இந்தியாவில் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் கட்டாய இலவச அடிப்படைக் கல்வி வழங்கப்படவேண்டும் என்ற மசோதா அண்மையில் நமது நாடாளு மன்றத்தில் நிறைவேறியுள்ளது. அனைவரும் அடிப்படைக் கல்வியை இலவசமாகப் பெறும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ளபோதும் அதனைச் சட்டமாக்கு வதற்கான வாய்ப்பு இதுவரை உருவாகமாலேயே இருந்தது. தற்போதுதான் அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று தோன்றியுள்ளது. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்திய சமுதாயத்தில் இந்த இலவசக் கல்வித் திட்டம் நடைமுறையில் எந்தளவு பலன் தரும் என்ற கேள்வி எழாமலில்லை.
செல்போன் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 48 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட கூலி கிடைக்காத இந்தியர்கள் 40 கோடிக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 27.5% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். இவர்களால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமுடியாத சூழ்நிலை நிலவுவதால், கட்டாய இலவசக் கல்வி என்பது ஏழ்மையின் பிடியில் இருக்கும் இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு நல்ல வாய்ப் பாகும். அதே நேரத்தில், கட்டாய இலவசக் கல்வியை அளிக்கவேண்டிய அரசுப் பள்ளிகளின் தரமும் கட்டமைப்பும் அவலகரமான நிலையில் இருக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களின் விகிதாச்சாரம் இல்லை. நூலகம், ஆய்வகம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் ஆகியவையும் சரியான முறையில் இருப்பதில்லை. நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்கும் அர சாங்கம், கல்விக்காக ஒதுக்குவது 3.4% நிதி மட்டுமே.கல்வியை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.
காசுக்கேற்ற தோசையாக கல்வி மாறிவிட்ட தால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளைத் தவிர்த்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப் பும் போக்கும் நடுத்தர வர்க்கத்தினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாய இலவச அடிப்படைக் கல்வியை அரசுப் பள்ளிகளால் எத்தனை மாணவர் களுக்கு சரியான முறையில் தர முடியும் என்பதும், வளர்ச்சி பெற்றிருக்கும் தனியார் பள்ளி களிலும் அடிப்படைக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதும் முழுமையான விடை தெரியாத கேள்விகளாக இருக்கின்றன.
பள்ளியில் சேரும்போது நன்கொடை, அனுமதி கிடைப் பதற்கு முன் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நேர்காணல், வகுப்புகளில் குழந்தைகளுக்குத் தண்டனை போன்றவற்றைத் தடை செய்யும் நல்ல அம்சங்களுடன் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டம், நடைமுறையிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய- மாநில அரசுகள் உருவாக்க வேண்டியது அவசியமாகும்.
14 வயதுவரை இலவசக் கல்வி என்கிறபோது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிற பருவம் வரை இலவசமாக கல்வி பெறமுடியும். ஆனால், இத்தகைய கல்வி என்பது இன்றைய நடைமுறையில் சமச்சீரானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, மாநில அர சின் கல்வித்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரி குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ-இந்தியன் என 4 விதமான பொதுத்தேர்வு முறைகள் உள்ளன. இதுதவிர, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே 5 வகை பாடத் திட்டங்கள், பயிற்சி முறைகள் இருப்பதால் கல்வியின் நிலை சமமானதாக இல்லை.
அண்மையில், யஷ்பால் குழுவின் அறிக்கை யின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்தார். 10ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு என இரண்டுமுறை பொதுத்தேர்வுகள் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு சுமையை குறைக்கலாம் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், சமச்சீரற்ற கல்வி நிலவுகிற நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது உரிய பலனை முழுமையாகத் தராது என்பது கல்வியாளர்களின் கருத்து.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெறுவதால் கிடைக்கும் அரசு சான்றிதழ், வேலைவாய்ப்புக்கான அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால், அந்த சான்றிதழ் கிடைக்காது. குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது 12-ஆம் வகுப்பு என்றாகிவிடும். இது கிராமப்புற- ஏழ்மையான- பின்தங்கிய சமுதாயத்து மாணவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும். அத்துடன், 11-ஆம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது 10-ஆம் வகுப்புபொதுத்தேர்வின் அடிப்படையிலேயே அமைகிறது. 5 வகையான கல்வி முறை உள்ள நிலையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட் டால் பாடப்பிரிவைத் தேர்வு செய்வதற்கான நெறிமுறைகளும் மாறும். இதுவும் கிராமப்புற- ஏழ்மையான-பின்தங்கிய சமுதாயத்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நல்ல நோக்கத்தில் அறிவிக்கப்பட்ட, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக இருக் கிறது.
பள்ளிக்கல்வியில் மட்டுமின்றி, உயர்கல்வி யிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. காளான்கள் போலப் பெருக்கெடுக்கும் தனியார் சுயநிதி கல்லுரிகள்- நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்வி வியாபாரம், இத்தகைய கல்வி நிறுவனங் களில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாத நிலைமை உள்ளிட்ட பல அம்சங்கள் சமச்சீரான கல்விக்கும் சமவாய்ப்புக்கும் எதிரான அம்சங் களாக இருக்கின்றன. இவற்றின் மீதும் மத்திய அரசின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. அர சியல் நெருக்கடிகளுக்கு இடமளிக்காமல் கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண் டால் அடுத்த தலைமுறை பெரும் பயன் பெறும். இந்தியா உண்மையாகவே ஒளிரும்.
- பொது அறிவு உலகம்