திருக்குறள்

அதிகரிக்கும் லிவிங் டுகெதர் வாழ்க்கை...

சில வருடங்களுக்கு முன்பு திருவான்மியூரில் விமானப் பணிப்பெண் ஷில்பா அவருடைய காதலன் ஜெயந்த் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷில்பாவும் ஜெயந்த்தும் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்திவந்தனர். அப்போது ஷில்பா கர்ப்பம் தரித்தார். இந்தக் கர்ப்பத்துக்கு வேறு யாராவது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஜெயந்த்துக்கு எழுந்தது. இதனால் இருவருக்குமிடையே பிரச்னை வெடித்தது.

இந்நிலையில், 'ஒரு வாரமாக உங்கள் மகள் வேலைக்கு வரவில்லை!' என்று ஷில்பா வேலை செய்துவந்த நிறுவனத்திடமிருந்து பெங்களூருவில் இருந்த அவர் பெற்றோருக்குத் தகவல் வந்தது. அவர்களும் அலறி அடித்துக்கொண்டு திருவான்மியூர் வந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷில்பாவும் ஜெயந்த்தும் இறந்து கிடந்தனர். இவர்களின் மரணத்துக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.

அப்போதுதான் ஷில்பா கடைசியாகப் பேசிய அவருடைய நண்பரை போலீஸ் தொடர்புகொண்டது. அதிலிருந்துதான் சந்தேகத்தின் பேரில் ஷில்பாவை, காதலன் ஜெயந்த்தே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது-. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவான்மியூரைச் சுற்றிலும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டம், மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்குமிடம் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. அதிக அளவில் வாடகை கொடுத்தாலும், மேன்ஷன்களில் போதுமான வசதி இல்லை. இதனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு எடுக்கின்றனர். அதிகம் சம்பாதிப்பதால் அந்தரங்கம் பாதிக்கப்படுகிறதென்று, மற்றவர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. இதே போல பெண்களுக்கும் ஹாஸ்டல் என்பது பெரிதும் பிரச்னையாகவே உள்ளது. இவர்கள் காதலிக்கத் தொடங்கியதும், தனி வீடு எடுத்து வாழ்க்கையைத் தொடங்கி விடுகிறார்கள். பிடித்திருந்தால் வாழ்க்கை அப்படியே தொடர்கிறது; இல்லையென்றால் பிரச்னையில்லாமல் விலகிக் கொள்கிறார்கள்.

திருவான்மியூர் திருவள்ளுவர் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது அவர், ''நிறைய பேர் அந்த மாதிரி இருக்கிறார்கள். அட்வான்ஸ், வாடகை பற்றி வீட்டு உரிமையாளர்கள் கவலைப்படவே தேவையில்லை. தேதி ஒன்று ஆகிவிட்டால், வாடகை பிரச்னையில்லாமல் வந்துவிடும். வீட்டுக்குள் அவர்கள் எப்படி இருந்தாலும், வெளியில் அவர்களால் எந்தத் தொந்தரவும் இல்லை. எங்கள் குடியிருப்பில்கூட ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார்கள். வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. நெருக்கமாகப் பழகிய ஓரிரு குடும்பங்களுக்குத்தான் இது தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் விமானப் பணிப்பெண் ஒருவரும் அவருடைய காதலரும் தற்கொலை செய்துகொண்டார்கள் இல்லையா... முதலில் அவர்கள் எங்கள் குடியிருப்பில்தான் வசித்தார்கள். அவர்கள் திருமணமானவர்கள் என்றுதான் நினைத்திருந்தோம். அந்த சம்பவம் நடப்பதற்கு, சில மாதங்களுக்கு முன்புதான் வால்மீகி நகருக்கு மாறிச் சென்றார்கள். தினசரியைப் பார்த்துத்தான் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள் என்று தெரிந்தது. இவர்களைப் போல நிறையப் பேர் இருந்தார்கள். சாஃப்ட்வேர் துறை கொஞ்சம் டவுன் ஆனதும் இது குறைந்துவிட்டது!'' என்றார்.

இது குறித்து அடையாறு உதவி கமிஷனர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''திருமணமாகாத ஆணும் பெண்ணும் இணைந்து இந்த பகுதியில் நிறைய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. நேரடியாக எனக்கு புகார்கள் வருவதில்லை. கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் புகார்கள், எனக்கு அனுப்பப்படும். ஒவ்வொருவரையும் நேரடியாகச் சென்று விசாரணை நடத்திக்கொண்டிருக்க முடியாது. இதுபற்றி எங்களுக்குப் புகார் எதுவும் வரவில்லை!'' என்றார்.

திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''இப்பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வெளி மாநிலத்தவர் உட்பட ஆணும் பெண்ணுமாக ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். தங்கள் போக்குவரத்து வசதிக்காக கம்பெனிகளுக்கு அருகிலுள்ள வீடுகளில் தங்கவே பெரும்பாலும் இவர்கள் விரும்புகின்றனர். அதனால், இந்தப் பகுதியில் வாடகை வீட்டுக்கு ரொம்ப டிமாண்ட். 'தனியாக உள்ள ஆண்கள், பெண்களுக்கு வீடு கிடையாது. திருமணமானவர்கள் குடும்பத்துடன் வந்தால் மட்டுமே வாடகைக்கு வீடு விடுவோம்' என்று வீட்டு உரிமையாளர்கள் கெடுபிடி செய்கின்றனர். இதனால், ஒரே கம்பெனியில் பணிபுரிகிற ஆணும் பெண்ணும் கணவன், மனைவி என்று பொய் சொல்லி வாடகைக்கு வீட்டைப் பிடித்துவிடுகின்றனர். ஒரே வீட்டில் இருக்கும்போது அவர்கள் நண்பர்களாக இருப்பார்களா அல்லது லிவிங் டுகெதர் போல சேர்ந்து வாழ்வார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டால், எஞ்சியுள்ளவர் வீட்டை காலி செய்துவிட்டு வேறொருவரை ஜோடியாகச் சேர்த்துக்கொண்டு வேறொரு பகுதியில் கணவன்-மனைவி என்று சொல்லி வீடு பிடித்துத் தங்குவதாகவும் தகவல் வருகிறது. ஆனால், இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை வந்ததாகத் தகவல் இல்லை!'' என்கிறார்.

சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நீங்கள் சொல்வது போன்ற ஒரு பிரச்னையை நான் விசாரித்துத் தீர்த்து வைத்தேன். அதாவது, பெண்ணும் பையனும் ஒரே சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்தனர். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகப் பழக ஆரம்பித்தனர். இருவரும் காதலிப்பதாக அலுவலகத்தில் உள்ளவர்கள் நினைத்தார்கள். இவர்களோ, திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்கள். இருவரின் சம்பளத்தையும் கூட்டினால் லட்சத்தைத் தாண்டும் என்பதால், இவர் களுக்கு வீடு கிடைப்பதில் அவ்வளவு சிரமம் ஏற்பட வில்லை. இருவரையும் கணவன், மனைவி என்று நினைத்து ஒருவர் 9 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டை வாடகைக்கு விட்டார். 3 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்கள். அப்போது திடீரென்று ஒரு நாள் பையனின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவனுடைய இ-மெயில் முகவரியை இந்தப் பெண் சோதனையிட்டிருக்கிறாள். அதில், உடன் பணிபுரியும் வேறொரு பெண்ணுடன் அவன் இருக்கும் படங்களைக் கண்டு திடுக்கிட்டிருக்கிறாள். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. 'நாம் இருவரும் திருமணமா செய்துகொண்டோம்? நீ வேண்டுமானால் வேறொரு ஆணுடன் சேர்ந்து இருந்துகொள். நான் கேட்க மாட்டேன்' என்கிறான் பையன். இதனால் பிரச்னை ஏற்படுகிறது. அந்தப் பெண்ணின் அப்பா, வங்கி அதிகாரியாக இருந்து பிறகு, ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். பையனின் அப்பா, சொந்தத் தொழில் செய்யும் கோடீஸ்வரர்.

போலீஸ் நிலையத்துக்கு வந்தால், பிரச்னை பெரிதாகுமே என்று நினைத்து பயந்தனர். பின்னர் இரு தரப்பையும் அழைத்துப் பேசி சமாதானம் செய்துவைத்தேன். தற்போது அந்தப் பெண், பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்திலேயே அமெரிக்காவில் புராஜெக்ட் மேனேஜராக டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். பையன் இன்னும் அங்கேதான் பணி புரிகிறான். தற்போது அந்தப் பெண் சென்னை வந்திருக்கிறாள். அவளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துவருகின்றனர்!'' என்றார்.

- பா.பிரவீன்குமார்
Vikatan Groups

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற