திருக்குறள்

மதம் மனிதனுக்கு பிடிக்கலாமா???

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் நதியா செட்டி. இவரது கணவர் குணசீலன். 2009 ஆகஸ்டில் மரணம் அடைந்தார். அவர் உடலைப் புதைக்கவோ, எரியூட்டவோ செய்யவில்லை.

தன் கணவன் மீண்டும் உயிர் பிழைப்பார் என்று அந்த உடலைப் பாதுகாத்து வருகிறாராம். இதற்காக இதுவரை ரூ.2.08 லட்சம் செலவழித்துள்ளாராம்.

கடவுள் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பார் என்று தேவாலயங்களில் பரவலாக நம்பப்படுவதும், பிரச்சாரம் செய்யப்படுவதும்தான் இதற்குக் காரணமாம்.

மூட நம்பிக்கை என்பது ஏதோ ஒரு மதத்துக்கோ, ஒரு நாட்டுக்கோ மட்டும் ஏகக் குத்தகை உடையதல்ல. எங்கெங்கெல்லாம் மதத் தாண்டவம் நடக்கிறதோ அங்கெல்லாம் மூட நம்பிக்கை என்னும் ஒட்டுண்ணி படர் தாமரையாகப் படர்ந்துகொண்டேதானிருக்கும்.

கிறித்துவ மதத்தில் பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவினர் என்ன நோயால் பீடிக்கப்பட்டாலும், மருத்துவம் பார்த்துக் கொள்ளவேமாட்டார்கள், அவ்வளவுப் பிடிவாதம்!

நோய் மனிதனுக்குக் கடவுள் கொடுத்த தண்டனை என்பது அவர்களின் நிலைப்பாடு. அம்மைப்பால் கண்டுபிடித்த ஜென்னர் மதக் குருக்களிடம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்லவே!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான்டிகோ என்ற இடத்தில் ஹெவன்ஸ்கேட் என்ற மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் உண்டு. கணினி பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்கள் எல்லாம்கூட உண்டு.

1997 இல் ஹாலி பாப் வால் நட்சத்திரம் பூமியை நெருங்குகிறது என்றும் அதனால் உலகத்துக்குக் கேடு சூழப்போகிறது என்றும் நம்பினார்கள்.

விடியற்காலை 4 மணிக்கே எழுந்து இருண்டு கிடக்கும் வானத்தில் தங்களுக்குரிய சொர்க்க வீட்டை உற்றுப் பார்ப்பார்களாம்.

ஹாலி பாப் நட்சத்திரம் பூமியை நெருங்குகிற வரை நாங்கள் காத்துக் கொண்டிருப்போம்! அதன்பின் மனித உலகுக்கு அப்பாற்பட்ட வேறு உலகத்திற்குச் சென்றடைவோம் என்று கூறிக் கொண்டிருந்தனர். 1997 மார்ச் மாதம் 23 ஆம் தேதி 15 பேரும், 24 ஆம் தேதி 15 பேரும், 25 ஆம் தேதி ஒன்பது பேரும் தற்கொலை செய்துகொண்டனர். அதில் இருவர் பெண்கள்.

மயக்க மருந்து உட்கொண்டு பிளாஸ்டிக் பையினால் முகத்தை இறுக மூடி மூச்சுத் திணறி மாண்டனர்.

மதம் யானைக்குப் பிடிக்கலாம்; ஆனால், மனிதனுக்குப் பிடிக்கலாமா?

---------------- மயிலாடன் அவர்கள் 4-3-2010 “விடுதலை” யி லெழுதிய கட்டுரை

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற