திருக்குறள்

திகுதிகு திகம்பர சாமிகள்!

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், 'காசும், பணமும், நகையும், ஆட்கொல்லி' என்றார்.


தனக்குத் தினமும் பக்தர்கள் தரும் பழங்களை மட்டுமல்ல; வெள்ளி, தங்கத்தையும் அன்றைய தினமே அடுத்து வருகிற பக்தனுக் குக் கொடுத்தவர் மகா பெரியவர். 'இதெல்லாம் வாசலுடன் போயி டணும்' என்பது அவரது அருள் வாக்கு.

பக்கத்தில் ஒரு குச்சி... கையில் விசிறி... இரண்டு சிரட்டைகள்...மட்டும் சொத்தாகவைத்திருந்த யோகி ராம்சுரத்குமாரிடம் யாரா வது ஏதாவது வேண்டினால், 'ஐ யம் எ பெக்கர். உனக்கும் சேர்த்து நான் ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன்' என்று மட்டும் சொல்வார்.

இந்து மதத்தின் தத்துவத்தை உலகம் அறியச்செய்துவிட்டதாக கும்பகோணத்தில் விவேகானந்தருக்குப் பாராட்டு விழா நடந்தது. 'உங்களுடைய விசுவாசம்எப்போ தும் கொள்கைகளில்தான் இருக்க வேண்டும். தனி நபர்களிடம் இருக்கக் கூடாது' என்று சொல்லிவிட்டுப் போனார்.

இவர்களில் யாரும் இன்று இல்லை. இன்று இருப்பவர்களில் எவரும் இவர்கள் இல்லை!

கடந்த ஒரு வாரமாக நித்யானந் தர் மட்டும் நித்திரையை இழக்க வில்லை. அவரைப்போலவே அலைந்து திரிந்து வரும் பலதிகம் பர சாமியார்களும் நிம்மதிஇல்லா மல் தவிக்கிறார்கள்.

நாடி சாமி, ரேகை சாமி, சுவடி சாமி, சித்து சாமி, பீடி சாமி, சுருட்டு சாமி, கஞ்சா சாமி, எச்சில் துப்பும் சாமி, கெட்ட வார்த்தை சாமி, கற்பூரச் சாமி, ஊதுவத்திச் சாமி, பீர் சாமி, சாக்கடைச் சாமி என்று சாமிகளால் ஆனது நம் நாடு. இவர்கள் எல்லாரும் அன்றாட வயிற்றுப்பாட்டுக்குக்கூட உத்தரவாதம் இல்லாமல் எதையாவது சொல்லி, சில தட்சணைகளைப் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இன்று படாடோப விளம்பரங்களால் ஜொலித்து காலையில் ஒரு கண்டம், மாலையில் இன்னொரு நாடு எனக் கதாகாலட்சேபம் நடத்தி வருபவர்களின் கஜானாக்களோ கோடிகளால் ஆனது. இவர்கள் தங்களது உருவப்படங் களையே தந்து பூஜிக்கச் சொல் கிறார்கள். சாமிகள் செய்யாததைச் சாமியாரால் செய்ய முடியும் என்று பக்தர்களை நம்பவைத்தது தான் இவர்களது பெரிய பலம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இதுபற்றி எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்டபோது, 'டொமினோ எஃபெக்ட்தான் இதற்குக் கார ணம்' என்று சொன்னார். சைக் கிள் ஸ்டேண்டில் ஒன்றைத் தள்ளிவிட்டால் வரிசையாக அனைத்தும் விழும் அல்லவா... அதையே அவர் உதாரணமாகச் சொன்னார். ''யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச் சொல்ல... அவர் மற்றவர்களுக்கும் சொல்ல... அது விரிகிறது'' என் பது சுஜாதாவின் கணிப்பு.

''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடு வது இல்லை. ஆனால், அவர் களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றிப் பின்னப் பட்டு இருக்கும் அற்புத விளம்பர ஜோடனைதான் இதற்குக் கார ணம்'' என்று சொல்லும் மனநல மருத்துவர் ருத்ரன், ''இவர்களுக் கான தேவை இந்தச் சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள். பெரும் அமைப்புகளை உருவாக் கும்போது அந்த அமைப்புகளுக் குரிய அத்தனைச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது'' என்று சொன்னார். நித்யானந் தர் உள்ளிட்ட சாமியார்களின் சிக்கல் இப்படித்தான் ஆரம்பிக் கிறது.

அரசியல்வாதிகள், அதிகார மையங்கள், தொழிலதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், இவற்றுடன் ஆன்மிக வகுப்புகள் என்ற அவியல் சேர்க்கைதான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது புறப்பட்ட தீரேந்திர பிரம்மச்சாரிதான் இவர்களின் ஆரம்பம். இந்திராவிடம் நட்பு இருந்தபோதே அவரது எதிரி களாக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன்ராம் ஆகியோருடனும் இருந்தார் தீரேந்திரர். அடுத்து அதை வளர்த்தவர் சந்திராசாமி. இன்றைய எல்லாச் சாமியார்களுக்கும் ரோல் மாடல் சந்திராசாமிதான். பி.வி.நரசிம்ம ராவ் முதல் சந்திரசேகர் வரை அவரது ஆசிரமத்துக்கு வராதவர் எவரும் இல்லை. ஆன் மிகத்தில் சம்பாதித்தாரா... ஆயுத வியாபாரத்தில் கொழித்தாரா என்று தெரியாத வகையில் கோடிக்கணக்கான பணம் அவருக்குச் சேர்ந்தது. மத்திய அமலாக்கப் பிரிவு மட்டும் 11 வழக்குகளைப் பதிவு செய்து வெளிநாட்டுக்குப் போக முடியாமல் முடக்கியது. 'பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத் தீவு ஆகிய இடங்களில் சிறப்பு யாகமும் பிரார்த்த னையும் நடத்தப்போகிறேன். எனது பாஸ் போர்ட்டை விடுவியுங்கள்' என்று உச்ச நீதிமன்றத் தின் அனுமதி கேட்டு அவர் காத்திருக்க வேண்டி இருந்தது.

இன்னொரு பக்கத்தில் வளர்ந்து வந்தார் ரஜ்னீஷ். அவரை செக்ஸ் குரு என்று சொன்னார் கள். அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வில்லை. அன்பின் ஆழம்பற்றிச் சொன்னது போலவே செக்ஸில் ஆழமாகப் போவதுபற்றி வெளிப்படையாகக் கற்பித்தார். 'செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்' என்றார். அவரது வெளிப்படையான தன்மையால் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இதே காலக்கட்டத்தில் புட்டபர்த்தி சாய்பாபா வந்தார். வெறுங்கையில் விபூதி வரவழைப்பது, சங்கிலி மற்றும் மோதிரம் வரவழைத்துப் பரிசளிப்பது, புற்றுநோயை நீக்குவது, பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுப்பது என்பது மாதிரியானவை அவரைப் பிரபல்யப்படுத்தியது. லண்டன் பி.பி.சி, நார்வே நாட்டு அரசுத் தொலைக்காட்சியான என்.ஆர்.கே. இரண்டும் இவை சித்து வேலைகள் தான் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டன. பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் வேறு ஒரு பெயரில் பாபாவைச் சந்தித்து அவருக்கு முன் னால் ஸ்வீட் வரவைத்துப் பரபரப்புக் கிளப்பினார். அதன் பிறகு, சமூக சேவை பக்கம் தனது ஆர்வத் தைத் திருப்பினார் சாய்பாபா.

ரஜ்னீஷின் மெகா ஆசிரமம், சந்திராசாமியின் அதிகார வட்டச் செல்வாக்கு, சாய்பாபாவின் சமூக சேவை - இம்மூன்றும் இணைந்த கலவைதான் இன் றைய கார்ப்பரேட் சாமியார்கள்.

இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்... கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்... தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்... பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்... தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்... என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு. தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும் அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், கொலை வரைக்கும் போய் சிக்கிய பிரேமானந்தா, இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி உள்ளே இருக்கிறார். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. கல்கி சாமியார் பற்றி ஏராளமான புகார்கள். தியானம், யோகா, ஹீலிங், பிரசங்கம், மெடிடேஷன் என்று பக்தர்களை வளைப்பதாகக்குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. இது போன்ற வகுப்புகளை நடத்துவதால் சாமியார்களிடம் கோடிக் கணக்கான பணம் சேர்ந்துவிடுவது இல்லை. பணம் சேருவது பகீர் வழியாக இருக்கிறது.

தன்னைப்பற்றியும் தனது மடத்தைப்பற்றியும் கதைகளை முதலில் உருவாக்கிக்கொள்கிறார்கள் இந்தச் சாமியார்கள். ஆன்மிகம் என்றால் யாரும் முதலில் வரத் தயங்குவார்கள் என்பதால், சமூக சேவை, மருத்துவத் தொண்டு என்று காரணம் சொல்லி அதிகார மைய ஆட்களை அழைப்பார்கள். மடங்களுக்குள் வரும் தொழிலதிபர்களுக்கு இந்த அதிகார மைய ஆட்களுடன் சாதாரணமாக நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலான வங்கிக் கடன்களை வாங்கித் தருவதும் பரிந்துரை செய்வதும் இந்தச் சாமியார்களே. முதலில் மடத்தின் வளர்ச்சிக் காக நன்கொடைகள் தருபவர்களிடம் சில புரோக்கர் கள் மூலமாகப் பேரம் பேசப்படுகிறது. 'உங்கள் பணத்தை சாமியிடம் கொடுத்துவைக்கலாம். உங்களுக்கு எப்போது தேவையோ, அப்ப தந்திருவார். சாமியே உங்களிடம் கேட்கச் சொன்னார்' என்று சொல்லப்படும். சாமியிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக தொழிலதிபர்களும் பெரும் தொகைகளைக் கொடுத்துவைக்கிறார்கள். அறக்கட்டளைக்குப் பணம் கொடுத்தால், வருமான வரிவிலக்கு இருக்கும் என்பதால் பணம் குவிகிறது. சாமியார்களது எல்லைகள் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இருப்பதால், இங்கு இருந்து அங்கும், அங்கு இருந்து இங்கும் பணத்தை மாற்றிக்கொள்ள ஹவாலா வேலைகள் சாமியார்கள் மூலமாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமானவர்கள் தங்களது லாக்கராக இந்த சாமியார்களைப் பயன்படுத்துகிறார்கள்.

வருமான வரி, லஞ்ச ரெய்டுகள் மடங்களில் நடத்துவது சாத்தியம் இல்லாததாகவே ஆகிவிட் டது. தென் மாவட்ட மடம் ஒன்றில் தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டதும், இறந்துபோன சென்னைச் சாமியாரின் சொத்தை அவரது நண்பர் சுருட்டிக் கொண்டுபோய் தனித்தொழில் தொடங்கியதும் நாடு பார்த்த விஷயங்கள்தான். இப்படி இருண்ட பக்கங்களால் நிரம்பியிருக்கிறது சாமியார்கள் கதை.

''தவறு சமயத்தில் இல்லை. இந்து மதப் புரோ கிதர்கள் பலவிதமான கொடுங்கோல் இயந்திரங் களைக் கண்டுபிடித்துள்ளனர். அதில்தான் வம்பு பொதிந்துள்ளது'' என்றார் விவேகானந்தர். இவை குறித்துக் கண்காணிக்க இந்து சமய அறநிலையச் சட்டத்தில் இறுக்கமான சரத்துகள் இருக்கின்றன. சொத்தைத் தவறாகக் கையாண்டால் மடாதிபதி யாகத் தொடர முடியாது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்பவராக அறியப்பட்டாலோ, தமக்குரிய கடமையைத் தவறி நெறிபிறழ்ந்தார் என்றாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், சாமியார்கள் விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்வது இல்லை.

மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தக் குழுவை கருணாநிதி தொடங்கினார். இரண்டு ஆண்டுகளாக அது கூடவே இல்லை. இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது அறிக்கை விடுவதோடு மறக்கப்பட்டுவிடுகிறது. அடுத்த சாமியார் சிக்கும் போதுதான் மீண்டும் பேச்சு கிளம்பும்.

தாங்கள் சொல்லி வரும் ஒழுக்கக் கோட்பாடு களுக்கும் போட்டுவரும் பிரம்மச்சரிய வேஷத்துக்கும் விரோதமாகச் செயல்படும் சாமியார்களிடம் ஜாக்கிரதையாக இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள்தான் ஆன்ம பலம் பெற வேண்டும்!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற