விடை தெரியாத சில இயற்கை விநோதங்களில் மிக முக்கியமானது... பெர்முடா முக்கோணம்!
வட அட்லான்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோ ரிகோ இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் கிடைப்பதுதான், பெர்முடா முக்கோணம்!
பல மர்மங்களை உள்ளடக்கிய கடல் பகுதி. இந்த முக்கோணப் பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல வீடு திரும்பியது இல்லை. அப்படியே மாயமாகிவிடும். ஏன், கப்பல்களைக் காணவில்லை என்று ஆராய்ச்சிக்காகச் சென்ற 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்களையும் காணவில்லை.
1872-ல் அந்தப் பகுதிக்குள் அப்பாவியாகத் தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதல் பலி. தொடர்ந்து மெடா, சைக்ளோப்ஸ், கரோல் ஏ டீரிங்க், கன்னிமரா போன்ற பிரமாண்டக் கப்பல்களும் ஃப்ளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் மிதந்து, பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகிவிட, ஆயிரக்கணக்கான மக்கள் பலியானர்கள். 'நடந்தது என்ன?' என்று ஆராய்ச்சியாளர்கள் களத்தில் குதித்தார்கள். வாலன்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர், ''கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன!'' என்று குழப்பியடித்தார். அமெரிக்க விஞ்ஞானிகள், ''முக்கோண ஏரியாவுக்குள் திடப்பொருட்கள் சின்னச் சின்ன அணுக்களாக உடைந்துவிடுவதால் பொருட்கள் மாயமாகிவிடுகின்றன!'' என்றார்கள். ஏலியன்களின் தாக் குதல், ஓவர்டோஸ் புவிஈர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று பலர் பல செய்திகள் சொன்னார்கள்.
பெர்முடா புதிர் முடிச்சு அவிழ்வதற்குள் அடுத்த பூதம்... ஜப்பானின் தென் கிழக்குக் கடற்பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் இப்போது காணாமல் போக ஆரம்பித்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகள் 'டிராகன் டிரையாங்கிள்' என்று பெயரிட்டுக் கவலையோடு ஆராய்ந்துகொண்டு இருக்கிறார்கள்!
- ஆர்.சரண்
மூலம்- ஆனந்தவிகடன்