திருக்குறள்

தேவையில்லை தாழ்வு மனப்பான்மை...

மனித இனம் இயற்கையின் உயரிய படைப்பாகும். மற்ற உயிர்களுக்கில்லாத ஆறாவது அறிவான பகுத்தறிவு என்னும் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அறிவை கொண்ட இனம்தான் மனித இனம். இடம், பொருள், ஏவல் இம்மூன்றையும் பகுத்து அறிவதே பகுத்தறிவாகும். இதைத்தான் சித்தர்கள் ஆறாவது அறிவு என்கிறார்கள்.

மனித இனம் ஆரம்ப காலங்களில் விலங்குகள் போல்தான் அலைந்து திரிந்தது. பின் நாகரீகம் வளர வளர தன் சுய தேவைகளைத் தேடி குடும்பம் குடும்பமாக வாழ ஆரம்பித்தனர். மேலும் வளர்ச்சியில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிகழ்ந்து முதலாளி தொழிலாளி என்ற நிலை வந்தது. மேலை நாட்டவர்கள் பலர் நம் நாட்டை அடிமை தேசமாக்கி 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இப்படி மக்களை அடிமைகளாக்கியது மனிதன்தான். தன் சுய நலத்திற்காக தன் இனத்தை சேர்ந்தவர்களையே அடிமையாக்கினான். இந்த அடிமை நிலையால் மனித இனம் பலவகையான துன்பங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சந்தித்து வந்துள்ளது. இதில் ஒரு மனிதன் தன்னை மட்டும் உயர்ந்தவனாகவும், மற்றவர்களையெல்லாம் தாழ்ந்தவர்களாகவும் எண்ணி அடிமையாக்கியதன் விளைவு தாழ்வு மனப் பான்மையை உண்டாக்கியது.

சிலரது மனம் வெற்றிக் களிப்பில் மூழ்கி கொக்கரிக்க ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு தானாகவே அகம்பாவமும், அகங்காரமும் ஏற்படுகிறது. இதனால், தன்னை பெரிய அறிவாளி என்றும் மற்றவனை முட்டாள் என்றும் எண்ணி அவர்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக சித்தரிக்கின்றனர். இப்படி சித்தரிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள அறிவைக் கூட அறியாமல் அவர்களாகவே தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்திக்கொண்டு தாம் எதற்கும் உதவாதவர்கள் என்று மனதளவில் எண்ணி விடுகின்றனர்.

குழந்தைப் பருவத்திலிருந்தே தாழ்வு மனப்பான்மை தொடர முக்கிய காரணம் குடும்பச் சூழ்நிலைதான். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் கூறுவது. மற்றவரை உதாரணமாகக் காட்டி இவர்களை மட்டப்படுத்திப் பேசுவது, இதுபோன்ற காரணங்களால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.

சிலரது உடல் அங்கக் குறைபாடுகளை சுட்டிக் காட்டி கிண்டல் செய்வது, மேலும் நிற வேற்றுமை காட்டி அவமானப் படுத்துவதும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.சிலர் எதிலாவது தோல்வியடைந்தால் அவரை மறுபடியும் முயற்சி செய்ய தூண்டாமல் எந்த வேலையும் செய்யத் தெரியாதவர் என முத்திரை குத்தி அவரை தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளி விடுகின்றனர்.

பலர் முன்னிலையில் ஒருவரை தேவையில்லாமல் தாழ்த்திப் பேசுவது, அவரது செயல்களை கிண்டல் செய்வது போன்ற செயலால் தாழ்வு மனப்பான்மை வளர்கிறது.

பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் ஒரு குழந்தையை மட்டும் ஓஹோ வென புகழும்போது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது.சிறு குழந்தை தன் குற்றத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்படும்போதும், பயமுறுத்தப்படும் போதும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டப் படாதபோதும் அவரின் மனம் வேதனையடைந்து தாழ்வுமனப்பான்மை கொள்ளச் செய்கிறது.குழந்தைகளை அதிகம் செல்லம் கொடுத்து எந்த வேலையையும் செய்ய விடாமல் இருக்கச் செய்வதும், அவர்களை சுயமாக செயல்பட விடாமல் தடுப்பதும் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

தாழ்வு மனப்பான்மையைப் போக்க

தாழ்வு மனப்பான்மைக்கு உடலில் உள்ள பித்த நீரின் செயல்பாடும் ஒரு காரணமாகும். இவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துவந்தால் தாழ்வு மனப்பான்மையை போக்கலாம்.தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களிடம் அன்பாகப் பேசி அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை பாராட்டி அவர்களால் முடியும் என்பதை உணர்த்த வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல செயல்களை பாராட்டவேண்டும். தவறு செய்தால் அவர்களை தண்டிக்காமல் அதை திருத்தி எப்படி செய்வது என்பதை புரிய வைக்க வேண்டும்.

பொதுவாக தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.தனக்கு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்கள் எந்த ஒருசெயலிலும் முழுமையாக ஈடுபடாமல் விலகியே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை மெதுவாக ஒரு செயலில் இறங்கச் செய்து தன்னம்பிக்கையூட்டி தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும்.

இந்த உலகில் பிறந்த அனைவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை உள்ளடங்கியுள்ளது. தோல்வி என்பது நிரந்தரமல்ல. தோல்வியுற்றவர்கள் எல்லாரும் முட்டாள்களும் அல்ல, வெற்றி பெற்றவர்கள் எல்லாருமே புத்திசாலிகளும் அல்ல என்பதை அவர்களுக்கு உணரச் செய்ய வேண்டும்.

உதாரணமாக - தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை 960 முறை முயற்சி செய்து 961 வது முறை கண்டுபிடித்தார். மின்விளக்கு பற்றி விளக்கும்போது , அவரிடம் ஒருவர், 960 முறை தோல்வியடைந்தது உங்களுக்கு சோர்வைத் தரவில்லையா என கேட்டதற்கு தாமஸ் ஆல்வா எடிசன் சிரித்துக்கொண்டே 960 முறை எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்துகொண்டேன் என்றார். அவரின் தன்னம்பிக்கையை நினைத்துப் பாருங்கள்.

வாழ்க்கையின் எளிய நிலையிலிருந்து முன்னேறிய பலர் இன்று பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும், ஆளுமையாளர்களாகவும், அறிஞர்களாகவும் திகழ்கின்றனர். இவர்களின் விடா முயற்சி, ஆழ்ந்த சிந்தனை, செயல்திறன் இவற்றை செயல்படுத்துவதில் கொண்ட உறுதி, உழைப்பு இவற்றால் அவர்கள் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த உலகில் மனிதனால் முடியாத செயல் எதுவும் இல்லை. இதைத்தான் திருவள்ளுவர்

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலிதரும்

எந்த ஒரு செயலிலும் முயற்சி செய்தால் வெற்றியடையலாம்.

தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு கடமையை செய்து பலன் பெறுங்கள்.

தாழ்வு மனப்பான்மை என்பது நிரந்தரமல்ல அது மாற்றக்கூடியதுதான். மாற்றம் என்ற ஒன்றே மாறாதது என்பதை நினைவில் வைத்து அப்துல்கலாம் கூறிய கனவு காணுங்கள் என்ற வாசகத்தை நினைவில் கொண்டு கனவு காணுங்கள் வெற்றியடையுங்கள்.

- Nakheeran

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற