உங்கள் குழந்தைக்கு நல்ல உலகத்தை விட்டுச் செல்லுங்கள் என்று எத்தனையோ விதங்களில் கூறிவிட்டார்கள். எதற்கும் செவிசாய்க்கவில்லை இந்த மக்கள். உங்களது மூதாதையர் உங்களுக்கு எப்படி ஒரு நல்ல உலகத்தை விட்டுச் சென்றார்களோ, அதைப் போன்றே எங்களுக்கும் ஒரு நல்ல உலகத்தை கொடுங்கள்.
நீங்கள் பாழாக்கிய இந்த பூமியை இங்களே சீர்படுத்துங்கள் என்று நமது பிள்ளைகளேச் சொன்னால் கேட்காமல் இருக்க முடியுமா?ஆம், அதற்காகத்தான் ஐ.நா. உச்சி மாநாட்டில் நடந்த பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி யுக்ரத்னா கலந்து கொண்டு பேசியுள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ள உச்சிமாநாடு அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், உலகெங்கும் உள்ள 300 கோடி குழந்தைகள் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி யுக்ரத்னா ஸ்ரீவத்சவா உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார். இவர் உ.பி. தலைநகர் லக்னோவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியாவார்.
யுக்ரத்னா மாநாட்டில் பேசுகையில், பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்ப நிலை அதிகரித்து இமய மலை உருகுகிறது. இமயமலையில் வாழும் பனிக்கரடிகள் பலியாகின்றன. ஐந்து பேரில் இருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் அதிகரித்தபடி உள்ளது. பருவ நிலை மாற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. நமக்காக இல்லாவிட்டாலும் வருங்கால சந்ததிக்காகவாவது உலகை காக்க வேண்டியது நம் கடமை என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜு ஜின்டோ உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரது முன்னிலையிலும் யுக்ரத்னாவின் பேச்சு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
- வெப்துனியா