாம். வரும் நிதி ஆண்டில் இது 1.56 டிரில்லியன் டாலராக உயருமாம். அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த பற்றாக்குறை 9 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்குமாம்... அமெரிக்காவின் கடனே அதன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும் போலிருக்கிறது! ஒபாமா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அமெரிக்க மக்கள் நினைத்தனர். ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டேதான் போகிறது.''
''அமெரிக்கக் கதை இருக்கட்டும். துபாய், க்ரீஸ் இப்போது எப்படி இருக்கிறது?'' என்று கேட்டோம்.
''துபாயும் க்ரீஸூம் பழைய கதை. இப்போது லேட்டஸ்ட் டாக் சீனா பற்றிதான். பில் போனர் என்பவர் 'த டெய்லி ரெக்கனிங்' என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லும் விஷயங்கள் சீனாவின் இமேஜையே சுத்தியலால் உடைக்கிற மாதிரி இருக்கிறது. சீனாவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான மால்களில் மில்லியன் சதுர அடி இடத்தை வாங்க இன்னமும் யாரும் தயாராக இல்லையாம். விஸ்தீரணமான புதிய சாலைகள் நடப்பதற்கே ஆட்கள் இல்லாமல் கிடக்கிறதாம். கடந்த பத்து ஆண்டுகளில் கட்டமைப்புக்காக சீனா செலவு செய்தது 200 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்குமாம். இவ்வளவு பணத்தைச் செலவு செய்தும், இப்போது அதனால் எந்த பலனும் இல்லையாம். துபாய் இப்படித்தான் கட்டமைப்புக்காக கணக்குவழக்கில்லாமல் செலவு செய்து மாட்டிக் கொண்டது. இப்போது சீனாவும் அந்த மாதிரி ஆகிவிடுமோ என்று ஒரு பீதியை ஆணித்தரமாக கிளப்பிவிட்டிருக்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர். இந்த நூற்றாண்டை நடத்திச் செல்லப் போவது சீனாவும் இந்தியாவும்தான் என்று எல்லோரும் சொல்லும் இந்த வேளையில் இப்படி ஒரு குழப்பம்'' என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானவரிடம் தங்கத்தின் எதிர்காலம் பற்றி கேட்டோம்.
''கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை அபாரமாக உயர்ந்தது. இப்போது அதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் ஃப்யூச்சர் மார்க்கெட்டில் இருக்கும் கோல்ட் கான்ட்ராக்ட்களின் விலையைப் பார்த்தால் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இப்போதிருக்கும் விலையிலிருந்து 100 டாலர் ஏறுவதற்கே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் என்கிறார்கள் சிலர். இந்த வாதத்தின் நீட்சியாக, அடுத்துவரும் மாதங்களில் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். திருமணத்துக்காக தங்க நகை வாங்குகிறவர்கள் இப்போதுள்ள விலையை மறந்துவிட்டு வாங்கலாம். மற்றபடி சுத்தமான முதலீடுதான் என்கிறவர்கள் நன்றாக யோசித்து முடிவெடுக்கலாம்'' என்று புறப்பட்டார்.
- நன்றி
நாணயம் விகடன்.