"நேரங்காலம் சரியில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் யாராலும் ஆருடம் கணிக்க முடியாது. அப்படியே எதையாவது கணித்தாலும், அது தலைகீழாக மாறிப் போகலாம். அதனால், இப்போதே சுதாரித்துக் கொண்டு வீடுகளிலேயே கோழிகளை வளர்த்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு, நிதிச் சுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்"
-இது, உலகத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, உச்சக்கட்ட மமதையில் உலக நாடுகளைப் பலவகையிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் பரபரப்பாக இப்போது ஓடிக்கொண்டிருக்கும் அறிவுரைதான்!
அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் பலரும், மக்களை நோக்கி அடிக்கடி இப்படிப்பட்ட அறிவுரைகளைத்தான் அள்ளிவிட்டுக் கொண்டுள்ளனர். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், மறைக்கவோ... மறுக்கவோ முடியாத விஷயம்தான் இது
உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உலக நாட்டாண்மையான அமெரிக்கா ரொம்பவே ஆடிப்போயிருப்பது ஊரறிந்த உண்மை. அமெரிக்காவில் கடந்த ஆறாண்டுகளாக எகிறிக்கொண்டே போகும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திணறிக் கிடக்கிறார்கள், அமெரிக்கர்கள்
சாப்பிடுவதற்காகவே வாழும் ஜென்மங்கள்!
வாழ்வதற்காக சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையைவிட, சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகம். அரசும், தனியார் நிறுவனங்களும் இப்படித்தான் அந்த மக்களை பழக்கியும் வைத்துள்ளன. இதன் காரணமாக 'சாப்பாட்டு ராமன்'களாகிப் போனவர்கள்கூட, தற்போதையச் சூழலில் சாப்பாட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம். விடுமுறைகளைக் கழிக்க அருகிலுள்ள ஊர்களுக்கு மட்டுமே போகிறார்கள். புதிய கார்களை வாங்குவது, புதிய வீடு வாங்குவது என்று பல விஷயங்களைத் தவிர்த்து வருகிறார்கள் மக்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் கோழி வளர்ப்பு என்பதும் அங்கே அதிகரித்துக் கொண்டுள்ளது. அதிகளவில் கோழி இறைச்சியை உண்டு பழகிப்போன அமெரிக்கர்கள், இறைச்சிக்காக பணம் செலவளிக்க முடியவில்லை. இந்நிலையில்தான், பொருளாதார வல்லுநர்களின் அறிவுரைப்படி வீட்டுக்குவீடு புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.
நாட்டுக் கோழி மற்றும் பிராய்லர் கோழி என்று தங்களுக்குப் பிடித்த கோழிகளை மக்கள் வளர்க்க ஆரம்பித்திருப்பதால், நாடு முழுவதுமே புறக்கடை கோழி வளர்ப்பு முழு வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் கோழிக்குஞ்சு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் முழு வீச்சில் குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றன. நியூயார்க், சிகாகோ போன்ற பெரு நகரங்களில்கூட கோழிகளுக்கான கூண்டுகள் கனஜோராக விற்பனையாகின்றன. ‘கோழிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது' என்ற சட்டத்தையே அரசாங்கம் சற்று தளர்த்தியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாளைக்கே வேலைபோனால் என்னாவது?
நாடு முழுவதும் கோழி வளர்ப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கோழிக் குஞ்சுகள் அதிகளவில் பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை மட்டுமே 1.2 லட்சம் பவுண்ட் அளவில் கோழிக் குஞ்சுகள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்கின்றன புள்ளிவிவரங்கள்.
"நாளைக்கே என் வேலை போய் விட்டால்... நான் என்ன செய்யமுடியும்? எப்படி, என் குழந்தைகளுக்குச் சோறு போடுவது?'' என்று பரிதாபமாகக் கேட்கும் நான்கு குழந்தைகளின் தந்தையான ரோம்ரியல், "அதனாலதான் நிறையக் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளேன். வளர்ந்த கோழிகளையோ, இறைச்சியையோ வாங்க அதிகளவு செலவு பண்ண வேண்டியிருக்கிறது. அதனால் குஞ்சுகளை வாங்கி நாமே வளத்தால் பணம் மிச்சமாகிறது" என்று தெம்பாகச் சொல்கிறார்.
கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் நூலகர் ஜாஸ்மின் மிடல்பாஸ், "நான் கடந்த ஆண்டிலிருந்து கோழி வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் 26 கோழிகள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக எனக்கு ஒரு டஜன் முட்டைகள் கிடைக்கின்றன. அதிகபட்சமாக மூன்று டாலர் வரை கிடைக்கிறது" என்று சொல்கிறார் சந்தோஷத்துடன்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு, அரசுத்துறையினரும் புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு அங்கே ஊக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதைப் பார்க்கும்போது,
இதைப் பார்க்கும்போது,
'ஆடாத ஆட்டமெல்லாம்... போட்டவங்க மண்ணுக்குள்ள... போன கதை, உனக்குத் தெரியுமா...?'
என்றே பாடத்தோன்றுகிறது.
- நன்றி
விகடன் குழுமம்